எளிமையின் நேசக் கதைகள் சொல்லும்- ப. சரவணனின் ஓவிய உலகம்
எளிமையின் நேசக் கதைகள் சொல்லும் - ப. சரவணனின் ஓவிய உலகம் ஒரு கதையை, தொடக்கத்திலிருந்து முடிவு நோக்கிக் கேட்டலில் கிடைக்கும் சுவாரசியத்தை விட, முடிவிலிருந்து ஆரம்பம் நோக்கிப் போவது மற்றும் குறுக்கு வெட்டில் எவ்வித கட்டுப்பாடுமின்றி கேட்பதும் போரனுபவம் தரவல்லது. அந்த பேரனுபவத்தோடுத் தொடர்புடையதே, கடலூரைச் சேர்ந்த ஓவியர் ப. சரவணனின் படைப்புலகம். அவ்வகையில், அவருடைய தற்கால ஓவியப் படைப்புகளையும் அவைகள் இடம்பெறும் கண்காட்சிகள் என்பதில் தொடங்கி அவ்வோவியங்களுக்கு பார்வையாளர்கள் வரவேற்பு, அவருடைய ஓவிய வாழ்வின் தொடக்கம் மற்றும் இடைக்காலம் வரை பயணித்தோமெனில், மனித வாழ்வில் படைப்பாற்றல் என்பது எத்தகைய எழுச்சியைத் தரவல்லது என்பதை நம்மால் உணர முடியும். இந்தியாவின் தலைச்சிறந்த ஓவியர்கள் தங்களின் படைப்புகளைக் காட்சிப்படுத்த விரும்பிக் காத்திருக்கும் மற்றும் காட்சிப்படுத்தப்படுத்தும் மும்பை, ஜஹாங்கீர் ஆர்ட் கேலரியில் ப. சரவணின் படைப்புகள் மட்டுமே கொண்ட ஓவியக் கண்காட்சி 2019 ல் நிகழ்ந்தது. அங...