தோழர் , நாடகம் ஞா.கோபி, புதுச்சேரி

தோழர்- நாடகம்



இயக்குநர் குறிப்பு:
இந்நாடகம் ‘italo calvino’ வின் ‘ good for nothing’’ எனும்  சிறுகதையைத் தழுவி எழுதப்பட்டது. இவ்வுலகில், இருத்தலியல் சார் ஓட்டத்தில் நாம் நம்மைச் சுற்றி இருப்பவரை கவனிக்காமல் ஓடிக்கொண்டிருப்பதை காட்சியும்  வசனமும் ஆக்குகிறது. ஒரு வகையில், ஷூ லேஸ் என்பது வீட்டு மனைகளாக மாறிவரும்  விவசாய நிலங்கள் மற்றும் வரலாற்றுத் தொடர்பற்ற கல்வி முறைகளாகவும் கூட இருக்கலாம்.நம் உடலில் நம் பார்வையில் உள்ள மாற்றங்களை நமக்கு சுட்டிக்  காட்டுபவர்களையும் நாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்பதை ஒரு வழிப் போக்கனின்  உருவில்  வந்து பார்வையாளர் ஒவ்வொருவர்க்கும் நினைவுபடுத்துகிறது.தற்காலத்தில் நான் ஏன் செய்ய வேண்டும் கற்றுத் தர வேண்டும் என்று சொல்லும் போக்கே இங்கு எல்லாரிடத்திலும் அதிக அளவில் பயன்பாட்டில் இருந்து வருவதை எள்ளி நகையாடி இறுதியில்  வாழ்வியலின் இறுதி அம்சத்தைச் சுட்டி நம்மை அச்சுறுத்துகிறது.அச்சுறுத்தல் என்பது பார்ப்பவர், விலகி விடாமல் பயத்துடன் ஒன்று சேர்வதை முன்னிருத்தி முடிகிறது இந்நாடகம்.
உலகப்புகழ் பெற்ற ‘ சிறுகதையை நாடகம் ஆக்குவது என்பது ஒரு பெரும் சவாலான காரியம். அந்த அளவில் ‘’good for nothing’’ எனும் சிறுகதையைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ள இந்நாடகம் ஒரு பரிசோதனை முயற்சியே.நடிகர்களின் கால்களைக் கொண்டும மாத்திரமே நிகழ்வின் பெரும்பகுதி பயணிப்பது என்பது காட்சி ரீதியாகவும் நடிப்பு ரீதியாகவும்  பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும்.மேலும் கருத்து ரீதியாக ‘ இருத்தலியல்’ மற்றும் வாழ்வியல் கோட்பாடுகளை முன்னிருத்தும் இந்நாடகத்தை காட்சிகள் வழி கோர்வையாக்கி மிக சாதாரணமாக தர முடிந்திருக்கிறது.அவ்வகையில் இந்நாடகம் ஒரு ‘visual text’ என்பதால் பார்வையாளர் ஒவ்வொருவருக்கும் ஓர் புதிய அனுபவத்தினைத் தந்து அவர்வர் இருப்பு நிலையை அவர்களுக்கு நினைவுக்கு கொண்டு வரும் .இவ்வுறுதியான நம்பிக்கையே இந்நாடக வடிவம்.

நிகழ்
அரங்கில் ஒளி வரும்போது நிகழ்தளத்தின் குறுக்கே ஒரு (நகரம் போன்ற ஓவியம் தீட்டப்பட்ட canvas) துணி காட்சி ஆகிறது. ஒளி மெல்ல அத்துணியின் கீழ் பகுதியில் இடம் பெயரும்போது,நான்கைந்து கால்கள் உறைநிலையிலிருந்து அசையத் தொடங்குகின்றன. அக்கால்கள் பல்வேறு பொருளதார பிண்ணனியைச் சுட்டுவதாக இருக்கிறது.அக்கால்கள் நடக்கத் தொடங்கியவுடன்,திரை மெல்ல கீழறங்கி வந்து அக்கால்களுக்கு சொந்தமானவர்களை காட்சியாக்குகிறது.
 
