கோமாளிகள் விடுதி – நாடகம் ஞா.கோபி,புதுச்சேரி


கோமாளிகள்  விடுதி – நாடகம்
ஞா.கோபி,புதுச்சேரி


மேடையில் ஒளி வரும்போது, அவ்விடுதியின் காட்சி உறைந்திருக்க, உயரமான ஸ்டாண்டுகளில் இருக்கும் மெழுகுத்திரிகளின் மேல் மட்டும் தீப்பொறி நடனம் நிகழ்ந்துக் கொண்டிருக்கிறது. அக்காட்சியை சலனப்படுத்தும் விதமாக, வலப்புற நுழைவாயிலிருந்து பெண் கோமாளி ஒருவர் உள் நுழைகிறார். முகமூடியணிந்து நடனமாடியபடியே அசைந்து வரும் அவரது கையில் மூங்கில் அசைந்து எழும் இசையை பார்வையாளர்களுக்குக் கடத்துகிறார். வந்த அக்கோமாளி, அவ்விடுதியில் நிறைந்திருக்கும் கருமைப் படர்ந்த துக்கம் அவர் மேல் படியும் வரை ஆடிக்கொண்டே இருக்கிறார். அப்படி நீண்ட நொடிகள் ஆடியபடியே விடுதியின் சுற்றுப்புறம் முழுக்க தன் மூச்சுக் காற்றை பரவவிட்டு, அங்கிருக்கும் உணர்வை சுவைக்கிறார். அதன் வழி, விடுதியின் நடுவில் உடல்களின் குவியல் ஒன்று சிகப்புத் துணியால் போர்த்தப்பட்டு உறைந்திருப்பதையும் உணர்வறிந்துக் கொள்கிறார்.
அபாய நிழல்கள் உள்ளே உடல்களாக உறைந்திருப்பதை உணர்ந்த அக்கோமாளியின் நடனம் நிலைக்குலைகிறது. உடல் மரத்துப்போன நிலையில் உறைந்த கோமாளி, தன் பார்வையை அச்சிகப்புத் துணியின் மீது ஆழமாகப் பதிக்கிறார். அப்படி பார்வையை பதித்த அந்நொடியிலிருந்து தன்னுடன் இருந்த வெளிச்சூழலைத் தொலத்துவிட்டு தன் அக உலகிற்குக் கட்டுப்பட்டவராக அச்சிகப்புத் துணி போர்த்திய குவியலின் கீழ் அமர்கிறாள். பின் மெல்ல உள்ளே உறைந்திருக்கும் உடல்களின் குருதியாய் அத்துணியை பாவித்து, தன்னுடல் நடுங்க அதை வழித்து எடுக்கிறார். உள்ளே, ஆறுக்கும் மேற்பட்டக் கோமாளிகள் உடல் குவிந்து உறைந்து இருக்கின்றனர். அக்காட்சியைக் கண்ட அப்பெண் கோமாளி, அங்கிருந்து அகன்று, அவ்வுடல்களின் வலிமிகு குருதியைச் சுமந்தபடியே கோமாளிகளின் உடைகள் தொங்கும் ஸ்டாண்டு ஒன்றின் கீழே போய் சரிகிறார். அவ்விடுதியின் வலி மிகுந்தோர் குருதியினை தாங்கிய தன் கையினைப் பார்க்கிறார். அதைப் பார்த்த அடுத்த நொடி அவ்விடுதிக்குத் தேவையற்ற ஒன்றை தான் தன் முகத்தில் சுமந்திருப்பதாக உணர்ந்து, மிகக் கடினத்தன்மையுடன் தன் முகத்தில் படிந்திருக்கும் முகமூடியை உரித்து எடுக்கிறார். உரித்தெடுத்த முகத்தில் இன்னொரு வண்ணத்தில் இன்னுமொரு முகச்சாயலில் கொண்ட முகமூடி.
