எளிமையின் நேசக் கதைகள் சொல்லும்- ப. சரவணனின் ஓவிய உலகம்
எளிமையின் நேசக் கதைகள் சொல்லும்- ப. சரவணனின் ஓவிய உலகம்
ஒரு கதையை, தொடக்கத்திலிருந்து முடிவு நோக்கிக் கேட்டலில் கிடைக்கும் சுவாரசியத்தை விட, முடிவிலிருந்து ஆரம்பம் நோக்கிப் போவது மற்றும் குறுக்கு வெட்டில் எவ்வித கட்டுப்பாடுமின்றி கேட்பதும் போரனுபவம் தரவல்லது. அந்த பேரனுபவத்தோடுத் தொடர்புடையதே, கடலூரைச் சேர்ந்த ஓவியர் ப. சரவணனின் படைப்புலகம். அவ்வகையில், அவருடைய தற்கால ஓவியப் படைப்புகளையும் அவைகள் இடம்பெறும் கண்காட்சிகள் என்பதில் தொடங்கி அவ்வோவியங்களுக்கு பார்வையாளர்கள் வரவேற்பு, அவருடைய ஓவிய வாழ்வின் தொடக்கம் மற்றும் இடைக்காலம் வரை பயணித்தோமெனில், மனித வாழ்வில் படைப்பாற்றல் என்பது எத்தகைய எழுச்சியைத் தரவல்லது என்பதை நம்மால் உணர முடியும்.
இந்தியாவின்
தலைச்சிறந்த ஓவியர்கள் தங்களின் படைப்புகளைக் காட்சிப்படுத்த விரும்பிக் காத்திருக்கும்
மற்றும் காட்சிப்படுத்தப்படுத்தும் மும்பை, ஜஹாங்கீர் ஆர்ட் கேலரியில் ப. சரவணின் படைப்புகள்
மட்டுமே கொண்ட ஓவியக் கண்காட்சி 2019 ல் நிகழ்ந்தது. அங்கு வந்த இந்தியாவின் பல மாநிலப்
பார்வையாளர்கள் மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் என சில ஆயிரம் பேர் வரை ப. சரவணின்
படைப்புகள் தரும் அனுபவம் பெற்றவர்களாய் சென்றிருக்கின்றனர். துவக்க நாள் அன்றே பல
படைப்புகள் விற்பனையாகி இருக்கின்றது, என்பதெல்லாம் தமிழகக் கலைச் சுழலில் பெரும் முக்கியத்துவம்
நிறைந்தது. அதுபோல் கர்நாடகம், சென்னை மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வரிசையாக இவருடைய
தனித்த ஓவியக் கண்காட்சிகள் தொடர்ச்சியாக நடந்தேறி வருகிறது. இத்தகைய தொடர் கண்காட்சிகளின்
வாயிலாக விற்பனையான இவரது ஓவியங்கள் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இத்தாலி மற்றும் பிரான்ஸ்
என பல நாடுகளைச் சேர்ந்தவர்களால் வாங்கப்பட்டு அந்தந்த நாடுகளில் தற்போது இருக்கின்றன.
மேலும்,
குழந்தைகளுக்கான தமிழ் புத்தகங்களில் சிலவற்றிலும் இவருடைய ஓவியங்கள் அலங்கரித்திருப்பதைக்
காண முடிகிறது. அவற்றில் எதிர் வெளியீட்டில் வந்த ‘கனவினைப் பின் தொடர்ந்து’ எனும்
புத்தகம் குறிப்பிடத்தக்கது. அந்த குறிப்பிட்ட நிலையிலிருந்து அவருடைய படைப்பு நோக்கிப்
பயணித்தோமெனில், அவரின் எல்லா படைப்பு வரிசைகளிலும் ’குழந்தைகள் உலகின் வழி நின்று,
பல்வேறு உயிரினங்களின் அசைவுகளையும் சுமந்துக்கொண்டு கதைகளைச் சொல்லும் போக்கு மேலோங்கியிருப்பதாக
இருக்கிறது’ இவருடைய இத்தகைய படைப்பாற்றல் பயணம் என்பது இந்திய ஓவியச் சூழலில் முற்றிலும்
தனித்தன்மையோடு தொடர்புடையது என்ற உண்மையும் நமக்குப் புலப்படுகிறது.