அப்போது,அக்கூட்டத்தில் ஒரு புதிய மனிதன்(தொப்பி,கோட் அணிந்த நிலையிலும் கையில் ஒரு புத்தகம், குடை வைத்தவனாக) காட்சியளிக்கிறார் நடந்து வந்து அவன் பஸ் ஸ்டாப்பில் இருந்த நாற்காலியில் அமர்கிறான்.அதே சமயம் முன்பிருந்ததே நடந்து கொண்டிருந்த ஒரு இளைஞன்(வேலை தேடுபவன்) அங்கு வந்து நிற்கிறான்.அமர்ந்திருந்தவன் நிற்பவனையே பார்க்கிறான்.நிற்பவன் அதை உணர்கிறான்.நிற்பவன் மெல்ல நகர முயற்சிக்க,அமர்ந்திருந்தவன் எழுந்து அவனை மறிப்பது போல் நின்று.
புத்தக மனிதன்மன்னிக்க வேண்டும்; உன்னோட ஷு லேஸ் அவிழ்ந்திருக்கு
வேலை தேடும் இளைஞன்: ஆமாம், கவனிக்கவில்லை. நன்றி.
சொல்லிவிட்டு,சாய்ந்து கொண்டு முடிச்சி கட்ட ஏதுவாய் அருகில் கட்டிடம் ஏதும் இல்லாத்தால் அப்படியே கீழே உட்கார்ந்து தன் ஷு லேஸ்களை கட்டுகிறான்.நடைபயணிகள் அவனை உரசியபடியே செல்கின்றனர்.இவன் முடிச்சிட்டு எழுந்து நிற்கும் போழுது,புத்தக மனிதன் அங்கிருந்து மறைந்திருக்கிறான்.
மீண்டும் நடக்கத் தொடங்குகிறான்.அவனுடன் நிறைய பேர் குறுக்கும் மறுக்குமாக நடக்கின்றனர். இவன் ஓரிடத்தில் பசிப்பதாக பாவனை செய்தவாறாக,நின்று தன்  கைப்பையில் இருந்து ரொட்டித் துண்டுகளை எடுத்து சாப்பிடுகிறான்.அப்போது புத்தக மனிதன் அங்கு வருகிறான்.இவன் ரொட்டியை மறைக்கிறான்.சாப்பிடுவதின் வேகத்தை மெல்ல குறைக்கிறான்.இவன் நகர முற்படும்போது,அவன் எதிரில் வந்து காலை சுட்டிக்காட்டி 
புத்தக மனிதன்இப்போ உன்னோட வலதுகால் ஷு லேஸ் அவிழ்ந்திடுச்சுப் பார்
இவன் கீழே குனிந்து முடிச்சிடுகிறான்.வேகமாக அங்கிருந்து நடக்கத் தொடங்கி ஒரு சின்ன பாலத்தின் மேல் நடக்கும் போது.அவன் மீண்டும் எதிரில் வருகிறான்.
புத்தக மனிதன்இப்போ, உன்னோட இடதுகால் ஷு லேஸ் அவிழ்ந்து இருக்கு பார்!
நடந்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் இவனையே பார்ப்பதாகப் பட்டது இவனுக்கு குனிந்து வேகமாக முடிச்சிட்டுக் கொண்டு மிக வேகமாக ஓடத்தொடங்குகிறான்.ஓடிக்கொண்டிருக்கும் போதே,ஒருவன் மேல் மோத நிற்கிறான்.
மன்னிக்கனும்என்று பின்னால் வந்து சொல்ல அவன் நிற்கிறான்.சிரித்தபடியே,
புத்தக மனிதன்நீதான் மன்னிக்க வேண்டும்.நான் இதை சொல்வதற்கு,இப்போ உன்னுடைய இரண்டு லேஸ்களுமே அவிழ்ந்திருக்கு
இவன் கீழே குனியப் போகும் போது அவன்,
புத்தக மனிதன்:மீண்டும் மன்னிக்க வேண்டும்.நீ உன்னுடைய ஷு லேஸ்களை எப்படி முடிச்சிட வேண்டும் எனக் கற்றுக் கொள்ள விரும்பவில்லைப் போல.
வேலை தேடும் இளைஞன்:  எனக்குத் தெரியும், நான் ஷு லேஸ் கட்டுவதில் கெட்டிக்காரன் கிடையாது.சின்ன வயதிலிருந்தே அதைக் கற்றுக் கொள்ளவுமில்லை. அதோடு நான்,ஷுவைப் போடுவதும் அவிழ்ப்பதும் லேசை முடிச்சிபோடாமல்தான்.ஏனேனில் முடிச்சுகளில் எனக்கு திறமையில்லை.
புத்தக மனிதன்: ஓ! அப்படியா,அப்படின்னா,உன்னோட குழந்தைகளுக்கு அவர்களின் ஷுக்களுக்கு முடிச்சிடுவது எப்படின்னு சொல்லிக் கொடுப்பே?
வேலை தேடும் இளைஞன்:  என் குழந்தைகள் தங்கள் ஷுக்களை எப்படி முடிச்சிடுவது என்பதை மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்வார்கள்