அதை உரிக்க மற்றொரு முகமூடி. இப்படி உரிக்க உரிக்க ஐந்தாறு முகமூடிகளை மிகச் சிரமத்துடன் தரைக்கு இடம் மாற்றிக் கொண்டே இருக்கிறார். அப்படியான நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தன் சுயமுகத்தைக் கண்டு விடுகிறார். அந்த சுதந்திர வெளியை மெல்ல வருடிப் பார்க்கிறார். அக்கணமே அவ்விடுதி முழுக்க வியாபித்திருந்த அதிகார இறுக்கம் அசைவு கொள்கிறது. பெண் கோமாளியின் சுயமுகத்தின் வலிமை, அதுவரை குவியலாய் கிடந்த கோமாளிகளை அசைக்கிறது. அசைகிறார்கள். அவ்வசைவு ஒரு வகையில் தங்கள் தாங்களின் அரிதார முகங்களை உடல்களோடு உடல்களை இழைத்து அழிப்பதற்கான காரணக்காரியமாகவே தொடங்கி நிகழ்கிறது. அதைத்தொடர்ந்து, சுயமுகம் கண்ட பெண் கோமாளி, உடனே ஏதோ செய்ய வேண்டுமே எனும் பரபரப்பு மிகுந்த அசைவுகளுடன் தன் கைகளை தன்னைச் சுற்றிலும் பறக்க விடுகிறாள். பறக்கவிட்ட கைகளில் சாட்டை ஒன்றுத் தட்டுப்பட அதை எடுத்து தன்னை அடித்துக்கொண்டு மரண நேரப் பாடலை பாடத்தொடங்குகிறாள்…
வித்தைகள் கைக்கொண்ட இந்த சுயமுகத்தவர்கள்
வேடிக்கையாளர்களாகவே இருப்பதில்
அலாதிப் பிரியம் கொண்டவர்கள்
(சாட்டையடி)
கூடி நிற்கும் கூட்டத்தின் கண்களில் நெளியும்
நிறமற்ற விபரீதங்களை ஒன்று கூட்டி விழுங்கி
உடல்களால் உடல்களைப் பூசி
அடுத்த வேளைக் காட்சிக்குத் தயாராகின்றனர்
(சாட்டையடி)
பார்வையாளர்களே! மிகக்கடினம்தான்!
ஆனால் ஒரேயொருமுறை பார்க்குமளவிற்காவது
பழக்கமேற்படுத்திக் கொள்ளுங்கள்!
துடித்துக்கொண்டிருக்கும் சுடரினால் கவரப்பட்டு
அதில் போய் விழுந்து கொண்டிருக்கும்
விட்டிற்பூச்சிகளை கவனமாய் பார்க்க
ஒரேயொருமுறையாவது பழக்கமேற்படுத்திக் கொள்ளுங்கள்
(சாட்டையடி)
சர்க்கஸ் கூடாரத்தில் தெறிக்கும் மின்வெளிச்சத்தின்
வெப்பம் உறிஞ்சிய உடல் சொற்களை
விடுதியின் இருள் கிடங்கில் ஒன்று கூட்டுகின்றனர்
அதிலிருந்து எழும் இசை?
இருள் சருகுகளின் அசைவு
(சாட்டையடி)
குவிந்து கிடக்கும் குறியீடுகளின் மத்தியில் நின்று
தங்களைத் தாங்களே பரிசோதித்துக் கொள்ளும்
அசையும் பிரேதங்களின் கழைக்கூத்து
இந்த முச்சந்தி விளையாட்டு
(சாட்டையடி)
கை நீட்டிச் சுட்டிக்காட்டுவதில் விருப்பமின்றி
குற்றங்களை தங்களோடே சுருட்டிக் கட்டிக்கொண்டு
இடம் மாறுகின்றனர்
(சாட்டையடி)

(காட்சியில் அசைந்துக்கொண்டிருக்கும் கோமாளிகளின் முக வண்ணம் கலைந்ததனால் அங்கு சலனம். இப்போது அவர்களிலிருந்து அவசரகதியில் ஓர் குரல்)

குரல்: வேண்டாம்! போதும் நிறுத்திவிடு. துப்பாக்கி வேட்டுச் சத்தம் இந்நொடியிலிருந்து எந்த நேரமும், உன் மரண நேரப்பாடலை நிறுத்தி விடலாம்.

