மலையக மனித மாண்பில் நேசிப்பு உயிர்களை வார்த்தெடுக்கும் அரங்கின் பக்கங்கள்


                                   ஞா.கோபி,
அரங்கச்செயல்பாட்டாளர்
மலையக மனித மாண்பில் நேசிப்பு உயிர்களை வார்த்தெடுக்கும் அரங்கின் பக்கங்கள்

IMG_3607.JPG

நிகழ்கலைக்கலைஞனின் நிழல்
காலம் காலமாகத் தமிழ் அரங்கச்சூழலில் போதாமைகளுக்கான பெரும் களமாக இருப்பது எது? என்று எனைக்கேட்டால் நடிகர்களின் நடிப்பனுபவங்களையும் நடிப்புக் கலை மேம்பாட்டிற்கு அவர்கள் கடந்து வந்த அல்லது கடந்துக்கொண்டிருக்கும் செயல்கிரமத்தைப் (working process) பற்றி அரங்க வல்லுனர்கள் பேசாததும் எழுதாததும் மற்றும் அதற்காக முயற்சிக்காததும், என்பேன்.அது போலவே நாடகச் செயல்பாட்டாளர்கள்(இயக்குனர்,ஒளிவடிவமைப்பாளர்,இசைவடிவமைப்பாளர், உடை மற்றும் ஒப்பனையாளர் முதலானோர்)தங்களின் செயல்கிரமத்தையும் அரங்கம் தொடர்பான பயணங்கள் மற்றும் சந்திப்புகள் போன்றவை தரும் அனுபவங்களைப் பதிவு செய்யாமல் இருப்பதும் பொருந்தும். முன்னரெல்லாம் எழுத நேரமில்லை என்று சொல்லித் தப்பித்த நாம், இப்பொழுது முகப்புத்தகத்தில் நான்கைந்து புகைப்படங்களை போட்டு நாலுவரி எழுதிவிட்டுக் கடந்து விடுகிறோம்.ஆனால் எல்லா அனுபவங்களையும் எளிதில் கடக்க முடியாது என்பதைத்தான் அரங்கம் வலுவாகக் கற்றுக்கொடுக்கிறதே! அப்படி, மறக்கவோ, பேசாமல் மறுவேலை செய்யவோ விடாமல் தொடர்ந்து ஞாபக இடுக்கில் இருப்பவற்றைப் பேசிவிடச்சொல்லி தொந்தரவுக்குட்படுவதற்கு வடிகால், எழுதுவது மட்டுமே என எழுதத் தொடங்குகிறேன். ஏனெனில், அரங்கத்தின் காலம் ஆரம்பித்த காலம் தொட்டே, மனித மனங்கள் வேண்டி நிற்கும்  நேசிப்பு சூட்சமங்களைத்தான் வரலாற்றின் எல்லா நாடகங்களும் அடி நாதமாக கொண்டிருக்கின்றன. அவ்வகையில் இந்த 2017 ஆம் ஆண்டின் ஜுலை மாதம் மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவனம், கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற சர்வதேச கருத்தரங்கிற்கு ஆய்வுக்கட்டுரையோடு ஒரு அரங்கச் செயல்பாட்டாளராய் நான் பயணப்பட்டதே இங்கு காரணி.
பயணம் - படிப்பினை
அரங்கச் செயல்பாட்டாளராய் அவ்வப்போது சில கருத்தரங்கங்களுக்கு கட்டுரை எழுதுவேன் என்றால் காரணம்,கருத்தரங்கம் நடைபெறும் அந்த ஊருக்கு நான் பயணப்படாதவனாய் இருந்திருப்பேன். இதை சாக்கிட்டு அந்த ஊரைச் சுற்றிட வேண்டும். பயணம் என் அனுபவத்தில் உற்சாகத்தை மட்டும் தருவதல்லாமல் என் நடிப்பிற்க்கும் என் நாடகப்பிரதிக்கான களத்தையும் தருவதாய் இருக்கிறது. ஆம் காரணமே காரணி. பார்த்தேயாக வேண்டும் எனும் ஊருக்கே அப்படியென்றால். கடந்து வந்த என் நாடகச்செயல்பாட்டு அனுபவத்தில் பெரும்பகுதியான இடம் கொண்ட இலங்கை நாடகக்கலைஞர்களும் நாடக ஆசிரியர்களும் மட்டுமல்லாமல் வேலை செய்த எந்தப்பிரதியிலும் விடுபடவே வாய்ப்பு இல்லாமல் தொடர்ந்து வரும் அந்த நிலமும் மனித உயிர்களும் உள்ள ஒரு நாட்டிற்குப் போக வாய்ப்பென்றால் விடுவேனா? அப்படித்தான் கிளம்ப எத்தனித்தேன். நிச்சயம் சுற்றுலா மனப்பாங்கு சிறு துளி கூட முன்னெழும்பவில்லை. அதனால் ஒதுக்கிய பத்து நாட்களுக்கும் நாடகக் கலைஞர்களைச் சந்திப்பது அவர்தம் மாணவர்களோடோ குழுவினரோடோ பயிற்சிப்பட்டறை வழி அனுபவங்களை கொடுத்தும் பெற்றும் வரலாம் என்பதே எண்ணம். அதன்படி இலங்கை நாடக நண்பர்களுக்கு இயன்றவரை வாய்ப்புகளை ஏற்படுத்துங்கள் என தகவல் பறிமாற்றத்தைத் தொடங்கினேன். ஆனால் அப்போதுதான் மட்டகளப்பு நண்பர் விவேகானந்தராசாவின் திருமணம் முடிந்திருந்த்தது. அந்நிகழ்வினை ஒட்டி சென்ற இந்தியக்கலைஞர்களைக்கொண்டு சில இடங்களில் நாடக நிகழ்வும் சில இடங்களில் பயிற்சிப்பட்டறைகளும் நிகழ்த்தியிருந்தார்கள். அதனால் நண்பர்களால் உறுதியாக சொல்ல முடியாமல், வாருங்கள் பார்த்துக்கொள்ளலாம் என்றனர். ஆனால், கருத்தரங்கத்தை ஒட்டி வாருங்கள் என்று மெஸஞ்ஞர் வழி பேசத் தொடங்கிய தம்பி சுதர்சன், மலையகம் உங்களுக்கு நிச்சயம் புது அனுபவம் தரும் நாங்கள் நிறைய ஏற்பாடுகள் செய்துக் கொண்டிருக்கிறோம், உங்கள் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என்றார். அவர் முகப்புத்தகத்தின் வழி என்னையும் என் செயல்களையும் அறிந்தவர். ஆனால், அவர் பேசிய அன்றைய இரவு நேரம் அவர் பக்கத்திலிருந்து வந்த இரவுப்பூச்சிகளின் ஓசையும் அவ்விடத்தின் பெரும் மெளனத்தை மேலும் அர்த்தமாக்கியது. மெளனங்கள்தானே நாடகத்தின் அர்த்தம். மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் அனுபவங்கள் தனியாக எழுதவேண்டியவை.
20 ஜுன் அதிகாலை 5மணிக்கு தம்பி செ.ரஜீவ் தங்கியிருந்த இடம் வந்து மட்டகளப்பு பேருந்து நிலையம் கூட்டிச்சென்றார். பேருந்து வருகைக்காக காத்திருந்தபோது பயணிகள் காத்திருப்பு இடங்களின் மேல் சுவற்றில் ”மட்டகளப்பு நாட்டுக்கூத்துக்களில் வரும் கூத்தாடுபவர்களின் தோற்றம்” என்று எழுதி அத்தோற்றங்கள் கரு நிறத்தில் வரையப்பட்டிருந்தது.கை அந்த இருளிலும் புகைப்படம் எடுத்தது.
IMG_20170620_051243.jpg
பேருந்து வர, பயணம் தொடர்ந்தது.தம்பி ரஜீவ், மலையகம் பற்றிய வாழ்வியல் வரைபடத்தை சிரித்தபடியே வார்த்தைகளாக என் முன் விரிக்கத்தொடங்கினார்.
