“ நான் சாவித்திரிபாயைப் படிக்கிறேன், நாடகம் ஞா.கோபி, புதுச்சேரி
கோபி புதுச்சேரி
நான் சாவித்திரி
பாயைப் படிக்கிறேன்
அரங்கில்
ஒளி, கீற்றாய் உள் நுழையும்போது அதனைத் தொடந்தவாறாக நரம்பிசைக் கருவி ஒன்றை இசைத்தபடியே கையில் மயில்
தோகை, மர பொம்மைகள் பிடித்தபடியே நடிகை நடிப்புத் தளம் வருகிறார்.
நான், ஒரு நாடக நடிகை. நடிகைன்னு சொல்லுறதுல, நான்
ரொம்ப பெருமைப்படறேன். ஆனா இந்த உலகத்துக்கு, என்னைப் பிடிக்காது. ஏன்னு தெரியுமா?
நான், மீசை ஆளும் இந்த உலகத்தைக் கவனிக்கிறேன். இந்த உலகத்தில இருக்கிற உண்மை பொய்,
இரண்டையும் நான் மனதாலும் உடலாலும் உணருகிறேன். அதனால இந்த உலகம் முன் வைக்கிற எந்த
பொது கருத்தையும் நான் ஏத்துக்கறது இல்ல. அப்படியான பொதுக் கருத்துக்கு எதிரா வேலை
செய்யுறதுதான் என்னோட நடிப்பு. (சிரிக்கிறார்). நடிக்கறதுக்காக நான் நிறைய படிக்கிறேன்.
என்னோட வாசிப்பு முறை இப்படித்தான் இருக்கும்.
புதிதாய்
பிறக்கும் தாளத்திற்கு ஏற்ப உடற்பயிற்சிக்கான உடல் அசைவுகளை மேடையெங்கும் பரப்புகிறார்.
உன்னால
எது முடியாதுன்னு சொல்லுறாங்களோ! அதை செய்ய முயற்சி செய். உனக்கான எல்லை இதுதான்னு
சொன்னாங்கன்னா! அதை மீறுவதுக்கு முயற்சி செய். இதுதான் நாடகத்துல கத்துக்க வேண்டிய
பிரதான பாடம். அப்புறம், எந்த ஒரு வேலைக்கும் அவசியம் உடலும் மனசும் ஒத்துப்போறது.
அப்போதான் பயணம் சாத்தியம். எல்லைகள் விரிவுபடுத்தப்பட்ட பயணம் சாத்தியம். ஆமாம், சாவித்திரி
பாய் போல… சாவித்திரி பாய் எதிர்கொண்ட ஒடுக்குமுறையும், ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காகத்
தன்னையே அர்பணிச்சு ஒரு பெரும் விடுதலையைக் கண்டடைந்த மாதிரி, மீறுதல் சாத்தியம்.
சாவித்திரி
பாய்…. சாவித்திரி பாய்…. இப்போ நான் சாவித்திரி
பாயப் படிக்கிறேன்…. இப்போ நான் சாவித்திரி பாயப் படிக்கிறேன்….
மேடையின்
வலது மூலையில் இருக்கும் நாற்காலியில் போய், நடிகை முதுகு காட்டியபடி அமர்கிறார். இசைக்கு
சிறிது இடமளித்து, திரும்பும்போது நடிகை, சாவித்திரி
பாய் முகமாற்றம் கொண்டிருக்கிறார்.
நான் சாவித்திரி பாய்….
நான் சாவித்திரி பாய்….
வரலாற்றை
எங்கிருந்து ஆரம்பிக்கலாம்? ம்… என்னோட திருமண வாழ்க்கையில இருந்து ஆரம்பிக்கறன். அதுதான்
சரியா இருக்கும். என்னை எனக்கு அடையாளம் காட்டிய ஜோதிராவ் பூலேவோட கை கோர்த்து நடக்க
ஆரம்பிச்ச தினம் அது. இப்போ இருக்கற பசங்க இரண்டாவது படிக்கறப்போ என்ன வயசு இருக்குமோ,
அந்த வயசுதான் அப்போ எனக்கு…
கையில்
கொண்டு வந்த மயில் தோகைகளை அசைத்தபடியே சிறுமி போன்ற மனவுடல் பாவனைகளை நடனமாக நிகழ்த்துகிறார்.
விளையாடிகிட்டு
இருந்த என்கிட்ட அம்மா வந்து சொன்னாங்க, நாளைக்கு ஜோதிராவ் பூலேக்கும் உனக்கும் திருமணம்.
