பாழ் நகரத்துப்பிரதி - நாடகம்


பாழ் நகரத்துப்பிரதி - நாடகம்


ஞா.கோபி, புதுச்சேரி



மனிதர்களாகிய நாம் தினசரி, நம் கண்களுக்கே தெரியாமல் அகப்பட்டு கடந்துக் கொண்டிருக்கும் சடங்குகளை மையமிட்டது. பெரும் நிறுவனமாகிவிட்ட இவ்வுலகில் தனி மனித சுதந்திரம் எந்தெந்த தளங்களில் எப்படி அதிகாரத்தின் வழி பல்வேறு விதமான விளையாட்டுகளில் ஈடுபடுத்தப்படுகின்றது, என்பதை நோக்கி நான்கு வழி பாதைகளில் பயணிப்பதே இந்நாடகம்.
பாதை 1: கொலைக்களம் (தற்கொலை என்பது திட்டமிட்டக் கொலையே)
பாதை 2: ஆவணக்காப்பகம் (கோப்புகள் மனிதர்களை வழி நடத்தும் இடம்)
பாதை 3: காயடித்தல் (மூளையைச் சிரைத்தல்)
பாதை 4: சீட்டாட்டப்பயிற்சி (காலைக்கட்டி எல்லை பற்றி பாடம் நடத்துமிடம்)
இதை எழுதி நிகழ்த்திய அளவில் எனக்கு இங்கு எவ்வளவு சுதந்திரம் இருக்கிறதோ, அதே அளவில் நாடகப்பிரதி எனும் குறிப்பளவிலான நாடக அசைவாக்கப் படிமங்களை நிகழ்வாக்க எவருக்கும் சுதந்திரம் உண்டு. அதேபோல், இப்பிரதி வாசிப்பினால் இன்னொரு நாடகத்தை நீங்கள் கண்டு எழுதிவிடும் அளவிற்கு கூட…





