சிகப்புக் கண்ணாடி, நாடகம் ஞா.கோபி, புதுச்சேரி


சிகப்புக் கண்ணாடி - நாடகம்
                                                                                                           எழுத்து -கோபி, புதுச்சேரி

நிகழ் 1
இருள் முழுவதுமாகப் பழக்கப்பட்டப் பார்வையாளர்களுக்குப் புதிய பயணமாக மேடைப் பகுதியிலிருந்து நரம்பிசைக் கருவியின் அசைவு எழுப்பும் நாதம் அவ்விடம் முழுவதும் பரவுகிறது. சிறிது நொடியில் அவ்விசையுடன் பெண் கோமாளி ஒருத்தியின் குரல் துணை சேருகிறது. பார்வையாளர்கள் செவிகளுக்கு அது தாலாட்டாய் இதமும் வலியுமாய் இருக்கிறது. இயல்பாய் இப்போது மேடையில் தோன்றும் ஒளியானது அவ்விருவரையும் தேடுகிறது. முதலில் தென்படுவது பெண் கோமாளியின் தீர்க்கமான கால் அசைவுகளுடன் கூடிய புதிய நாடகப் பயணம். (சோப்புக் குமிழிகள்)
அவளின் வலக்கைக் கக்கத்தில் அழுத்திப் பிடிக்கப்பட்ட நிலையில் ஒரு மூங்கில் பிரம்பின் முனை. முற்றொரு முனையில் கண் தெரியாத இசைஞனின் வலக்கைக் கக்கம். கழுத்தில் மாட்டப்பட்ட நிலையில் இருக்கும் நரம்பிசைக் கருவியை இசைப்பதே அவனின் ஒரே குறிக்கோளாய் இருக்கிறது. அதனூடே அசன் நகரவும் சிலவற்றை முடிவு செய்யவும் எண்களை எண்ணத் தொடங்குகிறான்.
பெண் கோமாளி:
      காடெல்லாம் பிச்சி
 கரையெல்லாம் செண்பகப்பூ
 நாடெல்லாம் மணக்குதம்மா
 நல்லமகள் வச்ச மல்லி
 பால் குடிக்கும் கிண்ணம்
 பூ பிறக்கும் நந்தவனம்
 நெய் குடிக்கும் கிண்ணம்
 நிறம் பார்க்கும் கண்ணாடி
இப்போது இருள் மறுபடியும் அவ்விடத்தை விழுங்குகிறது. அவள் குரல் மட்டும் காற்றில் இருட்டில்லாமல் இருக்கிறது. மெல்ல தேய்கிறது. மீண்டும் மெல்லிய ஒளிக்கீற்று நிகழ்தளத்தின் முன்பகுதியல் பரவ அங்கு பார்வை தடை செய்யப்பட்ட அவ்விசைஞன் அமர்ந்த நிலையில் இருக்கிறான். அவனுடைய பார்வைப் பயணம் அந்நரம்பிசைக் கருவியுடனானதாகவே இருக்கிறது. அவ்விடத்திலிருந்து சிறு பாதையில் ஆரம்பித்த அவ்விசை ஒரு பெரும் கதையைச் சொல்லத் தொடங்குகிறது. இசையின் இடையிடையே அவன் ஒரே வாசகத்தைத் திரும்பத் திரும்பச் சொல்கிறான்.
இசைஞன்: எல்லோருக்கும் கண்கள் இருக்கு.
(இசை தொடர்கிறது. பின் வசனம் பின் இசையெனத் தொடர்கிறது. அந்த இசைக் கலைஞனைப் போலவே குருட்டு வண்ணம் கொண்டிருப்பதால் தனி ஒரு உலகமாகக் காற்றில் மிதந்து கொண்டிருக்கிறது. ஒரு நேரம் ஏதோ சட்டென ஞாபகம் வந்தவனைப் போல இசையை நிறுத்துகிறான். மிக மெதுவாக ரகசியம் போல் மீண்டும் சொல்கிறான்.)
எல்லோருக்கும் கண்கள் இருக்கு!  ஆனா நம்ம பாதிக்காத எதையும் நாமப் பாக்கறது கிடையாது.
(மீண்டும் இசைக் கதையைத் தொடர்கிறான். இசைக்கிறான்.  இப்படி இசையோடு கடந்து கொண்டிருக்கும் நொடிகளில் இறுதியான நொடி ஒன்று மேடையின் இன்னொரு ஒலிக் கதவைத் திறக்கிறது.  உயிரின் வலி வேதனைகள் பெரும் பெண்கள் கூட்டத்தின் முனகல் ஒலியாகப் பார்வையாளர்களிடத்தே வந்து சேர்கிறது.)


அவ்வொலியானது ஆழ் கிணற்றின் அடியிலிருந்து மேலே எட்டிவிட எத்தனிப்பது போன்று இருக்கிறது.  அந்த இசைக் கலைஞனிடம் இருந்த ஒளி அவனிடமிருந்து பிரிந்து இன்னொரு உடலாகிச் சென்று அம்முனகல்களைத் தேடுகிறது.
 தேடலின் இறுதியாக நிகழ்தளத்தின் மத்தியில் ஒளி உறைந்து வளர, அங்கு மரச்சட்டத்தின் பின் திணிக்கப்பட்ட ஒரு பெண் உடல் பல உடல்களாக விரவியிருக்கின்றது.  உடல் என்பது விலங்கிடப்பட்ட கால்களாகவே வெளிச்சத்தில் தெரிகிறது.  அவற்றின் பின்னிருந்து வரும் முனகல் ஒலியானது, எப்படியாவது பேசிவிட வேண்டும் எனும் கடும் முயற்சி என்பதற்கான காரணமாய் அம்மரச்சட்டத்தின் முன்பக்கம் வைத்துக் கட்டப்பட்டிருக்கும் அவ்வுடல்களின் கால் அசைவுகள், மிகக் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக இருக்கிறது.
அவ்வுடல்களின் தொடர் முயற்சியின் விளைவாய், கிடைத்த சிறு துவாரத்தின் வழியாக மூச்சுக் காற்றை வெளியேற்றத் தொடங்குகிறார்கள்.  பல்வேறு முகங்களில் மூச்சு விடுதல் எடுத்தல் நிகழ்கிறது.  இதனால் மூச்சுக் காற்றின் இயக்கம் சமநிலைக்கு வந்துவிடுவதால் அவ்உடல்கள் ஓர் உடலாகிப் பேசிவிட முடிவெடுத்துத் தன்னைப் பற்றி, தான் யார்?  இப்போது என்னவாக? என்பது பற்றியும் பேசத் தொடங்குகின்றன.
உடல் 1: இதோ! உங்களுக்கும் எனக்கும் நடுவில் இருக்கும் இந்தச் சிறிய இடைவெளிதான் இப்போதிருக்கும் என் கடைசி நம்பிக்கை.  என்னோட முகம் உங்களுக்கு முழுசா தெரியறதுக்கு வாய்ப்பில்லாததால நான் யாருன்னு முடிவுக்கு வரதுல உங்களுக்குக் க;டம் இருக்கும்.  அத நான் ஒத்துக்கிறன்.
உடல் 2: அதேசமயம் ….. நான் போராடிகிட்டே இருக்கன்.
(திடீரென்று ஏதோ நினைவுக்கு வந்தது போல அம்முகங்கள் சிரிக்கின்றன)
உடல் 3:  என்ன இவ்வளவு சித்திரவதையையும் தாண்டி எப்படி இந்த உடல் சிரிக்கிதுன்னு குழப்பமா இருக்கா?
