கூர்ந்து நோக்கல் – அமெரிக்கக் கருப்பினப் பெண் நாடக ஆசிரியர் “டொம்னிக் மொரிஸ்” உடனான நேர்காணல்.

கூர்ந்து நோக்கல் – அமெரிக்கக் கருப்பினப் பெண் நாடக ஆசிரியர் “டொம்னிக் மொரிஸ்” உடனான நேர்காணல்.
-------------------------------------------------------------------
டொம்னிக் மொரிஸ்: நாடக எழுத்துக்கு பல விருதுகள் பெற்ற அமெரிக்க நாடக ஆசிரியர். இவரது ஒன்பது நாடகங்களுமே உலகம் முழுக்க கவனம் குவித்திருப்பவை. சமகால கருப்பினப் பெண் நாடக ஆசிரியர்.
மையா சஃபானி:  நேர்காணலை நடத்தியவர். தற்போது சிக்னேச்சர் தியேட்டரில் கலை மற்றும் கல்வி திட்டங்களின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறார்.


 

கேள்வி: உங்கள் நாடகத் தொடக்கம் எங்கு தோன்றி வளர்ந்தது? நாடக எழுத்தை நோக்கி உந்தித் தள்ளியது எது?
டொம்னிக் மொரிஸ்: என்னுடைய இரண்டாம் வகுப்பில் நான் நடிக்கத் தொடங்கினேன். ஆம், பிழைகள் அதிகம் வரும் வேலைகளை மிக முன்னதாகவே தொடங்கியிருக்கிறேன்(சிரிக்கிறார்). அதாவது இரண்டாம் வகுப்பிலேயே புதிர் கதைகளையும் குறு நாவல்களையும் எழுதிப் பார்க்கத் தொடங்கினேன் (பெரும்பாலும் என்னைப் பற்றியேதான் எழுதியிருக்கிறேன். அதை எப்படி வகைப் படுத்தியிருந்தேன் என்றால், “முட்டைக்கோஸுடன் இணைந்த குழந்தையின் புதிர்கள்”. அதில் இணைந்து வளர்வது பொம்மை. நானும் அந்த பொம்மை போல் வளர்ந்திருக்கிறேன். நான் அவைகளோடு அன்பாக இருந்திருக்கிறேன்.)
நாடக எழுத்தென்பது நான் கல்லூரியில் ‘அரங்க நடிப்பு’ பயிலும் மாணவியாக சேர்ந்தவுடன் நான் நாடகம் எழுதத் தொடங்கவில்லை. அதே நேரம் அப்போது என்னுடைய துறைசார் நாடகத் தயாரிப்புகளில் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண்களுக்குத் தரப்படும் பாத்திரங்களைக் கவனித்து வந்தேன். அது எனக்கு மிக எரிச்சலூட்டத் தொடங்கியது. அதன் காரணமாக, நான் என்னுடைய முதல் நாடகத்தை எனக்காகவும் எங்கள் துறையில் இருந்த இரண்டு பெண்களுக்காகவும் எழுதினேன். எங்களுடைய கதைகளைக் கொண்டே, எங்களுக்கான தளத்தைப் பற்றிய உரையாடலைத் தொடங்கியதாக உணர்ந்தேன். பிறகு அந்த நிகழ்வு கொடுத்த வெற்றி மற்றும் உற்சாகத்தின் காரணமாக, நாடகம் எழுதுவது எனும் பிழை மிகுந்த வேலையானது இப்போது வரை என்னோடே தொற்றிக் கொண்டுவிட்டது.
கேள்வி: “பாரடைஸ் புளு” (Paradise Blue) எனும் நாடகம் உங்களுடைய ‘டிட்ராய்ட்’(Detroit*) வரிசையில் வருகிறது. அதோடு இணைந்ததாக ‘டிட்ராய்ட்’67 மற்றும் ‘எலும்புக்கூடு குழு’ (Skeleten Crew) என்பது மாதிரியாக ஒரே வரிசையில் நாடகங்கள் எழுத எதனால் ஈர்க்கப்பட்டீர்கள்?
டொம்னிக் மொரிஸ்: நான் அந்த மூன்று நாடகங்களையும் ஓரே வரிசையில் எழுத வேண்டுமென்று முன்னரே முடிவு செய்திருந்தேன். அதற்கு ‘ஆகஸ்ட் வில்சன்’ “பிட்ஸ்பெர்க்” (Pittsburg*) வரிசையில் எழுதிய 10 நாடகங்கள், எனக்கு முன்மாதிரியாக இருந்தது. ஏனெனில் அவருடைய அந்த பத்து நாடகங்களைப் படித்த பிறகுதான் நிறைய பேர் ‘பிட்ஸ்பெர்க்’ எனும் ஆற்று நகரின் இருப்பை உணர்ந்தார்கள். அதுபோலவே மக்களுக்கு ‘டிட்ராய்ட்’ன் இருப்பையும் நாடகங்கள் வழி எடுத்துக் காட்ட நினைத்தேன். நாம் அனைவரும் அன்பினை பெறுவதற்கு மனிததன்மையே பிரதானமென நன்கு தெரிந்தவர்களாய் இருக்கிறோம், பயணிக்கிறோம். அதற்கு நிறைய கலை வடிவங்கள் உதவியாய் இருக்கிறது. ஆனால் ‘தொலைத்தொடர்பு சாதனங்கள் எனும் ஒரு வழிப் பாதை மனித சமூகத்தின் பயணத்துக்கு துணை செய்வதே இல்லை. அதனால்தான் மனிதத்தன்மை பெருகிய ஒரு நிலத்தைப் பற்றி அதுவும் எங்களுடைய அனுபவத்தில் உறைந்து போயிருக்கிற நகரத்தைப் பற்றி நாடக ஆசிரியர்கள் எழுதத் தொடங்குகிறோம். அப்படியான, என் நிலத்தை நான் நேசிக்கிறேன். அவ்வகையில் இந்த நாடக வரிசைகள் வழி, ஒரு நிலத்தையும் அதனுள் வசித்த மனிதர்கள் வாழ்வினில் பொதிந்திருந்த அன்பு பற்றிய படிமங்களைப் பரப்புகிறேன்.