நிகழ் 1:
கொலைக்களம்: தற்கொலைக்கான நேரம் நெருங்கிவிட்டது என்பதற்கு சான்றாக, காட்சியில் பேரமைதி நிலவுகிறது. விண்ணப்பித்தவர்கள் அனைவரும் ஒவ்வொருவாக வந்து, முன் மேடையில் அவரவர்காகத் தொங்கும் தூக்குக்கயிற்றின் முன் வந்து நிற்கின்றனர். மெல்ல அவர்களது கடைசி நேர இதயத்துடிப்பை கண்டுகொண்டவர்கள் போல அதனுடன் உரையாட ஆரம்பிக்கின்றனர். தற்கொலை நோக்குடன் வந்தவர்கள் ஆதலால், சுற்றி அதுபோன்ற மனநிலையில் உள்ளவர்களின் மேல் கவனம் செலுத்தும் அவசியம் அவர்களுக்குள் இல்லை. இதன் காரணமாய் ஒவ்வொருவரைச் சுற்றிலும் உருக்கொள்ளும் தனித்தனி உலகம் அடுத்தவரை எவ்வகையிலும் சிரமத்திற்கு ஆட்படுத்தவில்லை. மரணத்தின் இறுதி நேரத்திற்கேயுரிய ரகசிய மெளனம் அவ்விடம் முழுக்க வியாபிக்கிறது. சில நொடிகளில் அம்மெளனத்தை சிறிது சலனப்படுத்தும் வகையில் புதிய தற்கொலையாளி ஒருவன், கையில் பேப்பர் பேனாவுடன் மரத்துப்போன நடையில் உள் நுழைந்து, அங்கு ஆளற்று இருக்கும் தூக்குக்கயிற்றை தேர்ந்தெடுத்து அதன்முன் நிற்கிறான். அச்சுழலில் இருப்பவர்களில் முதலாவதாக கயிற்றைத் தொடுபவன் அவனாகவும் ஆகிறான். தொட்டதைத் தொடர்ந்து நடுக்கத்துடன், அதுவரை யாருக்கும் தெரியாத ரகசியமான தன்னை சில நொடிகள் வெளிப்படுத்திவிட வேண்டும் என்பதற்காக உதடு பிதற்றுகிறான். அப்பிதற்றலின் போது, பின் திரையில் அவன் நிழல் நிர்வாணமாக அப்பிதற்றலுக்கு அசைகிறது.
பிதற்றல்: எல்லையற்ற விரக்தியிலிருந்து நிகழ்ந்துவிட்ட என் வெளியேற்றம், எப்படி இங்கு பிறப்பாய் மாறியிருக்கிறது?.னத்தையின் எச்சில் பாதையை நாட்கணக்கில் தொடர்ந்து சென்ற என்னை, அதன் முடிவிடம் கண்டுகொள்ளும் முன்பே அவர்கள் சூழ்ந்துக் கொண்டார்கள். அவ்வதிகாரிகளின் அடையாளம் என்னவெனில், தாங்கள் செல்லும் இடமெல்லாம் தங்கள் நாற்காலிகளை அடிமைகளின் தலையில் சுமக்கவிட்டுக் கூட்டிச் செல்வர். எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்ட எழுதுகோள்களைத் திருடி வைத்துக் கொண்டு தனக்கு மட்டுமே எழுதும் அதிகாரம் இருப்பதாகச் சொல்லி ஆதிக்க வன்மத்தை இவ்வுலகம் முழுக்க நிரப்புவார்கள். என்னை அவர்கள் நிறுத்திய இடத்தில் கண்ணுக்குத் தெரியாத சுற்றுச்சுவரை எழுப்பி வைத்து, அவர்களின் கருணைக்கரங்களால் என்னைப் பாதுகாத்து விட்டதாய் பெருங்கோஷம் எழுப்பிக் கொண்டாட்டங்களை நோக்கிச் சென்றனர். வெளிப்பக்க விளிம்பில் நின்றாலும் அவர்களுக்கு எதிரிலும் சுவர் இருப்பதை மறந்து குதுகளித்துக் கொண்டிருந்தனர். அவர்களை வழி நடத்துபவரின் கண்களையே அனைவரும் பயன்படுத்திக் கொள்வதால், சுவர்களும் மதில்களும் அவர்களுக்கு பாதுகாப்பாய் தெரிவதை மறுப்பதற்கு இல்லை. உட்பக்கம் நெளிந்துக் கொண்டிருக்கும் எனக்கே தெரியும் சுவர்கள் நம் கண்களுக்கு மரணத்தையே பரிசாய் தரும் என்று. பல மாதங்களுக்குப் பிறகு, நேற்றை தினம் கழிவுநீர்தொட்டி சுத்தம் செய்ய சுவற்றில் வடக்கு மூளையில் இருந்த அடைப்பை அவர்கள் திறந்தனர். இரண்டு வாரங்களுக்கு முன்பே ஊர்ந்தபடியே அத்தொட்டியில் கலந்திருந்த நான் வெளியேறினேன். அதனால், இப்போது எவ்வித ஆர்பாட்டமுமின்றி என் உடல் முன்னே உயிர் உயருகிறது.
இப்போது அவன், மீண்டும் ரகசியமாகி கயிற்றுக்கு நேர் கீழே மண்டி போட்டு உட்காருகிறான். பின், தான் கொண்டு வந்த பேப்பர்களை தரையில் வைத்து, பேனா கொண்டு அதில் எழுத ஆரம்பிக்கிறான். அப்போது, அவன் பின்னால் இருந்த ஏனைய தற்கொலையாளிகளில் ஒருவன், அவன் கயிற்றில் தலை நுழைக்கும்போது கீழிருந்து எழுதுபவனைப் பார்த்துவிடுகிறான். குலைக்கப்பட்ட தூக்கத்தில் மறைந்த கனவுகளை ஞாபகப்படுத்தும் சிரமத்தைப் போன்று, முன்னால் எழுதிக்கொண்டிருப்பவனை பார்ப்பதை பெரும் சிரமத்துடன் தவிர்க்கிறான். அவனுடைய அம்முயற்சி ஏற்படுத்தும் அதிர்வு, அங்கு அரூபவெளிக்குள் உலவிக்கொண்டிருக்கும் அனைத்து தற்கொலையாளிகளையும் திசைத்திருப்புகிறது.
எல்லோர் பார்வையும் சிரமத்துடன் துடித்துக்கொண்டிருப்பவனை நோக்கிச் செல்கிறது. பின் மெல்ல அவன் பயங்கொள்ளும் திசை எதுவென ஆராயும்போதுதான், எல்லோரும், எழுதிக் கொண்டிருப்பவனின் போப்பரையும் எழுதும் அவனது கையோட்டத்தையும் நோக்கி அவர்கள் உணர்வு ஈர்க்கப்படுகின்றனர்.  உற்று நோக்குகின்றனர். மின்னல் வெட்டியதைப்போல எல்லோரும் ஒரு நேரத்தில், கண்களைப் பொத்தி தலைகளை ஒருவரோடு ஒருவர் முட்டி மோதி நிகழ்ந்துக்கொண்டிருக்கும் எழுத்துச் சடங்கை மறக்க முடியாமல் திணறுகின்றனர். ‘எங்களுக்கும் இப்படி எழுதும் சடங்கிற்குத் தேவையான பேப்பர், பேனா தந்து உதவுவாயா?’ என்பது போல் கைகளால் இறைஞ்சிகின்றனர். இப்படி எல்லோரும் ஓர் புள்ளியில் குவிந்ததால், அதுவரை அங்கிருந்த சூழல் ஒலியில் மாற்றம் ஏற்பட்டுகிறது. கடிகாரத்திலிருக்கும் நொடி முள்ளின் அதிர்வு, அத்தளம் முழுக்க வியாபிக்கிறது.
எழுதிக்கொண்டிருந்தவனோ, கடிகாரமுள்ளின் அசைவு சத்தம் ஏற்படுத்தும் பயத்தை வெளிப்படுத்துகிறான். பின் சிறிது நொடியில் தீர்க்கமான முடிவு ஒன்றை எடுத்தவனாக, மிக மிக வேகமாக எழுதத் தொடங்குகிறான். வேகம் கூடிக்கொண்டே இருக்க, ஒரு நிலையில் எழுதுவதை முடித்துக்கொள்ளும் விதம் பேனாவை முற்றுப்புள்ளி வைக்கும் இடத்திலேயே உடைக்க எத்தனிக்கின்றான். கடிகார முள் அசைவு கொடுத்த தைரியத்தில் ஆசுவாசம் அடைந்திருந்த தற்கொலையாளிகளின் கைகள் இப்போது முன் நீண்டு, பின் உடல் பாய்ந்து, எழுதிக்கொண்டிருந்தவனின் பேனா முள் உடையாமல் தடுக்க பலவிதமான முயற்சிகளை மேற்கொள்கிறது. மெல்ல அச்செயல் ஓர் உக்கிர நடனமாக மாறுகிறது. முடிவாக அச்சூழலில் இருக்கும் தற்கொலை உபகரணங்கள் அனைத்தும், எழுதிக்கொண்டிருந்தவனின் உடல் முழுக்க பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அச்செயல் முடக்கம் எதுவும் திட்டமிட்டு செய்யப்படாததால், எழுதியவனின் கைகள் பின்னால் இழுத்துக் கட்டப்பட்டு, கால்கள் அதனுள் திணிக்கப்பட்டு புதுவித விலங்கை ஞாபகப்படுத்தும் விதமாக இருக்கிறான். அவன் முன்னால், எவ்வித நிலைகுலைப்புமின்றி அதே நிலையில் அப்பேப்பர்களும் பேனாவும்.
 நடக்க இருந்த பெரிய அபாயத்தைத் தடுத்து நிறுத்திவிட்டது போல் பெருமிதம் கொண்ட முகத்துடன் நிமிர்ந்தவர்கள் அனைவரும் ஓரிடம் கூடி ஒருவர் முகம் ஒருவர் பார்க்கின்றனர். அனைவருக்குள்ளும் ஒரே முடிவு விரிந்ததுபோல் வரிசையாக நிற்க தொடங்குகின்றனர். நின்ற வரிசையிலிருந்து ஒவ்வொருவராக நகர்ந்து முன்னே சென்று, கீழே அமர்ந்து பேனாவினை எடுத்து கட்டப்பட்டவனை பார்த்தபடியே பேப்பரில் எழுதுகின்றனர். எழுதி முடித்தவுடன் பேப்பரை இறுதியாகப் பார்த்து தாங்கள் நினைத்தது வந்துவிட்டதாக எண்ணி நிம்மதி பெருமூச்சு ஒன்றினை தனித்தனி பாணியில் வெளிப்படுத்தி கட்டப்பட்டவனின் உடலில் ஆளுக்கொரு பகுதியென தேர்ந்தெடுத்து பேப்பரை அவன் உடல் முழுக்க ஒட்டுகின்றனர். எப்போது மறைந்தது என்று தெரியாமலிருந்த கடிகார முள்ளின் அசைவுச் சத்தம் மீண்டும் இப்போது அங்கு அதிரத் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து அலார மணிக்கரைசல். அச்சத்தம் கேட்டு திடுக்கிட்ட அவர்கள், குற்ற உணர்வு ஏறிய உடலுடன் செய்வதறியாது காது மற்றும் கண் பொத்தி தப்பிக்க முயற்சிக்கின்றனர். அம்முயற்சி தோல்வியடையவே, கட்டுண்டவனை அதே நிலையில் விட்டுவிட்டு எல்லோரும் ஒரே திசை நோக்கி பாய்ந்து ஓடி மறைகின்றனர். இவர்கள் வெளியேறிய சில நொடிகளில் அலாரமணியின் அலறல் நிற்கிறது. ஓடியவர்கள் நிறுத்தியிருக்கலாம்.
இப்போது இரண்டு அதிகாரிகள், கையில் பெரிய பைல்களுடன் உள் நுழைந்து கட்டப்பட்டுக் கிடப்பவனைச் சுற்றி கண்களால் மற்றும் கால்களால் ஆராய்கின்றனர். முடிவுகளைப் பைல்களில் எழுத்தாக பதிவு செய்கின்றனர். பதிவு செய்ததன் முடிவில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து, ஒரே நேர தலையசைப்பில் இருவரது பைல்களும் மூடப்படுகிறது. மூடும் பைல்களின் ஓசையினூடே கட்டப்பட்டவன் சரிந்து விழுகிறான். அப்போது, தாயக்கட்டைகள் உருளும் ஒலி. முன்னர் ஓடி மறைந்த தற்கொலையாளிகள் தோற்றத்தில் இருந்தவர்கள் அதே பதற்றத்துடன் மீண்டும் உள் நுழைகிறார்கள். வந்தவர்கள் அரை வட்ட வடிவில் நிற்கிறார்கள். அக்குழுவில் நடுவில் நிற்பவனின் கையில் அச்சடிக்கப்பட்ட பெரிய துணிப்பை ஒன்று இருக்கிறது. ஆய்வு செய்த அதிகாரிகள் வெளியேறும் நிலையில் நின்று திரும்பி ஆகட்டும் என்பது போன்ற பார்வையை உதிர்த்துவிட்டு வெளியேறுகின்றனர். அப்பார்வைக் கட்டுப்பட்டவனைப் போல  நடுவில் இருந்தவன் நகர்ந்து சென்று கையிலிருக்கும் துணிப்பையால் கட்டுண்டவனை மூடுகிறான். பின் மற்றவர்கள் கூடி வந்து கட்டுப்பட்டவனை சேர்ந்து ஒரு விக்கிரகம் போல ஏந்தி நடந்து வெளியேறிச் செல்கின்றனர். பையைக் கொண்டு மூடியவன் மட்டும் அங்கு கட்டுண்டு கிடந்தவன் இருந்த இடத்தை வெறித்துப் பார்த்தபடியே நிற்கிறான். எல்லோரும் போய் மறைந்த பின்னர், கட்டுண்டவன் இருந்த இடத்தில் இறுதியாக அவன் அமர்ந்திருந்தது போலவே அமர்ந்து அவனைப் போலவே பாவனை செய்துப் பார்க்கிறான். மீண்டும் கடிகாரமுள்ளின் அசைவுச் சத்தம் கேட்கிறது. பாவித்தவன் துள்ளி எழுந்து ஓடுகிறான். இப்போது வெளிச்சம் மட்டுமே அவ்விடத்தில் மிச்சம்.


