நாடகத்திலிருந்து திரைப்படத்திற்கு – திரைநாயகி பி.கே. ரோசி (மலையாள சினிமாவின் முதல் தலித் பெண் நடிகர்)

 

நாடகத்திலிருந்து திரைப்படத்திற்கு – திரைநாயகி பி.கே. ரோசி

(மலையாள சினிமாவின் முதல் தலித் பெண் நடிகர்)

 


பிறப்பு

பி.கே. ரோசி, 1903-ஆம் ஆண்டு பவுலோஸ் (Paulose) மற்றும் குஞ்சி (Kunji) தம்பதியருக்கு ராஜம்மா என்ற பெயரில் பிறந்ததாகக் கருதப்படுகிறது. திருவனந்தபுரத்திற்கு அருகிலுள்ள பேயாட் (Peyad) எனும் ஊரில், 'புலையர்' (கேரளத்தின் ஒரு தலித் சமூகம்) சமூகத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார். அக்காலத்தில் பேயாட் பகுதி, திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தது (கேரளா மற்றும் தமிழ்நாட்டின் தெற்குப்பகுதி). பிற்காலத்தில் வரலாற்றாசிரியர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் அவரது உறவினர்கள் முன்வைத்த குறிப்புகளில்,'ராஜம்மாள்', 'ரோசம்மா எனப் பல பெயர்கள் ரோசிக்குச் சுட்டப்பட்டுள்ளன; இப்பெயர்கள் ஒவ்வொன்றும் அவரது வாழ்வின் வெவ்வேறு காலகட்டங்களைக் குறிப்பனவாக அமைந்துள்ளன. அதாவது, முதலில் 'ராஜம்மாள்' என்று அழைக்கப்பட்டவர் பின்னர், கிருஸ்துவ மதத்திற்கு மாறிய பின்னர் 'ரோசம்மா' என்று அழைக்கப்பட்டதாகவும், அந்தப் பெயர் மறுவி ‘ரோசி’ என்றானது என்பதாகச் சொல்லப்படுகிறது.

அடிமை வாழ்வு

அக்கால இந்தியாவில், உயர்சாதி இந்துக்களால் "புலையர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அடிமைத் தொழிலாளர்களாகவே கருதப்பட்டனர்; அதனால் தங்கள் நிலங்களை விற்கும் போது, நிலத்துடன் சேர்த்தே புலையர்களும் ஏலம் விடப்பட்டனர், அப்படி விற்கப்பட்ட புலையர்கள் நிலத்தில் வேலை செய்யும் போது ஏதேனும் தவறு இழைத்ததாகக் கருதப்பட்டால், சாட்டையால் அடிக்கப்பட்டனர், அச்சமூகப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர், அதிகப்பட்ச தண்டனையாக, அவர்கள் மரங்களில் கட்டிவைக்கப்பட்டுத் தீயிட்டுக் கொளுத்தப்பட்டனர்" என்று கண்ணூர் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியர் மாளவிகா பின்னி கூறுவது இங்கு கவனிக்கத்தக்கது.

விடுதலைப்பாதைக்கு வித்திட்டக் கலை

அவ்விதம், திருவிதாங்கூரில் ரோசியின் குடும்பத்தினர் விவசாயக் அடிமைகளாக பணி செய்துக் கொண்டிருந்த வேளையில், அப்பகுதியில் வாழ்ந்த தலித் சமுகத்தினரால் நிகழ்த்தப்பட்ட ஒரு கலை வடிவம் கக்கரிஸ்ஸி நாடகம் ஆகும். இந்த நடன-நாடகப் பாரம்பரியம் ஆரம்பத்தில் குறவா மற்றும் மலவேடா பழங்குடி சமூகங்களால் நிகழ்த்தப்பட்டது, ஆனால் பின்னர், மற்ற ஒடுக்கப்பட்ட சமூகங்களும் பங்கேற்கத் தொடங்கின. இது சாதி அமைப்பில் கீழ்நிலையில் வகைப்படுத்தப்பட்ட சமூகங்களிடையே ஒரு வாழ்வியல் கலாச்சாரப் பழக்கமாக மாறியது. அவ்வகையில், கக்கரிஸ்ஸி நாடகம் சாதி அமைப்பில் தாழ்ந்தவர்களாக வகைப்படுத்தப்பட்ட சமூகங்களிடையே ஒரு நிகழ்த்துக் கலாச்சாரப்பழக்கமாக அப்போதே இருந்தது. கக்கரிஸ்ஸி நாடகம், அல்லது கக்கரிக்களி என்று அழைக்கப்படும் நாடகம் இன்றளவும் கேரளா தமிழ்நாடு எல்லைப்பகுதிகளில் நிகழ்த்தப்படுகிறது. கக்கரிஸ்ஸி நாடகம் நடனம், நடிப்பு, எள்ளலான உரையாடல்கள் மற்றும் இசை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பின் மூலம் அம்மக்களின் கருத்துக்கள், எண்ணவோட்டங்கள் மற்றும் சுதந்திர வேட்கையின் வெளிப்பாடாகவும் இருக்கிறது.