(அக்குரலுக்கு கட்டுப்பட்டதுபோல் பெண் கோமாளியின் பாடல் அடுத்த வரிகளைத் தொலைத்து நிற்கிறது. முன் மேடையில் மெழுவர்த்தியின் அருகில் அதுவரை முதுகு காட்டி உறைந்திருந்த புதிய முகமூடி உருவம் திரும்பி, தன்னருகில் இருக்கும் இசைக்கருவியை இசைத்து அபல உணர்வை அவ்விடம் முழுக்க பரப்புகிறது. அதைக் கேட்ட நொடி, மிரளும் பெண் கோமாளி சட்டென அவ்விடமிருந்து வெளியேறுகிறார். இசைத்தபடியே அப்புதிய உருவமும் வெளியேற, அவ்விசைக்கேற்ப இடம்பெயர்ந்த குவியல் கோமாளிகள் உருவங்களாக மாறி தங்கள் இடங்களை தேர்வு செய்து பார்வையாளர்களுக்கு முதுகுகாட்டியபடி அமர்கிறார்கள். அவர்கள் கையில் நெடு நேரமாக விலங்கு பூட்டப்பட்டிருப்பது தெரிகிறது. அக்கோமாளிகள் விலகிய மேடையின் நடு இடத்தில் இப்போது, இரு கோமாளிகள் பெரிய கயிறு கொண்டு முதுகோடு முதுகு பிணைத்துக் கட்டிய நிலையில் அசைய ஆரம்பிக்கின்றனர்.)

கோமாளி 1: என்னோட அம்மா, பைத்தியம். என் பாட்டிதான் இத என்கிட்ட              சொன்னாங்க!
கோமாளி 2: கூட்டத்தோட கலந்து போறதுல எனக்கு உடன்பாடு இல்ல.
கோமாளி 1: ஏய், உன்னோட கையால என்னோட கண்ணத் தடவிப்பாரு. வலி தாங்க முடியல. இனிமே பார்வையாளர்கள நான் நேருக்கு நேர் பாக்க முடியுமான்னு சந்தேகமாவே இருக்கு.
கோமாளி 2: டேய், பெலம்பாத, நாம சபிக்கப்பட்டவர்கள் என்பதை நினைத்து சந்தோஷம் கொள். உன்கிட்ட இருக்கற சிகப்பு நிறப் பென்சில் தீர்ந்து போறதுக்குள்ள உன்னோட கண்கள மூடி, யாரும் திறக்க வேண்டாம்ன்னு மேலே எழுதி வச்சுட்டு போய உனக்குப் புடிச்ச ஓவியங்கள வரை போ!
கோமாளி 1: பார்வையாளர்கள் கிட்ட, நாம வேடிக்கைகள் காட்டும்போது கூட பொய் துப்பாக்கியால சுட்டு, அவங்கள சிரிக்க வைக்கிறத நிறுத்திடலாம்.
கோமாளி 2: மனிதர்கள், ரசித்து செய்யும் நில வரைபடத்தை, ஏன் பைத்தியம் பிடிச்ச கடவுள் ஏன் விழுங்கிக்கொண்டிருக்கிறான்?
கோமாளி 1: என்னுடைய எல்லா சாகசத்தையும் பார்த்துவிட்டதாகச் சொல்லி கைத்தட்டுகிறார்களே. அவங்களுக்கு என்னுள் மறைந்து கிடக்கும் ரகசிய வித்தைகளான காயத் தழும்புகள் தெரியாதுதானே!
கோமாளி 2:  ஆமா, நான் இந்த சர்க்கஸ் கூடாரத்தோட கிழிசல்ல இருந்துதான் தெனமும் ஆகாயத்தப் பாக்குறன். பார்வையாளர்களே அந்த ஓட்டையில இருந்தெல்லாம் எங்கமேல கல்லெறிஞ்சி விளையாடாதீங்க. இன்னைக்கு மட்டும் விலகி நில்லுங்க. ஏன்னா, இன்னைக்கு ராத்திரி முழு நிலா தெரியுமே. அத மட்டும் பார்த்துக்கறோம்.