நிகழ் 2:
ஆவணக்காப்பகம்:
குற்றங்கள் மட்டுமே சூழ்ந்த அந்த இடத்தில் பயம் தோய்ந்த அமைதி மெல்ல நடுங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு சாட்சியாய் நால்வர் அங்கு இருக்கின்றனர். பேச்சும் பார்வையும் அவர்களுக்கு தடை செய்யப்பட்டிருக்கிறது என்பதற்கு ஆதாரமாக அவர்களின் வாயும் கண்களும் துணி கொண்டு கட்டப்பட்டுள்ளது. கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் நிற்கின்றனர். விசாரணை அதிகாரிகள் வருகையைத் தெரிவிக்கும் மணியோசை. அதைத் தொடர்ந்து அத்தளத்திற்கு கண்காணிப்பாளர்கள் இருவர் உள்ளே வந்து விசாரணைக்கு காத்திருப்பவர்களின் கைகளில் தங்கள் வசம் கொண்டு வந்த பைல்களை திணிக்கின்றனர். அதே வேகத்தில் அவர்களைத் திருப்பி முதுகு காண்பித்தபடி மண்டியிட வைக்கின்றனர். மண்டியிட்டவர்களின் தலைகள் மேல் நோக்கிய நிலையில், பின்னால் கட்டப்பட்ட கைகளில் இருக்கும் பைல்களோ திறந்த நிலையில். ஏனெனில் அவரவர் தன் குற்றப்பத்திரிக்கையை படிக்க அங்கு அனுமதியில்லை. மணியோசை இப்போது முற்றிலுமாக நிற்கிறது. கால்களில் மர ஸ்டூல் அணிந்து ஒரே விதமான நடையில் உள்ளே வருகிறார்கள் இரு உயர் அதிகாரிகள். வந்தவர்கள் அவர்களுக்கு மட்டுமேயான ஒரு இடத்தில் நிற்கின்றனர். அவர்கள் கைகளில் தரையிலிருந்து கழுத்தளவிற்கு மூங்கில் தடிகள் பிடித்தபடி நிற்கிறார்கள். (எல்லா முக்கியமான நிகழ்ச்சிகளிலும் கர்னல் நேராக நின்று முன்னால் நீட்டிய தன் கைகளில் இரண்டு மூங்கில் கழிகளைப் பிடித்துக்கொண்டு நிற்பர். இது ஒரு புராதனமான வழக்கம். அவர் சட்டத்திற்குப் பக்கத்துணையாக இருக்கிறார், சட்டம் அவருக்குப் பக்க துணையாக இருக்கிறது என்பது போன்றது.” – ஃபிரான்ஸ் காஃப்கா, நிராகரிப்பு நாவலில்) அதிகாரிகளின் வருகைக்குப்பின் செய்ய வேண்டிய செயல் என்பது போல், தலைகுனிந்து வணங்கிவிட்டு முன்னேறி குற்றவாளிகளின் பைல்களை ஆராய்கின்றனர். ஆராய்தலில் ஏதோ தேவையிலாத செய்தி இருப்பதுபோல வெறுப்பு முகம் காட்டி, அதிகாரிகளைப் பார்க்கின்றனர். அப்பார்வைக்கு பயந்தவர்களாக செய்வதறியாது அதிகாரிகள் தலைகுனிகின்றனர்.
தலைகுனிந்த அதிகாரிகளை திருப்திபடுத்த வேண்டும் என்ற முடிவுடன் கண்காணிப்பாளர்கள் தங்கள் உடைகளிலிருந்து சில பேப்பர்களை எடுத்து குற்றவாளிகளின் பைல்களுடன் சேர்க்கின்றனர். பின் கண்காணிப்பாளர்கள் திரும்பி அதிகாரிகளை நோக்கி செலுத்துகின்றனர். அதை எதிர்பார்த்தவர்களாக ஓரக்கண்ணில் பார்த்துக்கொண்டிருந்த அதிகாரிகள் நிமிர்ந்து நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். விசாரணை அத்தோடு முடிந்ததென நினைத்து குற்றவாளிகள் நகர எத்தனிக்க, அதிகாரிகள், இறுதித் தீர்ப்பென, மூங்கில் குச்சிகளை தரையில் ஓங்கி அடிக்கின்றனர். அடுத்த நொடி, கண்காணிப்பாளர்களால் குற்றவாளிகளின் தலைகளில் பைல்கள் ஏற்றப்படுகின்றன. அதுவரை கையில் பிடிக்கும் கணத்தில் இருந்த பைல்கள் தலைக்குச் சென்றவுடன் தாங்க முடியாத பாரமாகி குற்றவாளிகளை அழுத்துகிறது. அந்த அழுத்தம், அவர்களை பூமியில் புதையும் அளவிற்கு வளருகிறது. குற்றவாளிகள் கண்கள் பிதுங்க வாய் திறந்து கத்துகின்றனர். ஆனால் அது விசாரனைக்கூடம் என்பதால் அவர்களின் வலி நிறைந்த ஓலம் யாருக்கும் கேட்கவில்லை. ஆனாலும் அவர்கள், யாருக்காவது கேட்டுவிடாதா என தொடர் முயற்சியில் இருக்கின்றனர். தங்கள் பணி முடிந்ததாய் அதிகாரிகள் வெளியேற, அவர்களைத் தொடர்ந்து காண்காணிப்பாளர்களும் வெளியேறுகின்றனர். இப்போது, விசாரணைக்கூடத்தில் குற்றங்களைச் சுமப்பவர்கள் மட்டும்.

