கழுமரம் – நாடகம் - ஞா.கோபி, புதுச்சேரி
கழுமரம் – நாடகம்
ஞா.கோபி, புதுச்சேரி
அந்நேரம்
பின் மேடையிலிருந்து சீட்டுக்கட்டுகளை களைந்தபடியே உடல் பெருத்த ஒருவர் சிறிய அசைவுகளைக்
கொண்ட நடனமாடி காற்றில் தன் சீட்டுகளுடன் சேர்ந்து மிதக்கிறார்.
அப்போது முன்புறம் தட்டிலிருந்த மூன்று தலைகளின் கண்கள் திறந்து விழிக்கின்றன. தலையில்
பின்புறம் கண்களைச் சுழற்றி சீட்டுக்கட்டு மனிதனைப் பார்த்துவிட வேண்டுமென பெறுமுயற்சி செய்யத் தொடங்குகின்றனர்.
அப்போது உடல் சிறுத்த கோமாளி ஒருவர் அத்தலைகள் இருந்த மேஜையின் பின் புறமிருந்து வெளிப்பட்டு
அந்த சீட்டுக்கட்டு மனிதனை பிளாஷ் (flash) ஒளியின் துணையுடன் புகைப்படங்கள் எடுக்கிறான்.
கோமாளியின் பிளாஷ் ஒளிக்கு சீட்டுக்கட்டு மனிதன் உறைய, அசைய, உறைய என, பிளாஷ் நடனம்
ஒன்று மேடையில் அரங்கேறுகிறது நடனத்தின் உச்சத்தில் அக்கோமாளி பிளாஷ் போட்டோகிராப்
செய்துக்கொண்டே பின்பக்கமாகச் சென்று தலைகள் இருந்த மேஜையின் பின் புறமிருந்து ஒரு
பெரிய பாலித்தீன் வலை ஒன்றினை எடுத்து வருகிறான். இப்போதிலிருந்து பிளாஷ் அடித்து,
சீட்டுக்கட்டு மனிதன் உறையும் நிலையை வலைகொண்டு சிறை பிடிக்க முயற்சிக்கிறான். ஒரு
குறுகிய இடைவெளிக்குப்பின் சீட்டுக்கட்டுக்காரன்
உறையும் நொடிகள் அதிகரிக்கின்றன. கோமாளிக்கு உற்சாகம் பீறிட பிளாஷ் அடிப்பதின் வேகத்தை அதிகரிக்கிறான்.
அதோடு கவனமுடன் வலை கொண்டு சீட்டுக்கட்டுக்காரனைப் பிடிப்பதில் முன்னேறுகிறான். சிறிது நேரம் சென்றவுடன்
பிடித்தும் விடுகிறான்.
உறந்தவனை
அப்படியே விட்டுவிட்டு, திரும்பி தன் தொப்பியுள்ளிருந்து ஒரு கட்டு சீட்டை எடுத்து
தலைகளின் அருகில் சென்று நின்று சீட்டுகளை கலைத்து விளையாடத் தொடங்குகிறான். சிறிது
நேரம் விளையாடியவன் (அப்போ சிரிக்கிறான்….) பின் மெல்ல அடுக்கப்பட்ட நிலையில் இருக்கும்
சீட்டுகளை பார்வையாளர் பக்கம் திருப்புகிறான். அவை வரிசை முறையில் அடுக்கப்பட்டுருக்கிறது
அவற்றை தலைகளின் மிக அருகில் கொண்டு சென்று காண்பிக்கிறான். உடன், தட்டிலிருந்த தலைகள்
தங்களை விடுவிக்க வந்த மந்திரசாவி அந்த இடம் மாறிய சீட்டுக்கள், என சக்தி பெற்றவர்களாக
தலைகள் அசையத் தொடங்கிறது. பின் மெல்ல மெல்ல தலைகள் மேஜைகளோடு சேர்ந்து அசையத் தொடங்குகிறது.