உடல் 1: என்னுடைய சிரிப்பிற்கான காரணம், தோ என்ன முழுசா அடைச்சிக்கிட்டிருக்க இந்த மரத்தடுப்புதான்.  நான் வெளியேறுவதற்குத் தடையா என்னுடைய குறுக்கே இருக்கிற இந்த மரத்தடுப்பு காலங்காலமா சொல்லமுடியாத வலிய ஏற்படுத்திக்கிட்டே இருந்தாலும் என்னுடைய உடல்  எந்தப் பாலின அடையாளத்தோட இருக்கிறேங்கிறத மறைச்சிக்கிட்டு இருக்கு இல்லையா? (சிரிப்பு …. சட்டென்று அமைதி)
உடல் 4: உடம்பும் பாலின அடையாளமும் காலங்காலமா ஒரு முக்கியமான  அரசியல் சின்னம்தானே? (மீண்டும் வெளியேறும் முயற்சி)
சிரிக்காதீங்க! உங்க சிரிப்போட அர்த்தம் எனக்குப் புரியுது.
உடல் 5: இந்தத் தடுப்பு உன்னோட உடம்பதான அடைச்சிக்கிட்டு இருக்கு.  ஆனா! உன்னுடைய குரல் நீ ஒரு பெண்தான்னும் உன்னுடைய உடம்பு பெண் உடம்புதான்னும் தெளிவா எடுத்துக்காட்டுது.  என்னுடைய உடம்பு பெண் உடம்பு தான்னு கண்டுபிடிச்சதுக்காகத் தான சிரிக்கிறீங்க.  சிரிக்காதீங்கசிரிக்காதீங்க.
உடல் 2: வேண்டாம்.  நான் சொல்ல வந்தத திசை திருப்புற மாதிரி இருக்கு உங்களோட சிரிப்பு.  உறுதியா சொல்றன்.  பெண் அப்படிங்கள ஒரேயொரு அடையாளத்துல எனக்கு உடன்பாடு இல்லை.
உடல் 3: நான் என்னுடைய உடம்ப ஒரு பெரிய நிலமாகப் பாக்கறன்.    இந்தப் பெரிய உலகத்துல என்னைப் போல உள்ள பல நிலங்கள் எத்தன விதத்துல சிதைக்கப்பட்டு வருதுன்னு தெரியுமா உங்களுக்கு?
உடல் 4:  நான், நான் மட்டுமில்ல இப்போ.  இந்த உலகத்துல சிதைக்கப்படற அத்தனை நிலங்களோட சாட்சி நான்.  அதனால நான் இயற்கை. இயற்கையின் பெரும் பகுதி.
உடல் 5:  அப்படின்னா இயற்கைக்கு எதிரா நிகழ்த்தப்படற எந்தவொரு குற்றமும் மனித குலத்திற்கு எதிரான குற்றம்தானே?
உடல் 1: போர்க்குற்றம் தானே…..போர்க்குற்றம் தானே….
உடல் 2:  ஆமாஆயுதங்கள வச்சிக்கிட்டு சண்ட போடறது போல எங்கள எங்களோட நிலத்த காயப்படுத்தறது, வன்புணர்வு செய்யறது எல்லாமே போர்க்குற்றம் போலத்தானே? (சிரிப்பு)
உடல் 5: இதையெல்லாம் கேட்டபிறகும் உங்கள்ல சில பேர் இதெல்லாம் காலங்காலமா நடக்கறதுதானன்னுநினைக்கிறது தெரியுது.  இதையெல்லாம் கேட்டும் கேட்காத மாதிரியும் பாத்தும் பாக்காத மாதிரியும் போய்கிட்டே இருக்க இந்த உலகம் பழகிடுச்சின்னு எனக்குத் தெரியும்.
எல்லா உடல்களும்:  எங்களுக்கும் தெரியும்
உடல் 3: எங்கள் வலி காலாகாலத்தின் வலி
உடல் 2:  பல்லாயிரக் கணக்கான கசங்கிய நிலங்களின் சாட்சி நாங்கள்.
உடல் 1:  நாங்க இந்தப் போர்களின் எதிர்ல நின்னு தொடர்ந்து காயம்பட்டு திணறிகிட்டே இருக்கோம்.
உடல் 4: ஒண்ணே ஒண்ணு மட்டும் கடைசியா சொல்லிடறோம்.
உடல் 5:  உங்களப் போல நாங்க இந்தப் போர்ல பார்வையாளராகவும் ஆதரவு தரவுங்களாவும் மட்டுமில்ல
உடல் 4:  இந்தப் போர்கள் எல்லாம் எங்கள மேலதான் நடந்துகிட்டு இருக்கு.  எல்லாப் போர்களும் எங்களோட உடம்பு மேலதான் நடந்துகிட்டு இருக்கு.
இப்போது இருள் அவ்வுடல்களின் இடத்தை முழுவதுமாக விழுங்குகிறது.  மறுபுறம் ஒளி திறக்க அவ்விசைஞன் மட்டும் இசையோடு அங்கேயே இருக்கிறான்.  சில நொடிகளில் அவன் சொன்ன இசைக் கதை முடிய எண்களைச் சொல்லி பெண் கோமாளியைத் தேடுகிறான்.  சரியாக 498, 499, 500 என்று முடிக்கும்போது அவள் அவனருகில் இருக்கிறாள்.  இப்போது தலையில் பிளாஸ்டிக் கொம்புடன் இருக்கிறான்.
வழக்கம்போல் கையில் கொண்டு வந்திருந்த மூங்கில் குச்சியைத் தன் கைக் கக்கத்தில் கொடுத்து அவ்விசைஞனுடன் இணைக்கிறாள்.  அவன் தன் அசையின் எண்ணிக்கைக் கணக்குடன் அவளைப் பின் தொடர்கிறான். சிறிது தூரம் சென்ற அவர்களின் மூங்கில் குச்சி மற்றும் கோமாளியின் பிளாஸ்டிக் கொம்பு போன்றவை சிவப்பு நிறமேறுகிறது. 
இப்போது நிகழவிருக்கும் அபாயத்தை முன் உணர்ந்தவளாகக் கோமாளி நடந்து கொண்டிருந்த நிலையிலேயே தன் கையிலிருந்த மூங்கில் குச்சியின் நுனியைக் கைவிடுகிறாள், நகர்கிறாள்.  அவ்விசைஞன் நிகழ்வில் மாற்றம் எதுவும் நடைபெறவில்லை என்பது போன்று எண்ணிக்கையை எண்ணியபடியே வெளியேறுவதைத் தொடர்கிறான்.  அவன் தனியாக நடக்க ஆரம்பித்தவுடன் வேகமாக அவ்விடமிருந்து ஓடி வந்து முன்பு அப்பெண் உடல்கள் இருந்த இடத்தின் முன் வந்து அமர்ந்து கொள்கிறாள்.  இடுப்பில் கட்டியிருந்த டார்ச்சு லைட்டை ஒளியேற்றி அவ்விசைஞனைக் கவனிக்கிறான்.