உடல் நிலத்தோற்றம்
1815 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் இலங்கையை முழுவதுமாக தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்திருந்தனர். இலங்கை மலையகப் பகுதிகளின் மண்வளம், காலநிலை போன்றவை பெருந்தோட்ட பயிர்ச்செய்கை முறைக்கு ஏற்றதாக இருந்ததால், உற்பத்தித் திறனைப் பெருக்க தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் அடிமைகளாக வேலை செய்ய நிறைய மனிதர்கள் தேவைப்பட்டிருக்கின்றனர். அக்காலக்கட்டத்தில் இலங்கையும் இந்தியாவும் ஒரே காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்ததால், அப்போது தென்னிந்தியாவில் ஏற்பட்ட கடும் வறட்சியை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டனர் ஆங்கிலேயர்கள். அதனடிப்படையில் பஞ்சம் பிழைக்க வந்த இந்திய வம்சாவழியினரின் மலையகக் குடியேற்றம் 19ம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே தொடங்கியிருக்கிறது.
ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன் கிழக்கிலங்கை கம்பெனிக் கூலிகளாக தமிழகத்திலிருந்து சென்ற 98.6 சதவீதத்தினருடன் இந்தியாவின் ஏனைய பகுதிகளிலிருந்துச் சென்ற குறைந்த அளவிலான மக்களும் என தொடங்கிய இவர்களது வாழ்வியல் சக்கரம், இன்று ஐந்தாவது சந்ததியாய் வளர்ச்சியடைந்த நிலையில் இருக்கிறது. கால ஓட்டத்தில் எவ்வித மாற்றமும் இன்றி இன்று வரை இம்மக்களை வாட்டி வதைக்கும் வேலைப்பளுவினிடையேயும் தங்களின் அடையாளம் கேள்விக்குறியான நிலையிலும் அவர்கள் அவர்களுக்காக வாழுகின்ற தருணங்களை தரும் சடங்குகள் மற்றும் சடங்கியல் நிகழ்த்துக்கலை வடிவங்களும்தான் இவர்களின் வாழ்வியல் தளத்தில் முக்கியப் பங்காற்றுகிறது என்று முடித்திருந்தார். அப்போது கந்தக்கட்டியப் பகுதிக்கு வந்தடைந்துவிட்டோம். மேலும் கீழுமாக பெருத்த இடைவெளிகளுக்கிடையே சிறிய அளவிலான வீடுகள். இருபது படிகள் ஏறி ஒரு வீட்டுக்குள் நுழைந்தோம். அங்கு யாருமே இல்லை. இந்த வீட்டிலிருப்பவர்கள் எல்லாம் எங்கே? என்று கேட்டேன். மாலையில் வருவார்கள் என்றார் ரஜீவ்,மேலும் சார்,சிறு அளவில் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் மாலையில் எங்கள் நாடகக் குழுவினருடனான சந்திப்பு இருக்கிறது என்றார். ரஜீவ் மற்றும் சுதர்சன் இருவரும் மட்டகளப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நாடகத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்தவர்கள். அப்போதுதான், கந்தக்கட்டிய மட்டுமில்லாமல் அதன் சுற்றுப்புற ஊர் இளைஞர்கள், சிறுவர்களையும் கொண்டு “அடையாளம்” என்ற பெயரில் நாடகக்குழுவைத் தொடங்கியிருந்தனர். மூன்று நாட்களில் வீதி நாடக நிகழ்வு ஒன்றின் தயாரிப்பிலும் இருந்தனர். என் அறிவுக்குப் பட்ட வரையில் மலையகத்தின் இரண்டாவது தொழில்முறை நாடகக்குழு இது எனக் கருதுகிறேன்.
நிகழ்த்துக்கலைகளில் கட்டுண்டுக்கிடப்பவர்கள்
அந்நாள் மாலை நான்கு மணியளவில், தங்கிய வீட்டிலிருந்து கீழே இறங்கியதும் ஒரு திடல் அதனை ஒட்டி ஒரு சிறியக் கட்டிடம். அங்கு பள்ளி மாணவர்கள் நிறைய பேர் திரண்டிருந்தனர். உள்ளே சென்றதும் ரஜீவால் அனைவரும் அறிமுகப்படுத்தப்பட்டனர். சுற்று வட்டாரத்தில் நடத்தப்படும் விளையாட்டு, நாடகம், நடனம் போன்றவற்றின் போட்டிகளில் பங்கேற்று அவர்களால் வாங்கிக் குவிக்கப்பட்ட பெரிய அளவிளான கோப்பைகள் நினைவுக் கேடயங்கள் என நிறைந்திருந்தது. சிறிய வயதுள்ளவர், வயதில் பெரியவர்கள் என இரு குழுவாகப்பிரித்து ஆரம்பக் கட்ட அரங்கப் பயிற்சிகளை அளித்தேன். அவர்களின் மனமும் உடலும் நான் சொல்வதைச் செய்வதற்கு தயாராக இருந்தது.  அவர்கள் என்னை அவர்களுள் ஒருவனாக முழுமையாக ஏற்றுக் கொண்டது தெரிந்ததும். அவர்களின் உலகில் உள்ளதை கேட்டு பெற ஆரம்பித்தேன். அப்போது, கோயில் கட்டிடம் மற்றும் சிலைகளுக்கு வண்ணம் தீட்டும் இளம் கலைஞர் நவா மற்றும் அவரது வயது ஒத்த நண்பர்கள் சிலரும் வந்து சேர்ந்தார்கள். அதன்பின், தேயிலை தோட்டத்தின் பின்புலத்தைக் கொண்டு பாடப்பட்ட தாலாட்டுப் பாடல், கும்மிப்பாடல் மற்றும் அவர்களிடத்தே இருக்கும் நாட்டார் சடங்கியல் கூத்தான ‘காமன் கூத்து’ பாடல்களையும் ஆடல்களையும் ஒவ்வொருவரும் இசைக்கருவிகள் துணைக் கொண்டு சரளமாக வெளிப்படுத்தினர். ஆடியவர்களில் 16 வயதுடைய கதீஸ், தாளத்திற்கேற்ற ஆடலின் வழி என் கவனத்தை ஈர்த்திருந்தான். அவனுடைய ஆடல் அர்ப்பணிப்பிற்கு துணை செய்யும் விதமாக நவா,முன்னின்று கூத்தின் பல்வேறு பாடல்களை பாடத்தொடங்கினார்.
”நீதி வினாயகனே
இந்த நெடுமகன் சரித்திரத்தை ஓதும் வினாயகனே…
சத்குரு சம்மாரனின் சதிமாறன் வில்கதையை….
இந்த சிறியேன் உரைக்கும் கவியில் சிறு பிழை இருந்தாலும்
பெரிதாகப் பாராமல் பாதுகாப்பாய் சரஸ்வதியே….”