அக்காலத்தில், இந்த நடன-நாடகத்தின் நிகழ்த்துப் பாரம்பரியத்தில் ஈர்க்கப்பட்டார் பி.கே.ரோசி. அதுவரை மேடையேற்றப்பட்ட நாடகங்களில் வரும் பெண் கதாபாத்திரங்களான பார்வதி, கங்கை, அரசி போன்ற வேடங்களை, உண்மையான பெண்கள் யாரும் ஏற்றதில்லை; மாறாக, பெண்களைப் போலவே வேடமிட்டு நடிக்கும் ஆண்களே அந்தப் பாத்திரங்களை ஏற்று வந்தார்கள். அந்த நாடகத்தில் அவள் கண்ட பார்வதி, ரோசியின் மனதிற்குள்ளேயே குடியேறிவிட்டாள்; அவள் மனதிற்குள் பார்வதி ஆடினாள், பாடினாள், பேசினாள். பல சமயங்களில், வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில், ரோசி அந்தப் பார்வதி வேடத்தை ஏற்று நடித்தாள்; அத்துடன் கக்காளன் மற்றும் வேட்டுவன் சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் வேடங்களையும் ஏற்று நடித்துப் பார்த்தாள். அவளது குடிசைக்கு அருகில் ஒரு குளம் இருந்தது; அங்கே அதிகம் பேர் செல்வதில்லை. அந்தக் குளக்கரையில் நின்று, தான் ரசித்த அந்தச் சிறு பாத்திரங்களை நடித்துப் பார்த்தாள்.



அதுவரை ஆண்களே பெண் வேடமிட்டு நடித்து வந்த நிலையில், தான் அதில் முதல் பெண் நடிகராக நடிக்கத் தொடங்கினார் ரோசி. ஆனால், அவ்வாய்ப்பு முதலில் அவருக்கு அத்தனை சுலபமாக கிடைக்கவில்லை. ஒரு தலித் பெண் நடிப்புத்துறையைத் தேர்ந்தெடுத்து அதில் ஈடுபடுவது என்பது அச்சமூகத்தின் ஆண்களாலேயே ஏற்றுக்கொள்ள முடியாத நிலைதான் அப்போது இந்தியா முழுக்கவே இருந்தது. அப்படி இருந்த சிறிது காலத்திற்குப் பிறகு, கக்கரிஸ்ஸி நாடகக் கலைஞராகத் திகழ்ந்த ரோசியின் மாமா ஒருவர் வழியாக, ரோசியின் விருப்பத்திற்கு ஆதரவு கிடைத்திருக்கிறது; அவரது உதவியுடனேயே ரோசி நிகழ்த்துத்துறையில்அடியெடுத்து வைத்தார். "ரோசியின் வாழ்க்கையைப் பற்றியத் தகவல்கள் மிகக் குறைவே; இருப்பினும், கக்கரிஸ்ஸி நாடகங்களில் ரோசி தனது நடிப்பின் மூலம் உள்ளூரில் மிகுந்த புகழ் பெற்றிருந்தார் என்பது அறியப்பட்ட உண்மையாகும்," ரோஸியின் நடிப்புத் திறமை பலரின் பாராட்டுகளைப் பெற்ற போதிலும், அக்காலகட்டத்தில் "இது ஒரு புதிய களம் என்பதையும், தன்னை வெளிப்படுத்திக் கொண்டு சாதிய ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை அடைய வேண்டியது மிக முக்கியம்” என்பதில் அவர் உறுதியாக இருந்ததாகவே தெரிகிறது.

கக்கரிஸ்ஸி நாடகம் – மரபும் அரங்கேற்றமும்

கக்கரிஸ்ஸி நாடகம், வேதன் மற்றும் வேதாதி என்ற பழங்குடி வேட்டைக்காரத் தம்பதியராக பூமிக்கு வந்ததாக நம்பப்படும் சிவபெருமான் மற்றும் பார்வதியின் புராணக் கதையைப் பிரதிபலிக்கிறது. இந்த இந்து மதக் கதை, நையாண்டிக் கூற்றுகளுடன் கலந்து, மனித இயல்புடன் வழங்கப்படுகிறது. சிவராத்திரி மற்றும் ஓணம் போன்ற பண்டிகைகள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளின் ஒரு பகுதியாக கக்கரிஸ்ஸி அரங்கேற்றப்படுகிறது. இந்த நாடகம் கக்கலா சாதியினரையும் அவர்களின் சுற்றுப்புறங்களையும் மையமாகக் கொண்டு, அவர்களின் சமூக வாழ்க்கை மற்றும் குடும்ப உறவுகளை ஆராய்ந்து கேள்விக்குட்படுத்துகிறது. அதன் மத அம்சத்தைத் தாண்டி, இது ஒரு நாடக மரபாக வளர்ந்து, பின்னர் சமூகக் கருப்பொருள்களையும் சம்பவங்களையும் உள்வாங்கிக்கொண்டது. 


