இந்திய நாடக மரபில் முனைவர் ஷிபு எஸ் கொட்டாரம் பங்களிப்புகள்.

 

முனைவர் ஞா.கோபி, புதுச்சேரி



இந்திய நாடக மரபில் முனைவர் ஷிபு எஸ் கொட்டாரம் பங்களிப்புகள்.

நாடகவியலாளர் பேராசிரியர் முனைவர் ஷிபு எஸ். கொட்டாரத்தின் புதுச்சேரி கால நாடகச் செயல்களன்களைப் பற்றி மீள் நினைவுக்கு செல்லும் வாய்ப்பு அவர் இறந்த பின் நடக்கும் என நான் ஒருப்பொதும் நினைத்ததில்லை. 07.08.2026 அன்று மதியம் திருச்சூர் நாடகப் பள்ளியில் பயிலும் இலங்கை (மலையக) மாணவர் தம்பி சுதர்சன் தொலைபேசியில் “அண்ணா, ஷிபு மாஸ்டர் 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று மருத்துவமனையில் இறந்து விட்டார்” என மெல்லியக் குரலில் தகவல் தந்தார். அப்போதிலிருந்து ஷிபு அண்ணன் குறித்த நினைவுப் படிமங்கள் மேலெழும்பத் தொடங்கின.

 

என் ஓவியக் கல்லூரியின் இறுதியாண்டில் (2002) நான் நவீன நாடகம் பார்க்கத் தொடங்கி, பின்னர் நடிகராக அதில் பங்கேற்று, நாடகமே என் வாழ்வின் பூரண கற்றல் தளம் என முடிவு செய்து, புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்தேன். அதனால், தமிழ் நாடக ஆளுமைகளையும் அவர்களது செயல்பாடுகளையும் தேடித் தெரிந்துக்கொள்வது, அவர்களை நேரில் சந்திப்பது, பயணித்தேனும் அவர்களது படைப்புகளை நேரில் பார்த்துவிடுவது என இருந்தேன். அப்போது மறைந்த அண்ணன் வேலாயுதம் அவர்களே எனக்கு முதண்மை வழிகாட்டி. நாடக ஆளுமைகள் மற்றும் நாடக நூல்கள் என என்னிடம் பேசிக்கொண்டிருப்பார். அப்படி ஒருமுறை அவர் பேச்சின் வழியாக அறிமுகமான பெயர்தான் ஷிபு கொட்டாரம். “ஷிபுவிடமிருந்து நடிப்பென்றால் என்ன என்பதைக் கற்றுக் கொண்டேன். அதனால்தான் நான் நடிப்பதற்குப் பயப்படுகிறேன்.” என்றார் வேலாயுதம். எனக்கு அப்போது அந்த சொல்லின் வீரியம் புரியவில்லை. தொடர்ச்சியாக நாடகம் நடிக்கும்போது அதன் உண்மை புரிந்தது.



 