அப்படீன்னு சொல்லிட்டுப் போனாங்க. (மீண்டும்
நடனம்) ஜோதிராவ்
பூலேக்கு மரம் ஏறத்தெரியுமா?... பட்டாம்பூச்சிகள பிடிச்சு மீண்டும் பறக்கவிட்டு விளையாடுவாரா?...
பஞ்சு காய்கள இப்படி உடைச்சு ஊதி ஊதி விளையாடுவாரா?... இரவு நேரத்துல அம்மா மடியில
படுத்துக்கிட்டு நட்சத்திரங்களுக்குப் பேர் வச்சு கதை விளையாட்டு விளையாடுவாரா?...
இப்படியெல்லாம் எனக்கு நானே பேசிக்கிட்டுதான் அவங்க வீட்டுக்குப் போனேன். ஆனா அங்க
ஜோதிராவ், எல்லா நேரமும் புதிய புதிய புத்தகங்களுடன் இருந்தார். ஏன்னா? அவர் பள்ளிக்கூடம்
போய்கிட்டு இருந்தார். அவர அப்படிப் புத்தகங்களோட பாத்துப் பாத்து எனக்கும் படிக்கனும்னு
ஆசை துளிர் விட்டது. ஒரு நாள் ஒரு புத்தகத்த படிச்சுப் படிச்சுக் குறிப்பெடுத்துகிட்டு
இருந்த ஜோதிராவ் கிட்ட பயந்தபடியே போய், எனக்கு… எனக்கும்… எனக்கும் இந்த புத்தகங்கள
வாசிக்கக் கத்துக் கொடுப்பீங்களா? அப்படீன்னு கேட்டன். உடனே பக்கத்தில இருந்த வீர சிவாஜியின்
வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்த எனக்காக வாசிக்க ஆரம்பித்தார். உங்க உதவி இல்லாம நானே
படிச்சு எழுத முடியுமா?ன்னு கேட்டுட்டேன். நான் அப்படி கேட்டதும், மெளனமான ஜோதிராவ்
பின் பரபரப்பா எனக்கான கற்பித்தலைத் தொடங்கினார்.
முதலில்
வார்த்தைகள், அடுத்து எழுத்துக்கள் தொடர்ந்து வாக்கியங்கள். சித்திரக்கதைகள் என எனது
தொடக்கக் கல்வி முறையை ஒழுங்கமைத்தார்.
தரையில்
அமர்ந்து எழுத்து வாசிப்பு எனப் பாவனை செய்யும் அவர், ஒரு நிலையில் மேலே எழும்பியபடியே
காற்றில் உயர உயர எழுதுகிறார், வாசிக்கிறார்.
மொழி,
கணிதம், தத்துவம், அரசியல், சமயம், விடுதலை, முற்போக்குச் சிந்தனை, ஒடுக்கப்பட்டோர்
வரலாறு, பெண் விடுதலை என உண்மையான கல்விய எனக்குள்ள செலுத்தி என்னைக் கல்வியறிவுக்கு
வசப்படுத்துனாரு. அந்த முழுமை தந்த துணிச்சலில் நான் அவ்வப்போது அவரிடம் சில கேள்விகளைக்
கேட்கும் பழக்கம் வந்தது. அப்படி ஒரு நாள், இதையெல்லாம் படித்து என்ன செய்யப்போகிறோம்?
என்றேன். அவர், இந்து மதத்தின் அதிகாரப்பிடியிலிருந்து எளியோரை மீட்க முடியும் என்று
நம்புகிறேன். என்றார். தொடர்ந்து, நான், அது முடியுமா? என்றேன். படப்படப்பாய் பேச ஆரம்பித்தார்,
எப்படியெனில், முடியும் என்று ஆசைப்படுகிறேன். பிராமணர்கள்தான் இந்து மதத்தில் சாதிப்
பிரிவுகளையெல்லாம் உருவாக்கினார்கள். அந்தப் பிரிவுகளால்தான் சுத்தம் அசுத்தம் போன்ற
நம்பிக்கைகள் பிறந்தன. நமக்கெல்லாம் ஏன் கல்வி தரப்படவில்லை? அப்போதுதான் அவர்கள் மேலானவர்களாகவே
இருக்க முடியும். அவர்களின் சுயநலம்தான் பிரிட்டிஷார் உள்ளே வருவதற்கும் காரணமாய் அமைந்தது.
எனவே கல்வியால் மட்டும்தான் இந்தச் சாதி வேற்றுமைகளை ஒழித்துக்கட்ட முடியும்.அதனால்
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி அளிக்க வேண்டும். அதுதான் நம்முடைய முதன்மையான பணியாக
இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்காகத்தான் நாம் படிக்க வேண்டும் என்றார்.
நான் என்னை என்னை நம்பிக்கையாய் உணர்ந்தேன்.