நாடகத்தின் முக்கிய கதாபாத்திரங்கள், சுந்தர கக்கலன் என்று அழைக்கப்படும் கக்கலன் என்ற கதாநாயகனும், பார்வதி மற்றும் கங்கையை (சிவபெருமானின் இரு துணைவியர்) பிரதிநிதித்துவப்படுத்துவதாக நம்பப்படும் கக்கலதிகள்/கக்கத்திகள் என்று அழைக்கப்படும் அவரது இரு துணைவியர்களும் ஆவர். கக்கலன்களும் கக்கலதிகளும் பாரம்பரியமாக நாடோடிகளாக இருந்து மக்களின் எதிர்காலத்தைக் கணித்துக் கூறுபவர்கள். மற்றொரு முக்கிய கதாபாத்திரம் தம்புரான். தம்புரானுக்கும் கக்கலனுக்கும் இடையேயான தொடர்ச்சியான கேள்வி-பதில் உரையாடல்கள் மூலமாக நாடகம் முன்னேறுகிறது. கக்கலதிகளுக்கு இடையேயான வார்த்தைப் போர்கள், பொறாமை மற்றும் நட்பு ஆகியவை கதைக்கு மேலும் ஒரு கவர்ச்சியைச் சேர்க்கின்றன. நாடகத்தின் பாடல்களுக்கும் உரையாடல்களுக்கும் பயன்படுத்தப்படும் மொழி, தமிழ் மற்றும் மலையாளத்தின் கலவையாகும்.

உடை மற்றும் ஒப்பனை

கக்கரிஸ்ஸி நாடகத்தின் உடை மற்றும் ஒப்பனை, பழங்குடியினரின் உடை மற்றும் ஒப்பனையை ஒத்திருக்கின்றன. கக்கலனின் முக ஒப்பனை குறிப்பாகத் தனித்துவமானது; வேட்டைக்காரர்களின் உடையைப் பிரதிபலிக்கும் வகையில், முகம் கருப்பு வண்ணம் பூசப்பட்டு வெள்ளைப் புள்ளிகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். கக்கலதிகள் பழங்குடியினரின் உடை மற்றும் நகைகளை அணிந்து தோன்றுகிறார்கள். ஹார்மோனியம், மிருதங்கம், கஞ்சிரா மற்றும் கைமணி போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. கக்கரிஸ்ஸி நாடகத்திற்கு நடிகர்களுக்கு சிறந்த பயிற்சி தேவைப்படுகிறது, ஏனெனில் இந்த நடிப்புக்கு மிகவும் நெகிழ்வான உடலும் வலுவான குரலும் அவசியம். இந்தப் பாரம்பரியம் தலைமுறை தலைமுறையாகப் பயிற்சி மூலம் கடத்தப்பட்டு வருகிறது.

கக்கரிஸ்ஸி நாடகத்தில் முதல் நடிகையாக ரோசி

'கக்கரிஸ்ஸி நாடகம்' எனும் கலை வடிவில் நடித்த பி.கே. ரோசியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுத்தாளர் வினு ஆபிரகாம் மலையாளத்தில் எழுதிய 'நஷ்டநாயிகா' (Nashta Nayika) எனும் நாவலில், ரோசி நாட்டுப்புற நாடகத்துறைக்குள் நுழைந்த நிகழ்வு பின் வருமாறு விவரித்து எழுதப்பட்டுள்ளது…

"கக்கரிஸ்ஸி நாடகம் எனும் கலை வடிவில் நடித்த முதல் பெண்மணி ரோசிதான். இக்கலைவடிவில் வல்லவரான, ரோசியின் மாமா கோவிந்தன் ஆசான் அவர்களே, ரோசியை இக்கலைத்துறையில் அறிமுகப்படுத்தினார். ஒரு பெண் நாடகத்தில் நடிப்பது குறித்து, அப்போது நடித்துக்கொண்டிருந்த ஆண் கலைஞர்கள் பலத்த எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.  ஆனால், ரோசியின் நடிப்புத் திறமையை முன்வைத்து, பலர் எதிர்ப்பையும் மீறி அவரை ஒரு உள்ளூர் நிகழ்வில் கோவிந்தன்ஆசான் நடிக்க வைத்தார். அந்த நிகழ்வைக் கண்ட பார்வையாளர்கள் பி.கே. ரோசியின் நடிப்பை வெகுவாகப் பாராட்டத் தொடங்கியதும், அந்த எதிர்ப்புகள் அனைத்தும் மெல்லக் காணாமல் போயின. ரோசியைப் பொறுத்தவரை நடிப்பு முற்றிலும் புதியஉலகம்— கலையை உணர்ந்து அனுபவித்து வெளிப்படுத்துவதற்கான ஒரு புதிய உலகம்." பி.கே. ரோசி நாடகத்தில் முதலில் பார்வதி வேடத்தை ஏற்று நடித்தார்; அந்த நடனத்தையும், பாடல்களையும், வசனங்களையும்அவர் மிகவும்நேசித்து நடித்தார்.