அதுபோல், பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஓரிருவர் பாடவேளையில் நாடக நிகழ்தளம், அரங்க வடிவமைப்பு மற்றும் ஒளி வடிவம் பற்றி பாடம் எடுக்கும் போது நிச்சயம் ஷிபுவின் பெயர் மற்றும் அவரது சில நாடக படைப்பு உதாரணங்கள் சுட்டிக்காட்டப்படும். பல சில ஆண்டுகளுக்கு பிறகு ஒருமுறை அவரை கேரள நாடக விழா ஒன்றில் ஷிபு அண்ணனை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நிறைய பேசினோம். இறுதியாக விடைபெறும் போது, ”ஏய் கோபி, தியேட்டர் தான் வாழ்க்கைன்னு முடிவு செஞ்சிட்டன்னா தொடர்ச்சியா செய். அப்பப்போ நிறையா கஷ்டம் வரும். ஆனா நீ சாகும்போது நல்ல வாழ்க்கை வாழ்ந்திருக்கேன்னு திருப்தியா சாவே.” அப்படின்னு மலையாளம் கலந்த தமிழில் சொல்லி அனுப்பினார்.  அப்போது அது ஒரு சம்பிரதாய வாக்கியம் என்றே கருதினேன். அதே சமயம் அந்த வாக்கியத்தை என்னிடம் அவர் சொல்வதற்கு அரங்க செயல் நம்பிக்கை என்ற ஒன்று எங்களுக்கிடையில் இருந்திருக்கும் அல்லவா. அந்த நம்பிக்கைக்காக இன்னும் செயல்படுகிறேன். என்பதே உண்மை ஆனால் ”நீ சாகும்போது திருப்தியா சாவே” என்ற பகுதி குறித்தெல்லாம் நான் சிந்தித்ததே இல்லை.  ஆனால், அவர் உடல் மருத்துவமனையிலிருந்து முதலில் எடுத்து வந்து 09.08.2026 அன்று பொதுப்பார்வைக்கு அந்த திருச்சூர் நாடகப்பள்ளியின் பேராசிரியர் இராமானுஜம் அரங்கில் வைக்கப்பட்டது.  அப்போது ”நீ சாகும்போது திருப்தியா சாவே” என்று என்னிடம் சொன்னதன் அர்த்தம் அவரது நாடக வாழ்வின் இறுதி பக்கத்தைத்தான் என்ற பேருண்மை விளங்கியது.

 


அவரது இன்னாள் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், நண்பர்கள், அரசு அதிகாரிகள், கல்வி வளாகத்தின் காவலர்கள், சுற்றிலும் உள்ள பொதுமக்கள் மற்றும் உடன் பணியாற்றுபவர்கள்  என பெரும் அமைதி சூழ்ந்திருந்த அந்த தளத்தில் அவ்வப்போது கட்டுப்படுத்த முடியாத கண்ணீர் பெருக்கெடுத்தது. மாஷே என்ற ஒற்றை வார்த்தைதான் அந்தக் கண்ணீர்களின் இடையில் எப்போதும் இருந்தது. அவை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் என்ற அளவினையெல்லாம் தாண்டியது. அந்த கடவுளின் தேசம் முழுக்க அவரது நாடகப்பங்களிப்பு இருந்திருக்கிறது என்பதற்கான சான்று. மேலும் அவரது செயல் அர்ப்பணிப்பு அங்கு வந்த அத்தனை நினைவுகளிலும் தங்கியிருக்கிறது என்பது பெரும் உண்மையையாய் வெளிப்பட்டது.

 

கேரளத்தின் கோட்டயம் மாவட்டம் நீலூரில் பிறந்த முனைவர் ஷிபு எஸ். கொட்டாரத்தின் நாடகப் பயணம், உள்ளூரில் அவரது சிறு வயதிலிருந்தே தொடங்கியது என்றாலும்  மேல்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்தவுடன் திருச்சூர் நாடக மற்றும் நுண்கலைப் பள்ளியில் மாணவராக சேர்ந்தார் ஷிபு. இப்போது அவரது வாழ்வு மற்றும் மரணத்தின் பயணத்திலிருந்து ஒருபோதும் பிரிக்க முடியாததாக மாறியிருக்கிறது. அந்தத் தளம் அவரது வாழ்க்கையை மட்டுமல்லாமல், எண்ணற்றோரின் நாடக வாழ்க்கையையும் வடிவமைத்தது.

அப்பல்கலைக்கழக மாணவர்கள் பலர் ஷிபு பற்றி நினைவுகளைப் பகிர்ந்துக்கொண்டார்கள். அதில் ஒரு மாணவர் குறிப்பிட்டது மிகவும் முக்கியத்தவமானது. “கேரளப் பல்கலைக்கழகத்தின் காலிக்கட் பல்கலைக்கழக நாடக மற்றும் நுண்கலைப் பள்ளியின் சார்பில் அறிவைப் போதிக்கும் ஆசிரியர்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால், மிக அரிதாகவே, தங்களது வாழ்க்கையே ஒரு வாழும் அரங்கக் கல்வியாக மாறியவர்களை நாம் பார்க்க முடியும். அத்தகைய அரிய ஒருவர்தான் ஷிபு மாஸ்டர். அவர் தனது  பேச்சுக்களாலும் நிகழ்த்துகலைப் படைப்புகளாலும் மட்டுமல்லாமல், கருணையாலும், நேர்மையாலும், தான் வாழும் விதத்தின் மீது கொண்டிருந்த உறுதியாலும் பல பாடங்களைக் கற்றுக்கொடுத்திருக்கிறார்.” என்றார்.