இந்த
பின்புலத்தின் துணையுடன் ஓவியர் ப. சரவணனை நாம் நேரில் அணுகி அவருடைய ஓவிய அனுபவங்களைத்
தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தைச் சொன்னோம்., உடனடியாக அவர், நான் ஓவியக்கல்லூரியில்
படித்தவனில்லை, என் படைப்பு மனநிலையைக்கூட எவரொருவருக்கும் வாய் மொழியாக எனக்குச் சொல்லத்
தெரியாது. அதனால் நான் இங்கு எப்போதும் கற்கும் மனநிலையிலேயே செயலாற்றுகிறேன். அதற்கு
இங்கு பல ஓவிய நண்பர்களும் சகோதரர்களும் எனக்குத் துணை புரிந்திருகிறார்கள். நான் என்
வாழ்வை மிக கவனமாக உள்வாங்கி வரைந்துக் கொண்டேயிருக்கிறேன். என்கிறார் மேலும் அவர்
பேசும்போது, அதுபோல் சில ஆண்டுகளாக, புதுச்சேரி,
சென்னை மற்றும் வடமாநிலங்களில் எல்லாம் என் ஓவியங்கள் நிறைய கண்காட்சிகளில் இடம்பெறுவதற்கும்
புதுச்சேரியில் வசிக்கும் மேற்கு வங்க ஓவியர் கீர்த்தி சந்தக் மற்றும் சென்னையில் வசிக்கும்
ஓவியரும் ஓவியங்கள் சார்ந்த ஆவணப்பட இயக்குனருமான கீதா ஹட்சன் போன்றோர்களே காரணம் என்று,
துணை நிற்கும் அனைவரையும் நினைவுக் கூறுகிறார்.
படிப்பு
BSc கம்புயூட்டர் சயின்ஸ், பின் மனம் விரும்பிய ஓவியத் தொழிலை நோக்கி வந்து தனிச்சையாகக்
கற்றுத் தேர்ந்த இதே, ப.சரவணன் 1990 களில் விளம்பரப் பதாகைகள் மற்றும் பேனர் ஓவியராக
கடலூரில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தார். அப்போது அதே
துறையில் இயங்கிய பல கலைஞர்களுக்கு இவரது ஒவ்வொரு ஓவியமும் புதிய யுக்திகளைக் கையாண்டிருப்பதாக,
அவற்றை வைத்த இடங்களில் சென்று பார்த்துச் செல்வர். அந்த யுக்திமுறை சிறிது நாட்களில்
கடலூர் சுற்று வட்டாரங்களில் உள்ள ஓவியர்களால் எடுத்தாளப்பட்டு வரையப்பட்டிருக்கும்.
அப்படி கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து புதுச்சேரி வரை இவரால் வரையப்பட்ட விளம்பரப்
பதாகைகளை வைத்தக் கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டு போன ஓவியக் கல்லூரி மாணவர்களில்
நானும் ஒருவன். அந்த காலங்களைப் பற்றிய நினைவுகளை அவருடன் பகிர்ந்து, அத்தகைய தொழில்
செல்வாக்கு நிறைந்த களத்திலிருந்து இன்றைய நவீன ஓவிய உலகிற்கு வர என்ன காரணம்? எனும்
கேள்வியை வைத்தபோது அவருடைய பதிலானது. ”இருப்பதை அப்படியே செய்து செய்து எற்பட்ட சோர்வுதான்,
நான் இப்போது வரைந்துக் கொண்டிருக்கும் கற்பனை உலகிற்குள் நுழைய மிக முக்கியக் காரணம்.”
என்கிறார்.
இங்கிருந்துதான்,
ப.சரவணன், தான் விரும்பி வந்த புனைவு ஓவியப்பரப்பில், பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக,
புதிதாய் பிறந்த குழந்தையாய் ஊடாடி பல்வேறு படைப்புகளை படைத்து அதை உலகளாவிய பார்வையாளர்களுக்குக்
காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது நமக்குத் தெளிவாகிறது. ஆம், ஆரம்பத்தில்
கற்றல் அடிப்படையில் நிலப்பரப்புக் காட்சிகளையும் மனிதர்களையும் நேரடியாக வரையத் தொடங்கிய
இவர் ஒரு காலக்கட்டத்தில் இரண்டையும் இணைத்து புதிய பாணிகளில் வரையும் வழி முறைகளைக்
கண்டடைந்திருக்கிறார். அத்தகைய தொடர் தேடலுக்கு பெரும் காரணமாயிருந்தது இவர் சந்தித்த
கடுமையான புறக்கணிப்புகளே எனலாம். சான்றாக, தற்போதைய ஓவிய உலகத்தில், கல்வித் தகுதியின்
முக்கியத்துவத்தைக் காரணங்காட்டி தான் நிராகரிக்கப்பட்ட சந்தர்ப்பங்களே அதிகம் என்பதையும்
அவர் பேச்சினுடாக நம்மால் உணர முடிகிறது. அத்தகைய வலி நிறைந்தச் சூழலை அவர் இப்போது
வரை கூட எதிர் கொண்டபடியே இருந்தாலும், அதனால் எவ்வித சோர்வும் அடைந்து விடாமல், ஒருவகையில்
இன்னும் தைரியம் பெற்றவராக இவ்வுலகில் நிகழும் மிகச் சாதாரணமான அசைவுகளையெல்லாம் மிக நுணுக்கமாகப் பார்த்து எந்த
ஒன்றையும் நிராகரிக்காமல் தன் படைப்புகளில் வைத்து, தன் கலை வாழ்வைக் கொண்டாடி மகிழ்கிறார்.