அதுவே அவர்களின் விடுதலைக்கான நுழைவாயில் என்பதை உணர்ந்தவர்களாக மேலும் உக்கிரமாக அசையத்
தொடங்கி வேகமெடுக்கிறார்கள். அப்போது கோமாளியும் அவர்களுடன் சேர்ந்து அசைகிறான். அசைந்தாலும்
மிக கவனமாக அவ்வப்போது பிளாஷ் போட்டோகிராபியால் சீட்டுக்கட்டுக்காரனை உறை நிலையிலேயே
வைத்திருக்கிறான்.
அசைந்தவர்கள்
அசைந்துகொண்டே இருக்கும் நேரம் ஒன்றில், மேடையின் பின் தளத்தில் மிக குறைந்த அளவில்
ஒரு கடினமான உழைப்பாளியின் கடினமான தொழில் நிமித்த முனகல் ஓசை கேட்கிறது. ஓசையை உள்வாங்கும்
கோமாளி தலைகளுக்கு முன்னெச்சரிக்கை சமிக்கையை தன் பையிலிருக்கும் பலூன் (சிகப்பு வண்ணம்)
ஊதுதல் மூலம் காண்பிக்கிறான். அந்த பலூனின் பெருத்தல் அளவினை ஒத்து, தலைகளின் உறைநிலை
பழைய நிலைக்குத் திரும்புகிறது. தலைகள் உறைந்த அடுத்த நொடி பலூன் புஸ் என்று காற்று
வெளியேறி சீறிப்பாய அதன் பின்னாலேயே மின்னல் வேகத்தில் கோமாளியும் போய் மறைகிறான்.
பின் வந்து சீட்டுக்கட்டுகாரனை உறைய வைக்கப் பயன் படுத்திய பாலீத்தீன் வலையை எடுத்துக்
கொண்டு போய் உறுதியாக மறைகிறான். வலையில் சிக்கியவனை நிறைய பிளாஷ் போட்டோக்கள் எடுத்தபடியே
வெளியேறுகிறான். முக்கியமான ஒன்றை மறந்துவிட்டுச் சென்றவனாக, மீண்டும் மேடைக்கு ஓடி
வந்து வலையைத் திரும்ப எடுத்துச் செல்கிறான்.
சீட்டுக்கட்டுக்காரன் அதே உறை நிலையில்.
முனகல்
வந்த பின் மேடையிலிருந்து இப்போது துப்புரவு பணியாளர் உடையில் இருக்கும் ஒரு பெண்
(முகத்தில் மாஸ்க் இல்லை), கையில் கிளவுஸ் இடுப்பில் குட்டையான அளவே உள்ள துடைப்பம்
மற்றும் பின்புறம் குப்பைக் கூடையாக பெயிண்ட் டப்பா ஒன்றினைக் கட்டியபடி மெல்லிய நூலினால்
ஆன பெரிய வண்டியினை, வளர்ந்து வந்த முனகலுடன் இழுத்து வருகிறார். அவருடைய இணைப்பு நூலின்
முடிவில் இன்னொரு மனிதர்,கோட் சூட அணிந்தபடி கையில் Brown நிற Brief case போன்ற ஒன்றை
பிடித்தபடி வருகிறார். அவர் தலையில் லைட் ஒன்று எரிந்து கொண்டிருக்கிறது. அவரைத் தொடர்ந்து
அவரின் பின்னுள்ள நூலின் மறுமுனை இன்னொருவரின் சட்டையில் முடிகிறது. அவர் லேப்டாப்
பார்த்தபடியே உள்ளே வருகிறார். அடுத்தவரின் கையில் வெறும் மொபைல் போன் மாத்திரமே இருக்கிறது.
அதுவரை நேராகவே வந்த அவர்களில், மாற்றம் தொடங்குகிறது. போன் ரிங்டோன் கேட்டு பேசத்தொடங்குகிறான்.