(அவ்விருவரும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியாத நிலையில் பேசிய படியே அசைகின்றனர். இப்போது அசைவின் வேகம் கூடுகிறது. அது ஒரு நிலையில் கயிறு அறுபடும் நிலைக்குக் கொண்டு செல்கிறது. கயிறு அறுபட்டதினால் இருவரும் வெவ்வேறு திசைக்குச் சென்று விழுகின்றனர். ஒருவன் உறைய, மற்றொருவன் தன் சாகசத்துக்கான நேரம் நெருங்கிவிட்டதேன பதறி, ஸ்டாண்டில் தொன்கிய உடை ஒன்றை எடுத்து அணிந்துக் கொண்டு உற்சாகமாக வெளியேறுகிறான். தனித்து விடப்ப்பட்டவனோ, ஒன்றும் புரியாமல் திகைத்து நிற்கிறான். அடுத்த நொடி, முடிவடுத்தவனாய் முன்பே உறைந்திருந்தக் கோமாளிகளுடன் போய் சேர்ந்துக் கொள்கிறான். அவனுடன் சேர்த்து முன் மேடையில் இருந்த அனைவரும் இப்போது தலை குனிகின்றனர். அவர்களது தலையில் முகமூடி. அதன் வழி அவர்கள் ஒவ்வொருவராய் பேசுகின்றனர். அவர்களுடன் இசை ஒன்றிணைகிறது) 

முதல்வன்: பார்வையாளர்களை போய் வாருங்கள் என்று சொல்வதற்கு நமக்கு அனுமதியில்லை.
(இசை)
இரண்டாமவன்: நம் கோமாளிகள் விடுதியில் இறப்பு எண்ணிக்கை அதிகமாக அதிகமாக பார்வையாளர்கள் தங்களுக்குள் சக்தி கூடியதை உணர்ந்திருப்பார்களா?
(இசை)
மூன்றாமவன்: நான் என்னோட சொந்த விருப்பத்தின் போர்லதான் இங்கு வந்திருக்கேன். நான் இந்த விடுதிய விட்டு எப்போதும் போக மாட்டேன்.
(இசை)
நான்காமவன்: இப்படியான வேதனைகளின் இடையிடைதான் நம் வித்தைப் பயிற்சிகளை மெருகேற்ற முடியும்.
(இசை)
ஐந்தாமவன்: சக கோமாளிகளே!, இதுவரை இங்கு நீங்கள் பேசிய வார்த்தைகளை, சீக்கிரம் பொறுக்கியெடுத்து விழுங்கி விடுங்கள். இங்கு பேசுவதற்கு நமக்கு அனுமதியில்லை என்று தெரியாதா?