மரணவாதை மட்டுமே சூழ்ந்த அந்த இடத்தில், குற்றவாளிகளின் வலி நிறைந்த அசைவுகளுடன் தாயக்கட்டைகள் உருளும் ஒலி தீவிரமடைகிறது. அவ்வொலியின் வளர்ச்சி கட்டத்தில், வினோத அசைவுகளுடன் மூகமூடியணிந்த இரண்டு சாகச வீரர்கள் உள் நுழைகின்றனர். அவர்களிடம் சராசரி மனிதர்களின் எந்த சாயையும் தென்படவில்லை. இந்த உலகத்தின் மிகச் சுதந்திரமான மனிதர்கள் அவர்கள் என்பதுபோல் அவர்களின் உடல்களை அத்தளம் முழுக்கப் பரவவிட்டு உலவுகின்றனர். அந்த வினோதர்களின் வருகை, குற்றவாளிகளின் அக உலகில் மாற்றங்களை ஏற்படுத்தத் துவங்குகிறது. அதனால் குற்றவாளிகளின் கண்களில் வலியோடு இப்போது புன்னகை இணைகிறது. மெல்ல குற்றவாளிகளைச் சுற்றி சுழன்று ஆடிவந்த வினோதர்கள் ஒரு நிலையில் ஓர் இடத்தில் உறைகின்றனர். அங்கிருந்து, சில பொருட்களை எடுத்து தங்களது சாகச திறனால் உயிரூட்டுகின்றனர். இப்போது குற்றவாளிகளும் முற்றிலுமாக கனவு உலகத்திற்குள் நுழைகின்றனர். இப்போது குற்றவாளிகள் தங்கள் பைல்களை தலையிலிருந்து இடமாற்றி வைத்துக்கொண்டு லாவகமாக நடனம்புரியத் தொடங்குகின்றனர். இதெல்லாம் அவர்களுக்குள்ளான கனவுவெளித் தொடர்பை உறுதி செய்கிறது. அப்படியே அதிசயங்களை குற்றவாளிகளின் மனஉடல்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு கணத்தில் வினோதர்கள் இயங்கிய இடத்தில் இருள் கவிந்து மீள்கிறது. குற்றவாளிகள் அங்கு இல்லை. இதை கவனியாத குற்றவாளிகள் தங்கள் நடன மொழியை உச்ச நிலைக்கு எடுத்துச் சென்று இருக்கின்றனர். வினோதர்கள் இடத்தில் பிறந்த ஒளியில் அவர்கள் மறைந்தது உறுதியாகிறது. குற்றவாளிகள் தொடர்ந்த தங்கள் அசைவு ஒன்றிலிருந்து, அவ்வெறுமையை கண்டுவிடுகின்றனர். சட்டென, லாவகமாக அசைந்த அவர்களின் பைல்கள் மீண்டும் தலையில் குடியேறுகிறது. நிகழ்ந்தது கனவா? என யோசிக்கும் முன்பே பைல்களின் அழுத்தத்தால், அவர்கள் மீண்டும் பூமியை நோக்கி அழுந்தத் தொடங்குகின்றனர்.