புகழ்பெற்ற ஓவியர்களின் படைப்புகள், கேன்வாஸ், எண்ணெய் வண்ணங்கள், வெளிப்பாட்டு முறைகள், காட்சிப்படுத்தல் பண்புகள் என ஒவ்வொன்றையும் சமகால ஓவியச் சூழலில் இருந்து கொண்டும் நீண்ட காலம் பின் தொடர்ந்தும் கற்றிருக்கிறார். அந்த கவனித்தல் பண்பும், முயற்சிகளின் துணிவும் தான், ப.சரவணனுடைய ஓவியங்களில் நமக்குக் கிடைக்கும் சிறப்புக் கூறுகள். அதற்கு உதாரணமாக, பொதுப்பண்புகளிலிருந்து தன் ஓவியக் கருவை முன் எடுக்காமல், தன் விளிம்பு நிலை வாழ்வியல் பக்கமிருக்கும் வண்ணமயமான வாழ்வைப் பிரதிபலிப்பது. அவ்வாழ்வில் மேலோங்கியிருக்கும் குழந்தைமைகளைக் கொண்டாடுவது. அந்த கொண்டாட்டத்தின்பால் உருவாகும் எளிய கதைகள் சொல்வதற்கான புதுப்புது வெளிகளைக் கட்டமைத்துக் கொள்வது என்பனவற்றையெல்லாம் குறிப்பிட்டுச் சொல்லலாம். அதிலும் குறிப்பாக, வாழ நிரந்தர நிலமற்ற நிலையில், பெருவெளிகளில் பயணித்தபடியே வாத்து மேய்க்கும் சிறுவர்களின் உலகம் எவ்வளவு பெரிதென, இவருடைய வாத்து வரிசை ஓவியங்கள் நமக்குச் சொல்லும். அதுபோல், இவருடைய பெரும்பாண்மையானப் படைப்புகளில், யாதொரு கவலையும் இன்றி இயற்கையோடு இயைந்த விளையாட்டுக்களை விளையாடிக் களிக்கும் சிறுவர்களையே மையம் கொண்டிருக்கும். அந்த மையம் என்பது குழந்தைகளது அக உலகங்கள், அவர்கள் இயங்கும் வெளிகளாய் மாறும் அற்புதத் தருணங்களைக் காட்சி மொழியாக்கி நமக்கும் பார்க்கத் தருகிறார். அதற்கெல்லாம் அவர் பயன்படுத்தும் கோடுகளும் வண்ணங்களும் மிக எளிய முறையைச் சார்ந்து மிக அழுத்தமாக இருக்கிறதென்பதுதான் ப.சரவணனின் படைப்புகளுக்கே உரிய தனிச் சிறப்பு குணமாக இருக்கிறது.