என்று பாடப்பாட அனைத்துச் சிறுவர்களாலும் இணைந்துப் பின்பாட்டுப் பாட முடிகிறது. அதோடு,கதைப்பகுதியை விரிவாக அவ்விளைஞர் நவா, சொல்வதிலிருந்து முன்னோடிகள் இளையத் தலைமுறைக்கு எவ்வளவு கவனமுடன் கடத்தியிருக்கின்றனர்! என்பது பற்றி ஆச்சரியமுற்ற வேளையிலே, கந்தக்கட்டிய பாடசாலை அதிபர் திரு பொன்.ராஜகோபால் அவர்கள் அங்கு வந்து சேர்ந்தார். மலையகப் பண்பாட்டின் மீது அளப்பறிய நேசம் கொண்டவர் என்பது அவர் பேச ஆரம்பித்த சிறிது நொடியிலேயே உணர முடிந்தது. மேலும் பள்ளி தாண்டியும் அப்பகுதிப் பிள்ளைகளோடு வாழ்வின் பெரும் பகுதியைச் செலவிடும் இவரைப் போன்றவர்களால்தான் அச்சிறுவர்களும் அவ்விளைஞர்களும் பாரம்பரிய நிகழ்த்து வடிவங்கள் மற்றும் பண்பாட்டு சாரம்சங்களின் மீதும் இத்தகைய பிடிப்புக் கொண்டிருக்கிறார்கள் என்பது எவ்வளவு முக்கியமானது.  இந்த கந்தகட்டியத் தோட்டத்தில் வருடா வருடம் அம்மக்களாலேயே நிகழ்த்தப்படும் இந்த நாட்டார் வகைக் கூத்து, சடங்கியல் நிகழ்வாகவே இருக்கிறது. ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ‘காமன் பண்டிகை’ யில் பிரதானமாக விளங்குகிறது இக்கூத்து. இது தொழில் முறைக் கூத்து வடிவம் இல்லையெனினும் பண்பட்ட தொழில் முறைக் கூத்து முறைமைகள் அனைத்தும் இதன் கட்டமைப்பில் காணக்கிடைக்கிறது. குறிப்பாக இதனைக் குறித்த கவனம் தமிழ் அரங்க ஆய்வாளர்களிடத்தில் இல்லாமல் இருந்ததே, இது குறித்த விரிவான தகவல்கள் எங்கு தேடினும் கிடைக்காமல் இருக்கக் காரணமாய் இருந்திருக்கலாம். அது குறித்து அன்றைய இரவே ரஜீவ், சுதர்சன், நவா மற்றும் அச்சடங்கியல் நிகழ்வில் பங்கேற்கும் சில சிறுவர்களுடன் பேசினேன். அதில் கிடைத்த முதன்மைத் தகவலாவன…
தமது பாரம்பரியத்தின் தொடர்ச்சியான வழக்காறுகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், கடவுள் வழிபாட்டு முறைகள் மற்றும் அச்சடங்கியல் கலைகளை நிகழ்த்தும் முறைகள் போன்றவை தொடர்ச்சியாகக் கடைபிடித்தது என்பதே, மலையகத் தமிழர்கள் வந்த இடத்தை தங்கள் வாழிடமாக மாற்றிக்கொள்ள ஏதுவாக இருந்தவற்றுள் மிக முக்கியமானதாக இருந்தது, அவ்வகையில், காமன் கூத்து, அர்ச்சுணன் தபசு, பொன்னர்சங்கர் கதை போன்றவற்றுடன் கும்மியாட்டம், கோலாட்டம், தாலாட்டு, ஒப்பாரி போன்றவையும் இப்போதுவரை இம்மக்களின் வாழ்வியலோடு பிண்ணிப்பிணைந்திருக்கிறது. அவற்றுள் கந்தக்கட்டியத் தோட்ட மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையிலான நம்பிக்கைச் சடங்குகளும் அதற்கு உறுதுணையாய் இருக்கும் நிகழ்த்துக் கலைக் கூறுகளும் கொண்ட காமன் கூத்து முதன்மை இடத்தில் இருக்கிறது என்பது தெரிய வந்தது. அதோடு இது தொடர்பாக என் நினைவலைகளில் தங்கியதை கிளறிப் பார்த்து ஒப்பு நோக்கிப் பார்க்கத் தேவையும் எழுந்தது.
மாசி மாதம் இக்கூத்துச் சடங்கு இங்கு நிகழ்த்துவதற்கும் தமிழகத்தில் தென் பகுதிகளில் பெரும்பாண்மையான பெரும் சடங்குகள் நிகழ்வதற்கும் உள்ள ஒற்றுமைகள் நோக்கத்தக்கதாய் இருக்கிறது. மேலும் பிள்ளைப்பேறு மற்றும் நேர்த்திகளை நிவர்த்தி செய்யும் பொருட்டும் நிகழ்த்தப்படுவதும் ஒப்பு நோக்கத்தக்கது. திருச்சி, தென்னார்காடு,தஞ்சாவூர் ஆகிய தமிழகப் பகுதிகளில் ‘காமாண்டி கொளுத்துதல்’ என்ற பெயரில் காமன் பண்டிகை கொண்டாடப்பட்டாலும். நாமக்கல் மாவட்டங்களில் காமன் பண்டிகை என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு 15ல் இருந்து 20 நாள் வரை சடங்கியல் நிகழ்வாகவே கொண்டாடப்படுகிறது. அது போலவே கந்தக்கட்டிய தோட்டத்திலும்  காப்புக்கட்டுதல், காமன் நடல் (கம்பம்), தகன தினம், மதன் ரதி திருமணம், மாவிளக்குப்பூசை, வில்படைத்தல், ஓலைத்தூதுவன் வரல், வீரபுத்திரன் வரல், மோகினி வரல், தேர்வேந்தன் வரல், யமன் மற்றும் தூதன் வரல், மதன் எறிக்கப்படுதல், இரதி ஒப்பாரி, உயிர் எழுப்புதல் போன்ற நிலைகளைக் கொண்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, ரஜீவ், சார் நாளை இது பற்றியத் தெளிவான செயல்விளக்கங்களுடன் பார்க்கலாம். இப்போது உறங்குங்கள் நாளை கந்தக்கட்டிய பாடசாலை மற்றும் ஆகலையில் மாடன் சடங்கு பார்க்கப்போக வேண்டும் என்றார். இந்தியா திரும்பியவுடன், நாமக்கல் போய், காமன் கூத்து சம்மந்தமா ஆய்வு செய்ய வந்திருக்கிறேன் என்றால்,அப்பகுதியிலுள்ள சிறுவர்களும் இளைஞர்களும் இதுபோல நிகழ்த்தியும் பாடியும் காண்பிப்பார்களா? அதோடு ஒரு அரங்கச் செயல்பாட்டாளர் தங்கள் ஊருக்கு வந்திருக்கிறார் என பெருமதிப்பு கொடுத்து என் கைப்பிடித்துக் கொண்டே நடப்பதை பெருமிதத்துடன் நினைப்பார்களா? என்னிடமிருந்து இந்திய நாடகங்கள் மற்றும் தமிழகக் கூத்து முறைகள் பற்றி பேசுவார்களா? என்றால் பதில் இல்லைதான். ஆனால் எல்லா ஆச்சரியங்களும் ஏன் இங்கு நிகழ்கிறது.என்ற கேள்வி மண்டையை உழற்றத்தொடங்கியது. தாய்மொழிக்கு எவ்விதக் கட்டுப்பாடுமற்றக் கல்வித்தளமும் பண்பாட்டு விழுமியங்களை தங்கள் வாழ்வியல் கொடையாகக் கருதும் போக்கும்தான், இங்கு இவற்றையெல்லாம் சாத்தியமாகியிருக்கிறது. என்பது ஒருபுறம் இருந்தாலும்,அடையாளமற்று கொத்தடிமைகளாக நாட்களின் பெரும் நேரம் அதிகாரத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் உயிர்களுக்கு எஞ்சிய நம் வாழ்வியல் அடையாளங்களையாவது நம்முடையது என்று பிடித்துக் கொள்ள வேண்டும் எனும் மனித மனதின் அவாவாகவும் இருக்கலாமென்றும் ஒரு கணம் யோசித்தேன். பின் நீண்ட நேரத்திற்குப் பிறகே உறங்கினேன்.