நிகழ் 3:
காயடித்தல்:
இதுவரை மேடைக்குள் வராத அரிதாரம் பூசிய ஒருவனை சுருட்டி, உதைத்து விளையாடியபடியே உள் நுழைகின்றனர் ஒரு மனிதக் குழுவினர். அவ்விளையாட்டிற்கு வரைமுறை ஏதுவும் இன்றி அவ்வொருவனை, எட்டி உதைத்தும் முட்டித் தள்ளியும் குண்டுக்கட்டாக தூக்கி வீசியும் என எல்லை கடந்ததாக இருக்கிறது. அப்படியே மேடைத்தளம் முழுக்க வளரும் அவ்விபரீத விளையாட்டு உச்சக்கட்டம் செல்லும்போது குழுவினர் ஒவ்வொருவராக களைப்படைந்து மெல்ல வெளியேறுகின்றனர். இறுதியில் அரிதாரம் பூசியவன் மட்டுமே அங்கு. அக்குழுவினரால் ஆரம்பிக்கப்பட்ட அவ்விளையாட்டை முடிக்கத் தெரியாதவனாக, அரிதாரம் பூசியவன் உருண்டு கொண்டே இருக்கிறான். அத்தனிமை விளையாட்டின் உச்சக்கட்டத்தினூடே வயலின் இசையைத் துணைக்கொண்டு உருவமற்றதின் உருவம் ஒன்று அவ்விடம் வருகிறது. தொடர் விளையாட்டின் போக்கில் காற்றில் பரவும் வயலின் இசையை உணரும் உருள்பவன் உடல் அந்த மொழிக்குக் கட்டுப்படுகிறது. வயலின் இசை, அவனை முழுவதுமாக தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தவுடன் மெல்ல காற்றிலேயே வெளியேறி கரைகிறது. அவன் இப்போது கேள்விகளுடன் அமர்ந்திருப்பவர் நிலையில். சிறு அமைதி. பின், வெங்கல சாமான்கள் உருளும் சத்தம்.
பெரும் சத்தத்திற்குப்பின் சிறு அமைதி. சில நொடிகளே நீடிக்கும் அந்த அமைதியை விரட்டும்படி மீண்டும் வெங்கல ஒலி. அமர்வு நிலையில் இருக்குமவன் தன் முகத்தில் ஏதோ ஊர்வதுபோல் உணருகிறான். அந்த உணர்வு வேகமாக வளர்வதால் அதை துடைக்க அல்லது விரட்ட தன் முகத்தையே பிய்த்து எடுக்க முயற்சிக்கிறான். அம்முயற்சியின் போதே ஏதோ ஒரு ஞாபக ஓட்டம் மூலைக்குள் பாய, அவனுடல் முன் மேடையின் இட மூலையில் இருக்கும் தண்ணீர் தேக்கத்தை நோக்கி துள்ளி விழுகிறது. அங்கிருந்து மெல்ல ஊர்ந்து எழுந்து ஒருவித மூர்க்கத்தோடு அத்தண்ணீர் தேக்கத்தை மோப்பமிடுகிறான். மோப்பமிட்டவன், ஒரு நிலையில் தீர்மானத்தோடு ஒரே மூச்சில் அத்தண்ணீரினுள் முகம் புதைத்து வெளியிலெடுத்து, தீர்மானத்துடன் ஓரே மூச்சில் தன் முகத்தில் இருந்த அரிதாரத்தை அழிக்கிறான். மெல்ல தன் உண்மை உரு கையில் தட்டுப்பட, ஆசுவாசமடைகிறான். அந்தேரம் எப்போது மறைந்தது என்று தெரியாமல் அந்த வெங்கல ஓசை காணாமல் போயிருக்கிறது. அவன் இப்போது பூமியில் காது வைத்து கவனமுடன் புதிய ஓசையைக் கேட்கிறான். அது அவனுக்குக் கேட்க கேட்க அவனுடல் அதிர்ந்து குலுங்குகிறது, அந்த பரவசத்திலேயே பேசுகிறான்,
நான் குருடந்தான், என்னால் பார்க்க முடியவில்லைதான். ஆனா, என் காதால கேட்கமுடியுமே!, அது உங்களுக்குக் கேட்கிறதா? அது யுகம் யுகமாக இங்கு ஒலிக்கிறது. இன்னும் ஒலிக்கும்… எப்போது பூமியில் எல்லா கற்களும் உருகி நீர் போல கரைந்து ஓடுமோ, அந்த நாள் வரை அவை உள்ளிருந்து ஒலிக்கும்! அப்புறம் ஒலிக்காது…
என பெருங்கூச்சல் போட்டபடியே, கைகளால் தலையில் அடித்துக் கொண்டு மூர்ச்சையாகி விழுகிறான். இரண்டொரு நொடிகள் வெங்கல ஒலி உச்சம் கொண்டு அடங்குகிறது. ஓசை அடங்கிய அந்நேரத்தில் ஒரு மனித கூட்டம் உள் நுழைகிறது. அவரவருக்கு முன்னால் நடப்பவர்களின் கால்களை பின்னால் வருபவர்கள் பிடித்துக் கொண்டு நடந்து வருகிறார்கள். மரவட்டை போன்ற தோற்றத்தில் உள்நுழைந்த அவர்கள் மூர்ச்சையாகிக் கிடந்தவனை சுற்றுகிறார்கள். அக்கூட்டத்தின் காலடியோசை அதிர்வில் மெல்ல தலையைத் தூக்கிப் பார்க்கும் அவன், தான் தனித்திருக்கிறோம் என்ற அளவில்முதலில்  பயம் கொள்கிறான். அவனுடைய சுதந்திர உணர்வு அக்கூட்டத்தால் பறிபோய்விடுமோ எனும் அச்சத்தில் தனது, கால்களை மறைக்க முயற்சிக்கிறான். ஆனால், அதற்கான நேரம் முடிந்துவிட்டது என்பது போல் கூட்டத்தின் முன்னிருப்பவன் எட்டி அவன் கால்களைப்பிடிக்க எல்லோரும் சுற்றி வளைத்து நெருக்கி விடுகின்றனர்.அவனும் அக்கூட்டத்தில் ஒருவனாகிறான். முதலில் அவனுடல் சுருங்க, தொடர்ந்தவர்கள் அனைவரும் அவனை நெருக்கித்தள்ளி சுருள்கின்றனர். இதுபோன்ற இரக்கமற்ற செயல் விட்டு இரண்டு முறை தொடர்கிறது. பின் சிறிது நேரம் வெறி கொண்டு அவனை இறுக்கியக் கூட்டம் மெல்ல பழைய நிலைக்கு திரும்புகிறது. உள் அகப்பட்டவன் சக்கைப் போல வெளியே தெறிக்கிறான். விழுந்தவன் உணர்வற்ற நிலையில் தரையில் படர்கிறான். அவர்கள் வந்ததுபோலவே திரும்பி விடுகின்றனர். அதன் அடுத்த கணம், புதிய ஒருவன் விரைப்பான நடையில் உள்ளே வருகிறான். அவன் கையில் இரும்பு கவசம் ஒன்றை ஏந்தியபடி வந்து, அதை தரையில் படர்ந்திருந்தவனின் முகத்துக்கு அருகில் வைத்துவிட்டு வெளியேறுகிறான்.   