நாடகத்தில் தொடர் சவால்கள்

தொடர்ந்து, மற்றொரு கக்கரிஸ்ஸி நாடகக் குழுவில்' நடிக்கும் வாய்ப்பு பி.கே. ரோசிக்குக் கிடைத்தபோது, ​​முன்னர் நடித்த நாடகக்குழுவினர் ரோசி அந்த வாய்ப்பை ஏற்கக்கூடாது என்றும், தங்கள் குழு நாடகங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினர். இது ரோசிக்குப் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. எனவே, அந்த நாடகக் குழுவிலிருந்து விலகி, தனது ஆசானுடன் புதியக் குழுவின் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இதற்குப் பதிலடியாக, பழைய நாடகக்குழுவைச் சேர்ந்தவர்கள் கூலிப்படையினரைத் திரட்டி, ரோசியின் ஆசானின் நாடக நிகழ்ச்சிகளைச் சீர்குலைக்கத் தொடங்கினர். அப்படி ஒரு நாள் இரவில், நிலைமை மிகவும் மோசமடைந்துவிட்டது. நாடக நிகழ்வின் போது ரோசி மீதும் மற்ற நடிகர்கள் மீதும் கற்கள் வீசப்பட்டன. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ரோசியின் பெற்றோர், அச்சத்தின் காரணமாக ரோசியைகக் கரிஸ்ஸி நாடகங்களில் நடிக்கவே வேண்டாம் என்று உத்தரவிட்டனர். மேலும், அவர்கள் அப்போது வசித்த இடத்திலிருந்து வேறு இடத்திற்குப் புலம் பெயரவும் அவர்கள் தீர்மானித்தனர்.

இந்தக் கடுமையான முடிவின் பின்னணியில் மற்றொரு காரணமும் இருந்தது. அது, பி.கே. ரோசியின் தாயார் குஞ்சியின் தூரத்து உறவினர்களில் ஒருவரை ரோசிக்குத் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அந்த ஆணின் குடும்பத்தினரும் இதே நோக்கத்திற்காகவே அவ்வூருக்கு வந்திருந்தனர். துரதிர்ஷ்டவசமாக, நாடகக் குழுவினருடனான மோதல்கள் தீவிரமடைந்ததால், அவர்கள் அந்தத் திருமண ஏற்பாட்டிலிருந்து பின் வாங்கினர். இந்தச் சம்பவத்தால் அவமானம் மற்றும் அச்சமும் அடைந்த ரோசியின் பெற்றோர், தாம் வசிக்கும் ஊரை விட்டு வெளியேறி, தங்கள் வாழ்க்கையைப் புதிதாக புதிய ஊரில் தொடங்க முடிவெடுத்தனர். அங்கு சென்ற பிறகும் ரோசி, துளியும் சமரசம் இன்றி கக்கரிஸ்ஸி நாடகத்தில் நடித்தார். அத்தகைய தொடர் இயக்கத்தினால் அவரது நடிப்பு நன்கு மெருகேறியது. அதன் பலனாக விரைவிலேயே, உள்ளூர் நாடகத்துறையில் அவர் நன்கு அறியப்பட்ட ஒரு பண்பட்ட நடிகையாக உருவெடுத்தார்.

நாடகத்திலிருந்து திரைப்படத்திற்கு

இத்தகைய அனுபவங்களும், மக்கள் செல்வாக்கும், ரோசியை திரைப்படத் துறைக்கு இட்டுச் சென்றன. அதன் விளைவாக, கேரளத்தின் முதல் முழுநீளத்திரைப்படமாகக் கருதப்படும் 'விகதகுமாரன்' (Vigathakumaran) எனும் ஊமைப்படத்தில் இவர் நடித்தார். ஜோசப் செல்லையா டேனியல் (J. C. Daniel) என்பவர் "மலையாள சினிமாவின் தந்தை" என்று போற்றப்படும் ஒரு இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் (தற்போதைய கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம்) பகுதியைச் சேர்ந்த இவர், 1928 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள திரையுலகின் முதல் திரைப்படமான 'விகதகுமாரன்' படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் ஆவார். 'விகதகுமாரன்' (இதன் பொருள் 'காணாமல் போன குழந்தை' என்பதாகும்) இந்தத் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒரு பெண்ணைக் கண்டறிய, டேனியல் மிகுந்த சிரமங்களையும் நெருக்கடிகளையும் சந்திக்க வேண்டியிருந்தது. குறிப்பாக, நடிகைகளைத்தேடி, இந்தியாவின் அனைத்து முக்கிய நாளிதழ்களிலும் அவர் விளம்பரங்களை வெளியிட்டார். இறுதியில், பம்பாயைச் சேர்ந்த 'மிஸ்லானா' (Miss Lana) எனும் ஆங்கிலோ-இந்தியப்பெண் நடிக்க ஒப்புக்கொண்டார். டேனியல் பம்பாய்க்குச் சென்று, அவருக்கு 5,000 ரூபாயை முன்பணமாக அளித்து, அவரைத் திருவனந்தபுரத்திற்கு அழைத்து வந்தார். இருப்பினும், அப்பெண் விதித்த விதிமுறைகளும் நிபந்தனைகளும் டேனியலுக்குச் சிரமமாகத் தோன்றின. இறுதியில், அப்பெண் வாங்கிய முன்பணத்தைத் திருப்பிக் கொடுக்காமலேயே அங்கிருந்து சென்றுவிட்டார்.எனவே படப்பிடிப்பு தடைப்பட்டது.