அக்கோமாளி அச்சப்பட்டதைப் போலவே அவ்விசைஞனின் எதிர்த்திசையிலிருந்து ஒருவன் வந்து இசைஞனை நிறுத்துகிறான்.  வந்தவன் கை ஒன்றில் நிறைய போஸ்டர்களும் இன்னொரு கையில் பசைவாளியும் இருக்கிறது.  எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இசைஞனின் உடல் முழுக்கப் போஸ்டர் ஒட்டத் தொடங்குகிறான்.  பார்வை குறைந்த உடலில் பெண் உடல்களை வியாபாரம் ஆக்கும் தந்திரம் நிறைந்தவைகளாக அவை இருக்கின்றன.  அவ்விடம் சிறிது ஒளி குறைய மேடையின் மையத்தில் பெண் உடல்கள் முன்பு வெளியேறத் திணறிய இடம் திரையாகிறது.  அவ்விசைஞனைப் போல பலர் மீது போஸ்டர் ஒட்டப்படுகிறது.  (கோமாளி குனிய வைத்து) அச்செயலைக் கேமராகொண்டு காட்சிப் பதிவாக்கியிருப்பதால் ஒவ்வொரு போஸ்டரும் ணுழழஅ செய்யப்பட்டு மிகத் தெளிவாகக் காட்டப்படுகிறது. இச்செயல்பாட்டின் உச்சத்தில் அத்திசையில் முன்பு அப்பெண் உடல்கள் வெளியேற முயற்சித்த அந்த யோனி போன்ற இடம் இரத்தம் ஊறப்பட்ட சிவப்பு நிறமாகிறது.  காட்சிகளும் முடிவு பெறுகிறது.  அவ்விசைஞனின் உடல் முழுக்க ஆபரணமாய் அப்போஸ்டர்கள் ஒட்டி முடிக்கப்பட்டிருக்கின்றன. இப்போது போஸ்டர் ஒட்டியவன் கிளம்புகிறான்.  அவன் திசை நோக்கியே அவ்விசைஞனின் மூங்கில் பிரம்பும் திரும்புகிறது.  வெளியேறுகின்றனர்.  பெண் கோமாளி இதுவரை அவ்விசைஞனின் பக்கமிருந்த டார்ச்சு ஒளியை மெல்ல தன் பக்கம் திருப்பிப் பாடத் தொடங்குகிறாள்.  பாடலின் இரண்டாம் வரியின் உச்சரிப்பின் போதே அவளிடமிருந்த ஒளி அத்திரையில் இரத்தச் சிகப்பு ஊறிய அப்பகுதிக்குத் திரும்புகிறது.

பாடல் : வலியோடு நீயழுதாய்
     குறியெல்லாம் சிவப்பூற
     உப்புக்கடல் பொங்கிவர என் கண்ணே
     மீனாய் நீ துள்ளிவர
     துள்ளி வரும் மீனுனக்கு
     தூண்டில் வலைப் போட்டாரோ
     அதிலிருந்து தப்பிச்சப்போ
     என் கண்ணே உனக்கு
     தாத்து வலைப் போட்டாரோ…..    (வலியோடு…)
என்று பாடியபடியே அந்த யோனியுள் இருந்து முதலில் பர்தா உடை ஒன்றை எடுக்கிறாள்.  அவ்வுடையை பிரித்துப் பார்க்க உள்ளிருந்து உள்ளாடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் கீழே விழுகிறது.  அப்பெண்கோமாளிக்கு அடக்க முடியாத அழுகை வர அழத் தொடங்குகிறாள்.  ஆனால் அடுத்த நொடியில் திரையின் பின்னிருந்து மேலே எழும்பும் ஆண் கை கொண்ட துப்பாக்கி வெடிக்கிறது.  வெடிச்சத்தம் கேட்ட நொடி பெண் கோமாளி தன் வாய் பொத்தி வலியை முழுங்குகிறாள்.  திரையின் பின்னிருந்து ஒரு அதிகாரி பூட்ஸ்களை கைகளில் மாட்டி முகத்துக்கு நேர் பிடித்தபடி அதிகாரத் தொனியில் வெளியேறுகிறான்.  அப்போது அத்திரையின் வலப்புறத்திலிருந்து கசக்கி வீசியெறியப்படுபவள் போல விழுகிறாள்.  பெரிய பேண்டேஜ் துணி கொண்டு சுற்றியது போல் அவள் உடலை மறைத்திருக்கிறாள்.
இப்போது பயம் மற்றும் வலியையும் மீறிப் பெண் கோமாளி அத்திரை அருகில் யோனி போன்ற இரத்தம் ஊறிய இடத்திற்குச் சென்று உள்ளிருந்து இப்போது ஒரு பெரிய ஃபைல் மற்றும் பணக்கட்டு ஒன்றை எடுக்கிறாள்.  இப்போது அதிலிருந்து குறுந்தகடு(உன) ஒன்று வெளியே விழுகிறது.  அடுத்த நொடி திரையின் பின்னிருநு;து கோட் அணிந்த ஒரு ஆண் தன்னுடைய பெரிய நாக்கைத் தொங்கப்போட்டபடி வெளியேறுகிறான்.  இடப்புறமிருந்து ஒரு பெண் கசங்கிய நிலையில் விழுகிறாள். 
மீண்டும் மிக அவசரமாகிக் கையை உள்ளேவிட்டு வெளியே எடுக்கச் சிறுமியின் ஆடையொன்று கிடைக்கிறது.  அதிலிருந்து மிட்டாய் மற்றும் பலூன்கள் விழுகிறது.  திரையின் பின்னிருந்து முகத்தைத் துண்டால் மறைத்தபடி ஒருவன் வெளியேறுகிறான். வலப்புறத்திலிருந்து ஒரு பெண் உடல் கீழே விழுகிறது.  இப்போது அங்கு ஒளி நிலை மாற ஒலி நிலையும் மாறுகிறது.  பெண்குரலின் அழுகை ராகமாக மாறிய மந்திரம் அங்கு நிகழ்கிறது.  பெண்கோமாளி இப்போது வேகமாக வெளியேற நினைக்கும் போது ஒரு சிறுமி சிரித்தபடியே எலக்ட்ரானிக் எடை மெpன் ஒன்றை முன்மேடைக்குக் கொண்டுவந்து வைக்கிறாள்.  அப்போது பெண்கோமாளி நெருங்குவது போல் காலடியை முன்னெடுக்க, அச்சிறுமி நில் என்பதாகச் சைகை செய்கிறாள். உடனே வேகமாக ஓடி மேசைவிளக்கு (வயடிடநடுயஅp) ஒன்றை எடுத்து வந்து இயக்குகிறாள்.  பின் மூச்சிரைக்க சிரிப்புடன் பார்வையாளர்களைப் பார்த்தபடியே வெளியேறுகிறாள். 
என் கனவுகள் மட்டும்தான் துணைக்கு வருது
இங்க என் கனவுகள் மட்டும்தான் நிழல் தருது
வலியோட அளவு எவ்வளவு இருந்தாலும்
அதில் படுத்து உறங்க கனவு மட்டுமே நிழலத் தருது
வலி எப்போதும் போலத் தாங்க முடியாது
இப்போ வலிய கையில வச்சு தூங்கப் பழகிகிட்டன்
விதவிதமா வலிய பாத்துபுட்டன் இப்போ
அதனோடவே தூங்கப் பழகிகிட்டன்
ஆதி தொடங்கி நேத்து வரைக்கும் நான்
பிச்சியெறிஞ்ச முலைகளோட வலி ஒரு பக்கம்
வேலையா, விதைக்கப் போனப்போ
கங்காணியோட விதை விதச்சி
என் நிலம் புண்பட்டுப் போன வலி ஒருபக்கம்
முதல் முறை தீட்டு ஆனதா சொல்லி
ஓலைக் குடிசையில குந்த வச்சி பின்னாடி
தீட்டுக் கழிக்க வேண்டி அந்த ஓலையோட சேத்து
என் கனவுகள கொளுத்துன வலி மறுபக்கம்
பெத்தும் பேர்வச்சும் முன்வரிசைக்கு வந்தாலும்
ஏதோ வகையில தொடர்ந்து தோத்துகிட்டே
இருக்கேனே அந்த வலி என்னோட பெரும்பக்கம்.
சிவப்போட கொடி பிடிச்சப்போ
லத்தி அடியா கிடைச்ச வலி
பாட்டால சொல்லி மாளாது.
அந்த லத்திக்கு உயிர் இருந்திருந்தா
என் உறுப்புல ஏறுன ஆயிரம் முறைக்கு
ஆயிரம் லத்திக் குழந்தைகள பெத்தெடுத்திருப்பன்.
பாடலின் முதலிலேயே பெண் கோமாளி கிடைத்த உடைகளை எடுக்கும்போது அவ்வுடைக்குரிய உடல் அவளைப் பின் தொடர்கிறது. 
உடைகளை எடை எந்திரத்தில் வைக்கும் போது உடல்களும் கணம் கொண்டதாக மாறுகிறது, கோமாளியின் மடியில் படுத்தபடி.