நிலத்தில் ஒட்டிக்கிடந்தவன் மெல்ல அக்கவசத்தை முகர்ந்தபடியே அதை கையிலெடுத்து, தன் உடலின் பல பாகங்களில் பொருத்திப் பார்க்கிறான். பின் மெல்ல தன் தலைக்கு கொண்டு சென்றவுடன் அது பொருந்துகிறது. அந்த நிலை அவனுக்கு ஆனந்தத்தைக் கொடுக்கிறது. அவ்விடத்திலேயே நின்று தன் உடல் சுதந்திரம் அடைந்திருப்பதாய் அசைத்துப் பார்க்கிறான். அது போகும் போக்கில் விட்டு விளையாடுகிறான். டமார ஒலி, புதிய வருகையை தெரிவிக்கிறது. கவசமணிந்தவன் உறைந்து நின்று நான்கு திசைகளையும் பார்க்கிறான். அப்போது ஒரு திசையிலிருந்து, பெரிய அளவிலான ரம்பம் ஒன்றை வாள் போல் பிடித்தபடி ஒருவன் உள்ளே வருகிறான். அவன், அங்கிருந்தவனைப் பார்க்காததுபோல் வாள் சுழற்றல் சாகசத்தை ஒத்த வித்தைகளை செய்கிறான். மெல்ல, அந்த வித்தைகளைப் பார்க்கும் பழையவன், புதியவன் திசைக்கு அடிபணிகிறான். அதற்காகவே காத்திருந்தவன் போல வித்தையின் உச்சமாக அடிப்பணிந்தவனின் கவசத்தைத் ரம்பம் கொண்டு தேய்க்க ஆரம்பிக்கிறான். தலை கவசத்தைத் தேய்த்தல் என்பது மூளையை மழுங்கடித்தல் என்பது போல. மழுங்கடித்தல் தொடர தொடர அடிபணிந்தவன் உடல் மொத்தமாக இவனிடம் சரிகிறது. உடனே, தேய்ப்பதை நிறுத்தி சரிந்தவன் உடல் மேல் தன்னுடைய முத்திரையைப் பதிக்கிறான். பின் ரம்பத்தை சுழற்றியபடியே வெளியேறுகிறான். அடிபணிந்தவன், தன் மேல் பதித்த முத்திரையை முதன்மைப்படுத்திக் காட்டியபடியே ரம்பம் சுழற்றியவன் இருந்த திசைப் பகுதியிலேயே உலவுகிறான். மீண்டும் டமார ஒலி, புதிய திசையிலிருந்து புதியவன் உள்ளே வருகிறான். அவன் கையில் வாள், முன்பு வந்தவனின் செயலைப் போன்றே தனக்கான வேறொரு பாணியில் சுழற்றுகிறான். முன் பொலவே அவன் அடிபணிகிறான். கவசம் வேறொரு அளவில் மழுங்கடிக்கப்படுகிறது. பின், முன்பிருந்த பழைய முத்திரையின் மேல் புதிய முத்திரை. மழுங்கியவன் விட்டுச் சென்ற   திசையில் தொழுகிறான். மீண்டும் டமார ஒலி, மற்றொரு திசையிலிருந்து இன்னொருவன் கையில் ரம்பத்துடன். காட்சியில் இருள்.

