நான் வளர்மதி - நாடகம்


நான் வளர்மதி - நாடகம்

ஞா. கோபி,புதுச்சேரி



இந்நாடகம், சுதந்திர மூச்சுக்காற்றுக்காக போராடிய, அடையாளமற்ற ஒரு போராளிப் பெண்ணின் மெளன முனகல்களைத் தொகுத்துப் பிரதியாக்கப் பட்டிருக்கிறது. வளர்மதி. இவர்தான் இப்பிரதியின் மையம். இலங்கை நிலப்பரப்பின் துக்கக் கோடுகளைத் தோழமையின் வழி என்னுடன் பகிர்ந்து கொண்டவர். போராட்ட குணம் நிறைந்த தமிழ்வெளி பெண் நாடகக் கலைஞர். நாடக முதுகலைப் படிப்பின்  நிமித்தம் புதுச்சேரி வந்த இவரை நான் முதலில் சந்தித்தது மதுரையில். புதுச்சேரிக்கு வந்த இரண்டாவது நாளே மதுரைக்கு இவர் பயணப்பட்டு வந்தது ஆவியூரில் வேஷாண்டித் திருவிழா சடங்கு பார்க்க. சடங்குகளைக் கவனிக்கும் நிமித்தம் ஆவியூரில், நாடகவியலாளர் முருகபூபதியுடன் முகாமிட்டிருந்த எனக்கு, அரங்கின் தீவிரத் தேடல் காரணமாக பயணப்பட்டு வந்திருக்கும் நாடகத் தோழமை என்ற நம்பிக்கையுடன் தொடங்கியதே எனக்கும் வளர்மதிக்குமான உறவுநிலைப் பயணம். அந்த சந்திப்பிற்குப் பிறகு, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து சோர்வின்றி தமிழகம் முழுக்க  நிகழும் கூத்து, குழந்தைகள் நாடகம், பரிசோதணை அரங்க முயற்சிகள் என இணைந்து திரிந்தோம். இந்த அலைச்சலின் வழி கிடைக்கும் அனுபவத்தையெல்லாம் திரட்டி, தன் மண்ணில் தங்களுக்கான அரங்கை உருவாக்கிச் செயல்படவேண்டும் என்ற கனவே அவர் மனம் முழுக்க இருந்தது. கலையின் வழி புதிய சுதந்திர உலகைத் தன் மண்ணில் வேரூன்றி விட முடியும் என்ற உறுதியான நம்பிக்கை படர்ந்த குரலில்தான் வளர்மதி எப்போதும் என்னிடம் பேசிக் கொண்டே இருப்பார்…

பிறகு, தன் நாடு திரும்பிய அவரை, விடுதலை இயக்கத்தில் அரசுக்கு எதிராக செயல்பட்ட முக்கிய நபர் என்று குற்றம் சாட்டப்பட்டு, விடுதலை இயக்கப் பத்திரிக்கையாளரான தன் கணவர் யசிதரனுடன் கைது செய்யப்பட்டார். இச்செய்தியை இணையம் வழி அறிந்த அன்று மறைந்த என் தூக்க நேரம் என் பார்வையின் அளவில் இதுபோன்ற நாடகமாய் எழுந்தது. சிறையெனும் அதிகாரச் சுவரினால் சுற்றி வளைக்கப்பட்ட ஒரு பெண் என்னென்ன கொடுமைகளைச் சந்திப்பார் என்பதை எந்தவிதப் பிரயாசையுமின்றிச் கற்பனை செய்துகொள்ளும் பயிற்சியை இந்தச் சமூகம் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. அந்த வலிகளே இப்பிரதி.  அதே சமயம், இப்பிரதியில் அவர் ஒருவர் மட்டுமல்ல வளர்மதி. புதைந்து போன பல நூற்றாண்டு குழந்தைகளின் குரல்களும்தான்.