அப்போதுதான் பி.கே. ரோசியின் நடிப்புத் திறமை, இயக்குநர் ஜே.சி. டேனியலின் கவனத்துக்கு வந்தது. அதன் பின்னர் ரோசியின் நாடகங்களை நேரில் பார்த்து வியந்து, பி.கே. ரோசியை தனது முதல் திரைப்படத்தின் நாயகியாக நடிக்க வைப்பது எனும் உறுதி பூண்டார். ரோசியின் சாதிப் பின்னணியை அறிந்திருந்தும், டேனியல் அவரை உயர்சாதிப் பெண்ணின் கதாபாத்திரத்தில் நடிக்கச் செய்ய பேச்சுவார்த்தையைத் தொடங்கினார். பெரும் தடைகளுக்குப் பின்னர் ரோசியின் உறுதியான சம்மதத்தின் காரணமாக பி.கே. ரோசி அப்படத்தில் நடிக்கத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. பத்து நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பிற்காக, அவருக்கு ஒரு நாளைக்கு ஐந்து ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டது, என்று தெரிய வருகிறது. 1920-களில், இது பெரும் தொகையாகும். அதே சமயம், பம்பாய் நடிகைக்கு முன்பணமாகக் கொடுத்த அளவிலிருந்துப் பார்த்தால் ரோசிக்கு கொடுத்தப் பணம் சிறு துளியே. திரைப்படம் குறித்த காலத்தில் தயாரானது. திரையில் வெளியிடப்பட்ட போதுதான் சாதியத்தின் கோர முகம் தனது வக்கிரத்தை வெளிக்காட்டத் தொடங்கியது.

சாதியின்பெயரால்ஒடுக்கப்பட்டதின்உச்சம்

இப்படத்தில் சரோஜினி கதாபாத்திரத்தில் ரோசியும், படத்தின் இயக்குநரான ஜே.சி. டேனியல், ஜெயச்சந்திரன் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். நாடக நடிப்பிலிருந்து, திரை நடிப்பிற்காக, தன்னை முற்றிலும் புதியக் கோணத்தில் மாற்றிக்கொண்டு நடித்தார் பி.கே.ரோசி. அப்படி முதல் அனுபவத்தில் கிடைத்த இன்பத்தினை, அத்திரைப்படத்தின் முதல் காட்சி (Premiere) திரையிடப்பட்ட அன்றிலிருந்து இழக்கத் தொடங்கினார். ஆம், முதல் திரையிடல் காட்சியைப் பார்க்க ரோசியும் அவரது குடும்பத்தினரும் அனுமதிக்கப்படாமல் தடுக்கப்பட்டனர்.  ஏனெனில், அத்திரைப்படத்தின் முதல் காட்சியினைக் காண அப்பகுதியிலுள்ள உயர்சாதி இந்துக்கள் அழைக்கப்பட்டு வந்திருந்ததே இப்பிரச்சனைக்கான மிக முக்கியமானக் காரணமாகும். ரோசி குடும்பத்தினர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவ்வாறு தடுக்கப்பட்டிருக்கிறார்கள். 

திரையில் தோன்றிய ரோசிக்கு எதிர்ப்பு

அத்தோடு முடியாத ஒடுக்குமுறை, அத்திரைப்படம், பொது மக்களுக்குத் திரையிடப்பட்டபோது, இன்னும் வேகமெடுத்துப் பயணித்தது. அதாவது, திரையில் ரோஸி தோன்றியதை மையமாகக் கொண்டு பெரும் பரபரப்பும் எதிர்ப்பும்எழுந்தன. அந்த எதிர்ப்பானது படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியுடன் தொடர்புடையதாயிருந்தன. அதாவது, ஒரு ஆண் (நடிகர்), ஒரு பெண்ணின் (நடிகையின்) கூந்தலிலிருந்து ஒரு பூவை எடுத்து முகர்ந்துப் பார்ப்பதை, பார்வையாளர்கள், அதில் நடித்தப் பெண்ணின்  'ஒழுக்கமற்றசெயல்' என்று கருதினர்.  அதாவது, ரோசிக்குப் பேரழிவை விளைவிக்கக் கூடியவகையில் எழுந்த இத்தகைய எதிர்ப்பு, சாதியைமையமாகக் கொண்டே அமைந்திருந்தது. ரோசி ஏற்று நடித்த சரோஜினி கதாபாத்திரம், 'நாயர்' சமூகத்தைச் சேர்ந்த பெண்ணாகச் சித்தரிக்கப்பட்டிருந்தது. ஒரு தலித் கிறிஸ்தவப் பெண்ணான ரோசி, உயர்சாதிப் பெண்களுக்கு—குறிப்பாக நாயர் சமூகப்பெண்களுக்கு—மட்டுமே உரியதாகக் கருதப்பட்ட ஆடை அலங்காரங்களை அணிந்து கொண்டு, ஒரு நாயர் பெண்ணாக நடித்தது; அக்காலத்தில் நிலவிய 'சாதித்தூய்மை' குறித்த நம்பிக்கைகளையும், பெண்களுக்கு வகுக்கப்பட்டிருந்த தார்மீக விதிகளையும் கேள்விக்குள்ளாக்கியது. இது உயர் சாதியினரிடையே எத்தகைய கடும் கோபத்தைத் தூண்டியது. இதன் காரணமாகவே, திரைப்படத்தைப் பார்க்க வந்திருந்த கூட்டத்தினர், ஆத்திரமூட்டப்பட்டிருந்தனர். அதன் காரணமாக சாதியவாதிகள் திரையை நோக்கி கற்களை வீசத் தொடங்கினர்; மேலும், இயக்குனரும் நடிகருமான டேனியல் மற்றும் ரோசியையும் அங்கிருந்து விரட்டியடித்திருக்கின்றனர். அந்த திரையரங்கிற்கு ஏற்பட்ட சேதத்தின் அளவு குறித்துப் பல்வேறு மாறுபட்ட தகவல்கள் நிலவினாலும், இச்சம்பவம் ரோசி மற்றும் டேனியல் ஆகிய இருவர் மீதும் ஏற்படுத்திய கடும் பாதிப்பு மட்டும் மிகத் தெளிவாகப் புலப்படுகிறது.