 


ஆம், பேராசிரியர் முனைவர் ஷிபு எஸ். கொட்டாரம் அவர்கள் அத்தகைய அரிய ஆளுமைகளில் ஒருவர். இன்று, கேரளம் மட்டுமின்றி தமிழகம், புதுச்சேரி, கர்னாடகம் மற்றும் ஆந்திர நாடகச்செயல்பாட்டாளர்கள் அவரது செயல் நினைவை பேசுகிறார்கள். அவர்கள் ஷிபு ஒரு சிறந்த பேராசிரியர், திறமையான நாடக இயக்குநர், தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒளியமைப்புக் கலைஞர், சிறப்புமிக்க ஆய்வாளர் ஆகியோரின் மறைவிற்காக மட்டும் துயரப்படவில்லை. பல தசாப்தங்களாக இந்திய அரங்கம் வளர்ந்து வரக் காரணமான தூணாகவும் இருந்த, இந்திய நாடக ஆன்மாக்களில் ஒருவரையும் நாம் இழந்திருக்கிறோம் என்பதற்காகத் துயருறுகிறார்கள்.

 

புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தில் 1990–1992 காலகட்டத்தில் நாடகக் கலையில் முதுகலைப் பட்டத்தையும், 1993–1998 காலகட்டத்தில் “உடல்மொழி: வாழ்விலிருந்து நிகழ்த்துதலுக்கு” என்ற தலைப்பிலான அவரது முனைவர் பட்ட ஆய்விற்காக முனைவர் பட்டத்தையும் பெற்றார். ஏறக்குறைய எட்டாண்டுகளுக்கும் மேலாக அவர் புதுச்சேரியில் வாழ்ந்திருக்கிறார். அத்தனை ஆண்டுகளில் அவர் வெறும் கல்வித்தளங்களில் மட்டுமல்லாமல், தான் இருந்த இந்த புதுவையின் பார்வையாளர்களுக்கும் தனது சக கலைஞர்களுக்கும் காலத்தின் அரங்கத் தேவையையும் நீடித்த அரங்க மரபையும் ஷிபு பகிர்ந்திருக்கிறார். குறிப்பாக இந்தக் காலங்களில்தான் அவர் தனது இணையர் முனைவர் ஜீவாவுடன் இணைந்து ஆப்டிஸ்ட் (APTIST – a parallel theatre for innovation with time and space) நாடகக் குழுவினை ஆரம்பித்து அதன் தயாரிப்பில் அவர் பல நாடகங்களை புதுச்சேரியின் பல பகுதிகளில் நிகழ்த்தியிருக்கிறார். அவைகள் பற்றி அக்காலங்களில் அவருடன் பயணித்த திருமதி மின்னல் பல நினைவுக் குறிப்புகளைப் பகிர்ந்தார்.  ”குறிப்பாக கலவைக் கல்லூரி (calve college) எனும் அரசுப் பள்ளியின் மைய வளாகத்தை திறந்தவெளி அரங்காகப் பயன்படுத்தத் தொடங்கியது ஷிபுதான். அங்கு அவரால் இயக்கப்பட்டு நிகழ்த்தப்பட்ட நாடகங்களாக ஆண்டிகனி, நாகமண்டலா போன்றவை குறிப்பிடத்தக்கன. அதுபோல் அலியான்ஸ் பிரான்சேஸ் நாடக அரங்கத்திலும் நிறைய நாடகங்களை நிகழ்த்தியிருக்கிறார். நாடகங்களுக்கு நன்கொடை வாங்க புதுச்சேரியின் நகரங்களில் அலைந்து வியாபாரிகளிடம் பேசி சிறிய அளிவில் பணம் பெற்று நாடகங்களை தொடர்ச்சியாக நிகழ்த்தியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல்  புதுச்சேரியின் பல பகுதிகளிலும் வீதி நாடகங்கள் இயக்கி நிகழ்த்தியிருக்கிறார். ஷிபு நாடகங்களைப் பார்க்க சென்னை நாடகக்காரர்கள் பலர் புதுசேரிக்கு அப்போது வருவார்கள்.”