IMG_3370.JPG
சடங்கியல் உயிர்கள்
அதிகாலை எழுந்ததுமே சிறுவர் சிறுமியர்கள் தங்கியிருந்த வீட்டின் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தனர். நவாவும் கதீஸும் அதில் அடக்கம். சிறுவன் கதீஸ் மிகுந்த உற்சாகமான மனநிலையில் இருப்பது போன்று இருந்தான்.அவனிடம்,இன்று பள்ளி விடுமுறையா? என்றேன். நான் உங்களுடன் சடங்கு பார்க்க வருகிறேன். அதனால் இன்று நான் பள்ளிக்குப் போகவில்லை என்றான். அவன் வழி எனக்கு ஆர்வம் மேலதிகரித்தது. காலை உணவு உட்கொள்ளும் போது, ரஜீவ், சார் சடங்கு பார்ப்பதற்கு முன்பாக, கந்தக்கட்டிய பாடசாலைக்குச் சென்று மாணவர்களுடன் நீங்கள் சிறிது நேரம் செலவிட வேண்டும். என்றார். சரி என்றேன். ஆனால் உணவு முடித்துக் கிளம்பும்போது, சார், இன்றைய காலை நேரம் சடங்கு பார்ப்பதற்கும் அங்குள்ளவர்களுடன் கலந்துரையாடுவதற்குமே சரியாக இருக்கும். எனவே, கந்தக்கட்டியப் பாடசாலை வேலையை நாளை மாற்றியமைக்கிறோம் என்றனர். ஆனால், மரியாதை நிமித்தம் போகும் வழியில் கந்தக்கட்டிய பாடசாலையில் இறங்கி, மாற்றம் பற்றிச் சொல்லிவிட்டுப் போவோம் என்றனர். அதுபடியே அங்கு இறங்கி, அப்பாடசாலை அதிபரை சந்தித்து அறிமுகம் பேசிக் கிளம்பினோம். தமிழ் அரங்கச் சூழலில் இயங்கும் எனக்கு, ரஜீவ் மற்றும் சுதர்சன் போன்ற இளைஞர்கள் செயல்திட்டம் பெறும் கற்றலே. ஆம், அரங்கச் செயல்பாடுகளுக்கு ஆதரவுக் கரம் நீட்டுபவர்களின் மனம் நோகா வண்ணம் தங்களின் அணுகுமுறையை மிக கவனமாக செயல்படுத்துகிறார்களே! இவையெல்லாம்தானே அரங்க மேலாண்மையின் படிநிலைகள்! இவர்களின் ‘அடையாளம்’ நாடகக் குழுவின் செயல்பாடுகள் நிச்சயம் பல நிலைகளில் தன் வளர்ச்சியை காணும் என்று உறுதிக் கொண்டேன். அங்கிருக்கப்போகும் இரண்டு நாளில் என்னால் ஆன அளவில் அவர்களின் முயற்சிகளுக்கு துணை நிற்க வேண்டும் என்பதைத் தீர்மானமாக்கிக் கொண்டேன்.
ஒலிபெருக்கியில் பக்திப்பாடல்கள் கேட்க ஆரம்பித்தவுடன் ஆகலை மடகலைத்தோட்டத்தை நெருங்கிவிட்டோம் என்பதை புரிந்துகொண்டேன். வண்டி நின்றது. உடன் கொண்டுவந்த பறை மற்றும் டோலக்குடன் நவாவும் கதீசும் வேகமாக படிகலேறி பாடல் ஒலி வந்துகொண்டிருந்த மேல்பகுதிக்குச் சென்றனர். ரஜீவ், சுதர் மற்றும் அப்பகுதி நண்பர்கள் சிலரும் என்னுடனே இருந்து அழைத்துச் சென்றனர்.  நான் மெல்ல ஏறி சமதளத்தில் நின்றபோது, தமிழகத்தில் திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் காணக்கிடைக்கும் மாடன் கோயில்களைப் போன்றதொரு கோயிலையும் அது திருவிழாக் காலங்களில் பொலிவுடன் காட்சி அளிப்பது போன்று தோற்றமளித்தது. புத்தாடைகளுடன் உற்சாகமான உடல்மொழியுடன் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் அங்குக் கூடியிருந்தனர். தமிழகத்தைப் போலவே அங்கிருந்த மாடன் கோயில் ‘பீடங்கள்’ கொண்டு
H:\srilanka-confrence- article\images\101CANON\IMG_3406.JPGஅமையப்பெற்றிருந்தது.
சுடலை மாடன், வண்ணார மாடன், புலமாடன் போன்றவர்கள் அங்கு முக்கியக் கடவுள்கள் என்பது என் கணிப்பு. பீடங்களின் எதிர்திசையில் வில்லுப்பாட்டு குழுவினர் தளம். அதில் பெரிய அளவிலான வில்லடி இசைக்கருவியும், உடுக்கை, பறை போன்ற கருவிகள் அங்கு வைக்கப்பட்டிருந்தன. தமிழகத்தில் நெல்லை மட்டும் குமரி மாவட்டங்களில் கொடை விழாக்காலங்களின் போது மாடன் கோயில் சடங்குப் பார்க்கப்போன நினைவுகள் வந்தெழுந்தன. ஆனால் இரவு நேரங்களின் சடங்குகளும் பக்தர்களின் உணர்வு நிலையினை மாற்றும் போக்குடைய வில்லுப்பாட்டு இசை மற்றும் கொட்டு இசைகளை பார்த்திருந்த என் கண்களுக்கு பகல் வெளிச்சம் புதுமையாய் இருந்தது. பொறுக்கமாட்டாமல் கேட்டு விட்டேன் ரஜீவ் இடத்தில். அதற்கு ரஜீவ், சார் இன்று சடங்கின் மாதிரியை உங்களுக்குக் காண்பிப்பதற்காக மட்டுமே என்பதால், இந்த நேரம் என்றார். அவர்கள் சுருக்கமாக இப்படித் தொடங்குவோம், இப்படி வளர்த்தெடுப்போம், இப்படியாக நிறைவு செய்வோம். என்று பேசுவார்கள் போல என்றுதான் நினைத்தேன். அதே நேரம், சடங்கு, நம்பிக்கை, பலி மற்றும் ஆற்றுகை போன்றவையெல்லாம் அந்தந்தக் குழுவினரின் ஒருங்கிணைந்த முடிவு மற்றும் வினையாற்றுதல் சம்பந்தப் பட்டது. அதில் புதிய குறுக்கீடுகள் நிர்பந்திக்குமெனில் அவை வெறும் செயலாக மட்டும் அமைந்துவிடும். ஏனெனில், நாட்டார் தெய்வச் சடங்குகள் நிகழ்வுக்கானதல்ல (performance). அவை மனித வாழ்வியல் நம்பிக்கைக் குறியீடு. மேலும், அக்குழுவின் வரலாற்றுச் செயல்பாடுகளிலிருந்து உருப்பெறுகிற மனோபாவம், அதன் மூலம். இதில், ஒரு அரங்க ஆய்வாளன் கவனமுடன் செயல்பட வேண்டும் என்பதாக யோசித்துக் கொண்டிருந்தேன்.
வில்லுப்பாட்டும் சடங்கியல் அதிர்வுகளும்   
IMG_3402.JPGகல்வியளாளர்கள் பொன். இராஜகோபால், ஆனந்தகுமார் போன்றோர் அங்கு வந்து சேர்ந்தவுடன் ஒலிபெருக்கியில் அதுவரை ஒலித்துக் கொண்டிருந்த பாடல் நிறுத்தப்பட்டது. பூசாரி பூஜைகளை ஆரம்பிக்க வில்லடித் தளத்திலிருந்து குழுவினர் காப்புப் பாடல்களை இசைத்துப் பாடத்தொடங்கினர்.
“தந்தினனா தினனானா
தினனானா
தினத்தந்தினா தினானா
தந்தினனா தினனானா
ராமைய்யா
தினனானா
சொல்லையா
தினத்ததினா தினானா.
ஸ்ரீ கணபதியும் என் குருவும்
என் குருவும்
கனவிலினும் நான் மறவேன்
நான் மறவேன்.