 


மேலும் இத்திரைப்படம் திரையிடப்பட்ட மூன்றாவது இரவில், ஆவேசமடைந்த ஒரு பெரிய கும்பல் ரோஸியின் வீட்டைத் தாக்கித் தீயிட்டுக் கொளுத்தியிருக்கிறார்கள். அந்த வீடு, ஒரு சாதாரணக் குடிசையைத் தவிர வேறொன்றும் அல்ல. ரோசியின் குடும்பத்தினர்அங்கிருந்து தப்பித்து ஓடினர்; ரோசியோ உதவி தேடி இருளை நோக்கி தனியே ஓடியிருக்கிறார். அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளை, குன்னுக்குழி எஸ். மணி மிகக் கவனத்துடனும் விரிவாகவும் ஆய்வு செய்து ஆவணப்படுத்தியுள்ளார்.

 "அதுநள்ளிரவுகடந்தநேரம்; கரமனைப் பாலத்திற்கு அருகே அவள் ஓடிக் கொண்டிருந்தபோது, ​​ஒரு சரக்கு லாரி வருவதை அவள்கண்டாள்," என்று ரோசியைப் பற்றித்தான் எழுதியுள்ள நூலில் எஸ். மணிகுறிப்பிடுகிறார். அந்த லாரியை கேசவபிள்ளை என்பவரே ஓட்டிச் சென்றார். அவள் சாலையின் நடுவே நின்று, தன் கைகளை உயர்த்தி, உதவி கோரி உரக்கக் கூவினாள். எனவே, பிள்ளை அவளை அந்த லாரியில் ஏற்றிக் கொண்டார்; பின்னர் அவர்கள் நாகர்கோயிலை நோக்கித் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.



நடிப்பெனும் வாழ்வைத் துறந்த ரோசி

கேசவ பிள்ளை என்ற தமிழ் லாரி ஓட்டுனரையேத் திருமணம் செய்துகொண்டார் ரோசி. ரோசியைத் திருமணம் செய்துகொண்டதற்காக கேசவ பிள்ளை தனது சாதி சமூகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்; பின்னர் அவர்கள் தமிழ்நாட்டின் நாகர்கோவிலில், வேறு ஒரு பகுதியில் குடியேறினர். அங்கு ரோசி "ராஜம்மாள்" என்ற இயற்பெயரைப் பயன்படுத்தத் தொடங்கினார். தமிழக வாழ்வில் ரோசியோ அவரது கணவரோ, ரோசியின் கடந்தகால வாழ்க்கையைப் பற்றி யாரிடமும் ஒருபோதும் வெளிப்படுத்தியதில்லை. அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு தந்தையின் வழியாக உயர் சாதி அடையாளமே வழங்கப்பட்டது; இதனால் அவர்களால் தங்கள் தலித் பாரம்பரியத்தை ஏற்றுக்கொள்வது சாத்தியமில்லாமல் போனது. மலையாளத் திரைப்பட உலகின் முதல் கதாநாயகியான ரோசியை அப்போதைய ஆதிக்க வரலாறு மறைத்துவிட்டது; பல ஆண்டுகளுக்குப் பிறகே, தலித் சிந்தனையாளரான குன்னுக்குழி எஸ்.  மணியின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் ரோசியின் வரலாறு வெளிச்சத்திற்கு வந்தது. ரோசியைப் பற்றிய தனது முதல் கட்டுரையை மணி 1971-ஆம் ஆண்டில் எழுதினார். அதற்காக அவர், பல ஆண்டுகளுக்கு ரோசியைத் தேடும்பணியைத் தொடர்ந்தார்.  ரோசியின் உறவினர்கள் பலரிடமும் இது குறித்துப் பேசினார். "2000-ஆம் ஆண்டிற்குப் பிறகே, ரோசி தமிழ்நாட்டில் வசித்து வருகிறார் என்பது எங்களுக்குத் தெரியவந்தது," என்று அவர் கூறுகிறார். "அவர் திரட்டிய தகவல்களைக் கொண்டு எழுதிய கட்டுரைத்தொடர், 'சித்ரபூமி' (Chithrabhumi) எனும் திரைப்பட இதழில் 2004-ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களிலும், 2005-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலும் வெளியானது.