அதுபோல் முனைவர் அனீஸ் தனது நினைவுப் பகிர்வில்  ஷிபுவின் புதுச்சேரி கால நாடகங்களில் நிகழ்த்து தளம் பரிசோதனை முறையில் செய்தவற்றை நினைவுக்கூறுகிறார். ”பாக்கிஸ்தான் சிறுகதையான ‘தி எட்ஜ்’ (on the edge ) என்ற நாடக ஆக்கத்தில் ஸேண்ட்விஜ் தியேட்டர் (Sandwich Theatre) என்ற பாணியில் சாலையை குறுக்காக மறைத்து இரண்டு பக்கமும் பார்வையாளர்களை அமரவைத்து நாடகம் நிகழ்த்தினார்(1997).” என்பது சான்றாக நிற்கிறது.

 

அதுபோல் மலையாள நாடகங்கள் பலவற்றை தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார் ஷிபு அவர்கள். குறிப்பாக ‘சரித்திரம் முடிவதில்லை’ என்ற நாடகம் அவர் மற்றும் அவரது இணையர் ஜீவா மொழிபெயர்ப்பில் புதுச்சேரி கசடற பதிப்பகம் வெளியீட்டில் வந்துள்ளது. அது குறித்து சமீபத்தில் ஷிபு தனது வகுப்பறையில் பேசியிருக்கிறார். அதாவது கோமல் சுவாமிநாதனின் சுபமங்களா நாடக விழாவில் இந்த நாடகம் மேடையேற்றப்பட்டதாகவும். கோமல் சுவாமிநாதனுக்கு மிகவும் பிடித்த நாடகம் இது என்பதால் அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இம்மொழிபெயர்ப்பும் நாடகமாக்கலும் செய்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.

 

அதுபோல் நாடக வெளி பத்திரிக்கைச் செய்தி வழியாக 1992 ல் புதுச்சேரி பல்கலைக்கழக நாடகப்பள்ளியில் நடத்தப்பட்ட முகமூடி பயிற்சிப்பட்டறையில் பயிற்சியாளராக செயல்பட்டிருக்கிறார் ஷிபு. இவற்றையெல்லாம் தொடர்ந்து 2000 ஆம் ஆண்டுகளில் புதுச்சேரியில் செயல்பட்ட திரைப்பட நிறுவனமான Y.J.P. அகாடமி ஆஃப் ஆக்டிங் அண்ட் ஃபைன் ஆர்ட்ஸில் நடிப்புப் பயிற்றுனராக பணி செய்திருக்கிறார். அதன் பிறகுதான் கேரள மாநில சலச்சித்ர அகாடமி ஆகிய நிறுவனத்திலும் பணிபுரிந்தார். அங்கு அவர் அந்த நிறுவனத்தின் துணை இயக்குநராகப் பணியாற்றினார்.

 

2004ஆம் ஆண்டு, தன்னை முதன்முதலில் வளர்த்தெடுத்த அதே காலிக்கட் பல்கலைக்கழகத்தின் நாடக மற்றும் நுண்கலைப் பள்ளியில் உதவிப் பேராசிரியராகத் சேர்ந்தார். அங்கு அவர் பணியாற்றிய இருபத்திரண்டு ஆண்டுகளில் நாடகக் கலைஞர்கள், ஆய்வாளர்கள், இயக்குநர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் நாடகக் கல்வியாளர்களின் தலைமுறைகளை உருவாக்குவதற்காக அர்ப்பணித்த ஆசிரியராக அவர் மாறி இருக்கிறார். அதோடு மலையாள நாடக உலகிற்கு இயக்குநராக, அவரது கலைப் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை. Swathanthryathinte Murivukal, Kanalpaatha, Karnabharam, Spartacus, Pitha Uktha, Ila Pozhiyum Kalathu Oru Pularkaala Vela, Priyappetta Avivahithan, மற்றும் Marikkan Visammathikkunna Njangal, We Who Refuse to Die போன்ற படைப்புகள் மனித அனுபவத்திலும் சமூக உணர்விலும் ஆழமாக வேரூன்றிய அவரது நாடகப் பார்வையை வெளிப்படுத்தியவையாகக் கருதப்படுகின்றன.