நிகழ் 4:
சீட்டாட்டப்பயிற்சி:
ஒளி வரும்போது இரு பிரஜைகள், ஒரு மேஜையின் இருபுறங்களிலும் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்திருக்கின்றனர். மேஜையில் காலியான பிளாஸ்டிக் பக்கெட் ஒன்று சரிந்த நிலையில் பார்வையாளர் பக்கம் பார்த்தவாறு கிடக்கிறது. உட்கார்ந்திருந்த பிரஜைகளின் பின்னால், அவர்களது முதுகோடு எதிர் திசையைப் பார்த்தவாறு சற்று உயரமான நாற்காலியும் கட்டப்பட்டிருக்கிறது. அதில் இரண்டு பக்கமும் ஒருவரென இரண்டு ஆய்வாளர்கள் அமர்ந்திருக்கின்றனர்.பிரஜைகளின் முகத்திலோ முகமூடி. பெரிய விசில் சத்தம் பீறிட ஆய்வாளர்கள் இருவரும் எழுந்து திரும்பி பிரஜைகளைன் கண்களை தங்கள் கைகளால் பொத்துகின்றனர். பொத்தியவுடன் மேடையின் இடது பக்கத்திலிருந்து, ஓவியம் தீட்டப்பட்ட துணியொன்று உள் நுழைந்து வலது மூலை வரை சென்று நின்று திரைப்போலப் பிடிக்கப்படுகிறது. அதன் பின்னர் பல்வேறு செயல் நிலைகளில் உறைந்துவிட்ட தலைகளற்ற உருவங்கள் திரையின் பின்னால் பரவி காட்சியளிக்கிறது. அப்போது ஆய்வாளர்கள், கண்களைப் பொத்திய கைகளை திறந்து விட்டு போய் அவர்களின் அந்த உயரமான இருக்கையில் ஏறி அமர்கின்றனர். பிரஜைகளோ, கண் திறக்கப்பட்டவுடன் சுழலில் ஏற்பட்டிருக்கும் பெரும் மாற்றத்தை கண்டு பதற்றம் அடைகிறார்கள். அதனால், அங்கிருந்து உடனடியாக வெளியேறிவிடலாம் என எண்ணி, எழுந்து நடக்கின்றனர். நான்கு அடிகள் எடுத்து வைத்த பின்தான் தெரிகிறது, அவர்கள் காலில் சங்கிலியும் அதன் மற்றொரு முனை அவர்கள் அமர்ந்திருந்த நாற்காலியில் பிணைக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு மேல் நகர முடியாமல் நிற்கின்றனர். அங்கு நிலவிய திக்கற்ற மெளனத்தில் ஆய்வாளர்களின் ஏளன சிரிப்பு கலக்கிறது. காதைப் பொத்தியபடியே அப்பிரஜைகள், நாற்காலியில் வந்து அமர்கின்றனர். பின், மெல்ல தலை குனிந்து சுழலில் ஏதாவது நிகழாதா? என காத்திருக்கத் தொடங்குகின்றர்.
அப்படியே சில நொடிகள் நீண்டு கொண்டே இருக்கும் அப்பிரஜைகளைன் கேள்விக்கு விடையளிக்கும் விதம், ஆய்வாளர்கள் எழுந்து சென்று மேஜைக்குப் பின் நிற்கின்றனர். அதாவது, பிரஜைகளை பார்த்தவாறாக நிற்கின்றனர். பின் தங்கள் கோட் பைகளிலிருந்து சீட்டுக்கட்டுகளை எடுத்து பிரித்து அப்பிரஜைகள் இருவருக்கும் ஆட்டத்தின் தொடக்கத்தில் போடுவது போல் போடுகின்றனர். பின், மேஜையில் சரிந்து கிடந்த பக்கெட்டை நிமிர்த்தி வைத்துவிட்டு, அவர்களின் இருக்கைக்குத் திரும்பி வந்து அமர்கின்றனர். பிரஜைகள் சுற்றிலும் ஒருமுறை நோட்டமிடுகின்றனர். அங்கு அனைத்தும் பயமுறுத்தும் அதே உறை நிலையில். இனிமேல் நாமாக செய்ய இங்கு எதற்கும் வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த அவர்கள், சிறு கடின முயற்சிக்குப் பின் முகமூடிகளைக் கழற்றி பக்கெட்டில் போடுகின்றனர். உடன், வேகத்தில் சீட்டுக்களைப் பொறுக்கி எடுத்து அடுக்கிக் கொள்கின்றனர். அடுக்கிய பின் முதலொருவன் ஆட்டத்தைத் தொடங்குகின்றான்.
ஒருவன்: இன்று நம்மைச் சுற்றிலும் நிகழ்ந்துக் கொண்டிருப்பவை எல்லாம் முற்றிலும் புதிய புதிய ஆபத்துக்கள்…  
என்று சொல்லியபடியே தன் கையிலிருந்து ஒரு சீட்டை பக்கெட்டினுள் போடுகிறான். அதற்கு மாற்றுச்சீட்டு எடுப்பதற்கு, பக்கெட்டினுள் கைவிட்டு மீண்டும் எடுக்கும்போது கையில் ஒரு வெற்றுத்தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. அத்தலையை கையில் வைத்துக் கொண்டு விழிக்கிறான். இன்னொருவனும் முன்னவன் பாணியிலேயே தன் சீட்டை பக்கெட்டில் போட்டு மற்றுமொரு தலையை எடுக்கிறான். இருவரும் விழித்தபடி செய்வதறியாது தங்களுடைய தோள்களில் அத்தலைகளை வைத்தபடி விழிக்க,
இன்னொருவன்: இங்கு பாதுகாப்புக் கவசங்கள் ஒருபோதும் பலனளிக்கப் போவதில்லை என்று தெரிகிறது. இருப்பினும் எண்ணவோட்டத்தில் மத்தியில் நின்று எங்களுக்குள் பேசிக்கொள்ள விரும்புகிறோம்…
இந்த வசனங்களைக் கேட்டுக்கேட்டுப் பழகியதுபோல் எந்தவித சலனமுமின்றி இரு ஆய்வாளர்களும் இயந்திரத்தனத்தில் எழுந்து, அப்பிரஜைகள் இருவரிடமிருந்த தலைகளை வாங்கிச் சென்று, திரைக்குப்பின் இருக்கும் தலைகளற்ற உடல்களில் பொருத்தியவாறே, மிக உறுதியான குரலில்
ஆய்வாளர்1: உங்களுடைய எந்த பிராத்தனையும் இங்கு பலனளிக்கப்போவதில்லை.
ஆய்வாளர் 2: இறுதியாக சவக்கிடங்கில் உங்கள் தலைமாட்டில் பொருத்தப்படும் பிரேத பரிசோதனை அறிக்கையில் உங்கள் பெயர்கள் தொலைக்கடிக்கப்பட்டு, நீங்கள் வெறும் எண்களாக மாற்றப்பட்டீர்கள்.
இரு ஆய்வாளர்களும் மீண்டும் வந்து விளையாடுபவர்களின் கையிலிருந்த சீட்டுக்களை வாங்கி இடமாற்றி வைத்துவிட்டு, அதிலிருந்து ஒரு சீட்டைத் தேர்ந்தெடுத்து விளையாடுபவர்களின் கையில் கட்டாயமாகத் திணிக்கின்றனர். பின் சென்று அவர்களின் இருக்கையில் அமர்கின்றனர். மீண்டும் முதலாமவன் பக்கெட்டினுள் ஒரு சீட்டைப் போட்டு மாற்றுச்சீட்டு எடுக்க வேண்டி கை விட்டுத் துழவி எடுக்க மீண்டும் ஒரு புதிய தலை!. அதை அவன் தாங்கிப்பிடித்துக்கொண்டு,
ஒருவன்: இங்கிருந்து கிடைக்கும் எந்தவொரு வெற்றியின் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை.
அவன் பின்னால் இருக்கும் ஆய்வாளன், தன் உடலைத் திருப்பாமலேயே கையை மட்டும் பின்பக்கம் நீட்டி, அந்த புதிய தலையைப் பிடுங்கி மடியில் வைத்துக் கொள்கிறான். முன்னவனைப் போலவே இரண்டாமவன் தன் சீட்டைப்போட்டு இன்னுமொரு தலையை கையில் வைத்துக்கொண்டு,