மேலும், எளிய குடும்பங்களின் வாழ்வியலில், சேவல்கள், நாய்கள், பூனைகள், கிளிகள் மற்றும் காகங்கள் போன்ற உயிரினங்களின் இருப்பு எத்தகைய அர்த்தங்களையெல்லாம் உருவாக்குகிறது என்பதை இவரின் ஓவியங்கள் சிறு சிறு கதைகளாக நம்முடன் பேசிப் பார்க்கிறது. சேவல் சண்டையில் ஈடுபடும் மனிதர்களின் சாயலில், வாழ்வியலில் அச்சேவல்களாகவே மாறும் தருணங்களைத் தீட்டியிருப்பார். அதுபோல் சேவல் சண்டை நடைபெறும் களங்களையும் அதன் பார்வையாளர்களையும் வரைந்திருப்பது என்பதெல்லாம் நம் வாழ்வு வீரத்தோடு தொடர்புடையது என்று பொதுக் கொடியை உயர்த்திப்பிடிக்காமல் இவையெல்லாம் அம்மக்கள் குழுவிற்கே உரிய வாழ்வியல் கொண்டாட்டமாகவும், அந்த உயிரினங்கள் இல்லாமல் போகிற போது உண்டாகும் வேதனையான வாழ்வு என்ற தனிப்பார்வையை நிறுவுவதாகவும் இருக்கிறது. அதுபோலவே, பூனை வளர்ப்பில் ஈடுபடும் சிறுவர்களிடம் இருக்கும் உணவு குறித்த அக்கறையை பூனை வரிசை ஓவியங்கள் வெளிப்படுத்தும். உதாரணமாக, ஒரே வீட்டில் வளர்க்கப்படும் பூனை சேவல் போன்றவற்றின் உணவு முரண்பாடுகள் வழி, பூனை சேவலை உண்பது போன்றவை பெரியர்வர்களிடத்தே ஏற்படுத்தும் கவலையைப் பேசுகிறது. மற்றுமொரு ஓவியம், அதே உணவு முரண்பாடு குழந்தைகளிடத்தே எதிர் நிலையில் செயல்படுவதைப் பேசுகிறது. உணவிற்காக அம்மாவால் சுத்தம் செய்யப்படும் மீனை, பூனைக்கென எடுத்துச் சென்றுக் கொடுத்து விளையாடுவது. ஆசையாய் வளர்த்த கோழியைக் கொன்று தின்றது நம் வீட்டுப் பூனைதான் எனினும் அது உணவுச் சங்கிலியோடு தொடர்புடையதுதான் என்று சமாதானம் சொல்லி எப்போதும் அப்பூனையை வருடிக் கொடுக்கும் குழந்தைகளை காட்சிப்படுத்திப் பேசுகிறது.
அதுபோலவே
இவருடைய ஓவியங்களில் அதிகம் இடம்பெறும் நாய்கள் மிக விரிவாகப் பேச வேண்டியவை. நாய்கள்
வளர்க்கும் உழைக்கும் வர்க்கத்தினருக்கும், அவர்களின் புழங்கு வெளிகளில் அந்த நாய்கள்
எத்தகைய அசைவுகளை ஏற்படுத்துகிறது என்பதையெல்லாம் அவ்வரிசைகள் நமக்கு வழங்குகின்றன.
ஒரு வகையில் அவைகள்தான் மனிதர்களின் நினைவுகளுக்கு அதிகமான சம்பவங்களை ஏற்படுத்தித்
தருகின்றன எனும் அளவிற்கு எண்களற்றக் கதைகளை ஓவிய மொழிகளில் சொல்லுகிறார். குறிப்பாக
இவ்வாறான கதைகளில் இவர் நிறைய பகடி செய்வதையும் காண முடிகிறது. ’நாய் கண்காட்சி’ எனும்
ஓவியத்தில், அதிகமான பணம் செலவு செய்து தங்களின் கெளரவத்தை நிலை நாட்டிட, நாய்களை வளர்ப்பவர்கள்
தங்கள் நாய்களை கையில் பிடித்தபடி, தங்களைப் பெரும் அலங்காரத்துடன் காட்சிப் படுத்திக்
கொண்டிருப்பது போன்றவற்றை உதாரணம் சொல்லலாம். இவையெல்லாம் இவர் வீட்டில் வளர்ந்த டைசன்
எனும் நாயின் வழி கண்டடைந்தது என்று இவர் சொன்னாலும். அந்த காட்சிப் படிமங்களையெல்லாம்
நம் அனுபத்திலிருந்தும் பொருத்திப் பார்க்கும் சந்தர்ப்பங்களை தேர்ந்தெடுத்துக் கொடுப்பதே
இவருடைய படைப்பாற்றலில் குறிப்பிடத்தக்கப் பண்பாக இருக்கிறது. அதேபோல் குழந்தைகள் தங்களின்
விளையாட்டு வெளிகளான தெருக்களிலும் தோட்டங்களிலும் விளையாடுவதை இவருடைய பல படைப்புகளில்
காண முடிகிறது. அவ்வோவியங்களின் பெரும்பாண்மையானத் தளத்தின் பின்புலங்களில் அவர்களுடைய
நினைவுத் தொகுப்புகள் போல பலவிதமான விளையாட்டுப் பொருட்கள் மற்றும் அவர்களின் பால்
பேதமற்ற உடல் ஒருங்கிணைந்த விளையாட்டு அசைவுகள்
ஆகியவை இடம்பிடிக்கின்றன. இவைகளெல்லாம் ஒரு வகையில், அவ்வப்போது நம் அனைவரின் கனவில்
வழிந்தோடும் வண்ணமயமான மழைக்கால ஆற்று நீர் போன்றதே எனினும் நாம் அவைகளை சடுதியில்
மறந்து விடுபவர்களாக மாறிப் போயிருக்கின்றோம். ஆம், பரபரப்பான இந்தக் காலச்சூழலில்
நாம் நம் நினைவிடுக்கிலிருந்து வழியவிட்டுக் கொண்டிருப்பதையெல்லாம் ப.சரவணன் எனும்
காட்சி வடிவம்சார்ந்த படைப்பாளி அதையெல்லாம்
சேகரித்து மீண்டும் நம் பார்வைக்கே தந்து கொண்டிருக்கிறார்.