இசை இப்போது குழப்பத்தைக் கூட்டுகிறது. அப்போது அவசரகதியில் பெண் கோமாளி உள்ளே நுழைகிறார். அவர் கையில் இப்போது ஒரு குச்சியில் பொருத்தப்பட்ட முகமூடி இருக்கிறது. அவ்விடுதியில் எஞ்சிய கோமாளிகள் வாய் திறந்து பேசுவதனால் வரும் ஆபத்தை தடுக்க முற்படுகிறார். எப்படியெனில், தன்னுடன் மாட்டப்பட்டிருக்கும் பையிலிருந்து வைக்கோல் பந்துகளை எடுத்து ஒவ்வொரு கோமாளியின் வாயினுளும் திணித்து அடைத்து விடுகிறார். இங்கே வாய்மொழியால் எதுவும் பேச வேண்டாம் என்பது போல. தன் வேலை முடிந்ததாக அப்பெண் கோமாளி வெளியேற, ஏனைய கோமாளிகள் அனைவரும் உறைந்த நிலையில்.
     
அப்போது விடுதியின் வாசலிலிருந்து குதூகலத்துடன் கூடிய இசை மேலெழுந்து அத்தளம் முழுக்க பரவுகிறது. அவ்விசையோடு, தங்கள் சாகஸ நிழத்துதலை முடித்து பார்வையாளர்களின் ஏகோபித்த கைத்தட்டல்களை வாங்கிய இரு கோமாளிகள் துள்ளிக் குதித்தபடி விடுதிக்குள் நுழைகின்றனர். வந்த அவர்கள், வெளிச்சூழலின் மயக்கத்திலேயே விடுதியினுள் உலவியபடியே தங்கள் உடை ம்ற்றும் ஒப்பனைகளை சரி செய்துக்கொண்டு அடுத்தக் காட்சிக்கு கிளம்பிச் செல்கின்றனர். வாயடைந்த கோமாளிகள் தங்களைத் தாங்களே பார்வையால் நொந்துக் கொள்கின்றனர். தலையில் இருக்கும் முகமூடியின் அழுத்தமும் வார்த்தை வெளியீட்டிற்கான தடையும் அவர்களின் களைப்பிற்கான காரணம் என்பதை உணர்வறிந்துக் கொள்கின்றனர். எல்லோரும் ஒரே நேரத்தில் மெல்ல பிரிந்து பிணைத்திருந்த சங்கிலிகளை மாறி மாறி கழற்றிக் கொள்கின்றனர். பின் வாயிலிருந்த வைக்கோல், தொடர்ந்து முகமூடிகள் கழற்றப்படுகிறது. சுதந்திரமாய் எல்லோரும் நடுவரங்கில் கூடுகின்றனர். ஒன்று கூடியவர்கள், தங்களின் களைப்பைப் போக்க, வலி மிகுந்த தொடர் பயிற்சியே துணை புரியும் என்பதாக உணர்ந்து, உடல்களோடு உடல் சேர்த்து தங்களின் வலியை அவ்விடுதி முழுக்கக் கேட்கும்படியாக வார்த்தைகளற்ற வசனங்களாக்குகின்றனர்.  
அப்படியே தொடர்ந்து விடுதி முழுக்க பல உஅடல் சாகஸப் படிமங்களை உருவாக்குகின்றனர். இப்படியான அவர்களின் நூதன விளையாட்டுக்கள் அவர்களுக்குள் தொடர் உரையாடலை வளர்த்தெடுத்துக் கொண்டே போகிறது. அப்போது முதலில் சாகஸத்துக்காக வெளியேறிப்போன கோமாளி உள்ளே வருகிறான். ஏனையோர் இருந்த இடத்திலேயே மீண்டும் உறைகின்றனர். வந்த கோமாளி, அரங்கில் பார்வையாளர்களை அசரச் செய்த தன் சாகஸத்தை தன் சக கோமாளிகளின் முன் மீண்டும் நிகழ்த்திக் காட்டத் தொடங்குகிறான். மந்திர ஜாலங்களைப் போல் செய்தபடியே அவர்களையும் அந்த