நானொரு நாள் மறந்தாலும்
மறந்தாலும்
என் நாவும் அதை மறவாதே
நாவும் அதை மறவாதே
ராமைய்யா
நானொரு நாள் மறந்தாலும்
சொல்லையா
நாவும் அதை மறவாதே
தந்தினனா தினனானா
தினனானா”
IMG_3390.JPGஎன்று போய் கொண்டு இருக்கும்போதே, பூஜை வேலைகள் செய்துக்கொண்டிருந்த பெரியவர் மாடன் பீடத்தின் முன் அமைதியாக நின்றார். தொடர்ந்து, ஈசனின் சுடலை பிராதபங்கள் பாடப்பாட அந்த தாள கதியில் அவருடைய உடல் அசைய ஆரம்பித்தது. பின் மெல்ல முன்னும் பின்னுமென குதிக்கத் தொடங்கினார். ஒரு நிலையில் மாடன் பீடத்தின் அருகில் சாய்த்து வைத்திருந்த மணிகள் கோர்க்கப்பட்ட (கம்பை வல்லையக் கம்பை - திருநெல்வேலிப் பகுதியில் சொல்வது) எடுத்துக் கொண்டு ஆட ஆரம்பித்தார். அடுத்தது அருகில் கட்டியிருந்த சேவலை எடுத்து பலியெடுக்க ஆரம்பித்தார். மாடன் தெய்வத்துக்கேயுரிய வேகம் அவருடலில் பார்க்க முடிந்தது. வேகம் என்பது சுடலை மாடன் வேட்டையில் இருப்பது பார்வையாளர்களுக்குத் தெரிவிக்க எனவும் எடுத்துக்கொள்ளலாம். அதனாலேயே, முதுமையின் காரணமாக பற்கள் விழுந்தும் எஞ்சியவை பலவீனமாகவும் அமையபெற்ற அப்பூசாரி சாமியாடி, சேவலின் கழுத்தைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சியபடியே முன்னேறினார்.
அவர் அச் சேவலின் வயிறு கிழித்து குடலை இழுத்து மாலையாகப் போட்டுக் கொண்டது நிகழ்ந்தது. பார்வையாளர்கள் நான் உட்பட யாரும் பதற்றமடையவில்லை. காரணம் அவர்களில் தன்னிலை மறந்து அகச் சுதந்திரம் வேண்டுபவர்கள் ஆடுகிறார்கள். உடைபடாத சமூகக் கட்டுக்குள்ளிருந்து வெளியேற இயலாதவர்கள் பார்வையாளர்களாக அதில் நம்பிக்கைக் கொண்டவர்களாக நம்பிக்கையுடன் லயித்துக் கிடக்கிறார்கள். இரண்டாவதும் வெளியேற்றமே. அவர்கள் ஒவ்வொரு கொடையின் போது வேட்டையைப் பார்த்துப் பழக்கப்பட்டவர்கள். நானோ, சுடலைமாடன் பரண் வெட்டு பார்த்தவன். மிருக பலி என்பது அறிவியல் பூர்வமாக உயிர்ச்சங்கிலித் தொடரின் தத்துவமே. மேலும் நர பலியிலிருத்து பகுத்தறிவு பெற்றவர்களாக மனிதச் சமூகம் மாற்றமடைந்ததின் குறியீடு நாட்டார்ச் சடங்குகளின் இத்தன்மை. அதற்கு உதாரணமாக, அப்போதே அருகில் இருந்த அவ்வூர்காரர் ஒருவர், முன்னொரு  முறை எதிரில் வந்த ஒருவரை அடித்துவிட்டது, மற்றொருமுறை சுடலைக்கு வேட்டைக்கு போன மாடன் அன்று இறந்த பிணம் ஒன்றை இழுத்து சுவைக்க ஆரம்பித்துவிட்டதும் என்றார்.
IMG_3393.JPGஅதே நேரம் பாடிக்கொண்டிருந்தவர் பாடலை நிறுத்தி, பார்வதி அம்மையார் பரமசிவனை பரிசோதிக்கும் இடம் இது என்று குறிப்பு சொல்லிவிட்டு தொடர்ந்து பாட ஆரம்பித்தார். அடுத்ததாக ஒரு நடுத்தர பெண் அருகிலிருந்த கூரை வேய்ந்த கோயில் உள்ளேயும் வெளியேயும் என அப்பிரகாரத்தைத் தாண்டாமல் ஆடினார். அருகில் இருந்த நண்பர், இந்த சாமி எல்லையத் தாண்டாது என்றார். அவர் சொன்னது போலவே அவர் கடைசி வரை தாண்டவே இல்லை. அதுப்பொல் அதிக மனிதக் கூட்டம் நிறைந்திருந்த அந்த இடத்தில் அவரால் யாதொரு சங்கடமும் இல்லை. அக்குழுவினர் எல்லோருக்கும் தெரிந்த செயலை தொடர்ந்து செய்வது சடங்கின் முக்கியக்கூறு. அப்படியே அதையே செய்வது அவ்வளவுதானா சடங்கு? என்றால் இல்லை ஒவ்வொரு முறையும் இசைக் கலைஞர்களாலோ நிகழ்துனராலோ (அரங்க ஆய்வாளர் பார்வையில்) ஓரிரு புதிய சேர்க்கைள் நிகழும். அவை சுற்றுப்புறச்சூழலும் நிகழும் தளமுமே தீர்மாணிக்கும். அவ்வகையில் நான் அங்கு கண்டதில்,பின் வருபவைக் குறிப்பிடத்தகுந்தது. மாடன் பீடத்தின் அருகில் இருந்த இன்னொரு வயதான பெண்மணியும் ஆடத்தொடங்கினார். உச்ச நிலையில் அவரும் சேவல் கேட்க அவருக்கும் கொடுத்தார்கள். வாங்கிய மறு கணம், அச்சேவலைக் கடித்து ரத்தம் உறிஞ்சத் தொடங்கினார். அச்செயல் முற்றிலும் எனக்குப் புதியது. ஆம், ஒரு பெண் சாமியாடி சேவலைக் கடித்து பலி ஏற்பதை முதன்முறையாக அங்குதான் பார்த்தேன். பேய் பிடித்தவர்கள் சாராயம் குடிப்பது, சேவல் கடித்து சாப்பிடுவது உண்டு. ஆனால் கொடையில் அருள் வந்த பெண் உயிர் பலி ஏற்பது இங்கு மட்டுமே என நினைக்கிறேன். அக்குழுவின் சமூகக் கட்டமைப்பிற்குள் ஒடுக்கப்படுதல் வலி அறிந்தவர்ளாக இருக்கிறார்கள் .மேலும் அதிகாரத்திற்கு எதிராகவும் நடைமுறை வாழ்வில் வினையாற்ற அந்த உக்கிரம் தயாராகவும் இருப்பது போலவும் தெரிகிறது. இது மிகவும் கவனமுடன் ஆய்வு செய்ய வேண்டியது. பேய் மகளீர் ஆடலுடனும் ஒப்பு நோக்க வாய்ப்புள்ளது.
IMG_3415.JPGசிறிது நேரத்தில் கூரை வேய்ந்த கோயிலின் பின்புறமிருந்து நல்லப் பாம்பு ஒன்று வெளியேறியது. உடன் பார்வையாளர்கள் அவ்விடம் சென்று அப் பாம்பினை வழிபட்டு அதற்கு வழி கொடுத்து வெளியேற்றினர். பின் சற்று நேரத்தில் ஒரு இளைஞருக்கு மருள் வந்தது. வில்லடி இசைக்கேற்ப ஆடத்தொடங்கிய அவரின் அசைவுகள் பாம்பின் அசைவுகளை ஒத்திருந்தது. கரடு முரடான அம்மலையின் தரைத் தளத்தில் படுத்தபடியே அவர் ஊர்ந்து சென்றது தனித்துவமானது. நிகழ்த்துனர் சூழலைத் தொடர்புபடுத்தும்போது பார்வையாளர்களின் நம்பிக்கை வலுபெறுகிறது. இதுதான் சடங்குகளின் வளர் நிலை. குறிப்பாக, அவர் தான் கையில் எடுத்த சாட்டையை தன் உடல் முன் வைத்து அசைத்து அதையும் பாம்பின் குறியீடாகவே பாவித்தார். தொடர்ந்து சுருட்டு கேட்டு புகைத்த அவர் முன், ஆடத்தொடங்கிய சாமியாடியிடம் இரஞ்சுபவராகவே அவருடன் தொடர்பு கொண்டார். தனக்கும் சேவல் வேண்டுமென்று கேட்டு ஒரு கட்டத்தில் கோயிலின் பின் பகுதியில் இருந்த அடர்ந்தப் பகுதிக்குள் சென்று விட்டார். பின்னாலேயே சிலர் சென்றனர். அவர் வரும்போது புதிய சேவலை வாயில் கவ்வியபடி கோயில் தளத்திற்கே வந்தார். ரத்தம் சுவைத்து பின் குறி சொல்ல ஆரம்பித்தார். அப்படி குறி சொல்லும்போது அவர் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. முழுக்க உடல் மொழியில் உணர்வுப்பூர்வமான முக பாவங்களை பிரயோகித்து ஒவ்வொருவருடனும் தொடர்புக்கொண்டார். மருள் நிலையில் நிகழ்த்துனர் கையாளும் உணர்வு மொழி குறித்து அரங்க ஆய்வாளர்கள் கவனம் கொள்ளுதல் அவசியம் என படுகிறது. ஏனெனில் நிகழ்வின் வழி ஒரு கூட்டத்தாரோடு நிகழ்த்துனர் தொடர்பு கொள்ளுதல் பண்பு இரு தளத்திலும் பிராதனப்பட்டது. மேலும் உணர்வு ரீதியிலான கருத்துப் பறிமாற்றங்களிலும் ஒற்றுமைக் கொண்டது. இந்த ரீதியிலான பார்வையில் தமிழகத்தில் முருகபூபதி சடங்குகளைக் கவனித்து அத்தகைய மொழிகளை தனது நாடகங்களில் பயன்படுத்தி வருவது சான்றாகிறது.