வந்து போனவன் எல்லாம் செஞ்ச வியாபாரம்
என் உடம்ப வச்சித்தான் எனும்போது
எம்புள்ள பிறந்த இடத்திலேயே அவங்க போட்ட
சிக்கல் கோலம் இன்னும் பிரிக்க முடியாத வலி ஒருபக்கம்
தெய்வமே! எவ்வளவு வலி வேதனை வந்தாலும்
வலிய மறச்சி வச்சி சிரிக்கிறது போல சிரிச்சிடுவேன்
தெய்வமே! நீ எனக்காக அருள் புரிய வேண்டாம்
நீ முதல்ல உன்ன காப்பாத்திக்கோ.
கோயில் மரத்தடிக்குத் தீட்டுப்பட்ட பெண்கள்
போக வேண்டாம், பாம்பு தீண்டிடும்னு சொல்லிச் சொல்லி
அங்க இருந்த தெய்வ மனிதர்கள்
அவதாரங்களின் முகமூடி போட்டு எங்க யோனி
கிழித்த வலி இன்னொருபக்கம்
இந்த பெரு வலி எல்லாத்தையும்
என் தாலாட்டுப் பாட்டோட கரச்சி மருந்து போல
விழுங்கி விழுங்கிஎன் உயிர பிடிச்சிருக்கன்
இந்த வலி நிறைஞ்ச தாலாட்டு நான் விழிச்சிகிட்டே இருக்க
ஆந்த போல நான் இருளோட சாட்சியா
விழிச்சிப் பாத்துகிட்டே இருக்கேன்.
இப்ப நான் கண்ணாடியா மாறி உங்கள உங்களுக்குக்
காட்டிடுவன்
அதில தெரியப்போற காட்சி சிவப்பாத்தான் இருக்கும்
அத தொடைக்க தொடைக்க வழிஞ்சிகிட்டேதான் இருக்கு.
பாடல் முடியும் போது அந்த மூன்று நான்கு உடல்களும் எழுந்து கோமாளியின் உள் ஒடுங்குகிறது.  இப்போது கோமாளியே ஒரு உடல்.
ரத்தக் கண்ணாடி என் உடல்
சிவப்புக் கண்ணாடி என் உடல்
என்றபடியே அவள் உடையை மெல்லத் தூக்க கணுக்கால்களில் இரத்தம் வழிந்து கொண்டிருக்கிறது.  ஒளி இக்காட்சியைக் காணத்; திராணியற்று சென்று மறைகிறது.(இருள்) அழுகையில் இறுதி வரிகள்  மட்டும் எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.
நிகழ் 2
குழந்தையாயிருந்ததை விட மிகவும் சந்தோப்படும் பருவவயது பெண்களின் மன இசை அரங்கத்தை நிறைக்கிறது.  ஒளி மெல்ல கண் திறக்க, பெண் உடல்கள் தென்னங்குச்சிகளின் முனையில் காகிதப்பட்டாம் பூச்சிகள் ஒட்டி வைத்து ஆடியபடியே பறக்கின்றனர்.  பறந்தபடியே ஏனைய உடல்கள் தங்கள் பட்டாம்பூச்சிகளை மட்டும் விட்டுவிட்டு வெளியேறுகின்றனர்.  ஒரு பெண் மட்டுமே அங்கு விளையாடியபடி இருக்க, எதிர்த்திசையிலிருந்து இருவர் இரண்டு பகடைகளை உருட்டி விளையாடியபடியே உள்நுழைகின்றனர்.  அவள் விளையாடியபடியே இருக்க இவன் உருட்டுவதை நிறுத்திவிட்டு அவளையும் அவள் அசைவையும் கூர்ந்து கவனிக்கிறான்.  கவனித்ததன் வழி முழுமையான கவர்தல் திட்டமொன்றைத் தீட்டியவனாகச் சிரிக்கிறான். 
     இப்போது பகடை விளையாட்டை அவள் முன் நிகழ்த்திக்காட்டி அவளைத் தன் பக்கம் ஈர்க்க முயற்சிக்கிறான்.  விளையாடியபடி இருந்த அவள் ஒரு நேரத்தில் பகடையின் உருட்டல் லயத்தில் ஈர்க்கப்படுகிறாள்.  அவள் பகடையை நெருங்கி நானும் விளையாட வரவா? என்று கேட்கும் நேரம் பகடைக்காரன் கைத்தட்டி வெளியிலிருப்பவரை அழைக்கிறான். 
ஒரு பெண் முகமூடி அணிந்த ஒருவன் முதுகில் ஒரு மூட்டையைச் சுமந்தபடியே உள்நுழைகிறான்.  வந்தவனைப் பின்தொடர்வதில் ஆர்வம் கொள்ளும் அவளிடத்தில் ஒரு பகடையை வலிந்து திணிக்கிறான்.  அவளும் சுவாரசியத்தில் பகடையைப் பிடித்து உருட்ட ஆரம்பிக்கிறாள்.  மூட்டையுடன் வந்தவன் முன் மைய மேடையை நோக்கிச் சென்று தன் மூட்டையில் இருந்த காலிக் குப்பிகளை கீழே இறைத்துவிட்டு அதையே பார்த்துக்கொண்டு இருக்கிறான்.  இங்கு பகடை விளையாட்டு முதலில் அப்பெண் வெற்றிபெறும் படியாக நிகழ்கிறது.  பகடைக்காரன் நிறை விட்டுக் கொடுக்கிறான்.  ஆனால் அப்பெண் மிகவும் சக்தி கொண்டவளாகப் பகடையை உருட்டி விளையாடுவதை அவன் உணர்கிறான்.  திணறுகிற நிலையில் அவன் முகமும் உடலும் மாறுகிறது.  பின் அதனைக் காட்டிக் கொள்ளாதவனாக முகத்தை மாற்றிக் கொண்டு மீண்டும் விளையாடப் போகிறான்.  அவள் சக்தி உடலில் பேரியக்கமாக மாறிச் சுழல்கிறாள்.  ஒரு நேரம் அடிவயிற்றில் வலி உணர்ந்தவளாகத் திணறுகிறாள். தன் கைப் பகடையை அணைத்தபடியே குறுகி உட்காருகிறாள். 

     இப்போது வழி ஒன்று கிடைத்தவனாக அம்மூட்டை மனிதன் தீட்டுஎன்ற வார்த்தையை மட்டும் அழுத்தமாக உச்சரிக்கிறான்.  ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தீட்டுதீட்டுஎன்று உச்சரித்தபடியே மிகுந்த கவன ஒருங்கிணைப்புடன் அக்குப்பிகளை அடுக்குகிறான்.  பகடைக்காரன் இப்போது பெரும் சுதந்திரம் பெற்றவனாகப் பகடையை உருட்டுகிறான். 
     அப்பெண் இப்போது பார்வையாளர்களுக்கு முதுகு காட்டியபடியே வேதனையில் தேம்புகிறாள்.  இப்போது அவள் முழுக்கப் பகடை உருள்கிறது.  அங்கு குப்பிகளும் தீட்டுஎனும் வார்த்தையைத் தாங்கி ஒரு பெரும் மதில் போல வளர்ந்து நிற்கிறது.  பகடைக்காரனும் வெற்றிபெற்றவனாக ஓரிடத்தில் இப்போது அமர அவள் மெல்லத் திரும்புகிறாள்.  அவள் பிடித்திருந்த பகடையில் தாயம் விழுந்திருக்க, அத்தாயத்தில் இரத்தம் கசிகிறது.  அவள் பிறப்புறுப்பு இரத்தக் கண்ணாடியாகிறது.
     பல கோடி ஆண்களின் வெற்றிக்காகக் கட்டப்பட்ட அந்தத் தீட்டுக் கோட்டை சட்டென்று சரித்து மூட்டைக்குள் செலுத்தப்படுகிறது.  மீண்டும் பெண் முகமூடியுடன் வெளியேறுகிறான்.  அந்தப் பழம்மூட்டை மனிதன்.  பகடைக்காரன் நகைக்கிறான்.  அந்த ஏளனச்சிரிப்பு.  நீண்ட நேரம் ஒளியில் உறைந்திருக்கிறது. 