பேசியபடியே அவன் வலதுகைபக்கம் திரும்ப வேண்டுமென்பதாகச் திசை காட்ட, அவனுக்கு முன்புறம்
இருந்தவன் திசை திரும்ப வேண்டிய செய்தி நூல் வழி கிடைக்கப் பெற்றவனாக அவனும் அத்திசையில்
கையை திருப்புகிறான். உடனே அவனுக்கு முன்பிருந்தவன் அவனாக வலது திசை கைகாட்டுகிறான்.
இப்போது இழுத்து போகும் துப்புரவு பணியாளரும் வலது திசைத் திரும்புகிறார். தொடர்ந்து
இழுக்கிறார். இழுத்தப்படியே சீட்டுக்கட்டுக்காரன் உறை நிலையில் இருக்கும் இருப்பிடம்
நோக்கிச் செல்கிறார்.
இந்த
பெரும்மனிதர்கள் குழுவை இழுத்துச்செல்லும் பெண், சீட்டுக்கட்டுக்காரன் அருகில் சென்றவுடன்
சீட்டுக்கட்டுக்காரன் உறைநிலையிலிருந்து மெல்ல மீள்கிறான். அப்போது அவர்களில் இருவர்
சீட்டுக்கட்டுக்காரனைக் கடந்திருக்கிறார்கள். மேலும் அசைவுடன் சீட்டுக்கட்டுக்காரன்
அவனுடைய இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறான். பெரும்மனிதர்கள் குழு சீட்டுக்கட்டுக்காரனை
முழுவதுமாகக் கடந்திருக்கிறார்கள். இப்போது சீட்டுக்கட்டுக்காரன் பழையபடி சீட்டுகளை
இயக்குகிறான்.
பெரும்மனிதர்கள்
குழுவில் இறுதியாகச் சென்றவன். தன் மொபைலில் சீட்டுக்கட்டுக்காரனின் இயல்பான அசைவை
புகைப்படம் எடுக்கிறான். உடன், முன் இருந்தவன் லேப்டாப்பை மூடுகிறான். அதற்கு முன்
இருந்தவன் Brief case திறந்து சில பேப்பர்கள்
எடுக்கிறான், கிழிக்கிறான். கிழித்ததை முன் செல்லும் துப்புரவு தொழிலாளியின் பின்னால்
கட்டப்பட்ட குப்பைத் தொட்டியில் போடுகிறான். எல்லோரும் மறைகிறார்கள்.சீட்டுக்கட்டுக்காரன்
மீண்டும் பழைய நிலையில் சீட்டுக்களை இயக்கியபடியே தலையில் கருப்பு பை ஒன்று பொருத்தப்பட்ட
உடலைப் பார்த்தபடியே வெளியேறுகிறான். பெருத்த அளவிலான ஓசையில் துப்பாக்கி வெடிக்கிற
சத்தம் கேட்கிறது.
உடல்
கட்டுப்பட்டுக் கீழே கிடந்த அந்த உடல் குண்டடிப் பட்டதாகத் துடிக்கிறது, நெளிகிறது,
அடங்குகிறது. தலைகள் உறந்த நிலையிலேயே இருக்கிறது. முன் வெளியேறிய கோமாளியை பச்சை நிற
சிறிய வேட்டி தலையில் துண்டு அணிந்த ஒருவன் முதுகின் பின்புறம் தலை கீழாகத் தூக்கி
வருகிறான். அவர்களின் ஒட்டிய உடலின் ஒரு பகுதியில் சிகப்பு துணியில் நனைக்கப்பட்ட நீர்
இருக்கிறது. குண்டடிப் பட்ட அவ்வுடல் அருகில் வந்ததும் உடலும் தலையும் மாறியவர்களாக
உரு எடுத்து துணியிலிருந்த தண்ணீரைப் பிழிந்து அந்த உயிர் போன உடலின் வாயில் ஊற்றுகிறார்கள்.
