கனவு வண்ணங்களால் நிறைந்தப் படகில் மிதக்கும் ஓவிய உலகம் (ஓவியர் வெங்கடேஷ் படைப்புகளை முன் வைத்து)
கனவு வண்ணங்களால் நிறைந்தப் படகில் மிதக்கும் ஓவிய உலகம் (ஓவியர் வெங்கடேஷ் படைப்புகளை முன் வைத்து) இன்றைய தமிழ் நவீன ஓவியர்களில் மிக நுண்ணிய படிமங்களையும் புறப்பரப்பு வகைகளையும் ஓவியமாக்கி தொடர் கண்காட்சிகள் வழி உலகலாவிய பார்வையாளர்களை சென்றடைந்திருக்கிறார் ஓவியர் வெங்கடேஷ். வெங்கடேஷ், புதுச்சேரி சேலியமேடு (பாகூர்) கிராமத்தை தன் பிறப்பிடமாகக் கொண்டவர். தன் சிறு வயதுக் காலம் முழுக்க இயற்கையோடு இயந்த சேலியமேடு கிராம வாழ்வே அவருடைய படைப்புகளுக்கு பெரும் ஆதாரமாக இருப்பதாகச் சொல்வார். குறிப்பாக அவருடன் நெருங்கி ஓவியம் தவிர்த்து பேசியவர்களுக்கு மட்டுமே அந்த நினைவுகளை அவர் சொல்லியிருப்பார். இது, ஒருவகையில் எல்லா கலைஞர்களின் படைப்பிலும் முன் நிற்கும் படைப்பூக்க குணாம்சம்தானே என்று எளிதில் கடந்துவிட முடியாத அளவில் அவருடைய ஓவியங்கள் மாநிலம், நாடு, மொழி என்பனவற்றை தாண்டி படிமங்களாய் கிளைத்துக் கொண்டிருக்கின்றன என்பது அவருடைய ஓவிய வரிசைகளை காணும் எவருக்கும் கிட்டும். அதற்கு பெரும் உதரணமாக, அவருடைய படைப்புகளில் மைக்கேல் ஜாக்சனின் சுதந்திர மூச்சை, வாரணாச...