நிகழ் 3:
     புதிய ஒளி மேடையில் தோன்ற, ஒரு பெண் சில சமையல் பாத்திரங்களுடன் வந்து அவள் வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறாள்.  அதையே கணினி வேலையாகவும் தொலைபேசித் தொடர்பாகவும் பயன்படுத்துகிறாள்.  குளிக்கிறாள்.  உணவு உட்கொள்கிறாள்.  அப்போது அந்தப் பகுதியில் நுழையும் கரும் உருவங்கள் அங்குமிங்கும் என பதுங்கியபடியே கையில் வைத்திருக்கும் டார்ச் ஒளியின் துணையுடன் கைபேசியில் படம் பிடிக்கின்றனர்.  திரையில் பல பெண் முகங்களில் கரி பூசப்படுகிறது.  கயிறுகள் நுனி கொக்கி கொண்டு இறங்குகிறது.  திரையில் காட்சிகள் மறைந்தவுடன் மேடையில் அக்கயிறுகள் இறங்கத் தொடங்கிவிடுகின்றன.  மேடையின் மேலிருந்து இறங்கும் கயிறுகளின் நுனியைச் சந்தித்துவிடும் வேகத்தில் சில பெண்கள் உள்ளே வந்து விடுகின்றனர்.  கயிற்றின் நுனியைத் தங்கள் மூக்கின் நுனியில் சந்தித்தவுடன் முதுகில் கோர்க்கப்பட்டிருக்கும் சட்டை மாட்டும் ஆங்கரை வெளியிலெடுத்து கயிற்றின் நுனி கொக்கியில் மாட்டுகின்றனர்.  தொங்கிய நிலையில் இருக்க, நடுவில் இருக்கும் பெண் தன் முகத்தில் கரி பூசப்பட்ட நிலையில் ஒளியைப் பார்த்துப் பேசுகிறாள்.
வசனம்: எங்கள் உடல் தொடர்ந்து காயம்பட்டுக் கொண்டே இருக்கிறது.  எங்கள் கனவுகள், அசைவுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.  ஒரு நிலம் எப்படி இலையுதிர், இளவேனில், கோடை, அடைமழை என இப்படிப் பல பருவங்களைச் சந்திக்கிறதோ! அதுபோல நானும்!
மற்றவர்கள்: நாங்களும்!
கடந்து வந்த பருவங்களை நினைத்துப் பார்;க்கிறோம்.  ஏன் எல்லாப் பருவங்களிலும் சிவப்பு நிறம் தொடர்ந்துகிட்டே இருக்கு?  வன்மம், அத்துமீறல், அதிகாரம்.  கிழிக்கக் கிழிக்க வழிஞ்சிகிட்டே இருக்கு. 
(மெல்ல அருகில் இருந்த ஒரு துணியை எடுத்துத் தன் தொடைப் பகுதியைத் துடைக்கத் தொடங்குகிறாள்.  கால், பாதம் எனத் தொடர்ந்து நிலத்தில் துடைக்கிறாள்.(இசை) அப்படியே துடைத்தபடி ஒரு பெண்ணின் பாதத்தின் அருகில் முடித்து, தன்னுடன் தள்ளிக்கொண்டே வந்த பாத்திரத்தில் அத்துணியைப் பிழிகிறாள்.  சிவப்பு நீர் வழிகிறது.  அப்பாதத்தினுடைய பெண் தன் சட்டையை ஆங்கரிலேயே மாட்டிவிட்டு உடலை மட்டும் வெளியிலெடுத்துப் பேசியபடியே முன் வருகிறாள்.  அவள் முதுகில் கண்ணாடித் தாளினுள் நிறைய வண்ணப் பந்துகள்.
பருவம் 1: எனக்கு விளையாட ரொம்ப பிடிக்கும் என்னோட விளையாட நிறைய பேர் வருவாங்க.  என் வயசு குழந்தைகளிலிருந்து தாத்தா பாட்டி வரைக்கும் எல்லோரும் என்னோட விளையாடுவாங்க.  ஒருநாள் எதிர்வீட்டு ஐயா ஒருத்தர் (பின்னால் இருக்கும் பந்துப்பையை முன்னால் எடுத்துப் போட்டபடி) விளையாடும்போது எனக்கு நிறைய பந்துகள வாங்கிக் கொடுத்தாரு.  என்னோட விளையாடினாரு.  அவ்வளவு பந்துகளையும் என்மேல பயன்படுத்துனாரு.  (நீண்ட அமைதி)  அதோட, விளையாட பயம் வந்துச்சி.  (சற்று நடந்து மேடையின் வெளியேற்ற விளிம்பில் நின்று)  வீட்டுக்கு வந்த என் உடம்புல புது வலி, கீறல், ரத்தக் கசிவு.  ஆமா முதன்முதலா என்னோட கால் இடுக்குல வழிஞ்ச ரத்தம் அது.(என்று பையிலிருந்து சிவப்புப் பந்து ஒன்றை எடுத்துக் காண்பித்தவாறே வெளியேறுகிறாள்.  துடைப்பவள் இன்னொரு பெண்ணின் காலடியில் வந்து சேர்ந்திருக்கிறாள்.  மீண்டும் துணியைப் பிழிகிறாள். அப்பெண் தன் சட்டையை ஆங்கரிலேயே மாட்டிவிட்டுப் பேசத் தொடங்குகிறாள்.)
பருவம் 2: ரத்தத்தப் பார்த்தப் பயத்துலயிருந்து என் உடம்புக்குத் துரோகம் செய்யுற எந்த ஒரு கண்ணையும் எனக்குப் பிடிக்காமப் போச்சு.  ஏன்னா இது என்னோட உடல்.  உங்களோட இயலாமை எனும் மகிழ்ச்சிக்கு என்னோட அனுமதி அவசியம்னு உங்களுக்கு ஏன் புரியல?  (வலியுண்டவளாக மடங்கி ஒருமுட்டி போட்ட நிலைக்குப் போகிறாள்)  இந்தக் கேள்விய யாரிடமும் கேட்காம எனக்குள்ளேயே புதைக்க ஆரம்பிச்சன்.  ஒருநாள் என்னோட கீழ் உடுப்பத் துவச்ச என் அம்மா அதுல உறஞ்சிருந்த ரத்தத்தப் பார்த்துட்டு (அம்மா அதட்டிய பாவனையில்)  நீ பெரிய பொண்ணாயிட்ட! அத ஏன் என்கிட்ட சொல்லல? இது கூடவா உனக்குத் தெரியாது? உனக்கு வலிக்கல? அப்படின்னு பயங்கரமா சத்தம் போட்டாங்க.