ஜோதிராவ்,
பேசுபவர் அல்ல. செயல்பாட்டாளர். ஆறு மாதங்களுக்குள், தலித் பெண்களுக்காக ஒரு பள்ளியை,
பீண்டே பங்களாவின் கீழ்த்தளத்தில் துவங்கிவிட்டார்.
அவ்வளவுதான்,
எதிர்ப்புக் குரல்கள் ஒன்று கூடிப் பேசின.
“என்ன
அடாவடித்தனம்!”
“காலம்
கெட்டுப்போய்விட்டது!”
காலத்துக்கு
என்ன குறைச்சல்? அது எப்போதும் உழைப்பவர்கள் பக்கமே இருக்கும். நண்பர்களின் ஆதரவுடன்
இன்னொரு பள்ளிக்கூடமும் திறக்கப்பட்டது. தங்களுடைய சாதி வன்மக் கூப்பாடுகளால் பள்ளிக்கூடத்தை
ஏதும் செய்ய முடியாது என்று தெரிந்து கொண்ட பிற்போக்குவாதிகள் அடுத்த கட்டமாக எங்கள்
பள்ளியாசிரியர்களைத் துன்புறுத்த ஆரம்பித்தனர். ஆசிரியர்கள் சொல்லாமல் கொள்ளாமல் ஊரை
விட்டே வெளியேறினர். அந்த காலத்தில் ஜோதிராவ் மிகவும் நிலைகுலைந்து போயிருந்தார்.
நான்,
ஆறுதல் சொல்லும் தொனியில் “ நாம் என்ன செய்வது?” என்றேன்.
அவரோ,
“ஒரே வழிதான் இருக்கிறது. தாழ்த்தப்பட்டவர்கள் படித்து ஆசிரியர்களாக வர வேண்டும். அது
ஒன்றுதான் விடுதலை. அதற்குப் பள்ளிகளை மூடாமல் தொடர்ந்து நடத்த வேண்டும்.” என்று சொல்லி
மவுனமானார். அந்த மெளனம் நீண்ட நேரம் நீடித்தது. சட்டென்று நிமிர்ந்து என் கண்ணை உற்றுப்
பார்த்தபடி, “ நாளை நீ பள்ளிக்கூடத்திற்கு வா. வரும் பெண் குழந்தைகளுக்கு புத்தகங்களை
வாசித்துக்காட்டு. நீ நம்புவதையெல்லாம் அவர்களிடம் பகிர்ந்துகொள்” என்று சொல்லியபடியே
வேகமாக வெளியேறினார்.
எழுந்து
நின்ற நிலையில்
என்
அடி வயிறு கலங்கியது. உதடுகள் பயத்தால் துடித்தன. நான் அதுவரை வீட்டைவிட்டு வெளியே
போனதேயில்லை. ஆனால் நான் போகவில்லை என்றால் எங்கள் பணி நின்றுவிடுமே!. உறுதியான மனநிலையில்
வீட்டை விட்டு இறங்கினேன். ஜோதிராவ் என்னுடன் நடந்தார்.
அவர்கள்
சத்தமாகப் பேசத்தொடங்கினர்.
”தலையை
மூடிக்கொண்டு எவ்வளவு வேகமாக நடக்கிறாள்!...
ஜோதிராவ்,
வைப்பாட்டி வைத்துக்கொண்டானா?
அவர்கள்
எங்கேதான் போகிறார்கள்? ”
எங்கள் பின்னாலேயே வந்தார்கள். பள்ளிக்குள்
நுழைந்ததைப் பார்த்த அவர்கள், “ இது எங்கே போய் முடியப்போகிறதோ! பகவானே! பூனே நகரம்
முழுக்க இந்த செய்தியைப் பரப்பினார்கள்.
காலையில் பள்ளிக்குப் போவேன். மாலையில்,
சொல்லிக்கொடுக்கும் முறைகள் பற்றி ஜோதிராவிடம் பாடம் படிப்பேன்.
நான், ஒரு பெண் ஆசிரியராகிவிட்டேன். கல்விப்
போர் துவங்கிவிட்டது. இனி, பயந்து ஒன்றும் ஆகப்போவதில்லை. தங்களைக் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்
என்று சொல்லிக்கொள்ளும் பிராமணர்கள்தான் என்னைத் தெருவில் வைத்தே துன்புறுத்தினார்கள்.
“அவர்கள் என்னை கடக்கும்போது, என் முகத்தில்
காறித்துப்புவார்கள்.”
“ஒரு நாள், ஒருவன் என் மீது சகதியை வீசினான்.”
“இன்னொரு நாள், ஒருவன் கல்லால் என் மண்டையில்
அடித்தான்.”