 

அதூபோல் பல மொழி நாடகங்களுக்கு ஒளி வடிவமைப்புக் கலைஞராக, மேடை வெளியை கவித்துவமான நிலப்பரப்புகளாக அவர் மாற்றினார். காட்சியமைப்பின் வழியாகக் கதையாடலை உருவாக்கிய அவரது ஒளியமைப்புகள், பல தேசிய நாடக விழா நாடகத்தின் கதைசொல்லலின் பிரிக்க முடியாத ஓர் அங்கமாகின. அவரது அத்தகைய கலைப்பணிகளுக்காக கேரள நாடகத்துறையின் உயரிய விருதுகளில் சிலவற்றைப் பெற்றார். சிறந்த இயக்குநர், சிறந்த ஒளி வடிவமைப்பாளர், சிறந்த தயாரிப்பு ஆகிய பிரிவுகளில் கேரள மாநில விருதுகளையும், கேரள சங்கீத நாடக அகாடமியின் மதிப்புமிக்க கலாஸ்ரீ விருதையும் அவர் பெற்றார்.

 


ஆனால், அவரை நெருக்கமாக அறிந்தவர்கள் புரிந்துகொண்ட ஒரு உண்மை உண்டு. அவரது மிகப் பெரிய பணி நாடகப் படைப்புகளிலோ, விருதுகளிலோ, வெளியீடுகளிலோ அடங்கியிருக்கவில்லை. அவர் உருவாக்கிய மிகப் பெரிய படைப்பு பல்லாயிரம் நாடகக் கலைஞர்களின் அன்பு நம்பிக்கைகளைத்தான். அவரது மாணவர்களுக்கு அவர் ஒரு ஆசிரியர் மட்டுமல்ல. அறிவுரை வழங்குவதற்கு முன் கவனமாகக் கேட்கும் ஒரு வழிகாட்டி; மற்றவர்கள் தங்களை நம்புவதற்கு முன்பே அவர்களை நம்பிய ஒரு ஆசான்; தன்னுடைய அக்கறையை ஒருபோதும் வெளிப்படையாக அறிவிக்காமல், அமைதியாகக் கவனித்துக்கொண்ட ஒரு பெற்றோர் போன்றவர். என்று தொடங்கி பின் வரும் அத்தனையும் அவரது இன்னாள் மற்றும் முன்னாள் மாணவர்கள் பகிர்ந்துக் கொண்டவையே.

 

ஒவ்வொரு மாணவரும் தாம் கவனிக்கப்படுகிறோம், மதிக்கப்படுகிறோம், ஒரு கலைஞராக உருவாகும் திறன் தமக்குள் இருக்கிறது என்பதை உணரும்படி செய்த அசாதாரணமான பெருந்தன்மை அவரிடம் இருந்தது. அவரது வீடு, அலுவலகம், ஒத்திகை அரங்குகள், வகுப்பறைகள், பள்ளியின் நடைபாதைகள் என அனைத்துமே இயல்பாகக் கற்றல் நிகழும் இடங்களாக மாறின. அது அதிகாரத்தின் வழியாக அல்ல; நம்பிக்கையின் வழியாக நிகழ்ந்த கற்றல்.