நான் அந்தச் சிகப்புப் பந்து கதைய அவங்ககிட்ட அழுதுகிட்டே சொன்னன்.  அப்பவே வலிச்சிதுன்னும் சொன்னன்.  அன்னையிலிருந்து எங்க அம்மா எங்கிட்ட பேசவேயில்ல.  நான் மட்டுமே எனக்கு உறவுன்னு ஆனன்.  அப்புறம், ஒவ்வொரு மாசமும் ரத்தத்த எதிர்பார்த்துக் காத்திருக்கக் கத்துக்கிட்டன்.  ஏன்னா அந்தச் சிவப்பும் என்னப்போலவே இந்தச் சமூகத்துல ஒதுக்கப்படற ஒரு பொருள்தானே? (வெளியேறுகிறாள்.  மூன்றாம் ஆள்)
பருவம் 3:  (வயிற்றில் கைவைத்தபடியே) மகாபாரதக் குந்திமேல எனக்குப் பொறாமை அதிகம்.  அவளோட போட்டிப் போட்டு அவளத் தோக்கடிக்கனும்னு எனக்கு ரொம்ப ஆச.  ஆமா அவதானே எந்த ஒரு நிர்பந்தமும் இல்லாம சூரியனால கர்ப்பமானாள்!  என்னப் போலவே தனியா நின்னப்ப தான அவ அந்த முடிவ எடுத்தா?  எனக்கும் அவளப் போலவே யாரையும் பிடிக்கல.  இங்க யார் மேலயும் நம்பிக்கை இல்ல.  (கையில் கைப்பேசியை எடுக்கிறாள்)  என்னோட அனுமதியில்லாமலேயே என்னோட உடல் அசைவுகள், இயக்கங்கள் பதிவு செய்யப்படுகின்றன.  திரையில் பல ஆண்களின் கண்கள் வெறித்த நிலையில் சிதறுகிறது.  கணினி, கைப்பேசி எனத் தனித்துப் பார்வையிடுவது.  பல்வேறு கைகள் பகிர்வுபொத்தானை சொடுக்குவது, பார்வையாளர் எண்ணிக்கை அதிகரிப்பது போன்றவை காட்சியாகிறது)  என்ன ஒருத்தன் பதிவு செய்யறான்.  அவன் பல பேருக்கு அத பரிமாறறான்.  அத பாக்கறவங்க ஒவ்வொருத்தர் மனநிலைக்கு ஏத்த மாதிரி பார்வையாலேயே என்னப் புணர்றாங்க.  (அமைதி)  இது எதுவும் எனக்குத் தெரியாது.  ஆனா வலிக்குதுஇ  ஒவ்வொரு முறையும் வலிக்குது.  (வெளியேறுகிறாள்.  மீண்டும் ரத்தம் துடைக்கப்பட்டுப் பிழியப்படுகிறது.  இறுதியாக ஒரு பெண் வந்து கையிலிருந்த குடைச் சூரியனை எடுத்துத் தலைக்கு மேல் பிடித்தபடி கண்கூசுவதாகப் பாவித்தவாறு பேசுகிறாள்.)
பருவம் 4:  எந்த ஒரு வன்கொடுமையும் அத்துமீறல்களும் இல்லாம குந்தியப் போல நானும் தாயாகனும்.  தாய்மைல கொறஞ்சபட்ச பாதுகாப்பு இருப்பதா நினைக்கிறன்.  பகல் வேலை முழுதும் நான் சூரிய ஒளியில நிக்கிறன்.  என்னுடைய கருப்பைய பயனுடையதாக்கும் சக்தி படைத்த புரு தெய்வம் சூரியன்தான்னு தீர்மானிச்சிருக்கன்.  அந்த வெப்பத்தோட துணையில வேலைசெய்யுற இடத்துல நெருங்கற மனிதப் புருர்கள்கிட்ட இருந்து தப்பிக்கிறன்.  (சிரிப்பு) அந்தத் திடமான வெப்பச் சூரியனத் தொடர்ந்து எனக்குள்ளவே வச்சிக்க, தினம் தினம் புதுப்புது மந்திரங்கள கற்பனை செஞ்சி உச்சரிக்கிறன்.  (அமைதி) இவ்வளவு செஞ்சும் நான் இன்னும் கன்னியாவே இருக்கன்.  என்னோட தாய்மை இந்தச் சமூகக் கட்டுத்திட்டங்களாலயும் வார்த்தை ஆயுதங்காளலேயும் தொடர்ந்து காயடிக்கப்பட்டுகிட்டே இருக்கு.(வெளியேறுகிறாள், நின்று)  நான் இன்னும் கன்னியாவே இருக்கன்.  இப்பவும் குந்திமேல எனக்குப் பொறாமை அதிகம்.  (வெளியேறிவிடுகிறாள். இப்போது ரத்தத்தைத் துடைப்பவள் மட்டும் எஞ்சியிருக்கிறாள்.  திடீர் வெறுமை அவளைப் பெரும் பயத்தில் ஆழ்த்துகிறது.  மிரள்கிறாள்.  நீண்ட விசில் சத்தம்.  பெண் கோமாளி, சிவப்பு வண்ணத் துணியுடன் இருக்கும் துடைப்பானைக் கொண்டு தரையைத் துடைத்தபடியே வருகிறாள்.  அவள் சிவப்பு நிறக் கையுறையும் காலுறையும் இருப்பது நிலம் முழுக்க பெண் உடலில் வழிந்த ரத்த ஆறு ஓடுவதை உணர்த்துகிறது.  துடைத்த நிலையிலேயே கோமாளி அப்பெண்ணிடம் வரப்போகும் அபாயத்தைத் தன் விசில் மூலம் எச்சரிக்கிறாள்.  பயங்கொண்ட அப்பெண் எல்லாச் சாமான்களையும் ஒன்று சேர்த்து அணைத்துக் கொள்கிறாள்.  அவள் நிலத்தைத் துடைத்துப் பிழிந்து ஊற்றிய ரத்தம் நிறைந்த பாத்திரம் மட்டும் தனியே இருக்கிறது.  பூட்ஸ் ஒலி அந்த இடத்தை நிறைக்க இறுதியாக நீண்ட விசில் ஒன்றை ஊதிக் கோமாளி தரையில் வில் போலப் படுத்துக் கொண்டு ஆடுகிறாள்.  காலில் உயரமான மரச் செருப்பு அணிந்த ஆண்கள், அதிகார ஓசையுடன் உள்நுழைந்து அப்பெண்ணைச் சுற்றி வளைத்துச் சூழ்ந்து அவளைத் தூக்கிச் செல்கின்றனர்.
வதை இசை.  கோமாளி துடிக்கிறாள்.  அவளின் தொப்பி கழன்று விழுகிறது.  கூந்தல் விரிந்த நிலையில் எழுந்து அமர்கிறாள்.  சிவப்பு நிறக் கண்ணாடியை(பலூன்) அணிந்து கொள்கிறாள்.  மேடையில் எஞ்சியிருந்த பாத்திரத்தைத் தூக்கிக் கொண்டு பார்வையாளர் பக்கம் போகிறாள்.  இப்போது அவளுடைய கூந்தல் நீண்டு கொண்டே போகிறது)
திரௌபதையுடைய கூந்தல் வளர்ந்துகிட்டேயிருக்கு.  சபதம் இன்னும் முடிஞ்சபாடில்ல! துரியோதனனின் தொடை தட்டிக் கூப்பிடும் இறுமாப்பு பதினஞ்சாயிரம் மடங்கு அதிகமாயிடுச்சு.  சபதம் இன்னும் முடிஞ்சபாடில்ல!  திரௌபதைகளுடைய கண்ணீர் சிவப்பா மாறிடுச்சு! (வெளியேறுகிறாள். இருள்)
நிகழ் 4
இருளிலேயே கூத்து இசை பரவுகிறது.  ஒளிவரும் போது மேடையில், கூத்து விசுப்பலகை மட்டும் இருக்கிறது.  ஒலிக்கும் பாடலுக்கு ஏற்ற வகையில் ஒளி அர்த்தமாகிறது.  சில நொடிகளில் பாடல் ஒலி தேய அங்கு ஒரு கர்ப்பஸ்திரி நெடும்பயணத்தின் விளைவாய் அங்கு வந்து சேர்கிறாள்.  மேடையில் யாரையோ தேடியபடியே கையில் உள்ள குழந்தை பொம்மையிடம் (துணி பொம்மை) பேசுகிறாள்.  சில சமயம் பார்வையாளர்களிடத்தும் பேசுகிறாள்.