இப்போதும் தொடர்கிறதுதானே! , ஆசீட், பெட்ரோல்,
கத்தி என்று…
எக்காலத்திற்கும் காரணம், பெண் என்பதுதான்.
சிரிக்கிறாள்
நான் பள்ளிக்குள் நுழைந்ததும், பள்ளியின்
ஜன்னல் மற்றும் கதவுகளை மூடிக்கொள்வேன். பின்தொடர்பவர்கள் சத்தம் போட்டு ஓய்ந்து திரும்பிவிடுவார்கள்.
பின், கைவசம் கொண்டு சென்ற மற்றொரு சேலையை மாற்றிக் கொண்டு வகுப்புகளை ஆரம்பிப்பேன்.
என் பணி எனக்கு முக்கியம். வேறு எந்த விஷயங்கள் பற்றியும் எனக்கு அக்கறையில்லை.
பள்ளிகள் பூனேயின் பலப்பகுதிகளில் வளர்ந்தன.
எங்கள் பணிகள் பெருகின.
என் நினைவில் உள்ள, என் பள்ளிச் சம்பவத்தில்
ஒன்றை உங்களுக்குச் சொல்கிறேன். ஒரு நாள், பள்ளியிலுள்ள சிறுமிகளிடம் ஒரு கட்டுரை எழுதச்
சொன்னேன். மாணவிகள் எழுதிய கட்டுரைகளில் ரக்மா எழுதிப் படித்த கட்டுரை மறக்க முடியாதது…
பதிமூன்று வயதான ரக்மா என்ற சிறுமி எழுதி முடித்தவுடன்
துணிச்சலாக எழுந்து நின்று படிக்க ஆரம்பித்தாள்.
என்றபடி, அருகிலிருந்த புத்தகங்கள் ஒன்றிலிருந்து ஒரு தாளை எடுத்துப்
படிக்க ஆரம்பிக்கிறாள்
“நானும் என் மதமும்” என்ற தலைப்பைக் கூறித் தொடர்ந்து
படித்தாள், பிராமணர்கள் ‘வேதங்கள் எங்கள் சொத்து, அதை நாங்கள் மட்டும்தான் படிக்க வேண்டும்’
என்று கூறுகிறார்கள். இதிலிருந்து எங்களுக்கென்று எந்தவித மத நூல்களும் இல்லையென்பது
தெளிவாகிறது. வேதங்கள் பிராமணர்களுக்குத்தான் சொந்தம் என்றால் அவர்கள்தான் அதன்படி
நடக்கக் கடமைப்பட்டவர்கள். புனித நூல்கள் எங்களுக்குச் சொந்தமில்லை என்றால், அவற்றை
நாங்கள் படிக்கக் கூடாது என்றால், அவற்றில் போதிக்கப்பட்டவை எங்களுக்குப் பொருந்தாது
என்றாகிறது. எனவே, தெய்வங்களே, உங்களது மதங்களில் எது எங்களுக்கு உரியது என்று கூறும்!
நாங்கள் அதன்படி நடக்கிறோம்…”
என்னால் என் காதுகளையே நம்ப முடியவில்லை. எங்கள் பள்ளிச் சிறுமி எழுதியிருந்தாள்!. அந்த
தினத்தில்தான் நாங்கள் இதுவரையில் பட்ட துன்பங்களுக்கெல்லாம் பலன் கிடைத்தது என்று
உண்மையாக உணர்ந்தேன். தொடர்ந்து உற்சாகமான ஓட்டம், உழைப்பு பலன்? பலர் கல்வியெனும்
அற்புதக் கனியைச் சுவைக்கத் தொடங்கினர்.
ஒரு நாள் இரவு நானும் ஜோதிராவும் காலையில்
நடந்ததைப் பற்றி அசை போட்டபடி இருந்தோம்…
கதவு பலமாகத் தட்டி உடைக்கும் அளவிற்குச் சத்தம் கேட்கிறது
யார் இது? இந்த நேரத்தில்? கதவைத் தட்டி
உடைக்கும் அளவிற்கு என்ன அவசரம் என்று சொல்லிக்கொண்டே போய்க் கதவைத் திறந்தேன். கைகளில்
உயிரைப் பறிக்கும் ஆயுதத்துடன் இருவர் கொடூரமான முகபாவத்துடன் நின்றிருந்தனர்.
என்ன விஷயம்? என்றேன்
உங்களைத் தொலைத்துக்கட்டவே வந்திருக்கிறோம்
என்றனர்.
ஏன் என்றேன்
காரணம் கேட்க வேண்டாம். பள்ளிகளை இழுத்து
மூடுங்கள், அவ்வளவுதான். உங்களைக் கொல்ல ஏற்பாடு செய்யப்பட்டவர்கள் நாங்கள். உங்களைக்
கொன்றால் எங்களுக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்கும். என்றனர்.