 நிகழ் - 1
காலம் தன் வாழ்வின் நிலைகளை ஏதோ ஒரு வகையில் மறந்து  கொண்டிருப்பது போன்ற நிலை அச்சூழலில். எப்போதும் கேட்டுக் கொண்டேயிருந்த வெடிகுண்டு சத்தம், இப்போது சில நிமிடங்களாகத் தான் நின்று இருக்கிறது என்பது போன்ற சலனமற்ற அமைதி எங்கும். வெறுமை எனும் உளபிரதேசத்தைக் காட்சியாக்கும் நோக்கில், நிகழ்விடத்தில் ஒரு சிறிய டார்ச்சு ஒளி சட்டெனத் தோன்றி நிகழ்விடம் முழுக்கப் பயணிக்கிறது. மீண்டும் மெளனம். பிறகு மெல்ல மெளனமும் பயமும் மாறி மாறி விரவிக் கிடக்கும் தண்டனைக் களன் ஒன்றின் சூழல் இசை பிறந்து பரவுகிறது. இங்கு இசையெனப்படுவது, கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் நொடி முள் அசைவும், ஒருவரின் இறுதி உயிர்த் துடிப்புப் பயணம் மேற்கொள்ளும் அதிர்வும் தான். மேற்சொன்ன இசையினூடே இருளுக்குள் கலந்திருக்கும் அவ்வுரு உயிரின் முணுமுணுப்பு…. அம்முணுமுணுப்பினோடு சிறு ஒளியும் கசிந்து பெரிதாகிறது.
உடல்:  செம்மண்… மருதமரம்… நாணல்காடு….
முணுமுணுப்பின் தொடக்கத்திலிருந்தே சீராக வளர்ந்த ஒளி இப்போது ஒரு நிலை எடுத்து நிற்கிறது. அவ்வொளியினுள் இமைகளை மூடிய நிலையில் ஒரு பெண். அவளின் முன்னால் இரண்டு மரச் சதுர சட்டத்தில் வெள்ளை நூல் சிக்கலான முறையில் பின்னப்பட்டிருக்கிறது. மீண்டும்…
உடல்: பாடசாலை…,பறை மேளம்…, நூலகம்…  கோயில் திருவிழா… சோதனைச்சாவடி…
இதுவரை அவள் உதட்டசைவின் வழி வெளிப்பட்ட அவளுடைய அக நிலப்பரப்புச் சட்டெனத் திகைத்து நிற்கிறது. மெளனத்தினூடாகப் பயணித்து, எதையோ கண்டு கொள்கிறான். அது, பெரும் கட்டுப்பாட்டுக் குரல்கள் அவளைத் தொடர்ந்து அதட்டிக் கொண்டிருப்பதைப் போல உடல் நடுங்கித் துடிக்கிறாள்.
தன் முன்னே பின்னப்பட்டிருக்கும் அரூபச் சிக்கல்களில் முகம் புதைந்து சிறிது உள்புகுந்து அங்கேயே தங்கி விடுவதில் விருப்பம் கொண்டவளாக ஆசுவாசமடைந்து கண்களை இறுக்க மூடிக் கொள்கிறாள். தன் உள்வேதனையைத் திரட்ட வாய் வழியே வெளியேற்றும் தீர்மானத்துடன் மீண்டும் உதடு பிரிக்கிறாள்.
உடல்: ஆயிரம் ஆயிரம் ரகசியங்களக் குவிச்சி வச்சிருக்கிற என்னோட இருள் நகரத்த இன்னும் எவ்வளவு நேரம் என் கண் இமைகள் தாங்கும்னே தெரியல!...
அங்கிருந்து நகர்ந்து, எதிர் நிலைச்சட்டங்களை வேரு விதமாக நகர்த்தி வைத்துக் கொண்டு (எதிர்நிலைச் சதுரச் சட்டங்களை நகர்த்துவதென்பது, அதிகாரத்தின் உச்சக் குறியீடான சிறை மதில்களைத் தன் எதிர்ப்பு எண்ணத்தின் மூலம் இடம் மாற்றுகிறாள் என்பதாக) கட்டுண்வள் போல ஒர் இடத்தில் போய் ஒடுங்கிக் கொள்கிறாள். இப்போது அவளுடைய இடத்திலிருந்து வெளியே பூட்சுக் கால்களின் சத்தம் ஒருபுறம் தொடங்கி மறுபுறம் சென்று குறைகிறது.
அவள் முகத்தில் நேராக அடர்ந்த ஒளி பாய்கிறது. இமை பிரிக்கிறாள். சிறிது நேரம் கண்களைச் சம நிலைக்குக் கொண்டு வர முடியாமல் திணறுகிறாள். இருப்பினும் இயல்பிலேயே அவளுடல் முழுக்க ஊறிப் போயிருக்கும் போராட்டக் குணத்தின் வெளிப்பாடாக அவ்வெளிச்சத்தை எதிர் கொண்டு கண்களை அகல விரித்துத் தொடர்ந்து எதிர்த்தபடியே….
உடல்: இந்த நொடியிலிருந்து, என்னோட பேர் உயிர்னு இருக்கட்டும்… எனக்குத் தெரியுது, இந்த மதிலுக்கு அந்த பக்கம் என்னோட Death Certificate தயாராயிடுச்சின்னு.  12.05.2007 ல நான் கைதியானேன். அன்னக்கி ராத்திரி இந்த இருள் அறைக்குள்ள நான் தள்ளப்பட்ட பிறகு, இந்த அறைக்கு இருக்குற சின்ன கதவும் மூடப்பட்ட பிறகு, எனக்குப் பகலும் கைதான என்னோட காதலனும், என்னோட ரத்தத்தோட சூட்டை எனக்கு மொதல்ல தொட்டு உணர வெச்ச இயக்கமும் இயக்கச் சகாக்களும் என் நினைவிலிருந்து மறைஞ்சு போயிடுவாங்கன்னு நினைச்சிருப்பான், எனக்குத் தண்டனைத் தீர்ப்பு எழுதிய அந்த நாய்…..(சிறிய மூச்சிரைப்புக்குப் பின்) அந்த நாய்க் காது கர்னல். நான்?... (உள்ளுக்குள் சிரிகிறாள்) எனக்கு என்னப்பத்திய எல்லாமும் இங்க மறந்து போகல… இனிமே எதிர்ப்படப் போகும் எல்லாமும்… எதுவுமே எனக்கு மறந்து போகல…