அவ்வுடலிடம் எந்த சலனமும் இல்லை. அந்த உடலை புரட்டுகிறார்கள். அதன் கைகள் ஆரஞ்சு நிற
துணியால் கட்டபட்டிருக்கிறது. அவ்வுடலின் கைப்பிடியில் பெரிய அளவிலான பேனா, ப்ரஷ் மற்றும்
சில புத்தகங்கள் இருக்கிறது. பிழிந்த சிவப்பு
நிறத்துணியில் அவற்றை வைத்து சுற்றுகிறார்கள்.மெல்ல கட்டுண்ட அந்த உடலை கோமாளிகள் இருவருமாக
தங்கள் உடல்களில் ஏந்தியபடி வெளியேறுகிறார்கள். வெளியே சென்ற வேகத்தில் கோமாளி வந்து
ஒரு சிறுவனை இறக்கிவிட்டுச் செல்கிறான். அவன் நீல நிற வேட்டி அணிந்திருக்கிறான்.அவன்
கையில்பிடுங்கப்பட்ட இறக்கைகள் நிறைய இருக்கிறது.உறைந்தவர்களின் காதுகளில் பேசுகிறான்.
”எங்களை பறக்க விடுங்கன்னு!
நாம கேட்கத்தான் முடியும்!
அவங்க கிட்ட மோதமுடியுமா ?
பறக்கறதும் பசிதான்.
ரொம்ப நாள்
பறக்காம இருக்குறதால
கொடூர பசியா இருக்குதானே ?
நாம பறக்க
நினைக்குறதும்
பசிக்காகத்தான்.
அவங்களுக்கான
கூட்டுல இருந்து
நமக்காக
பறக்க முடியாது
அதே நேரம்
நாம்
அவங்க கூட்டுப் பறவையாகவும்
சாக கூடாது”
என்று
பார்வையாளர்களுக்கே கேட்காவண்ணம் சொல்லிவிட்டு, தோளில் தொங்கிய வாட்டர் பாட்டிலிருந்து
எஞ்சியிருந்த இறுதி நீரை அருந்துகிறான். பாட்டில் காலியான உடன், மறுபுறம் தொங்கிய பையில்
இருந்து சிறிய அளவிலான விதைகளை பாட்டிலினுள் போட்டுக் குலுக்குகிறான். ப்ளாஷ் கோமாளி
உள்ளே வருகிறான். வந்தவன் தன் கையில் கொண்டு வரும் பாட்டில் தண்ணீரை ஒரே மூச்சில் செங்குத்தாக
வாயில் கவிழ்த்துக் குடிக்கிறான். அதை தன்னைத் தானே போட்டோ எடுத்துக் கொள்கிறான். சிறுவன்,
இப்போது பாட்டிலைக் குலுக்கிய படியே வெளியேறியிருக்கிறான். இப்போது உறைந்தவர்களின்
கண்கள் திறக்கிறது.அவர்களின் தலைகள் தாங்கிய அந்த டேபிள் கிழிகிறது வெற்றுடம்பு வெற்றுக்கைகள்
ஒளியில். கைகள் தங்கள் தலைகளுக்கிடையேயான அந்த மரப்பலகையை தகர்த்தெடுக்க முயற்சிக்கத்
தொடங்குகிறது. முடிவில் வெற்றிக்கிடைக்கிறது. மரப்பலகை மற்றும் டேபிள் என எல்லாம் இப்போது குப்பைப் பொருளென குவிக்கப்பட்டுக் கிடைக்கிறது. அவர்கள் கையில் எலாஸ்டிக் பட்டியுடன் இறகுகள் காட்சியில் தெரிகிறது.
மூவரும்
ஒவ்வொருவராக தங்கள் உடல்களை அசைத்தும் இசைந்து அசைந்தும் பார்க்கின்றனர். உடலில் இருக்கும்
எலாஸ்டிக் பட்டியைக் கவனிக்கத் தொடங்கிய அவர்கள்.