 

அவரது அரங்கக் கோட்பாட்டையும் நடைமுறை வாழ்வையும் தனித்தனியாகப் பிரிக்க முடியாது; ஒன்று மற்றொன்றுக்கு வெளிச்சம் தருபவை என்ற நம்பிக்கையுடன் அவர் வாழ்ந்தார். அவரது வகுப்புகளிலும் இந்தக் கொள்கை குறிப்பிடத்தக்க எளிமையுடன் வெளிப்பட்டது. சிக்கலான கருத்துகள் ஒருபோதும் அணுக முடியாதவையாக முன்வைக்கப்படவில்லை. மாறாக, அவை வாழ்வனுபவங்களாக மாற்றப்பட்டன; உடலின் வழியாகப் பயிற்சி செய்யப்பட்டன; நடைமுறையின் வழியாகக் கேள்விக்குள்ளாக்கப்பட்டன; சிந்தனையின் வழியாகப் புரிந்துகொள்ளப்பட்டன.

 

நாடகம் என்பது உண்மைத்தன்மையிலிருந்து தொடங்குகிறது என்பதை அவர் எங்களுக்கு நினைவூட்டினார். அது வெறுமனே நடிப்பின் உண்மை அல்ல; மனிதராக இருப்பதன் உண்மை. இதனால்தான் பல தலைமுறை மாணவர்கள் பட்டம் பெற்ற பிறகும் அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தனர். அவர்கள் தங்களது முன்னாள் ஆசிரியரைச் சந்திப்பதற்காக மட்டும் திரும்பி வரவில்லை; வாழ்நாள் முழுவதும் தங்களுக்குத் துணையாக மாறிய ஒரு வழிகாட்டியின் நம்பிக்கையையும் ஆறுதலையும் தேடி வந்தனர்.

 

திருச்சூர் நாடகப் பள்ளிக்குள் முனைவர் கொட்டாரம் அவர்கள் ஒரு தொடர்ச்சியின் அடையாளமாக விளங்கினார். மாணவராக இந்த நிறுவனத்தை அறிந்தார்; ஆசிரியராக அதன் உருவாக்கத்தில் பங்காற்றினார்; பல தசாப்தங்களாக நிகழ்ந்த மாற்றங்களுக்கிடையிலும் அதன் மதிப்புகளைப் பாதுகாத்தார். அவர் இந்த நிறுவனத்தின் நினைவுகளைச் சுமந்தபடியே, அதன் எதிர்காலத்தையும் உருவாக்கினார். பல வகைகளில், அவரது வாழ்க்கையும் இந்தப் பள்ளியின் வாழ்க்கையும் ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்க முடியாததாக மாறியிருந்தது. அவரது மறைவு எளிதில் விவரிக்க முடியாத ஒரு மௌனத்தை விட்டுச் சென்றுள்ளது.

 

இனி அவரை அறிந்தவர்கள் மத்தியில் நடைபெறவிருக்கும் ஒவ்வொரு ஒத்திகையிலும், ஒவ்வொரு வகுப்பறை உரையாடலிலும், ஒவ்வொரு ஒளியமைப்புக் குறிப்பிலும், நேர்மையான நாடகக் கலைஞராக இருப்பதன் அர்த்தம் குறித்து நடைபெறும் ஒவ்வொரு உரையாடலிலும் முனைவர் ஷிபு எஸ். கொட்டாரத்தின் நினைவு அமைதியாகத் தொடர்ந்து வாழும். அவர் வளர்த்தெடுத்த கலைஞர்களின் தலைமுறைகளில் அவரது தாக்கம் தொடரும். அவர் அமைதியாக வாழ்ந்து காட்டிய மதிப்புகளில் அது நிலைத்திருக்கும். முனைவர் ஷிபு எஸ். கொட்டாரம் அத்தகைய வாழ்க்கையையே வாழ்ந்து மறைந்திருக்கிறார்.

 

 


 

Comments

Popular posts from this blog

நாடகக் கலைஞர்களின் கலை வழி உறவு நிலை வெளிப்பாடுகள்

தற்கால நாடகங்களைப் பார்ப்பதன் வழி கிட்டும் அனுபவங்கள்

உணர்வுகள் நடனமிடும் ரஷித் ஜான்சனின் அரூப ஓவியங்கள் - ஞா. கோபி