பின்னல் சட்டத்தை வேறு நிலைக்குக் கொண்டு நிறுத்திய அவளை, அவள் உள்ளுக்குள் குமைந்து கொண்டிருக்கும் வேதனையின் வலி உடலைப் பின்னிப் பல கோணங்களுக்குக் கொண்டு போக அதனோடே….
உயிர்: கொஞ்சம் சிரமந்தான்…என்னோட நிலையும் உலக சுழற்சிக்குத் துணை நிற்கும்னா, என்னைப் போல எவ்வளவோ பேர் ஏதோ ஒரு இருள் சிறைக்குப் பின்னிருந்து இறுதி மூச்சொலியைச் சக்தியோட வெளியிடுவாங்கன்னா, நாங்க இடைவிடாது பொத்தி வச்சிருக்கிற கனவு நிச்சயம் இறக்கைய விரிக்கும், (பெருமூச்சை எடுத்தவளாக) இந்த எல்லாம் முகங்களும் அழிஞ்சிகிட்டே வருதே…..
பெருமூச்சை எடுத்த அசதி அவளுடலைக் குலைக்க இப்போது அவள் கண்கள் சொருகுகிறது. அதை நிலைகுத்தி ஒர் இடத்தில் நிறுத்துகிறாள். உதடு மட்டும் முணுமுணுக்கிறது.
உயிர்: யார் முடிவு பண்றது? எனக்கு எதுவுமே மறந்து போகல! பெண் உடம்பு மேல சோதனைச் சாவடில வெச்சி அவங்க பண்ற கோரம், சாவை ஆயிரம் தடவ சேர்த்துப் பார்த்த மாதிரி இருக்கும்ணு சரளா அக்கா சொன்னதுதான், நான் என் நெத்தியில பொட்டு வெக்கிறத நிறுத்தின நாள். வாழ்வை விட முக்கியமானது லட்சியம்… நூலகம் எரிஞ்ச சேதி கேட்டுக் கண்ணீரைக் கண்னுக்கே தெரியாம பதுக்கி வெச்சிக்கிட்டு ஓடினேன். வீதி முழுக்க ஆயுதத்தோட நின்ன எருமைத் தலை முகமூடிகளப் பத்திக் கூட கவலப்படாம எரிஞ்ச நூலகத்த நோக்கி ஓடினேன் (தாங்க முடியாத சோகம் அப்பிய அவளுடல் அக்கொடும் நினைவுகளிலேயே ஸ்தம்பித்து நிற்கிறது) பேரிசைத் தந்த அந்த யாழ்… (தன் நிலை உணர்ந்தவளாகச் சுதாரித்துக் கொண்டு) எரிஞ்சுகிட்டு இருந்த நூலகத்துக்குப் பக்கத்துல, அவங்க அதுவரை போட்டிருந்த எருமைத் தலை முகமூடியக் கழட்டி வெச்சிட்டுக் கழுகுகளா மாறி அந்த நிலப்பரப்ப வட்டமடிக்க ஆரம்பிச்சிட்டாங்க… இப்படித்தான் எங்க திசை எங்களுக்குக் காட்டப்பட்டுச்சி. என்னோட ஞாபகத்திலேயும் அகிம்சைப் போராட்டம் ஆயுதப் போராட்டத்துக்கு விலகி வழி விடற காலகட்டம் இங்கதான் ஆரம்பிக்குது.
(திடீரென்று ஏதோ ஞாபகம் வந்தவள் போல துள்ளி எழுந்து ஓடி மேலே பார்த்தபடி) நான் இங்க பேசிகிட்டு இருக்கறது உங்க யார் காதுலயாவது விழுந்தா உங்களுக்கு எப்பவும் பழக்கப்பட்ட மாதிரி பாதுகாப்பான வார்த்தைகள் ஏதாவது பேசிக்கிட்டுப் போய்கிட்டே இருங்க. இல்லன்னா மெளனமா ஆயிடுங்க. ஏன்னா! நம்ம மொழி அரசியல் சூழல்ல நீங்க எவ்வளவுக்கு எவ்வளவு மெளனம் சாதிக்கிறீங்களோ அந்தளவுக்கு உங்க வாழ்நாட்கள் அதிகமாவறதுக்கு சாத்தியங்கள் இருக்கு.
தொடர்ந்து பேசுவதில் ஏதோ வெறுப்புற்றவள் போல தன்னைத் தானே சிறிது நொந்து கொள்கிறாள். பிறகு ஞாபகத்தில் இருக்கும் எதையும் நினைவில் கொண்டு வரவேண்டாம் என்று முடிவு செய்தவளாய் எதிர் நிலைச் சதுரச் சட்டங்களை இடம் மாற்றி வைத்து விட்டு இதுவரை இருந்த நிலையிலிருந்து எதிர்ப்புறம் திரும்பி அமர்ந்து கொள்கிறாள்.
உயிர்: இவ்வளவு பலவீனங்களுக்கிடையிலேயும் எனக்குள்ள அசைஞ்சுகிட்டு இருக்கிற நினைவுத் திவளைகளில் ஒன்றான, பாலி ஆற்றோட வேகம் எப்பவும் குறையப் போறதில்ல… ஏன்னா எல்லோருடைய பால்யமும் வெள்ளை  நிறத்த உள்ள வெச்சிக்கிட்டு இருக்கு. அதனாலதான் என்னோட ஆறு எங்கெங்கோ பிறந்து எதோ ஒரு இடத்துல சந்திச்சிகிட்டு சுழன்று சுழன்று மடை எதுவுமில்லாம ஓடிக்கிட்டே இருக்கு… இங்க வந்த பிறகுதான் தெரிஞ்சிக்கிட்டன்… தண்டனையோட கொடூரம் இருட்டு ரூபத்துல இங்கத் காத்துக்கிட்டு இருக்கிறத, சாவதற்கு விசேஷமா எதுவுமே தேவையில்ல. நான் பேசறத நீங்க கேக்காத  மாதிரி போய்க்கிட்டே இருந்தா போதும். ஒருநாள் எல்லாமே முடிஞ்சிடும். அப்படி நானும் இங்க முன்னாடியே முடிஞ்சி போயிருப்பேன்… ஆனா இங்க நான் திரும்பப் பிறந்தன்… வெள்ளை நிறப் பாலி ஆறு எனக்குள்ள ஓடிக்கிட்டு இருக்கிறத இப்ப எனக்குக் காட்சியாக்குனது இந்த இருட்டுக்குள்ள இருக்குற இருட்டுப்பல்லிதான். என் பேச்சுக்கு எப்பவும் உச்சிக் கொட்டிக்கிட்டே இருக்குறதும் இந்த இருட்டுப்பல்லிதான்.
(ஒரு வித மயக்க நிலையில்)
இருட்டுப் பல்லிதான். பல்லி… பல்லி…பல்லி…