மறுவினாடி, எங்கள் சாவினால் உங்களுக்குப்
பணம் கிடைக்கும் அப்படியானால் எங்களைக் கொலை செய்யுங்கள் என்று அவர்களின் முன் வளைந்து
நின்றேன்.
மூச்சு விடும் சத்தம் மட்டும் அந்த இடத்தில்
கேட்டது.
திடிரென்று அவர்கள் ஆயுதங்களை விட்டெறிந்தார்கள்.
உங்களைக் கொலை செய்ய முடியாது, நீங்கள் எங்கள் கண்களைத் திறந்த தாய் தந்தையர் என்றனர்.
பின்னாளில் எங்கள் இரவுப் பாடசாலையில் சேர்ந்து படித்தனர். அவர்களில் ஒருவர்தான் வேதநெறிமுறைகள்
என்ற புத்தகத்தை எழுதிய ’கும்பார்’ என்றால் உங்களால் நம்பமுடியுமா? ஆனால் அதுதான் உண்மை.
மீண்டும் பயணம்….
ஒரு நாள் நான் பள்ளியிலிருந்து வீட்டிற்குத்
திரும்பிக் கொண்டிருந்தபோது, தலையில் முக்காடிட்ட பெண் ஒருவர், என்னைப் பின் தொடர்ந்து
வருவதுபோல் இருந்தது. நான் அவள் மீது ஒரு கண் வைத்தபடியே நடந்தேன். நான் வீட்டிற்குள்
நுழைந்தவுடன் அவளும் என்னைத் தொடர்ந்து வீட்டினுள் வந்துவிட்டாள்.
யாரம்மா, என்று கேட்கும் முன்னமே, ’என்னை
நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று கை குவித்துக் கேட்டாள்.
என்ன? என்றேன்.
என் வயிற்றில் ஒரு குழந்தை வளர்கிறது. ஆனால்
என் கணவர் இறந்து இரண்டு வருடங்கள் ஆகிறன, என்றாள். அந்தக் குழந்தையை நீங்கள்தான் காப்பாற்ற
வேண்டும்.
என்ன? கணவர் இறந்துவிட்டார்! குழந்தை?
ஆம், இது என் கணவரின் தம்பியுடைய பாவச்செயல்..
எனக்கு என்னைப் பாதுகாத்துக் கொள்ளும் அளவிற்கு கூட உரிமையில்லை என் வீட்டில்.
’உனக்கு எழுதப் படிக்கத் தெரியுமா? என்றேன்.
யார் சொல்லித் தருவார்கள்? நானோ விதவை…
அப்போது ஜோதிராவும் அங்கு வந்து சேர்ந்தார்.
அந்த பெண்ணுக்கு சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தவுடன், நீண்ட நேர விவாதத்திற்குப் பிறகு
ஒரு முடிவெடுத்தோம். பெண்களுக்கான பிரசவ விடுதி ஒன்றைத் திறக்க முடிவு செய்தோம்.
ஒரு பழைய சேலையை எடுத்து ஒரு முனையை மேடையின் வலப்பக்கத்தில்
மாட்டி அடுத்த முனையை மேடையின் இடப்புறம் கொண்டு சென்று மாட்டி சிசுக் கொலை தடுப்பு
ஆசிரமத்தை உருவாக்குகிறார். அப்போது தண்டோரா ஓசை கேட்கிறது
“தற்கொலையிலிருந்து மீள ஒரு வழி” வாழ்க்கையில்
தவறி, கர்ப்பிணியான பெண்கள் ஜோதிராவ் கோவிந்தராவ் புலேயின் இல்லத்தில் குழந்தை பெற்றுக்
கொள்ளலாம். அவர்களின் பெயர்கள் விவரங்கள் வெளியிடப் பட மாட்டாது”
என்ற அறிவிப்பைத் தாங்கிய சுவரொட்டிகள்,
புனே மட்டுமல்லாது பண்டரிபுரம், நாசிக், வாயி, காசி போன்ற புண்ணியத் தலங்கள் உள்ள ஊர்களிலும்
ஒட்டப்பட்டது. ஏனென்றால் அந்த புண்ணிய ஊர்களில்தானே அப்பாவிப் பெண்கள் தங்கள் உயிரை
மாய்த்துக் கொள்வார்கள். அப்படித்தானே ஒடுக்கப்படும் மனது கட்டமைக்கப்படுகிறது!