இரண்டு மணி நேரத்திற்கு நிகழ்ந்த அந்த வில்லுப்பாட்டுடன் நிகழ்த்தப்பட்ட சடங்கு அருள்வாக்கு சொல்லுதல் மற்றும் ஆசிபெறுதல் போன்றவற்றுடன் நிறைவுக்கு வந்தது. நான், இந்த சடங்கை ஏதோ சுருக்கமாக செய்து காண்பிப்பார்கள் என்று நினைத்தது தவிடுபொடியானது. நிச்சயம் நான் பார்த்தது அவர்களின் உணர்விலும் உயிரிலும் கலந்திருக்கும் வரலாற்றுச் சடங்கு நிகழ்வு. இந்த வில்லுப்பாட்டுச் சடங்கையும் அதற்குள் முந்தி நிற்கும் தமிழக முறைகளைப் பற்றியும் அது நிகழ்த்தப் படும் காலத்தில் சென்று ஆய்வு செய்யவேண்டியதே எனது அடுத்தப் பணி. குறிப்பாக நம்பிக்கைச் சார் சடங்கில் வில்லுப்பாட்டு தரும் சக்தி அல்லது உத்வேகம் குறித்து விரிவாக ஆராயப்பட வேண்டும்.  
ஆம், தென் தமிழகத்தில் பரவலாக சாமியாடுதலை ஒரு நிகழ்த்துனன் பார்வையில், பார்த்த எனக்கு இசைக் கருவிகளின் துணையேயும் குளவைக் குரலொலி வழியேயும் சாமியாடுதலை ஊக்குவித்தல் நிகழும் என்பது தெரியும். அதே சமயம், ஒவ்வொரு தாள அளவில் அவன் உடலை இயக்கும் முறைகள் அச்சடங்கு சார்ந்த பிரதேசம் மற்றும் அச்சடங்கில் பங்கேற்கும் அனைவரின் அசைவின் ஒருங்கிணைப்பில் நிகழும். அதில் உள்ள வேறுபாடே மிக நுண்ணிய தனித்துவத்தைக் கொண்டிருக்கும் அதை கவனித்தல் அரங்க ஆய்வாளருக்கு அவசியமெனக் கருதுகிறேன். அவ்வகையில்,
”தந்தினனா தினனானா
தினனானா
தினத்தந்தினா தினனானா
தந்தினனா தினனானா
ராமைய்யா
தினனானா
சொல்லையா
தினத்ததினா தினனானா.”
என்ற பிரதான தாளத்தில் முழு பாடலும் போகிறது. அதற்கான இசையும் ஒரே சீரில் இருந்தது. இதன் காரணமாக மருள் வந்து ஆடுபவர்களால் நீண்ட நேரம் ஆட முடியும். அதுவே இச்சடங்கிலும் நிகழ்ந்தது. மேலும் புதிதாய் ஆடுபவர்களுக்கு ஊக்கம் ஏற்படுத்திக் கொடுக்கவும், தொடர்ந்து பலி, வாக்கு சொல்லுதல் போன்ற செயல்களுக்கு இந்த கால அளவு உதவியாய் இருக்குமெனத் தெரிகிறது. ஆம், சடங்கியல் நிகழ்வின் பிரதான அம்சமான ’சமூக வயப்படுதல்’ என்ற சமூக பங்கேற்பிற்கு இப்படியான இசை அமைப்பைக் கொண்ட வில்லுப் பாட்டு துணைப் புரிவதும் அவ்வடிப்படையில்தான் எனவேதான் இதை தீவிரமாக ஆய்ந்து ஆய்வு முடிவுகளைக் கண்டடையும் போது இவ்வடிவத்தின் தனித்தன்மை வெளி வரும் என நம்புகிறேன்.
IMG_3433.JPGசடங்கு ஆற்றுகை முடிந்ததும் சம்பிரதாய உரையாடல்கள் நிகழ்ந்தது. எனக்கு அவர்கள் அனைவரும் நன்றி சொன்னார்கள். நான் பேசும்போது நன்றி உங்களுக்குத்தான் சொந்தம் என்று திருப்பிக் கொடுத்தேன். காரணமாக பேசும்போது, பல இளம் தலைமுறையினர் இப்பண்பாட்டு நிகழ்வில் ஆர்த்மார்த்தமாக ஈடுபடுவது (வில்லுப்பாட்டை பின் பாடலாக பாடுவதும் இசைக் கருவிகள் இசைப்பதும்) முக்கியத்துவம் நிறைந்தது என்றேன். ஏனெனில் அது வெறும் பங்கேற்பு மட்டுமல்ல பண்பாட்டு அடையாளத்தைக் கட்டிக்காத்தல் என்றேன். மேலும் பாரம்பரிய இசைக் கருவிகளை பேணுதலில் உள்ள முக்கியத்துவம் குறித்தும் அதற்கு இந்திய அளவிலான ஒத்துழைப்பிற்கு என் உதவி உங்களுக்கு இருக்கும் என்று விடை பெற்றேன். மேலிருந்து இறங்கும்போது நானாகவே இறங்கினேன்.

கல்வித் தளத்தில் கலை
IMG_3507.JPG
IMG_3518.JPGIMG_3510.JPGமதிய உணவு, ஆகலை பாடசாலையை ஒட்டியிருக்கும் அதிபர் ஆனந்தகுமார் குடியிருப்பில். உணவின் தொடக்கமாக அதிபர் பொன் இராஜகோபால் அவர்கள் சடங்கு நடந்த இடத்திலிருந்து வரும் வழியில் கண்டெடுத்த மலை மாம்பழத்தை சாப்பிடக் கொடுத்தார். அதன் சுவை உணர்வுடன் கலந்தது. அனைவருமாக மதிய உணவு முடித்து பள்ளிக்குச் சென்றோம். அங்கு அப்பகுதியின் கலை கலாச்சார அலுவளர் செல்வி துலானி காத்திருந்தார். நான், அதிபர் பொன் இராஜகோபால் அதிபர் ஆனந்தகுமார், அதிபர் புனிதன், ஆசிரியர் நவநீதன் ரஜீவ், சுதர்சன் மற்றும் அடையாளம் நாடகக் குழுவின் பிரதான நிகழ்த்துனர்களான பெண் கலைஞர்களும் அடக்கம். ரஜீவ் அறிமுக உரை மூலம் கல்வித்தளத்தில் கலைக்குறித்தான அவசியமும் நாடகம் வழி மலையகப் பண்பாட்டை பேணுதலும் என்பதன் அடிப்படையில் நடைபெறப்போகும் கலந்துரையாடல் என்றார். மேலும் இந்திய கலைத்திட்டங்கள் குறித்தும் என்னைப் பேசச் சொன்னார். ரஜீவ் சிங்களத்திலும் தமிழிலும் பேசியது நம்மவர்களின் வளர் நிலையை உணர்த்தியது. துலானி மலையக பண்பாட்டில் கலை வடிவங்கள் குறித்த கவனமும் அதனை பொதுமக்கள் அனைவரிடத்திலும் கொண்டு செல்ல செயல்திட்டங்கள் வரவேற்கப்படுகின்றன என்றார். தொடர்ந்து. மது மற்றும் போதை வஸ்துக்களின் விளைவை குறித்தவிழிப்புணர்வும் நாடகங்கள் மூலம் நிகழ்த்த இருப்பதாகச் சொன்னார். கல்வியில் கலைப் பிரிவில் முழு நேரமாக மூன்று ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்ட அனுபவத்தில் சிலவற்றை அவர்களுடன் பகிர்ந்தேன்.   