இப்போது அவ்வுயிர் இடத்தில் டார்ச் ஒலி மட்டுமே. அது ஒரு நொடி சட்டென்று மறைய அடுத்த நொடி வேறொரு இடத்தில் இன்னொரு டார்ச் ஒளி பிறக்கிறது. அந்த இடமானது, மேடையின் மையத்தில் மேலிருந்து தொங்கும் வெள்ளை நிறத் துணியில் வரையப்பட்ட அல்லது செய்யப்பட்ட பல்லி ஒன்றின் மீதாக இருக்கிறது. அந்த டார்ச் ஒளியைத் தொடர்ந்து அப்பல்லியின் மேல் விழும் மற்ற திசைகளில் உள்ள விளக்குகளும் அவ்விடத்தின் முக்கியத்துவத்தைக் கூட்டுவதாகவே இருக்கிறது. வெள்ளைத்துணி பாலி ஆறாகவும், துணைப் பல்லி அதோடு இணைந்ததாகவும் இருக்கிறது
அத்துணியின் பின்புறமிருந்து விதைகள் அசைக்கும் சத்தம், மெல்லிய அளவில் தொடங்கி நம்மை நோக்கி வருகிறது. துணியின் முன்பக்கம் விதைகள் வரும்போது இசையை பிறப்பிப்பவர்களாக குழந்தைகள் வெளிப்படுத்துகின்றனர். ஒரே தாள கதியில் அவ்விதைகளை இசைத்து வருவது என்பது ஒரு நாட்டின் நிலப்பரப்பு வரை படமானது இயற்கை எனும் அளவில் குழந்தைகளின் மன ஓட்டத்தில் உண்மையாகப் பதிவாகியிருக்கும் எனும் விதம் நிகழ்கிற்து. நடந்து இசைத்து வந்தவர்கள் மெல்ல நிலத்தில் அவர்களால் செலுத்தப்படும் இசை அவர்களுக்கு ஏதோ திருப்பித் தருகிறது. அதை வாங்கி இசைக்கு இடையில் அவர்களுக்குள் பரிமாறிக் கொள்கின்றனர். முதலில் நிலம் அவர்களுக்குக் குழந்தைத் தன்மையுடன் செய்தியைத் தருகிறது.
குழந்தை 1: பறவை… (விதை இசை)
குழந்தை 2: பச்சை…. (விதை இசை)
குழந்தை 3: மண்புழு….. (விதை இசை)
தொடர்ந்து இசைத் செய்தி வழியே பயணித்த அவர்களுக்கு அந்நிலம் சிதைந்திருப்பது வேதனையைக் கொடுக்கிறது.
குழந்தை 4: வேலி… (குறைந்த இசை)
குழந்தை 5: துன்பம்….. (குறைந்த இசை)
குழந்தை 6: அக்கா…… (குறைந்த இசை)
நினைவுகளில் தொடரும் வேதனை அவர்களது இசையைச் சிறிது மந்தப்படுத்த, அந்நிலையிலிருந்தே இசைத்துக் கொடுக்கின்றனர். பின்னடைவு எனும் படிமமாக முதல் குழந்தை மெல்ல இசைப்பதை நிறுத்தித் தன்னால் இனி இசைக்க முடியாது எனும் நிலையில் விதைக்கருவியைக் கீழே வைத்துவிட்டு எல்லாவற்றையும் மறந்த நிலையில் அங்கிருந்து மறைகிறது. தொடர்ந்து ஒவ்வொரு குழந்தையாக அதே உன்மத்த நிலையில் வெளியேறித் துணிக்குப் பின்புறம் சென்று மறைகின்றனர். இப்போது அங்கு எஞ்சியிருப்பது குழந்தை 6 மட்டுமே. அவ் வெளியில் உடனிருந்தவர்கள் காணாதது கண்டு ஏமாற்றம் அடைகின்றான். பின், தான் எப்போது அந்த இடத்தை வெறுமையாக்குகிறானோ அப்போது தான் இங்கு யாருமில்லை என்ற நிலை வரும் என்ற உறுதி கொண்டவனாக வெறி கொண்டவன் போல விதைக் கருவியை நிலத்தில் வாசித்துக் கையில் எடுத்து இசைத்தபடியே உறுதியான பார்வையோடு வெளியேறுகிறான். மறைகிறான்.