வசனம்: எனக்குத் திருமணம் செய்யறது சம்மந்தமா பேச்சு வந்தப்போ நான் பாரதப் பாண்டவர்களத் தேடினேன்.  ஏன்னா அவங்கள தவிர்க்கறதுக்காக.  அஞ்சு ஆண்கள் ஒரு பெண் உடல கூறு போடுற பழக்கத்த அவங்கதானே முதல்ல தொடங்குனாங்க.  அதுதான் இன்னக்கி எல்லாப் போர்லயும் பிரதிபலிக்கிது.  விசாரணை, தருமம், தீர்ப்புங்குற பேரால அஞ்சு ராணுவ வீரர்கள் ஒரு பெண் உடல, மனத குதறி எடுக்கும் போது அவங்களுக்குள்ளயும் இந்தப் பாண்டவ அதிகாரம் தானே புகுந்திருக்கும்?  அதனாலதான் அவங்களத் தேடுறன்.  பாண்டவர்கள்கிட்ட கேக்க எனக்கு ஒரு கேள்வி இருக்கு.  அத அவங்ககிட்ட கேட்டுடணும்.  அதான் இப்போ அவங்களத் தேடி கூத்து நடக்குற இடத்துக்குப் போறன்.
(என்றபடியே வெளியேறுகிறாள்.  அவள் வெளியேறிக் கொண்டிருக்கும் அதே வேளையில் திரௌபதை வருகை தரும் பாடல் தொடங்கி விடுகிறது.  பாடலுடன் பெண் வேடமிட்ட கூத்துக் கலைஞன் சபையில் தோன்றுகிறார்.)
திரௌபதை: என் மயிர்தனை விடடா பாவி வலியை
                என் மன்னவர் அறியார் பாவி
           என் உடலும் தகிக்கிதடா பாவி
           என் கண்களும் கலங்குதடா பாவி
           என்னைப் பெண்டாள வந்தவர் யார் பாவி
           அவள் கொடுமை நியாயமடா பாவி
நீ பெரியோரில்லையா?  பெண் உடலைத் தெரிந்தவன் இல்லையா?
எதிர்க்க எனக்கு ஒரு உரிமை இல்லையா?
இங்கு ஒருவரும் என் பக்கம் இல்லையா?
யாதொன்றும் அறியா ஏழையென் பங்கில்
உலகத்துத் தெய்வந்தான் யாரும் இல்லையா?
(என்று அழுது புலம்பியபடியே வெளியேறுகிறாள் அக்கூத்துக் கலைஞர்.  இப்போது இன்னொரு கர்ப்பஸ்திரி உள்ளே வருகிறாள்.  உடை, முதலில் வந்த கர்ப்பஸ்திரியின் உடையைப் போலயே உள்ளது.  கையில் பொம்மை இல்லை.  அதற்குப் பதில் காகிதக்கூழில் செய்யப்பட்ட பொம்மையின் தலையில் மாட்டிய சவரி முடி இருக்கிறது.  அதை தொட்டு உறவாடியபடியே பேசுகிறாள்.)

வசனம்: பாண்டவர்களிடம் நான் கேட்க நினைக்கிற கேள்வி இதுதான்.  என்னோட தொடையில வந்து உட்கார்னு ஒருத்தன் சொன்னானே. அதோட அர்த்தம் உண்மையிலே உங்களுக்குத் தெரியாதா?  நீங்க சபையில பேசுற தர்மம் உங்களுக்காக உங்களாலேயே உருவாக்கப்பட்டதுதானே. அதனாலதானே எல்லாரும் கைகட்டி மௌனமா நின்னீங்க? 
ஆனா திரௌபதையுடைய தர்மம் வேற.  ஆயிரம் ஆண்களின் கண்களைக் கொண்ட துரியோதனனின் பார்வை திரௌபதையின் தொடை இடுக்கைத் துளைத்து உள்ளே சென்று கிழிக்கப்பட்டு வழிந்ததே பெரு வெள்ளமென ரத்தம் அதோட வலிதான் திரௌபதையுடைய தர்மம்.  அதனாலதான் தலைவிரி கோலத்தோட சபதமிட்டா.
 துரியோதனா! அதிகாரமென்று நீ நினைத்துக் கொண்டிருக்கும் உனது தொடை உதிரத்தை என் கூந்தலில் தடவி சிகை முடிப்பேன் அப்படின்னு சொன்னா. (சவரிக் கூந்தல்களை நேராகக் கொண்டுவந்து, சோகமாக)  இதுவரை அது நடக்கவில்லை.  அதனாலதான் பல்லாயிரக்கணக்கான கூந்தல்கள் இன்னும் காற்றில் அலைகிறது. 
ஏன்னா, போர் இன்னும் முடியவே இல்லை.  நான் திரௌபதை.  இதோ இவள் திரௌபதை, இங்கு பலர் உடல் திரௌபதையுடையது.  கிரு;ணன் என்னும் ஆண்மகனால் வடிவமைக்கப்பட்டுத் தொடங்கிவைக்கப்பட்டது இந்தப் போர்.  அதனால் இங்கு துரியோதனன் எப்போதுமே மண்ணில் சாயமாட்டான்.  அவன் தொடையில் மட்டும் பல பெண் உடல்களின் உதிரம் சேர்ந்து கொண்டே போகிறது.  எங்கள் யோனியில் வலி பெருகிக் கொண்டே போகிறது.  (வெளியேறுகிறாள்.  இப்போது மறுபக்கத்திலிருந்து புதிய கர்ப்பஸ்திரி ஒருவர், கைகளில் மிக நீளமான சேலைகளின் எடை துயரம் ஏற்படுத்துவதைப் போன்ற பாவனையில் உள்ளே வருகிறாள்.)
வசனம்: இது கிரு;ணன் கொடுத்த உடை.  (கேவலமான தொனியில்)  மானத்தை மறைப்பதற்கு.  மானம் என்பது உடைகளில் இல்லை என்பது தெரியாமல் அன்று அவன் செய்த செயல்,  காலம் காலமாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.  உடைதான் பிரதானமென்று நீங்கள் நினைத்தால்அந்தக் கருணை எங்களுக்கு வேண்டாம்.  இதோ! திருப்பித் தருகிறோம்.  கிரு;ணா! எடுத்துக்கொள். (சேலையைக் கையிலிருந்து விடுவித்துக் கொண்டே வெளியேறுகிறாள்.


 மேடை முழுவதும் சேலை நீண்டு கிடக்கிறது.  அப்போது பெண் கோமாளி கூலிங் கிளாஸ் போட்டு, கையில் பெரிய பேக்குடன் உள்ளே வருகிறாள்.  சேலையின் ஒரு நுனிக்குச் சென்று நின்று பையைப் பிரித்து வைத்து நடக்கிறாள். சேலையை அதனுள் திணித்தபடி நகர்கிறாள்.  பின்னணியில்
பாடல்….
     டாபு டாபு டப டபக்கு
     டூபு டூபு டுபு டுபுக்கு
இந்தச் சேல கொடுத்த பகவானோட
பிளா;பேக் கதையச் சொல்லவா?
அந்தப் புண்ணியவான் கதையச் சொல்லவா?
     டாபு டாபு டப டபக்கு
     டூபு டூபு டுபு டுபுக்கு
பொம்பளைங்களோட துணியத் தூக்கிகிட்டு
மரத்துல ஏறினாரு நம்ம பகவான்
சோக்கா மேல உக்காந்துகிட்டு
பொம்பளைங்கள பார்த்து
போட்டான் போடு புண்ணியவான்.
அவன் என்ன சொன்னான் தெரியுமா?
மாருல ஏன் கைய வெச்சி மறைச்சிகிட்டு இருக்கீங்க கோபியரே!
இப்போ இந்தப் பகவானப் பார்த்து
உங்க கைகள் ரெண்டாலையும்
கும்மிடு போடலைன்னா
சாபமா ஆயிடும்னு
சொன்னான் புண்ணியவான்
டாபு டாபு டப டபக்கு
     டூபு டூபு டுபு டுபுக்கு
வெளிச்சத்தில் மின்னும்
இருட்டில கிழிக்கும்
பாட்டில் ஓடு போல
பகவான்கள் செயலும் ஒண்ணுங்கோ!