:- பண்பாடு குறித்த கவனத்தை பயிற்றுவிக்க ஆரம்பப் பள்ளிகளைவிட சிறந்த தளம் வேறெதுவும் இல்லை.
:- அதற்கேற்றார்போலான திட்ட வடிவமைப்பை பாடங்களுடன் இணைத்து கற்பிக்கும் முறைகளை உருவாக்கலாம்.
:- அதற்கு நாடகப் பாடம் எடுக்கும் ஆசிரியர்களைத் துணைக் கொள்ளலாம்.
:- உள்ளூர் நாடகக் குழுக்களுக்கு பயிற்சிகளுக்கும் நிகழ்விற்கும் பள்ளித் தளத்தை பயண்படுத்த அனுமதிக்கலாம்.
:- மாணவர்களின் வாழ்வியல் கல்வியில் இத்திட்டங்கள் கலக்கும்போது நிச்சயம் பெரும் மாற்றத்தைத் தரும்.
:- அவர்களின் கற்றல் நிச்சயம் சமூக மாற்றத்தில் வினையாற்றும்.
:- குறிப்பாக தமிழகச் சூழலில் பள்ளிகளில் நாடகம் குறித்த பேச்சே எழாத காலத்தில் அவர்கள் அனைவரிடத்திலும் உள்ள ஆர்வமும் பள்ளிகளில் நாடக பாடத்திட்டம் நடைமுறையில் இருக்கும்போது சாத்தியங்கள் நிறைய இருப்பதாகவேப் பட்டது.
நிறைவாக, அவர்களால் சில வருங்கால திட்டச் செயல்பாடுகள் வகுக்கப்பட்டது. அதில் நான் பங்கு கொண்டதில் பெரும் மகிழ்ச்சி. ஏனெனில் இந்தியாவில் கலைப் பாடங்கள் ஏட்டளவில் மட்டும் இருந்து பள்ளித் தளத்தில் கானல் நீராக உள்ள சூழலில் செயல்படும் தளத்தில் இருந்தது கனவுகள் ஒருகணம் நிறைவேறியது போலவே.
கலைஞனுக்கு மரியாதைத் தரும் மனித மாண்பு
IMG_3560.JPGபள்ளியில் கலந்துரையாடல் முடிந்தபின்னும் பள்ளி வாசலில் அமர்ந்து கல்வியில் நாடகத்தின் பல தளங்கள் குறித்து ஆர்வமுடன் உரையாடிய அதிபர் ஆனந்தகுமார் தன் பள்ளி ஆசிரியர்களுடன் நாளை கலந்துரையாட வேண்டும் என்றார். ரஜீவ் தன் திட்டமிடலில் புதியவை சேர்ந்தாலும் அதற்கான நேரத்தை ஒதுக்கினார். பின் தங்குமிடம் வந்து சேர்ந்தோம். பிள்ளைகள் விழாக்கால உடை உடுத்திய படி அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களின் தாயார்களை அழைத்து வந்து ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தினர். அவர்கள் அனைவரும் விழாவிற்கு செல்பவர்களாகவே தோற்றமளித்தனர். என்ன விழா என்றேன். பிள்ளைகள் முந்திக்கொண்டு, அங்கு வந்து தெரிந்து கொள்ளுங்கள் சார் என்றனர். தாயார்கள் என் குடும்பம் பற்றி விசாரித்து உரையாடிக் கொண்டிருக்கும்போதே இளைஞர்கள் வாசலில் பறை வாசிக்க ஆரம்பித்தனர். பார்க்கப் போனபோது திடலுக்குப் போகலாம் என்று சொல்லி முன்னால் வாசித்தபடியே நடந்தனர். கீழே இறங்கியவுடன் சிறுமிகள் அனைவரும் கோலாட்டம் ஆடியபடியே வழி நடத்திச் சென்றனர். திடலை அடைந்தவுடன். வீட்டில் பேசிய அத்தாயார்கள் ஆரத்தித் தட்டுடன் வந்து ஆரத்தி எடுத்து என்னை வரவேற்றனர். பெரியவர் ஒருவர் பூ மாலை போட்டார். முற்றிலும் புது அனுபவம். மேலும் அதிர்ச்சி. நேரெடியாக யாரென்றே தெரியாத நபர் ஒருவரை எந்த ரீதியில் இவ்வளவு உள்ளண்போடு வரவேற்றார்களோ தெரியாது. ரஜீவ் வரவேற்று பேசுபோது, நம்மவர் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறார் என்றார். எதிரில் அமர்ந்திருந்த கந்தக்கட்டிய தோட்டத்தின் அனைத்து மக்களும் அவர்களை அறியாமல் கைத்தட்டினர். புரிந்தது என் அடையாளம் அவர்களின் அடையாளத்துடன் பொருந்திய மாயம். அதைத் தொடர்ந்து அவர்களின் வாழ்வியல் அடையாளங்களுக்குள் பொதிந்திருக்கும் காலாகாலத்தின் வலி கணக்க மெளனமானேன்.