இருள் குழந்தைகள் ஒருவர் பின் ஒருவர் எனத் தங்கள் கைகளைத் துழாவியபடியே தட்டுத் தடுமாறி வருகின்றனர். ஒருநேரம் நிலங்களை நோக்கிச் செல்லும் அவர்களின் கைகள் தங்களுக்கென ஒவ்வொரு இடங்களைத் தேர்ந்தெடுக்கிறது. நடுவில் ஒரு பெண் குழந்தையைச் சுற்றி மற்றவர்கள் அமர்ந்திருப்பதாகத் தோற்றம் கொள்ள, இப்போது அப்பெண் குழந்தை புத்தரை உயர்த்துகிறாள். சுற்றிலும் பிரியும் மற்றவர்கள் அப்புத்தரின் வண்ணக்கீற்றின் வழியே புத்தரின் பிள்ளைகளாகி இருக்கின்றனர். புத்தரின் பாதத்திலிருந்து பிரியும் வண்ணக்கீற்றின்  இன்னொரு முனை அப்பிள்ளைகளின் தொப்புள்களில் முடிவு பெறுகிறது. பின் மெல்ல ஊர்ந்து பறவைகளாக உருவெடுத்துப் பறக்கின்றனர். பறந்து மறைகின்றனர். புத்தர் மட்டும் அங்கு தனித்து இருக்கிறார்.
முன்பிருந்த வெறுமை, அப்பாலி ஆறெனப் பாயும் வெள்ளைத் துணியை மீண்டும் கவ்வுகிறது. நினைவுகளால் சிதறும் ஒளி, அவ்வுறு உயிரின் ஒளியாய் மாறுகிறது. அதுவரை சிரித்துக் கொண்டிருந்த அவளுடல் இப்போது சற்றுக் குளிர்ந்த நிலை வார்த்தைகளை வெளியிடுகிறது.
உயிர்: பாரம்பரியம் எல்லோருக்கும் வாழவும் வாழவைக்கவும் கற்றுக் கொடுக்கிறதா என்ற கேள்விக்குப் பதில் என்னோட நாட்டில் மட்டும் எப்போதும் சிரிப்பிலேயே முடிந்து விடுகிறது. இங்கு புத்தரும் போதிமரமும் எங்கோ மறைந்து… இல்லயில்ல. எங்கேயோ மறைச்சி வைக்க பட்டிருக்காங்க… ஒருவேளை அவர்… அவரும்… (செய்தி வாசிப்பாளர் போன்ற குரலில்) இராணுவ முற்றுகையை எதிர்கொண்டு போராட இயலாமல் புத்தர் போதி மரத்திலேயே தற்கொலை செய்து கொண்டார். (இயல்பு நிலைக்கு திரும்பி) இந்தச் செய்தியைத் தான் அவங்க முதல் வெற்றிச் செய்தியாக வெளியிட்டிருப்பாங்களோ? இப்போது நீண்டு கொண்டே இருக்கிற பலி எண்ணிக்கையோட பட்டியல் புத்தர் பெயரைத்தான் முதலில் பதிவாக்கி இருக்குமோ? (சிரிக்கிறாள்)
அவளை மையமிட்டிருந்த ஒளி வெள்ளைத் துணிக்கு மாற பல்லி பிரசன்னமாகிறது. இசை உயிர்வதையை முன்னிறுத்துகிறது. தலைகள் உருளும் சத்தம். இப்போது துணிக்குப் பின்னாலிருந்து சிறுவன் ஒருவன் பின்பக்கமாகவே நடந்து வருகிறான். அவன் தலையில் சிறிய ஸ்டுல் ஒன்று இருக்கிறது. வந்தவன் முன்பு சுடரொளி வீசிப் பறந்த புத்தரின் பின்பக்கம் கொண்டு வந்த ஸ்டுலை வைத்து விட்டு அதே நடையில் வெளியேறுகிறான். அவனைத் தொடர்ந்து இன்னொருவன் தன் கையில் உள்ள பெரிய வெங்கலத் தட்டில் புத்தரின் அறுபட்ட தலையை மட்டும் கொண்டு வருகிறான். புத்தரின் கழுத்தில் விரவிய ரத்தம் அத்தட்டில் உறைந்திருக்கிறது. அவன் அப்படியே அசையாமல் நிற்க பின்புலம் பாலி ஆற்றில் (வெள்ளைத் துணி) சிவப்பு வண்ணம் ஒழுகிப் பல்லியையும் சேர்த்து நனைக்கிறது. முன்பு வந்தவன் வைத்து விட்டுப் போன ஸ்டுலில் இப்போது வந்தவன் அப்புத்தர் தலை தட்டை வைத்து விட்டு மறைகிறான். வெள்ளைத் துணியை நனைத்த சிவப்பு என்பது பாலி ஆறு தன் வெள்ளை நிறத்தை மறந்து போன முதல் தினமாக அது இருக்கலாம்.
உயிர்: மரணம் வாழ்வின் முடிவல்ல உங்களின் சொற்களை விடவும் செயல்களை விடவும் மிகவும் வலியது.
உறைந்த குருதியில் மிதந்த எம்மவர்களின் உடல்களின் முன் வணங்கி எழுப்பப்படும் இவை போன்ற குரல்கள்தான் என் பெயரைத் தவிர அனைத்தையும் இரகசியமாக்கியவை.
(எதிர் நிலைத் தடுப்புச் சட்டங்களை மாற்றி வைத்தபடியே)
தொடர்ந்து எழுச்சி ஊட்டிக்கிட்டே இருந்த இந்த வரிகள் எப்போ விளையாட்டுக்குப் பயன் படுத்தப்பட்டு விளையாட்டாகவே மாற்றப் பட்டதுன்னதான் புரியல… நாங்க கலகக்காரங்கதான். முட்டாள்களை மட்டுமே உருவாக்கிக் கொண்டு திட்டமிட்டபடியே முட்டாள்களின் தேசத்தைக் கட்டியாள நினைக்கும் சகுனிகளுக்கு நாங்கள் நேரெதிர் நின்று முரண்படுவது கலகம் தான்.