பேசிக்கொண்டிருக்கும் போதே யாரோ கூப்பிடும் சத்தம் கேட்டவராக
விடுதியினுள் விரைகிறார். அவர் உள்ளே சென்றவுடன், ஒரு பெண் பிரசவ வலியில் வீரிட்டழும்
சத்தம் கேட்கிறது. திரை மறைவிலிருந்து, பிறந்த குழந்தை ஒன்றைக் கையில் ஏந்தியபடி எழுந்து..
தாதிகள் மூலம் பிரசவம் பார்க்க இப்பெண்கள்
விரும்பவில்லை. ஏனெனில் ஊருக்குள் தகவல் கசிந்துவிடும் என்பதால் பயந்தார்கள். எனவே
இந்த நிமிடங்களில் நான் மட்டுமே உடன் இருப்பேன். விடுதலை உணர்வுதானே அப்பெண்கள் வேண்டி
நிற்பது. சில பெண்கள் பெற்ற குழந்தைகளை என்னிடமே விட்டுவிட்டுப் போகும்போதுதான் துக்கமாக
இருக்கும்.
சட்டென்று அமைதியாகிறார்.
குழந்தைகளும் நானும் இருக்கும் உலகம் ஒன்றில்
வாழ்ந்துகொண்டிருந்த எனக்கு, என் உறவினர்கள் கொடுத்த பட்டம் ‘மலடி’ நான் குழந்தை பெற்றுக்
கொள்ள தகுதி இல்லாதவள் என்று சொல்லி, என் தந்தையே ஜோதிராவை இன்னொரு திருமணம் செய்து
கொள்ள வற்புறுத்தினார்.
ஆனால் ஜோதிராவோ, என்னிடம் குறையிருந்தால்,
சாவித்திரிக்கு இரண்டாம் திருமணம் செய்து வைப்பீர்களா? இப்படித்தான் உலகம் அதிகாரத்தில்
இருந்து கொண்டு தன் போக்கில் தீர்மானித்துக் கொண்டிருக்கிறது. இத்தோடு இப்பேச்சை நிறுத்துங்கள்.
என்று சொல்லிவிட்டு என் கையைப் பிடித்தபடி விர்ரென்று வெளியே நடந்தார். ஜோதிராவ் தன்
பிடியை விடாமல் நடந்தது பிடிவாதமில்லை, மனித மனங்களில் ஏற்படும் நம்பிக்கைகள் பொய்த்துப்
போகாமல் இருப்பதற்காக என்பதை நான் மட்டுமே அறிவேன்.
அந்த நம்பிக்கை மிக விரைவில் மெய்யானது.
ஒரு தாய் பிறந்த குழந்தையை உடனே என்னிடம் விட்டுவிட்டு வெளியேறியதால் அப்பிஞ்சுக் குழந்தைக்கு
நாங்கள் பெற்றோர் ஆனோம். அவன் எங்கள் கரங்களிலே வளர்ந்தான். ஆம், மனிதர்களை இணைப்பது
ரத்த பந்தமல்ல, மனிதத்தன்மைதான் மனிதர்களை இணைக்கிறது என்பது புரியாமல் இன்றுவரை மனிதர்கள்
கெளரவக் கொலைகள் செய்து கொண்டிருக்கிறார்கள்!.
சற்று சோர்ந்த உடல்மொழியில் அருகில் இருக்கும்
தண்ணீர் குவளை அருகில் சென்று கையினால் அள்ளிக் குடித்து சற்று ஆசுவாசமடைகிறாள்… பின்
தண்ணீரைக் கையில் அள்ளியெடுத்து நோக்கியபடியே…
தண்ணீர்… உயிர்கள் யாவைக்கும் இப்பூமியின்
மகத்தான கொடை! ஆனால் மனிதர்களின் சிறிய புத்தி அரசியல், இதையும் வைத்து விளையாடத் தொடங்கி
இன்றுவரைத் தொடர்கிறது. நீர் நிலைகளை அமைத்தவர்களே தொடக்கூட அனுமதியில்லை. குறுக்கு
அணை, இரட்டைக் குவளை,தீட்டு, குடித்தால் பாவம், குளித்தால் புண்ணியம்…
கோடைக்காலம் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது.
எங்கெங்கோ தண்ணீர் தேடி அலைந்த ஒரு குழு பெண்கள் அதோ, அங்கே மேல் சாதி இந்துக்களிடம்
அடிபடுகின்றனர். அருகில் சென்றுவிட்டேன். ஒரு வயதான அம்மா,ஈனக் குரலில், “ஐயா, எட்டு
நாளா சொட்டுத் தண்ணீர்கூட குடிக்கல. எங்களுக்கு முதலில் தண்ணீர் கொடுங்கள். அப்புறம்
எவ்வளவு வேண்டுமானாலும் அடிங்க” என்று கதறினாள்..