அதனை இரு சேர இழுத்து அசைப்பதன் மூலம் தங்கள் உடல் அசைவின் அளவு பெரிதுபட்டது போல்
உணர்ந்து உற்சாகமுடன் மேடை முழுவதும் உலாவருகின்றனர். உலா இன்னும் விரிவடைந்து செல்லும்
போது. இன்னும் இரு உடல் இணைந்திருப்பது பார்வைக்குத் தெளிவாக கிடைக்கிறது. ஐவர் ஒன்றுபோல்
தோற்றம்கொடுக்கும் அந்நேரம் இசை மாறுகிறது. அப்போது மேடையின் வலப்புறத்திலிருந்து ஒருவன்
அலுமினிய ஏணி ஒன்றை தன் முதுகில் சுமந்து கொண்டு வந்து நடுவில் வைக்கிறான்,பின் வந்த
வழியே செல்கிறான். இப்போது, அதிலிருந்து ஒருவன் ஜிப்பா குர்தா வெள்ளை நிறத்தில் அணிந்த
படி அதிலிருந்து இறங்குகிறான்.அவன் ஜிப்பாவின் பின்புறத்தில் மிகப்பெரிய பை ஒன்று மூட்டைபோல்
தைக்கப்பட்டிருக்கிறது.அதில் பாக்கு மட்டையால் ஆன தட்டுகள் நிறைய திணிக்கப்பட்டு இருக்கின்றன.
அவனைப்
பார்த்ததும், ஐவரும் நிற்கும் வரிசைகளை மாற்றி மாற்றி நிற்கின்றனர். நீ போ ! நான் போ!
என்பது போல் மற்றவர்களை பிடித்து முன்னுக்குத் தள்ளியபடி இருக்கின்றனர். அதே நேரம்
ஜிப்பாக்காரன் தட்டுகளை எடுத்து தலை, கை , கால் என பல்வேறு இடங்களில் இறுத்தி வைத்து
ஏதோ பெறும் சாகசம் செய்வது போல் பாவனை செய்துக் காண்பிக்கிறான். ரசித்தபடியே முன்னோக்கி
வரும் ஐவரில் ஒருவனுக்கு தலையில் தட்டு ஒன்றை வைத்து விடுகிறான். அவன் இன்னொருவனை இழுத்து
முன் விட அவனுக்கும் தலையில் தட்டு.இப்படி தட்டு வைத்துக்கொண்டிருக்கும் போதே, பின்
மேடையில் சீட்டுக்கட்டுக்காரன் வழி நடத்த நூல் இணைப்பு மனிதர்கள் குழு அவ்விடத்தையும்
தட்டு வைத்தல் சடங்கையும் பார்த்தபடியும் ஆவணப்படுத்திக் கொண்டும் கடக்கிறார்கள்.அவர்களின்
வெளியேற்றத்திற்குப் பிறகு ஜிப்பா மனிதனும் மேல் நோக்கி வெளியேறுகிறார்.குழுவினர் அனைவரும்
இப்போது தட்டுகளைத் தலைகளில் ஏந்தியபடி அலைகின்றனர். அதே நேரம் அவைகளை தலைகளில் ஏந்தியபடி
பல்வேறு விதமான இரக்க உணர்வுகளை அவர்கள், அதிகாரத்திடமிருந்து வேண்டுவதாக இரைஞ்சுகின்றனர். ஒருவன் கோயிலுக்குள் வன்புணர்வுக்குள்ளாக்கப்படும்
சிறுமியாக. இனொருவன், மலம் அள்ளும் தொழில் நெருக்கடியில் மரண வேதனை அடைபவராக, மீன்
பிடித் தொழிலுக்குப்போன தங்களது மகனின் சடலத்தையாவது கண்ணில் காட்டி விடுங்களேன் என
ஒரு தாயாக இரைஞ்சுகிறார் இன்னொருவர்.தன் அருகிலேயே தன் கணவனை உயிருடன் மீண்டும் தந்துவிடுமாறு
இரைஞ்சுகிறார் இன்னொருவர்.