அவர்கள் யார் மறுப்பதற்கு? எத்தனை காலம் ஆனாலும் பரவாயில்லை எம் மண்ணில் பிறக்கும் எந்த ஒரு குழந்தைக்கும், ’யாரோ ஒருவன் கிழிக்கும் கோட்டுக்குள் வாழ்வது மட்டுமல்ல வாழ்க்கை’ என்பது தெரியட்டும். மூச்சுக் காத்தக் கூட யாரோ ஒருவன் கண்காணிப்பில் தான் இயக்க வேண்டும் என்கிற கட்டாயமற்ற உலகத்தையும் அவர்கள் கண்டு கொள்ளட்டும்…
(சிறிய பதட்ட நிலையைக் கடந்த ஒரு உடலுக்கான அச்சம் என்பது கூட இல்லாமல், எதிர்க்கும் சக்தி வலுப்பெற்றவளாக)
பல்கலைக்கழகத்துல நடந்த சுதந்திர முழக்கப் பேரணியில முதல் வரிசையில் நின்று பறை வாசிச்சிக்கிட்டுப் போன என்னோட புகைப்படமும் நான் வாசிச்ச பறையும் அந்தப் பறையில் படிந்திருந்த என்னோட கைரேகையும் தான் என்னோட குற்றப்பத்திரிக்கை அறிக்கையில் இருந்த முதன்மை ஆதாரங்கள். நான் இங்கு இல்லாமல் போனாலும் அடுத்து இங்க வரும் என் சகாக்களுக்கும் இதோ இதே கைரேகை குற்றப்பத்திரிக்கையா மாறும். ஏன்னா!... எங்களோட எல்லா கைகளும் சுதந்திரப் பறை வாசிக்கும் போது ஒரே ரேகையக் கொண்டதா மாறும்னு அவங்களுக்குத் தெரியும்.
அவள் குரல் திருகி இசையோடு எங்கோ காணாமல் போக ஒளியும் சட்டென அவ்விடமிருந்து மறைகிறது. பாலி ஆற்றின் பக்கம் கோமாளிகளுக்கான இசை துள்ளி ஓடி வர நீண்ட குல்லா அணிந்த சீட்டுக்கட்டுக் கோமாளிகள் வரிசையாய் வந்து கொண்டே இருக்கின்றனர். அவர்கள் தொப்பியிலிருந்து உடைகள் வரை சீட்டுக் கட்டின் படங்கள். கோமாளிகளால் மட்டும் பல நாட்டின் அதிபர்களைக் கிண்டலடிக்க முடியும் என்பதால்தான் அவர்களின் இவ்வருகை.
கோமாளி 1: Jack, King, Queen Diamond Seven
கோமாளி 2: Hearts Ten, Nine, Eight, Seven, Six, Five
கோமாளி 3: I Am the King of This Game.
கோமாளி 4: Aces, Aces, Aces
கோமாளி 5: I Have Spade Set, I Am Waiting for Joker.
கோமாளி 6: Lot of Jokers in My Hand. Now Game Over…
           Lot of Jokers in My Hand. Now Game Over…
அவர்களின் மறைவின் போது இசை, அகதிகளின் நெடும் பயணம் போன்ற பின்புலத்தை நோக்கித் திரும்பி இருக்கிறது. ஒளி அவ்வுரு உயிரின் பின்செல்ல அங்கு அவள் நீண்ட பயணம் மேற்கொண்ட களைப்புடன் தென்படுகிறாள். அந்நிலையிலேயே பேச இருக்கிறாள்.