என் பின்னால் நின்றிருந்த ஜோதிராவ், தாகத்திற்குத்
தண்ணீர் கேட்கும் அவர்கள் அனைவரையும் அழைத்து வா.. நான் முதலில் போய் நம் வீட்டுக்
கிணற்றுக்குப் போகும் பாதையைப் பெரிதுபடுத்தி வைக்கிறேன். என்று வீட்டுக்குச் சென்று
செயல்பாட்டில் இறங்கினார். ஆம், அன்றே எங்கள் வீட்டுக் கிணறு அனைவரின் உபயோகத்திற்காகவும்
திறந்து விடப்பட்டது…
தொடர்ந்து நாங்கள் பயணம் செய்தது, புரோகிதர்
இல்லாமல் திருமணம் நிச்சயித்து, சத்தியப்பிரமாணம் மூலம் திருமணம் நடத்தி வைத்தோம்.
அப்போதும் தூரத்து வசைச் சொற்கள். அவை துணிந்தவர்களைக் கண்டு ஓடி ஒளிந்தது. இப்போது,
பெரியார்கள் அதனைக் கண்டுபிடித்து முற்போக்கு வழிப் பாதையை எளிய மக்களுக்குக் காண்பித்து
வருகிறார்கள்..
1877ல் இந்தியாவின் பெரும்பகுதிகளில் கடும்
பஞ்சம். “சேரிகளில் உணவும் நீரும் இல்லாமல் பல நூறு பேர் இறந்துகொண்டிருந்தார்கள்.
ஏதொரு விஷயத்திலும் ஒரு நாட்டின் சமன் நிலை தவறும்போது முதலில் பாதிப்பது அந்நாட்டின்
விளிம்பு நிலை மக்களைத்தான். எங்கள் வீட்டில் பகலிலும் இரவிலும் உலை கொதித்துக்கொண்டே
இருந்தது. எங்கள் வசமிருந்த நிலங்களும் விலை உயர்ந்தப் பொருட்களும் வேறொருவர் வசம்
கைமாறியது. சேவை என்று சொல்ல முடியாத அளவிற்கு அந்தப் பணி வேதனை நிரம்பியதாக இருந்தது.
ஆனால் அப்போதும் நாங்கள் சோர்வடையவில்லை. ஓடினோம்…
ஓட்டத்தில் மற்றுமொரு முக்கியமான நிறுத்தம்!
நாவிதர்கள் நடத்திய மாபெரும் வேலை நிறுத்தம், நாங்கள் விதவைப் பெண்களுக்கான ஆசிரமம்
திறந்து செயல்பட்ட போதிலும். சாஸ்திரத்தைச் சொல்லி அப்பெண்களின் முடியை மழிக்கும் செயலை
முற்றிலும் நிறுத்தவே முடியவில்லை. அதற்காக நாவிதர்களை ஒன்று கூட்டினோம். விதவைப் பெண்களுக்கு
முடி மழிப்பதை நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டோம். அவர்களோ, நாங்கள் நிறுத்தினால்
எங்களுக்கு யார் உணவளிப்பார்கள்? என்றனர். ஜோதிராவை முந்திக் கொண்டு நான் சொன்னேன்.
”நாங்கள் அளிக்கிறோம்” என்றேன்.
முடியுமா?
ஏன் முடியாது?
எவ்வளவு பேருக்கு உங்களால் உணவளிக்க முடியும்?
எங்களிடம் இருப்பவற்றை அனைவருக்கும் பகிர்ந்தளிப்போம்.
எனவே நீங்கள் பெண்கள் சிகையை மழிப்பதை நிறுத்த வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து நிறுத்த
வேண்டும்.
சமூகம் என்ன தீர்மானிக்கிறதோ அதை நாங்கள்
செய்கிறோம். படித்தவர்கள் சொல்கிறார்கள் தெரியாதவர்கள் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
என்றனர் நாவிதர்கள்.
நான், மிகக் கோவத்தோடு, ”நான் சொல்லித்தருகிறேன்.
படியுங்கள். அவர்கள் சொல்வதெல்லாம் உண்மைதானா என்று கண்டுபிடிக்கும் அளவிற்கு படியுங்கள்”
என்றேன்.
அடுத்த வாரம் பம்பாயில் பெரும் ஊர்வலத்தின்
முடிவில் ’இனி, பெண்கள் தலை முடியை மழிக்க மாட்டோம், வற்புறுத்தும் ஆண்களுக்கு முடி
வெட்ட மாட்டோம்’ என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றிக் கடைபிடித்தனர்.
மெல்ல வயது பல கடந்தவளாக உடல் அசைவை மாற்றி, தரையில் அமர்கிறார்.