புத்தக மனிதன்: (சிரிக்கிறான்...)இப்படி நடக்குதுன்னு வச்சுக்கோ,நாளைக்கு திடீரென்று இந்த உலகம் பெரு வெள்ளத்துல அழிஞ்சு போகுது.அதிஷ்ட வசமா நீயும்  உன் குழந்தைகள் மட்டும் தப்பிச்சிடுறீங்க.அப்படி மிச்சமா இருக்கிறவங்க கிட்ட இருந்து மனித இனம் அதோட வளர்ச்சியைத் தொடங்குதுன்னு வை.அப்போ,அக்குழந்தைகள் தங்கள் ஷுக்கு லேஸ் போட எப்படி கத்துப்பாங்க? மீண்டும் மனித இனம் ஷு லேசை முடிச்சி போடக் கற்று கொள்வதற்கு பல நூறு வருஷம் ஆயிடுமே!
இவன்,உறைநிலையில் நிற்க மக்கள் நடந்து கடந்தபடியே இருக்கின்றனர்.திடீரென ஞாபகம் வந்தவனாக,
வேலை தேடும் இளைஞன்:  இவ்வளவு மக்கள் இங்க இருக்கும் போது ஒரு முடிச்சுக் கூடப் போடத் தெரியாத என்னை ஏன் தேர்ந்தெடுத்துப் பேசிக்கிட்டு இருக்கீங்க ?
புத்தக மனிதன்: எதற்கு நான், என்றா கேட்கிறாய்? நீ மட்டுமல்ல, இங்கு எல்லா ஜனங்களும் ஏன் நான்’ என்றுதான் கேட்கிறார்கள். இங்கு எல்லா ஜனங்களின் ஷுவிலும் முடிச்சு உள்ளது.அதை அவர்கள் தினம் பிரித்து மீண்டும் முடிச்சு போட்ட படி இருந்தாலும், முழுமையாக முடிச்சுப் போடத் தெரியாதவற்களாகவே அவர்கள் உள்ளனர்.இந்த அறியாமைதான் அவர்களை மற்றவர்களுடன் பிணைத்து வைத்திருக்கிறது,ஆமாம், சமூகம்(ஷு கையில்) எப்போதுமே இந்த ஒத்துப்போகாத தன்மையைக் கொண்டே இயங்குகிறது.அதாவது திறமையையும் திறமையின்மையும் ஒருங்கிணைத்தல்.ஆனா,பெரு வெள்ளத்தில் உலகம் அழியும்போது? பெரு வெள்ளத்தில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருக்கும் போது, பிடித்து நின்று உச்சியில் ஏறி தப்பித்துக் கொள்ள வின்னுயரத்திற்கு ஒரு மரம் தேவைப்படுமே.அது எதிர்பார்பார்பு.தப்பித்தல் மனநிலை.
ஆனால் உண்மை(mask) என்னவெனில்; உனக்கு ஷு லேசை முடிச்சிப் போடத் தெரியாது. இன்னொருவனுக்கு மரத்தை இழைக்கத் தெரியாது. வேறு ஒருவனுக்கு தாஸ்தவெஸ்கியின் புத்தகங்கள் தெரியாது.இன்னொருவனக்கு போராட்ட வடிவம்னா என்னன்னு தெரியாது.பல பேருக்கு பிடித்த மீனை விற்கும் நுணக்கம் தெரியாது.(அமைதி) இப்படிதான் நாம் எல்லோரும். ஒருவன் போராட இன்னொருவன் சுதந்திரமாய் வாழ்ந்து கொண்டிருப்பான்.
பார்வையற்றவர்கள் போல ஒருத்தர் இன்னொருவரின் கையை உதவிக்குப் பிடித்துக் கொண்டுதான் இயங்க வேண்டியுள்ளது,பிறர் உதவியின்றி எதுவும் செய்ய முடியாத நிலையில் உலகம் இயங்குகிறது.
(சற்று முன் நோக்கி நடந்து).இப்படியெல்லாம் நாம் இருப்பதற்கான பொருள் என்னவென்றால்........பெருவெள்ளத்தின் போது நாம் எல்லோரும் ஒன்றாகச் சாக வேண்டியதுதான்
வேகமாகவெளியேறுகிறான்;இவன் உறைந்து,அவன் போன திசையையே பார்த்துக் கொண்டிருக்கிறான்.நடந்து கொண்டிருந்தவர்கள் ஒவ்வொருவராய் உறைகின்றனர்.பின் அடுத்தவர் ஷு லேஸ்களைப் பார்க்கின்றனர்.மெல்ல குனிந்து ஒருவர் மற்றோருவரின் அவிழ்ந்த ஷு லேஸ்களை முடிச்சிடத் தொடங்குகின்றனர்.


Comments

Popular posts from this blog

அரங்கில் கலந்த ஆசிரியர் சே. ராமானுஜம்

எல்லோருக்காகவும் வேண்டியெழும் மொழி : ஜான் ஃபோஸின் நாடகங்கள் - ஞா. கோபி

நாடகக் கலைஞர்களின் கலை வழி உறவு நிலை வெளிப்பாடுகள்