உயிர்: குடும்பம் குடும்பமாக கையில் மூட்டை முடிச்சுகளோடு மனிதக்கூட்டம் இந்த நிமிஷம் கூட எங்காவது ஒரு மூலையில் நகர்ந்து கிட்டே இருக்கும். நான் பள்ளிக்கூடத்துக்குப் போய்ட்டு வீட்டுக்கு வந்த உடனே இந்த போட்டோ ஆல்பத்தை கொண்டு வந்து அப்பா கிட்ட கொடுப்பன். அப்பா வரிசையா போட்டோ காண்பித்துப் பேசுவார். இவர்தான் சித்தப்பா, கனடாவில் இருக்கார். இந்த மாமா பிரான்சுல இருக்கார், அக்கா எல்லாம் பெரியப்பாவோட ஆஸ்திரேலியாவில் இருக்காங்க. (கண்ணீர் கண்களில் தீரள) நான் ஆல்பத்த கொடுக்காத இரவுகள்ல கூட அப்பா தூக்கத்துல இதையே திரும்பத் திரும்ப முனகறத நிறைய தடவ கேட்டிருக்கன். என் அப்பா மட்டுமல்ல, நீங்க எந்த நாட்டவரா இருந்தாலும் உங்க நாட்டு இரவுகளிலும் இதுபோல என் சொந்தங்களின் தனிமைக்  குரல்கள் கேட்டுக்கிட்டே தான் இருக்கும். (தன்னை முழுவதும் உணர்ந்தவளாக குரலில் மாற்றம் ஏற்படுத்தி) உங்களப் பத்தி சொல்லுங்க அப்படின்னு யாராவது கேட்டா ’நான் வளர்மதி’ன்னு சொல்லுவேன். அவ்வளவுதான் என்னால் முடியும். ஏன்னா நம்ம அடையாளம் நம்ம சம்மதத்தோட அழிக்கப்படறது நம்மில் பலபேருக்குத் தெரியல. குடும்பம் குடும்பமா மூட்டை முடிச்சிகளோட எல்லையக் கடக்குற எல்லாருமே அடையாளம் இழந்தவங்க தானே! எல்லா முகங்களும் இங்க அழிஞ்சி கிட்டே வருதே.
வளர்மதியின் கடைசி வார்த்தை நீண்டுகிட்டே போக இருள்….
வளர்மதியின் எதிரொலியாக பாலி ஆற்றிலிருந்து ஒரு முகமூடியணிந்த உருவத்தின் குரல்.
முகமூடி உருவம்:  இங்க எல்லா முகங்களும் ஒரே முகமாக மாறிக்கிட்டே வருதே….
உள்ளே வரும் அந்த உருவத்தின் கையில் கம்பியில் கோர்க்கப்பட்ட பல தலைகள் தொங்குகின்றன. அந்நிலையிலேயே வந்து புத்தரின் வெட்டப்பட்ட தலையின் பின்பக்கம் நிற்கிறது. பின் உறைகிறது. இப்போது பாலி ஆற்றில் பல்லி மேல், வழியும் கருப்பு வண்ணம் கலக்கிறது. கருப்பு அடையாளம் அழித்தலின் முதல் குறியீடாக இந்த பீச்சப்படுகிறது. தொடர்ந்து முகமூடி உருவத்தைக் கடந்து ஏராளமான மனிதர்கள் முகம் முழுக்கக் கருப்புத் துணியால் மூடப்பட்டு நடந்து போகிறார்கள். அவர்கள் தங்கள் முகத்தைத் தடவியபடியே போவதென்பது சாகடிக்கப்பட்ட சுயம் எங்காவது கிடைத்து விடாதா என்பது போலவும் எஞ்சியது ஏதாவது கிடைத்தால் கூட போதுமே என்ற நிலையில் ஊர்ந்து செல்லும் அவர்கள் வளர்மதியினுள் சென்று