     டாபு டாபு டப டபக்கு
     டூபு டூபு டுபு டுபுக்கு
சேலையை உள்நுழைத்த அவள் பையின் இன்னொரு பகுதியிலிருந்து பெண்களின் நவீன உடைகள் மற்றும் உள்ளாடைகளைச் சரம் போல எடுத்துப் போட்டுக் கொண்டே வெளியேறும் அளவிற்கு வந்து நின்று.
கோமாளி: இந்த உடைகள் தான், உங்களின் காரணமென்றால் எடுத்துக் கொள்ளுங்கள்.  காரணமில்லாத புதிய உடைகளை நீங்களே வடிவமைத்து இந்தியாவின் மகள்களுக்குப் போட்டு மரியாதை வேண்டாம்.  மானத்தைக் காப்பாற்றுங்கள்!
சேலையை எடுத்த பையை வெளியேறிவிடுகிறாள்.  மேடையில் இப்போது பெண்களின் உடைகள் சுதந்திரமாய் தரையில் நீண்டு கிடக்கிறது.  (ஆங்கரில் ஆடைகள் மட்டும் தொங்கும் வீடியோ காட்சிகள்)
வலி நிறைந்த இசை இருளுடன் பயணித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில்.  அவ்விசையின் சாட்சியாகக் கைகளில் ஏந்திய பை ஒன்றுடன் மூன்று கர்ப்பஸ்திரிகள் மேடையின் மூன்று பகுதிகளில் வந்து அமர்கிறார்கள். ஒளி ஒருவர் மாறி ஒருவர் மீது பாய்கிறது.
உடலுடன் உடல் 1: நான் இப்போ கர்ப்பமா இருக்கறன்.  என்னோட இந்தக் கர்ப்பத்துக்கே காரணம் சூரியனோ, சந்திரனோ இல்ல.  ஆண் எனும் அதிகாரத்தால.  கர்ப்பமா இருக்கன். அதுவும் பல்லாயிரம் வருங்களா. 
உடலுடன் உடல் 2: இந்தச் சமூகம் ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவிற்கு, பயத்தை ஏற்படுத்தியிருக்கும் நன்னடத்தை விதிகளை நான் பின்பற்றாததற்குப் பல நியாயங்கள் என் பக்கமிருக்கின்றன.  வாழும் போதும் நிலையில்லாத தன்மை கொண்ட உடல்களை ஒடுக்குதல்தான், இங்கு நன்னடத்தையின்  அஸ்திவாரம்.  வாழும் ஒவ்வொரு கணமும் உயிரோடு துடிக்கும் நிலையான, மனித மனத்தையும் அதன் ஆசாபாசங்களையும் வலி வேதனைகளையும் வெளிப்படுத்துவது இங்கு நன்னடத்தை இல்லை.  என் வெளிப்பாட்டிற்கு மதிப்பு தருவதற்கும் அதில் இடமில்லை.
உடலுடன் உடல் 3: இதையெல்லாம் தீர்மானித்த, தீர்மானிக்கின்ற, தீர்மானிக்கப்போகும் நீதி தேவன்களின் சுயமுகங்களை உங்களுக்குக் காண்பிக்கிறேன்.  அந்த முகங்களுக்குள்ள ஒளிந்திருக்கக்கூடிய உடல் வேட்டைக்குணத்தை உங்களுக்குக் காண்பிக்கிறேன். 
நியாயம் 1: (மரத்தால் ஆன பாதரக்iயைத் தன் கையிலிருந்த பையில் இருந்து வெளியில் எடுத்துக் காண்பிக்கிறாள்) உங்களால் அனுதினமும் பூஜிக்கப்படும் சமயகுரு ஒருவரின் அடையாளம்தான் இது.  என் உடலைக் கொண்டாடுவதற்காக மட்டும் வந்து போனதற்கான ஆதாரம் இது.
நியாயம் 2: (மூக்குக் கண்ணாடி ஒன்றை வெளியிலெடுத்துக் காண்பித்தவாறாக)
உங்களுக்கெல்லாம் நீதி தேவனாய் நீதி வழங்கிக் கொண்டிருக்கும் நீதிபதியின் அடையாளம்தான் இது.  என் உடலில் அவர் எழுதிவிட்ட நீதிக்கான ஆதாரம் இது.  என் உடலுக்காக என் முன் மண்டியிட்ட நீதி இது.  நீதி தேவதையின் கண்ணைக் கட்டி எழுதப்பட்ட நீதி இது. 
நியாயம் 3: என் உடலே எனக்கு ஆயுதம்.  நான் துணிந்துவிட்டேன்.  இச்சமூகம் எனும் மீசை சொல்லும் நியாயம், தர்மம் போன்றவற்றைக் கேள்விக்குட்படுத்தினேன். 
(கதர் சட்டை, போலிஸ் தொப்பி, மோதிரம் போன்றவற்றை வெளியிலெடுத்துக் காண்பிக்கிறாள்)
இனி ஒருவரும் எனக்கு நீதி கூறமுடியாதபடியான செயலைத் தேர்ந்தெடுத்தேன்.
(நீண்ட அமைதி) (கண்களில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடியே) ஆமாம்! உங்;கள் நீதிபதிகளையும் நியாயவான்களையும் தலைவர்களையும் குருமார்களையும் என் உடலில் கலப்பதை அனுமதித்தேன்.  அதையே சந்தர்ப்பமாக்கி அதற்கான ஆதாரத்தையும் சேர்த்து வைத்துக் கொண்டேன்.
இப்போது ஆதாரம் எங்கள் கையில்.  எங்கள் உடல்முன் அவர்கள் குற்றவாளிகள்.  எனக்குத் தீர்ப்புச் சொல்ல, இனி அவர்கள் ஒருபோதும் வரமாட்டார்கள்.(மூவரும் பெரிதாகச் சிரித்துவிட்டு)
மூன்று உடல்களும்: இனி எங்கள் தீர்ப்புக்கு அவர்கள் கட்டுப்பட்டவர்கள்.
(ஒளி தேய்கிறது.  மீண்டும் வளரும்போது மேடையில் இருந்த கர்ப்பஸ்திரி மட்டும் பிரசவ முனகலுடன் அமர்ந்து நெளிந்து கொண்டிருக்கிறாள்.  வலி பெருகிய ஒரு நொடியில் பிரசவம் நிகழ்கிறது.  ஒரு பெண் குழந்தை தலைகீழ் நிலையில் பூமியைத் தொடுகிறது.  ரத்தத்தில் திளைக்கும் அவ்வுயிரை வாஞ்சையோடு தடவியபடி பெருமூச்சுடன் பேசுகிறாள்.)
இதோ! என் தொடைகளுக்கிடையில் ரத்தத்தோடு வழிந்து கொண்டிருக்கும் இந்த உயிர் என் உள்ளத்தின் உயிர்.  இதுவே நான்.  இனி என் உருவம் பார்க்கும் கண்ணாடி.  ரத்தக் கண்ணாடி.  சிகப்புக் கண்ணாடி.  இது என் உள்ளம் கொண்டு நான் உருவாக்கிய கண்ணாடி.  இது என் சுதந்திரம்.  இது என் விடுதலை
 (அப்போது வலப்பக்க மூலையில் இருந்து கண்தெரியாத இசைஞன் எண்களை உச்சரித்தபடியே நடக்கிறான்.  ஒளியும் இசையும் ஒத்திசைத்துப் பயணப்பட, இனி இதுபோல் புதிய பல நாடகங்கள் வளரப் போகின்றன என்பதற்காகத் தற்காலிகமாக ஒளி அம்மேடையில் குறைக்கப்படுகிறது.)
............................

Comments

Popular posts from this blog

அரங்கில் கலந்த ஆசிரியர் சே. ராமானுஜம்

எல்லோருக்காகவும் வேண்டியெழும் மொழி : ஜான் ஃபோஸின் நாடகங்கள் - ஞா. கோபி

நாடகக் கலைஞர்களின் கலை வழி உறவு நிலை வெளிப்பாடுகள்