2013-ல் ஒரு மலையாளத் தொலைக்காட்சி அலைவரிசை, ரோசியின் மகள் பத்மாவைத் தொடர்பு கொண்டபோது, ரோசியின் நடிப்புத் தொழில் அல்லது திருமணத்திற்கு முந்தைய வாழ்க்கை குறித்த எந்தத் தகவலும் அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. 2025ல் பிபிசி (BBC) நிறுவனம் ரோசியின் பிள்ளைகளைத் தொடர்புகொள்ள முயற்சித்த போதிலும், இத்தகைய கவனத்தை அவர்கள் விரும்பவில்லை என்று அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர். சாதி பாகுபாட்டால் பாதிக்கப்படுபவருக்கு ஏற்படும் மனக்காயம் எவ்வளவு ஆழமானதாக இருக்கக்கூடும் என்பதை ரோசியின் நடிப்பு நினைவுகள் மற்றும் அடையாளங்கள் அழிக்கப்பட்ட விதம் காட்டுவதாகப் பேராசிரியர் பின்னி கூறுகிறார். இதுபோன்ற சாதிய வஞ்சம் ஒடுக்கப்பட்டவரின் எஞ்சிய வாழ்வையே வடிவமைக்கும் அல்லது தீர்மானிக்கும் அளவுக்குத் தீவிரமானதாக இருக்கக்கூடும்," என்று கூறும் அவர், ரோசிக்கு இறுதியில் ஒரு பாதுகாப்பான வாழ்வியல் சூழல் கிடைத்ததில் மகிழ்ச்சி என்பதாக எழுதியுள்ளார்..

சாதியால் மறைந்து, காலத்தில் துளிர்த்து நின்ற ரோசி

ஆய்வாளர்கள், கதையாசிரியர்கள் மற்றும் தலித் செயல்பாட்டாளர்களால் பி.கே.ரோசியின் முதல் திரை நடிப்புப் பங்களிப்பு நினைவு மீட்கப்பட்டது. அதன் வழியாக, 2012-ஆம்ஆண்டில், கேரள மாநிலத் திரைப்பட அகாடமியால் ஆண்டுதோறும் வழங்கப்படும் சிறந்த திரைப்பட நடிகைக்கான விருதுக்கு பி. கே. ரோசியின் பெயரைச் சூட்டலாம் என்று கேரள மாநில முதலமைச்சர் உம்மன்சாண்டி பரிந்துரைத்தார். பி.கே.ரோசி நினைவு கமிட்டி கட்டிடம் (P.K. Rosy Memorial Committee) 2015ல் அமைச்சர் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணனால் திறந்து வைக்கப்பட்டது. தமிழகத்தில் 2018-ஆம் ஆண்டில், இந்தியத் திரைப்படங்களில் தலித் கலாச்சாரத்தைக் கொண்டாடும் வகையிலான மூன்று நாள் திரைப்படவிழா ஒன்றை இயக்குநர் பா. ரஞ்சித்தின் 'நீலம்பண்பாட்டு மையம்' (Neelam Cultural Centre) நடத்தத் தொடங்கியது. அப்போதே இது 'பி. கே. ரோசி திரைப்படவிழா' (P. K. Rosy Film Festival) எனப் பெயரிடப்பட்டு, தலித் கலாச்சாரம் மற்றும் வரலாற்றைக் கொண்டாடும் மாற்று திரைப்பட விழாவாக மக்களிடம் சென்றடைந்தது. இத்திரைப்படங்கள் சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு இடங்களில் திரையிடப்படுகின்றன. 'பி. கே. ரோசி திரைப்படவிழா' 2026 ஆம் ஆண்டு வரை மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிச்சயமாக இன்னும் பல முன்னேற்றங்கள் கண்டு தொடர்ச்சியாக நடைபெறும் எனவும் தெரிகிறது. 