இப்படியான
இரைஞ்சல்களின் முடிவில் மூவரும் உறைநிலைக்குச் செல்கின்றனர். கோமாளி ஒரு சிறுவனைத் தூக்கி வருகிறான். கோமாளியின் தோளில்
அமர்ந்திருக்கும் அந்த சிறுவன் தன் கையில்
கருப்புக்குடை ஒன்றை இருவருக்குமாகச் சேர்த்துப் பிடித்திருக்கிறான். சிறுவன் கழுத்தில்
சிவப்பு உருளை ஒன்று சுற்றப்பட்டிருக்கிறது. இருவர் கையிலும் இரண்டுக்குமேற்பட்ட புத்தகங்கள்
இருக்கிறது. கோமாளிகள், உறைநிலையில் தட்டுக்களை தலையில் ஏந்தியிருப்பவர்களிடம் சென்று
தட்டுகளில் புத்தகங்களைப் போடுகின்றனர்.அப்போது
சீட்டுக்கட்டுக்காரன் மட்டும் அங்கு உள் நுழைகிறான்.அவன் தலையில் எவர்சில்வர் தட்டு
ஒன்று கட்டப்பட்டுள்ளது.அதில் சாம்பிராணி ஒட்டப்பட்டு புகைந்துக் கொண்டிருக்கிறது.
அவன் உள் நுழைந்த மறுநொடி சிறுவன் தன் கழுத்தில் இருந்த சிவப்பு உருளையை அவிழ்த்து
விடுகிறான்.அது நீண்ட துணியாக வழிந்து கோமாளியை மறைத்துக் கொள்கிறது. சீட்டுக்கட்டுக்காரன்,
குடைபிடித்த சிறுவனை நோட்டமிடுகிறான்.துணியின் உள்ளிருந்து பிளாஷ் ஒளி அடிக்கிறது சீட்டுக்கட்டுக்காரன்
உறைகிறான். பிளாஷ் ஒளியோடே சிறுவன் வெளியேறுகிறான்.
சீட்டுக்கட்டுக்காரன் மெல்ல அசைகிறான்.உறைகிறான்.உறையும் நேரம் முன் தட்டுடன் உறைந்தவர்கள் புத்தகங்களுடன் அசையத்தொடங்குகிறார்கள். ஒடுங்கியிருந்தவர்கள் எழுந்திருப்பதற்கான Rebel நடனம் ஒன்று நிகழ்கிறது. நடனத்தின் வளர் நிலையில் அவர்கள் வெளியேற சீட்டுக்கட்டுக்காரன் தட்டுகளுடன் உறைகிறான். கண்காணிப்பாளர் குழு மீண்டும் உள் நுழைய முன் வரும் பெண்மணி தட்டுகளை தன் கூடையில் எடுத்து சேகரித்துக் கொண்டு. உடையின் பின் நூல் ஒன்றின் முனையைக் கோர்த்துவிட்டு வழக்கம் போல் நடக்கிறாள்.தொடர்ந்து வருபவர்கள் தகவல்களை சேகரிக்கின்றனர் எப்போதும் போல். அவர்களின் வரிசையில் இறுதியில் வரும் நபர் போன் பேசியபடியே அவருக்கு முன் இருந்த இணைப்பைத் துண்டித்து விட்டு சீட்டுக்கட்டுக்காரனை அவ்விடம் இணைக்கிறான்.பின்,சீட்டுக்கட்டுக்காரனின் பின்னால் தன்னை இணைத்துக்கொள்கிறான். எல்லோரும் சென்று மறைகிறார்கள்.