மேலும், இவரது ஓவியங்களில் இச்சமூகம் பெறும் மதிப்புடன் அணுகாத நாடோடிகளான பூம்பூம் மாட்டுக்காரர்கள், கிளி ஜோசியக்காரர்கள், மீன் வியாபாரப் பெண்கள், கூத்துக்காரர்கள் போன்றோர்கள் மையப்பாத்திரங்களாக நிறுவப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் வழி நின்று இச்சமூக அசைவுகளைப் பின்புலங்களில் உறைய வைப்பது எல்லாம் இவர் அன்றாட வாழ்வில் கடக்கும், கவனிக்கும், பங்கேற்கும் நேரங்களை நமக்குப் புரிய வைக்கிறது. அவருடனான சந்திப்பும் அவருடன் நாம் செலவு செய்யும் நேரமும் அவற்றை உறுதிப்படுத்துகிறது. ப.சரவணன் முழு நேரப் படைப்பாளிதான் எனினும் அவர் தன்னுடைய பெரும்பாண்மையான நேரத்தை சிறிய பயணங்களிலும், மீன் பிடித்தல், கட்டுமானப் பணிகள் செய்யும் நண்பர்களுடன் பேசிக் களிப்பது, நாய், கோழி, வாத்து வளர்ப்பவர்களுடன் நேரம் கழிப்பது, கூட்டுக் குடும்பத்தில் இயைந்து இருப்பது என தன் படைப்பு வாழ்வை எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி, வாழ்வோடு இணைத்துப் பயணிக்கும் சிறு குழந்தையைப் போலவே இயங்குகிறார். இது பற்றி அவரிடம் பேசும்போது, ”நான் வரைவது என்னளவில் இருந்துதான். வரையும் நேரங்களில் மட்டுமே என்னுடன் நான் பேசிக்கொள்கிறேன். மற்ற எல்லா நேரங்களில் எல்லாம் உடன் இருப்பவர்களுடன் உரையாடுவதையே விரும்புகிறேன்.” என்று மிகச் சுருக்கமாக முடிக்கிறார்.
இத்தகைய
எளிய கலைஞனிடமிருந்து கிளர்ந்தெழும் ஒவ்வொரு படைப்பும் ஒவ்வொரு உச்சகட்ட ஓவியக் கூறுகளைக்
கொண்டிருக்கின்றன என்பதே உண்மை. அக்கூறுகள், உலகத்தரம் வாய்ந்தது என்பதனையும் அப்படைப்புகள்
இன்று நாடு கடந்த கலை ஆர்வலர்களினால் போற்றிப் பாதுகாக்கப் படுபவையெல்லாம் நமக்கு உறுதி
செய்கின்றன. ஆம், கலைகள் மனிதர்களுக்கு ஒருபோதும் அறிவியல் உண்மைகளைப் போதிப்பது இல்லை.
அதே சமயம் கலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உண்மைகளை உரையாடக் கற்றுத் தருகின்றன. அந்த அடிப்படையில்
ப.சரவணனின் படைப்புலகம், ‘அவர் படைப்பில் கட்டமைக்கும் கருத்தியல்களோடு, கற்றலுக்கான
கடுமையான போராட்டத்தினையும் தன் மொழியின் அழகியலை ஏற்றத்தாழ்வின்றி எல்லா மனிதர்களிடத்தும்
கடத்தும் எளிய குணத்தினையும் பேருண்மைகளாக நம்மிடத்தே கையளிக்கின்றன’. அவற்றை தேடிச்
சென்று, பெற்று, நம் அனுபவத்தில் இணைத்துக் கொள்வதும், அதன் காரணமாக அவர் படைப்புலகுடன்
நம் உறவை தொடர்ந்து விரிவுபடுத்திக் கொள்வதும் கூட மனித மாண்புகளின் வளர்ச்சி நிலைகளில்
ஒன்றே.
ஞா.கோபி
நன்றி - நீலம்,மாத இதழ்,பிப்ரவரி 2021
Comments
Post a Comment