ஒப்பாரிப்பாடல் தொனியில் பாடுகிறார்
”காலம் ஓடிப்போனதே
எனக்குத் தெரியவில்ல
பின்னால் திரும்பிப் பார்த்தால்
நான் ஒண்ணும் செய்யவில்லை..”
ஆம், நாங்கள் பெரிதாக எதுவும் செய்யவில்லை.
அதிகாரத்தின் போக்கை மாற்ற நாம் இன்னும் நிறைய செய்ய வேண்டும். ஓடினோம். எதிர்பாராவிதமாக
ஒரு நாள் ஜோதிராவ் உடல் நிலை மோசமடைந்து இம்மண்ணுலகை விட்டுப் பிரிந்தார். இனி நான்
என்ன செய்யப் போகிறேன் என்று ஸ்தம்பித்து நின்றேன். வெளியே ஒரே கூச்சல் சத்தம். ஜோதிராவின் சகோதரர்கள் தாங்கள்தான் சம்பிரதாய முறையில் ஜோதிராவின்
இறுதிக் காரியங்களைச் செய்வோம் என்று முரண்டு பிடித்துக் கொண்டிருந்தார்கள்.வளர்ப்புப்
பிள்ளைகள் கொள்ளி வைக்க அனுமதிக்க மாட்டோம், என்றனர்.
உறுதியுடன் அவர்கள் முன் நடந்து, நான் உயிருடன்தான்
இருக்கிறேன், என்று சொல்லி, சம்பிரதாயங்களை யாரும் எனக்குக் கற்பிக்க வேண்டாம். பிள்ளைகளை
ஒரு பக்கம் அழைத்து நிற்கச் சொல்லி நானே நெருப்புச் சட்டியை ஏந்தி நடந்தேன்.
உதடுகள் என்னையும் அறியாமல் ‘ஜெய் சத்ய!
ஆதி சத்ய! .. ஜெய் சத்ய! ஆதி சத்ய! ..
பணிகள் எவ்விதத் தொய்வுமின்றி நடந்து கொண்டிருந்தது.
1897ல் பூனே நகரை பிளேக் நோய் முற்றிலுமாக
உலுக்கியது. எல்லோரும் வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்தார்கள்… ஆனால் சேரிப் பகுதி
மட்டும் போக்கிடம் இன்றி அங்கேயே ஒடுங்கிப் பல உயிர்களை இழந்துக் கொண்டிருந்தது. இம்மாதிரியான
நேரங்களில் யார்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவ முன் வருவார்கள்?
நான் அங்கு விரைந்தேன், மருத்துவம் படிக்கும்
மகன் யஷ்வந்தையும் அங்கு வரவழைத்தேன்.
அவனோ என்னையும் கவனித்தான்.
ஆயி, சொன்னால் கேள் இது கொள்ளை நோய். நீ
போ நான் பார்த்துக் கொள்கிறேன் என்றான்.
ஜோதிராவ், இருந்தால் அப்படிப் போக மாட்டார்.
எனவே பணி முடியும் வரை நான் இங்கிருந்து போக மாட்டேன் என்று சொல்லி. ஒவ்வொரு குடிசைக்குள்ளும்
ஓடி, குழந்தைகளைச் சுமந்து மருத்துவ உதவிகள் செய்தேன்.
நானும், கொள்ளை நோயால் பாதிக்கப் பட்டேன்.
என் பயணம் முடிந்தது. நான் பணியில் இருக்கும்போதே மரணம் வந்தது என் அதிர்ஷ்டம்.
முகமூடியை முந்தானையால் மூடுகிறாள்.
மடிந்துவிடும் மனிதர்களின் கடந்தகாலம் வரலாற்றுக்குச்
சொந்தமானது.
அவர்கள் ஆற்றிய பணிகள் மக்களுக்கு நம்பிக்கையூட்டுமெனில்,
அது
மக்களுக்கே சொந்தமானது..
சிந்தனைதான் மனிதர்களை வாழச் செய்கிறது.
நான் சாவித்திரி பாயைப் படித்து விட்டேன்.
தன் வாழ்நாள் முழுக்க ஒடுக்குமுறைக்கு எதிரா வேலை செய்த சாவிதிரி பாயை , நீங்களும்
படிச்சிட்டீங்க. இனி சாவித்திரி பாய், உங்க மனசுல, உங்க செயல்களிலே…
என்று கூறியபடியே பார்வையாளர்ப் பக்கம் போய் கலந்துவிட, நாடகம்
நிறைவு நிலையை எட்டுகிறது.
நாடகம் தொடர்பான கட்டுரைகள்
http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-14/36842-2019-03-21-12-20-36
Comments
Post a Comment