திரைத்துறையில் பெண்களுக்கான பணிச்சூழலை பாதுகாப்புடன் மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் 'விமன் இன் சினிமா கலெக்டிவ்' (WCC) அமைப்பு, 2019-ஆம் ஆண்டில் பி. கே. ரோசியின் நினைவாக 'பி. கே. ரோசி திரைப்படச் சங்கம்' (P. K. Rosy Film Society) என்ற அமைப்பைத் தொடங்கியது. WCC-யின் நிர்வாகக் குழுவைச் சேர்ந்த 11 பெண்களைக் கொண்ட குழுவால் வழிநடத்தப்படும் இச்சங்கம், பாலினம், வர்க்கம், மதம் அல்லது சாதி ஆகியவற்றின் காரணமாகத் திரைப்பட வரலாறு மற்றும் இத்துறையிலிருந்து வெளியேற்றப்பட்ட அனைவரையும் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள மொத்தம் 170 திரைப்படச் சங்கங்களில், பெண்களால் மட்டுமே நிர்வகிக்கப்படும் நான்காவது சங்கமாகவும், பெண் திரைப்படக் கலைஞர்களால் நடத்தப்படும் முதல் சங்கமாகவும் இந்த 'பி. கே. ரோசி திரைப்படச் சங்கம்' திகழ்கிறது. மேலும், 2020-ஆம் ஆண்டில் 'பிரியாணி' (Biriyaani) திரைப்படத்தில் நடித்ததற்காக மலையாளத் திரையுலகின் சிறந்த நடிகைக்கான விருதை வென்ற கனி குஸ்ருதி, அந்த வெற்றியை பி.கே. ரோசிக்கு அர்ப்பணித்தார். குறிப்பாக பி. கே. ரோசியின் 120-வது பிறந்தநாளான 2023 பிப்ரவரி 10 அன்று, கூகுள் நிறுவனம் 'டூடுல்' (doodle) மூலம் அவரைச் சிறப்பித்தது. ஆனாலும், அவர் காலத்தில் அவருக்கான சிறு அங்கிகாரம் கூட கிடைக்காதது நம் மனதைக் கனக்கச் செய்கிறது. ஆம், இந்தியத் திரைப்படத்துறை மட்டுமின்றி நாடகத்திலும் முதல் நடிகையான பி.கே.ரோசியின் 'விகதகுமரன்' திரைப்படம் வெளியாகி 64 ஆண்டுகளுக்குப் பிறகும், அவர் மறைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும் பல்வேறு கலைஞர்களின் தொடர் போராட்டத்தின் மூலமே பி.கே.ரோசிக்கு இத்தகைய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. அதேசமயம் தமிழ் மற்றும் மலையாள நாடகத்துறையினர் ஒருவர் கூட, முதல் பெண் நாடக நடிகை பி.கே. ரோசியின் நாடகப்பங்களிப்பினை பாராட்டி அவரின் பெயரால் எந்தவொரு வரலாற்று அங்கிகாரமும் உருவாக்கவில்லை என்பதாகவே தெரிகிறது. இத்தகைய இடைவெளியை சிறிதளவிலேனும் இக்கட்டுரை நிரப்பத் தொடங்கியிருக்கிறது என்று நம்புகிறேன்.



திரைப்படமல்ல - திரைப்பாடம்

ரோசி இறுதியில் அச்சமற்று வாழ்ந்தாலும், அதற்கான விலையாக, அவர் தனக்கிருந்த நடிப்புக் கலை மீதான ஆர்வத்தையும் முதல் நாடகப் பெண் கலைஞர் மற்றும் திரைப்பட நடிகர் எனும் கலை அடையாளத்தை இழந்திருக்கிறார். அந்த இழப்பின் மூலம், இனி யாருக்கும் இத்தகைய ஒடுக்குமுறை நடைபெறாமல் பார்த்துக் கொள்ளுங்கள் எனும் முக்கியச் செய்தியை விட்டுச் சென்றிருக்கிறார். அதனால்தான் அவருடைய வரலாற்றை வாசித்த நமக்கு நெஞ்சம் கணத்த உணர்வு இன்னும் நீடிக்கிறது. ஆம், மலையாள சினிமாவின் முதல் தலித் பெண் நடிகர் ரோசி, தான் நேசித்த கலையை விட உயிர் வாழ்ந்தால் போதும் என நினைத்தார்; அதனால், அவர் தனது கடந்த கால கலை வாழ்வியல் நெருக்கடிகளை பொதுவெளியில் பேசவோ அல்லது இழந்த தனது நடிப்பு அடையாளத்தை மீட்டெடுக்கவோ ஒருபோதும் முயற்சிக்கவில்லை. “அது அவருடைய தோல்வி அல்ல – அது நம் சமூகத்தின் தோல்வி” என்பதை நாம் ஒப்புக்கொள்ளும் போதுதான். இனி வரும் காலங்களில் இத்தகைய சாதி, மதம், நிறம் மற்றும் பால் பாகுபாட்டு ஒடுக்குமுறைகள் ஒருபோதும் ஏற்படாவண்ணம் நாம் தடுக்க முடியும்.

 நன்றி - கலைமுகம் இதழ் 82                                                                                

                                                                                                                            ஞா.கோபி

புதுச்சேரி, இந்தியா

Comments

Popular posts from this blog

உணர்வுகள் நடனமிடும் ரஷித் ஜான்சனின் அரூப ஓவியங்கள் - ஞா. கோபி

தற்கால நாடகங்களைப் பார்ப்பதன் வழி கிட்டும் அனுபவங்கள்

எளியோர் வலிகளை நாடகப் படிமமாக்கிய ரத்தன் தியாம் – 1948 – 2025