அவர்கள்
மறையும் அதே நேரம்,ஒருவன் பெரிய பிளாஸ்டிக் பேரல் (Barrel) ஒன்றினை தன் முதுகில் தூக்கி
வருகிறான்.அவன் பின்னாலேயே இன்னொருவன் அலுமினிய ஏணி ஒன்றினைத் தூக்கி வருகிறான்.வந்தவர்களின்
முதல்வன் பேரலை மேடை நடுவில் வைக்க இரண்டமாவன் அதனுள் ஏணியை நிறுத்தி வைக்கிறான் பின்
இருவரும் தண்ணீர் தருவதும் குடிப்பதும் போன்ற அசைவில் காத்திருக்கின்றனர்.புதிதா ஒருவர்
mineral water கேன் ஒன்றினை நீருடன் எடுத்து வந்து ஏணியின் மேல் நடுவில் வைத்து சிறிய
அளவில் நீரைத் திறந்து வைக்கிறான்,வெளியேறுகிறான்.அவனை தொடர்ந்து முன்வந்த இருவரும்
வெளியேறுகின்றனர். இப்போது கோமாளி காலியான வாட்டர் பாட்டிலுடன் உள்நுழைகிறான். நேராகச்
சென்று தன் கையிலிருந்த பாட்டிலில் நீரைப்பிடிக்கிறான். உடனே வாயில் பொருத்திக் குடிக்கிறான்.குடித்தபடியே
பேரலில் கையை விட்டு மீன்(மரத்தினால் செய்யப்பட்ட) ஒன்றினை எடுத்துச் செல்கிறான்.உடன்
மூவர் நாற்காலியுடன் கையில் புத்தகத்துடனும் உள் நுழைகின்றனர். சாய்வு கோடு தோற்றத்தில்
நாற்காலிகளை போட்டு அமர்கின்றனர். புத்தகத்தைப்படிக்கின்றனர்.அவ்வப்போது இடம் மாறுகின்றனர்.
ஒரு நேரம் புத்தகத்தை வைத்துவிட்டு பேரல் பக்கம் சென்று அச்சத்துடன் எட்டிப் பார்க்கின்றனர்.
பார்த்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு நாற்காலிகளுக்கேத் திரும்புகின்றனர்.நீண்ட இறைப்பு
உணர்வில் இருக்கும் அவர்களின் இடையில் தண்ணீர் பாட்டிலில் நீர் குடித்தபடியே கோமாளி
மறுபுறம் கடக்கிறான்.ஆசுவாசம் அடைந்த அவர்கள் மீண்டும் பேரல் அருகில் மிகவும் பயந்தபடி
நடுக்கதுடன் கையை உள்ளே விடுகின்றனர். துழாவி எடுக்கும் போது அம்மூவர் கைகளிலும் பறவைகளின்
இறகுகள்.
இறகுகளுடன் திரும்பிச் செல்லும் அவர்கள் நாற்காலிகளை
மேடையின் முன் புறத்தில் வரிசையாக வைத்து புத்தகங்களை நின்றவாக்கில் திறந்து வைத்து
அதில் இறகுகளைச் சொருகி வைக்கின்றனர்.திரும்பி நின்று பேரலையே பார்த்தபடி இருக்கும்
அவர்கள் ஒரே நேரத்தில் தங்களது இடது கையை உயர்த்துகின்றனர். கைகள் மேலே உயர உயர பேரல்
உள்ளிருந்து ஒருவன் நீர் சொட்டச்சொட்ட எழுந்திருக்கிறான். அவன் கையில் ஒரு பெரிய அளவிலான
மீன் பிடி வலை ஒன்றும் நீரில் நனைந்த நிலையில் இருக்கிறது. இப்போது, வாட்டர் கேனும்
காலியாகியிருக்கிறது. லேப்டாப் உடன் வருபவன் இவற்றை குறிப்பெடுத்தபடி கடந்துபோக.முன்
நடந்த, அந்த துப்புரவு பணிப்பெண் வேகமாக வந்து வாட்டர் கேனை எடுத்துக் கொண்டு வெளியேறுகிறார்.
இறகுகளுடன் இருந்த மூவரும் முன் சென்று வலையை வாங்கி விரித்தபடியே நாற்காலியில் அமர்கின்றனர்.
கோமாளியின் கழுத்தில் அமர்ந்தபடி குடை பிடித்த சிறுவன் முன் செல்ல பெண்கள் ஆண்கள் கைகளில்
மெழுகுவர்த்திகளுடன் ஒரு புறமிருந்து மறுபுறம் கடக்கின்றனர்.பிராத்தனை இசை ஒலி அதிகரிக்க,
காட்சி இருளாகிறது.
Comments
Post a Comment