இன்னொருவன்: தொடர்ந்து தோல்வியத் தழுவிக்கிட்ட்டே இருக்கேன்னு தெரிஞ்சும் நான் ஏன் இந்த விளையாட்டோட போராடிக்கிட்டே இருக்கேன்?
அவன் பின்னாளிருந்த ஆய்வாளன், இனொருவனுடைய கையிலிருந்து தலையைப் பிடுங்கித் தன் மடியில் வைத்துக்கொள்கிறான்.
ஒருவன்: (ஒருவன் தலையைத் தாழ்த்தி) தலை வணங்கிச் சொல்கிறேன்… இதுவரை கிடைத்த வெற்றிகளைவிட திடிரென்று நெருங்கி உறவாடும் தோல்வி, எனக்கு ஏதோ கற்றுக் கொடுக்கிறது!
அதுவரை தலைகளைச் சுமந்துக்கொண்டிருந்த ஆய்வாளர்கள் எழுந்து, தலையற்ற உடல்களை நோக்கிச் சென்றவாறே,
ஆய்வாளர் 1: இது ஒரு யாத்திரை, மனதளவிலான யாத்திரை. பயணதூரமும் மனதளவில் நின்று முடிவு காண்கிறது.
ஆய்வாளர் 2: மிக மிக ஆர்ப்பாட்டமான, ஈடு இணையிலாத அவசியமான யாத்திரை.
பேசியபடியே தலைகளற்ற உடல்களில் ஆய்வாளர்கள் தலைகளை மாட்டும் நேரத்தில், உட்கார்ந்திருந்தவர்களில் ஒருவன் பேச ஆரம்பிக்கிறான். இன்னொருவன் சீட்டுக்களைப் போட்டபடியே,
ஒருவன்: (விளையாட்டை மறந்த நிலையில்) யாரும் கால் பதிக்கவே பயங்கொள்ளும் அந்த இரண்டு கண்டங்களுக்கு மத்தியில்தான் என் அம்மா வாழ்ந்து கொண்டிருக்கிறாள். வெடித்த தோட்டாக்களும், நடமாடும் ஆயுதங்களும் சூழ்ந்த அந்தப் பகுதியில்தான் அவளது வாழ்க்கை. அந்த கந்தக பூமியில்தான்.
இன்னொருவன்: (விளையாட்டின் போக்கில்) ச்சே!, மறுபடியும் தோல்வி (விளையாட்டை மறந்து) நீ சொல்வதைப் பார்த்தால், அந்த மலைப்பகுதியின் மத்தியிலுள்ள, விகாரைகளில்தான் நம் ஜனனம் நிகழ்ந்ததா?!
மேற்கண்ட வசனங்களைக் கேட்ட நொடியில் ஆய்வாளர்களின் உடல்கள் வெளுத்து, பயம் அவர்களை நடுங்கச் செய்கிறது. அதிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காகவே வலுக்கட்டாயமாக எழுந்து சென்று பொம்மையைச் சுற்றியபடியே பேச ஆரம்பிக்கின்றனர்.  
ஆய்வாளர்கள்1: விளையாடும்போது பேச்சுத் தேவையில்லை என்று நினைக்கிறேன் (பெரும் அதிகாரத் தோரணையை தன் உடம்பில் செலுத்தி) வெற்றி தோல்வியைத் தவிர்த்துப் பார்த்தால், எஞ்சியிருப்பதும் எஞ்சியிருப்பதும் எஞ்சியிருக்கப்போவதும் இங்கு வெறும் மெளனம் மட்டும்தான்.
ஆய்வாளர்கள் 2: (ஆய்வாளர் 1றைப் பின்பற்றும் விதமாக அதே உடல் மொழியை உள்வாங்கி) ஞாபகம் கொள்ளுங்கள், நீங்கள் உறவு பேணும் இந்த அறையின் மூர்க்கம், உங்கள் வார்த்தைகளை விழுங்கி எப்படியேனும் நொடிகள் அதிர மரணித்தலை நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது.
உட்கார்ந்திருந்த அந்த இருத்தலற்ற பிரஜைகள் மெல்ல எழுந்து நின்று,
ஒருவன்: தணிவான குரலில்தானே எங்களுடைய உரையாடல்கள் தொடர்கின்றன?
இன்னொருவன்: மெளனத்திலேயே உறைந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் சம்பிரதாயங்களுக்கான உரையாடலை நாங்கள் நிகழ்த்திக்கொண்டிருக்கிறோம்
உடனே, ஆய்வாளர்கள் இருவரும் வந்து, நின்றவர்களின் தோள்பிடித்து அமர்த்திவிட்டு, தங்கள் இருக்கையில் போய் அமர்ந்து,
ஆய்வாளர்கள்1: உங்களிடம் மட்டுமல்ல, இந்த அவசரத்தன்மை உலகெங்கிலும் இருக்கிறது. நாம் யாரும் விளையாட்டில் வெற்றி தோல்வி தவிர்த்து வேறு எதையு கண்டுக் கொள்வதில்லையே!
ஆய்வாளர்கள் 2:  நாம் விரும்பாமலேயே வார்த்தைகள் நம் வாயிலிருந்து தெறிப்பதைப் போல, இந்த சிறு வெளிச்சம் உங்களை பயமுறுத்துகிறது எனில், போது. மீதமிருக்கும் சொற்களை மென்று விழுங்கி விடுங்கள்.
ஒருவன்: பித்து பிடித்த ஓவியனின் மனச்சித்திரம் கூட மிகச்சிறியதுதான். ஆனால் அவன் ஒரு பிடிவாதத்தோடு வரைந்திருப்பதை, எந்தவொரு பூதக்கண்ணாடியாலும் காண்பிக்க முடியாது.
வெளிச்சத்தை மறக்கும் விதம் மறுபடியும் மிக வேகமாகச் சீட்டுக்களை போட்டு கைகளை பக்கெட்டிற்குள் விட்டுத் துழவுகின்றனர். அதனூள், தலைகள் முற்றிலும் தீர்ந்து போயிருக்கின்றனர். மிரண்டவர்களாக, சூழலில் ஏதோ அபாயம் கலந்து விட்டதை உணர்ந்து,
இன்னொருவன்: நாங்கள் ஆட்டத்தை முடித்துக் கொள்கிறோம் போதும். (அந்த ஒருவனின் சீட்டுக்களையும் பிடுங்கி பக்கெட்டினுள் போட்டு விட்டு) மன்னிக்கவும் வரப்போகும் சீரழிவு எப்படியிருக்கும் என என்னால் அனுமானிக்க முடிகிறது.
அதைக் கோட்ட அடுத்த நொடியே எழும் ஆய்வாளர்கள், அப்பிரஜைகளை அழுத்தி உட்கார வைத்து, நாற்காலியின் மேல் இருந்த கருப்புத் துணி பையைக் கொண்டு அப்பிரஜைகளின் முகத்தை மூடுகின்றனர்.
ஆய்வாளர்கள்1: நீங்கள் இதுவரை உங்களுக்குக் கிடைத்த சமய சந்தர்ப்பங்களில் சம்பவங்களை சம்பவித்தது போதும். உங்கள் தலை, அடுத்து வரப்போகிறவர்கள் விளையாடத் தேவையாய் இருக்கிறது.
முகம் முற்றிலும் மூடப்பட அப்பிரைஜைகளின் உடல்கள் உறைகின்றன.
ஆய்வாளர்கள் 2 : மரணத்தின் அறிகுறியாய்  இதுவரை இங்கு வியாபித்திருந்த தொடர்பற்ற உங்கள் சொற்களின் நடனம், இதோ திரை மூடப்பட்டு முடிவு எட்டிவிட்டது.
இரண்டு ஆய்வாளர்களும் வெளியேறுகின்றனர். உடன் அச்சூழலிலிருந்து பல்வேறு இடங்களிலிருந்து, பல்வேறு நிலைகளில் வரும் கோமாளிகள் புதிய சீட்டுக்களை இறைத்தபடியே நடனமாடியபடியே வெளியேறுகின்றனர். அங்கு சிறு அசைவுகளோடு எஞ்சியிருப்பது அங்கு சீட்டுக்கள் மட்டுமே.





 நன்றி
உயிர் எழுத்து – மலர் 3, இதழ் 7 (2010)
   


Comments

Popular posts from this blog

அரங்கில் கலந்த ஆசிரியர் சே. ராமானுஜம்

எல்லோருக்காகவும் வேண்டியெழும் மொழி : ஜான் ஃபோஸின் நாடகங்கள் - ஞா. கோபி

நாடகக் கலைஞர்களின் கலை வழி உறவு நிலை வெளிப்பாடுகள்