சாகஸத்தின் பக்கம் அழைக்கிறான். அவனுடைய மந்திர அழைப்பின் பின்னுள்ள அபாயம் உணர்ந்தவர்களாக எனையோர் அனைவரும் அவனை மறுதலித்து ஓரிடத்தில் குவிகின்றனர். அவனோ தன் சாகஸ ஜாலங்களை தீவிரப்படுத்துகிறான். அவன் எதிர்பார்த்தது போலவே அக்குழுவிலிருந்த கோமாளி ஒருவன் ஜாலங்களுக்கு மெல்ல மயங்கி சாகஸக் கோமாளியின் அசைவின் பக்கம் சாய்கிறான்.
தியாத வித்தைகளில் மயங்கி தன் முறை வருவதற்கு முன்பே போய் வீழ்ந்துவிடுவதன் அபாயம் உணர்ந்த மற்றக் கோமாளிகள் அவனைத் தடுக்கின்றனர். அவனோ அவ்வித்தையை கண்மூடித்தனமாகப் பின்பற்றும் ஆவலில் அவர்களின் பிடியை தளர்த்தி அக்குழுவிலிருந்து வெளியேறி அந்த ஜாலக்கார கோமாளியின் பாதையைத் தொடர்கிறான். இனி நிகழப்போகும் விபரீதத்தை உணர்ந்தவர்களாக எஞ்சியக் கோமாளிகள் உறைந்து தலைகுனிகின்றனர். வெளியில் புதிய வித்தைகளுக்கான இசை அலற, அங்கு நொடிகள் நிமிடங்களாக நீள்கிறது. வெளியே பார்வையாளர்களின் பெருத்த கைத்தட்டல் ஓசை. திடீரென்று அப்போது வெளியேறி சாகஸத்தில் தன்னை இணைத்த அக்கோமாளியின் மரண அலறல் வீறிடுகிறது. நிகழ்விற்கான இசை நிற்கிறது. நிலைமையை உணர்ந்த அக்கோமாளிகள் விடுதியைவிட்டு நிகழ்விடம் நோக்கி ஓடி மறைகின்றனர். (அமைதி) சிறிது நொடிகள் கழித்து மூங்கில் இசைக் கருவியை இசைத்தபடியே பெண் கோமாளி உள்ளே வருகிறார். அவரைத் தொடர்ந்து இரண்டு கோமாளிகள் ஒரு நீண்ட மூங்கில் கழியில், ஜாலத்தில் மயங்கி வெளியேறி இறந்தவனைத் தூக்கி வருகிறார்கள். அதில் முன்னே வருபவனிடத்தில் பெரிய பாலத்தீன் பை ஒன்று இருக்கிறது. உள்ளே வந்ததும் சடலத்தை மெல்ல இறக்கி வைத்துவிட்டு, அவ்வுடலை பாலித்தீன் பைக்கொண்டு மூடி விடுகின்றனர்.

பெண் கோமாளி: எல்லோரும் ஒரே பாதையில் பயணிப்பது சாத்தியமில்லை.கனவுகளை விற்றவன் உறைந்துவிட்டான். இனி, அசையும் அவன் நிழலை மட்டும் வேடிக்கைக் கூடத்திற்கு கொண்டு செல்வோம்.

இயங்கும் அனைத்துக் கோமாளிகளும், அவர்களுடைய உடைகள் தொங்கும் ஸ்டாண்டின் அருகில் சென்று தங்களுடைய மேலாடைகளை போட்டுக் கொண்டு, முகமூடிகளையும் அணிந்துக் கொண்டு வெளியே நிகழ்விடத்திற்குச் செல்ல தயார் ஆகின்றனர். மெல்ல இருள் மேடையை சூழ்கிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 நன்றி: மணல் வீடு,இதழ் எண்:8&9

Comments

Popular posts from this blog

அரங்கில் கலந்த ஆசிரியர் சே. ராமானுஜம்

எல்லோருக்காகவும் வேண்டியெழும் மொழி : ஜான் ஃபோஸின் நாடகங்கள் - ஞா. கோபி

நாடகக் கலைஞர்களின் கலை வழி உறவு நிலை வெளிப்பாடுகள்