கலக்கின்றனர். இந்நொடி வளர்மதியின் தலை மேல் உள்ள ஒளி கண் திறக்க அதிலிருந்து தூக்குக்கயிறு ஒன்று இறங்குகிறது. அது நீண்ட காலமாகப் பயன்பாட்டில் இருப்பது போல் தென்படுகிறது. அது தன்னை நோக்கி வருவதைக் காணும் வளர்மதி தான் மரண விளிம்பில் தான் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து கொள்கிறாள். தீர்மானமான இறுதி வார்த்தைகளை வெளியிடுகிறாள்.
வளர்மதி : என்னோட இரத்தத்த எடுத்துக் கொள்ளுங்கள்
என்னோட உடம்பின் மிச்சத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்
என்னுடன் யாருமே இல்லாத என்னோட பிணத்தையும் புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள்.
அந்த புகைப்படத்தை வெளி உலகுக்கு அனுப்புங்கள். நீதிபதிகளுக்கு…, மனசாட்சி உள்ள மனிதர்களுக்கு…, பரந்த மனப்பான்மை உள்ள மனிதர்களுக்கு
என இவ்வுலகின் முக்கியமானவர்கள் எல்லோருக்கும் அந்தப் புகைப்படத்தை அனுப்புங்கள். ஏனெனில் குற்றமற்ற அனைத்து மரணத்தின் குற்றவுணர்வையும் இந்த உலகத்தின் காப்பாளர்கள் சுமக்கட்டும்.
சமாதானத்தின் கைகளில் வைத்துக் கொள்ளப்பட்ட எல்லா முகமற்ற ஆன்மாக்களின் வேதனையையும் நம்மிடம் பெற்று நம்மிடத்தைப் பறித்துக்கொண்டிருக்கும் உலக நீதிபதிகள் சுமக்கட்டும்.
என்னோட இரத்தத்த எடுத்துக் கொள்ளுங்கள்
என்னோட உடம்பின் மிச்சத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள்….
அவள் உடலிலேயே இருந்த பாலி ஆற்றின் குறியீட்டின் வெள்ளைத் துணி இப்போது முழுவதுமாய் அவள் உடலை மறைக்கிறது. தலை தூக்குக்கயிறை முத்தமிட, கயிற்றின் சுருக்கு அவள் ஆன்மாவான வெள்ளைத்துணியைக் கவ்விக் கொள்கிறது. வளர்மதி உருவம் மறைய வெள்ளை நிறம் மேல்நோக்கிப் பயணிக்கிறது. மறுபுறம் பாலி ஆற்றின் திசையில் ஓரிரண்டு மூட்டைகள் வந்து விழுகின்றன. ஒளி அதன் மேல்.

 நன்றி: உன்னதம் – ஜுலை 2009




Comments

  1. அண்ணா நாடகவியலை நோக்கி நகர என்னை போன்றப் புதியவர்களுக்குள் பெரும் அசைவ உண்டு பண்ணுது உங்க எழுத்து அண்ணா! மனதெங்கும் காட்சிபரப்பா நீளுது....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அரங்கில் கலந்த ஆசிரியர் சே. ராமானுஜம்

எல்லோருக்காகவும் வேண்டியெழும் மொழி : ஜான் ஃபோஸின் நாடகங்கள் - ஞா. கோபி

நாடகக் கலைஞர்களின் கலை வழி உறவு நிலை வெளிப்பாடுகள்