என்னை சமநிலைக்குக் கொண்டு வந்தது, அங்கிருந்த வயதான தாய்மார்கள் அவர்களின் வாழ்வியலில் இடம்பெறும் கும்மி, தேயிலைத் தோட்டப் பாடல் முளைப்பாறிப் பாடல்கள், அம்மன் கரகப்பாடல்கள் மற்றும் ஒப்பாரிப் பாடல், பாடியும் ஆடியும் என தங்களிடம் உள்ள பொக்கிஷத்தை காண்பித்து பெருமிதம் அடைவது போன்று அப்பெருந்திடலில் மனமுவந்து நிகழ்த்திக் காண்பித்தனர். அதில், ஒப்பாரி பாடல் பாடியபடி வட்ட வடிவில் அசைந்தபடி பெண்கள்  கைகளை கீழ்புறம் தட்டி பின் மார்பில் தட்டியும் என பாடினர். அது எனக்கு அப்போது முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது. மரணம் நிகழ்ந்த வீட்டில் அமர்ந்து கூடி அழுது பாடும் ஒப்பாரி பார்த்திருக்கிறேன். கும்மி போன்று மார்பில் அடித்து ஆடுவதைப் பார்க்கும்போது வியப்பும் கேள்வியும் என்னுள் எழுந்தது. தாய்மார்கள் முடித்ததும், பக்கத்தில் அமர்ந்திருந்த பெரிய ஐயாவிடம் பேச்சுக் கொடுத்தேன். உண்மையிலேயே இறப்பு வீட்டில் இறந்தவர் உடலை வைத்துக்கொண்டு ஆடுவார்களா? எப்போது ஆடுவார்கள்? என்றேன். அவர், மிகத் தெளிவாக விளக்கினார். இறப்பு வீட்டில்தான் ஆடுவார்கள். குறிப்பாக வயது போனவர்கள் இறப்பு சடங்கில்தான் இப்படி செய்வார்கள். மேலும் நீண்ட நேர இடைவெளி விட்டுவிட்டு தான் ஆடுவார்கள். மன ஆறுதலுக்காகத்தான் இப்படி செய்வார்கள் என்றார். ஏன் இந்தியாவில் இப்படி செய்வதில்லையா? என்றார். நான் அப்போது, இதுவரை பெண்கள் ஆடி இந்தியாவில் பார்த்ததில்லை. தனியாக தொழில்முறை ஒப்பாரிக் கலைஞர்கள் ஆடுவார்கள் என்றேன். ஆனால், ஐயா உறுதியாக, அங்கே இருக்கும் அதற்குள் மறைய வாய்ப்பில்லை என்றார். அவருடைய உறுதியான நம்பிக்கைப் பற்றி அப்போது தெரியாத எனக்கு இக்கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் கணத்தில் புரிகிறது. எப்படியெனில், இலங்கையிலிருந்து திரும்பியவுடன் இயக்குனர் லீனா மணிமேகலையின் திரைப்படத்தின் பணி நிமித்தம் திருநெல்வேலி,பாபநாசம் சுற்றுப்புற கிராமத்து மனிதர்களுடன் அவர்களின் கிராமங்களிலேயே தங்கியிருந்தபோது ‘அனவன் குடியிருப்பு’ எனும் கிராமத்தில் வயதான முதியவர் இறந்த சேதி கேட்டு அங்கு போனோம். சம்பிரதாயம் நிமித்தம் அவ்விட்டில் அமர்ந்திருந்தபோது, இசைக் கலைஞர்கள் கருவிகளை வாசிக்க அவ்வீட்டுப் பெண்கள் மற்றும் ஊர் பெண்கள் மலையகத்தில் ஆடியது போன்ற முறையில் ஆடினர். ஒரு பதினைந்து நிமிடம் பார்த்துக் கொண்டே இருந்தேன். பின் அவர்களுடன் இணைந்து ஆட ஆரம்பித்துவிட்டேன். அதைக் கண்ட இன்னொரு உள்ளூர் ஆண் ஒருவர் முதன்முதலாக இணைந்து ஆரம்பித்தார். மறுநாள் படப்பிடிப்பிற்கு அந்த ஊருக்குள் நுழையும் போதே அவ்வாட்டம் பற்றிப் பேசத்தொடங்கினர். ஆனால் யாருக்கும் நான் ஒரு வரலாற்றுத் தொடரின் வெறும் இணைப்புக்குறி மட்டுமே என்பது அங்கு யாருக்கும் தெரியாது. ரஜீவுடன் செய்தி பகிர்த்தேன். ஐயாவின் நம்பிக்கையின் வலிமையை நேரில்தான் அவரிடமேச் சொல்ல வேண்டும் என்று நினைத்து இருக்கிறேன்.
காமன் கூத்தின் பகுதிக் காட்சிகள்

IMG_3569.JPG
அடுத்ததாக, இன்னுமொரு இன்ப அதிர்ச்சி. ஆம், காலையிலிருந்து என்னுடனே சுற்றிக் கொண்டிருந்த நவா,கதீஸ் மற்றும் இளைஞர்கள் பலர் சேர்ந்து மிக ரகசியமாகத்
ஒப்பனை மற்றும் இரு பிரதானக் கதாப்பாத்திரங்களுடன் காமன் கூத்து நடத்தும் முறை குறித்து அந்தத் திடலிலேயே செய்துக் காட்ட உள் நுழைந்தனர். வினாயகர் பாடல்கள் பாட      காமனும் ரதியும் எதிரெதிர் திசையில் ஆடினர். பின் பண்டிகை ஆரம்பித்த மூன்றாம் நாள் பாடி ஆடப்படும் விதம் குறித்து மிக விரிவாக விளக்கினார். பின் இக்கூத்தின் மையக் கதையை ஊர் பொதுவில் எல்லோரும் கேட்க என்னிடம் சொல்லத் தொடங்கினார். பின் சிவன் பார்வதி தர்க்கப் பாடல் என்று அடுக்கடுக்காக விளக்கிக் கொண்டே போனார். எனக்கு மிகுந்த ஆச்சரியம். ஒரு இளைஞன் சடங்கியல் கூத்தின் அத்துனை அடுக்குகளையும் உள்வாங்கி வைத்திருக்கிறானே! எங்கிருந்து இவனுக்கு இத்தனைப் பிடிப்பு வந்தது? யார் இவனுக்கு கவனம் ஊட்டியிருப்பார்கள்? அதிலும் ஒரு தேர்ந்த தொழில்முறைக் கூத்துக் கலைஞன் ஒருவனால் மொத்தக் கூத்தின் சாராம்சத்தை உணர்த்த இப்படி திட்டமிட்டு காட்சிகளைத்தேர்ந்தெடுத்து வழங்கிடத்தான் முடியுமா? என்றெல்லாம் கேள்விகளால் நிரம்பி வழிந்துகொண்டிருந்தேன்.
”பூதனாதனாம் எனக்குப் பொல்லாங்கு நேராது”
என்று பாடியபடியே வந்த நவா மெல்லிய குரலில் ஆடுபவர்களுக்கு அருள் வந்துவிடும். அதனால் மென்மையாக ஆடுகிறார்கள். என்றார். மேலும் அதனால்தான் நிறுத்தி நிறுத்தி ஆடவைக்கிறோம் என்றார். அந்த நிகழ்த்துனருக்கு எப்போது நிகழ்த்தினாலும் அருள் வருகிறதென்றால் அவர்களுடைய சிந்தனையில் காமன் கூத்தென்பது வாழ்வியல் வைராக்கியமாக அல்லவா அவருடன் இருக்க வேண்டும், என நினைத்தேன். யாருக்கும் மன சங்கடம் இல்லாமல் இன்றைய செயல் விள்க்கக் கூத்தை நடத்தி முடியுங்கள். என்றேன் பதிலாக பார்வையிலேயே. அவரும் மென்மையாக இறுதிப் பகுதிக்கு வந்து சேர்ந்தார். காமனை உயிர்பிக்க ஊர் எப்படி ஒன்றுபட்டு சடங்குகள் செய்வார்கள் என்பதைச் சொல்லி நிறைவு செய்தார். விடிந்தால் தேயிலைத் தோட்டத்திற்கு போய்விடப்போகும் இவர்கள் கிடைத்த நேரத்தில் தங்களுடைய முகவரியை காமன் கூத்து வழி செய்து காண்பித்து விட்டார்கள்.
உண்மையிலேயே, காமன் பண்டிகையில் வந்துதான் பார்க்கவேண்டும் அதன்பின் தான் கந்தக் கட்டிய காமன் கூத்து பற்றி விரிவாக எழுதுவேன். என்பதாக பேசினேன். இறுதியாக, அந்த ஊரின் அத்தனை தாய்மார்களின் எதிர்பார்ப்பற்ற வரவுக்கும் அவர்களின் அடையாளத்தின் மேலுள்ள பற்றில் அவர்கள் தோட்டத்தில் கரைவதற்கு ஈடாக காமன் கூத்து நடக்கும் மையத் தளத்திலிருந்து பிடி மண் எடுத்துக் கொடுங்கள் என்றேன். அதை இந்தியா சென்றதும் தமிழ் இசை நாடக மரபின் பிதாமகன் சங்கரதாஸரின் கல்லறையில் தூவுகிறேன் என்றேன். இதோ கட்டுரை முடிவுறுவதற்கு ஒரு வாரம் முன்பு அனுசரிக்கப்பட்ட அவரது நினைவு நாளில் அதையும் செய்துவிட்டேன். பிடி மண் எடுத்துவருதல் என்பது கணத்த மெளனத்தில் செய்யும் செயல் மேலும் அது காலம் தாண்டியும் தங்களின் உறவுக் கதையை சொல்லியபடியே இருக்கும் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். ஆம், பிடிமண் எடுத்துக் கொடுத்த அந்த தாய்மார்கள் தேயிலைப் பறித்துக் கொண்டிருந்த நன்பகலில் கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தேன்.
 

Comments

Popular posts from this blog

அரங்கில் கலந்த ஆசிரியர் சே. ராமானுஜம்

எல்லோருக்காகவும் வேண்டியெழும் மொழி : ஜான் ஃபோஸின் நாடகங்கள் - ஞா. கோபி

நாடகக் கலைஞர்களின் கலை வழி உறவு நிலை வெளிப்பாடுகள்