கேள்வி: எங்கு இந்த நாடகத்திற்கான தொடக்கத்தைக் கண்டீர்கள்? மேலும், காலத்தை முன் வைத்துத் தொடங்கினீர்களா? அல்லது இடம்? மனிதர்கள்?
டொம்னிக் மொரிஸ்: காலம் என்பதை முன் வைத்தே நான் தொடங்கினேன். 1940 களில் இருந்த “பேரடைஸ் பள்ளத்தாக்கு” பற்றிய கதைதான் சொல்லப்போகிறோம் என்று தெரியும். அதனால், அங்கிருந்து என்னுடைய ஆய்வைத் தொடங்கினேன். அதன் வழி அந்த காலத்தில் உலக மக்களிடையே இருந்த எதிர்பார்ப்பு (ஜாஸ்,மது, நகரமயமாதலில் பெருவிருப்பம் கொண்டது) இக்கதையை நாடகமாக நகர்த்த துணை செய்தது. அதோடு என் கதை சொல்லல் முறையில் எவ்விதம் “போரடைஸ் பள்ளத்தாக்கை” இழந்தோம் என்பதை முன் வைக்க விரும்பினேன். ஏனெனில் அப்பள்ளத்தாக்கு இன்று நம் கண்முன் பெரும் பூதமென வளர்ந்து நிற்கிறது. அதையும் நான் அனுபவமாக்கிக் கொள்ளவும் முயற்சித்தேன். நிச்சயம் மூடிய ஒரு பெரும் வரலாற்றின் உள் பொதிந்த மனிதர்களை, இடங்களை மற்றும் ஒரு சமூகத்தை நாடகம் உயிர்த்தெழச்செய்யும் என்று நம்பினேன்.
கேள்வி:  நாடகத்தில் பம்கின் (பாத்திரம்) Geargio Dougles Johnson ன் ஒரு கவிதையை வாசிக்கிறார். உங்கள் நாடகத்தில் ‘Johnson’னின் கவிதைகளை பயன்படுத்த வேண்டுமெனும் திட்டமிருந்ததா ?
டொம்னிக் மொரிஸ்: நான் ஒரு கருப்பினக் கவிஞரின் கவிதையை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனத் திட்டமிட்டிருந்தேன். அதுபோல் மிகவும் பிரசித்தி பெறாத புதிய குரலாக இருக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தேன். Harlen* மறுமலர்ச்சிக் காலங்களிலிருந்து உலகம் முழுக்க மெல்ல அறிமுகமாகத் தொடங்கியவர்கள் Langston Hughes, Zora Neale, Hurston, Countee Cullen போன்றோர். ஆனாலும்,இவர்களைப் போல் இன்னும் நிறைய கருப்பினக் கவிஞர்கள் எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி தெரியாதவளாகவே இருந்தேன். அதனால் அவர்களைத் தேடி படித்தேன். படித்தபோது ‘Geargio Dougles Johnson’ ஐ வாசித்தேன். அவருடைய கவிதைகளில் ஈர்க்கப்பட்டேன்.
கேள்வி: நாடகம் எழுதுதல் என்பதற்கும் நாடக ஒத்திகைச் செயல்பாட்டுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. நாடக ஆசிரியரான நீங்கள் ஒத்திகை தளத்திற்கு வந்தவுடன் செயல்போக்கு எவ்விதம் மாறுகிறது? அந்த செயல்பாட்டில் இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுடனான உரையாடல்கள் மீண்டும் அப்பிரதியின் வடிவங்களில் சில மாற்றங்களைச் செய்ய உதவி செய்கிறதா?
டொம்னிக் மொரிஸ்: படைப்பாற்றல் மிகுந்த குழுவினர் ( நடிகர்கள், இயக்குநர்கள், வடிவமைப்பாளர்கள்) என்னுடைய நாடக எழுத்திலுள்ள இடைவெளிகளையும் நாடக மேடையேற்றத்திற்கு முற்றிலும் உதவாத விஷயங்களையும் கண்டுபிடிக்க உதவுகிறார்கள். அவர்கள் எளிய மற்றும் பிரமிக்கத்தக்க கலைஞர்கள். அவர்களுடைய குணாம்சத்திற்கு பொருந்தாதப் பகுதிகளை கூட நேரில் கண்டு அதை பிரதியில் சேர்த்து எழுதியிருக்கிறேன். ஒத்திகைகள் சில, தொடர் எழுத்தைத் தரும். மறுபரிசீலித்து எழுத அவர்களே காரணகர்த்தாக்கள்.
கேள்வி: நடிகர், செயல்பாட்டாளர் மற்றும் கவிஞராகவும் அறியப்பட்டவர் நீங்கள். அத்தகைய தொழில் பண்புகள் மற்றும் அடையாளங்கள், நாடக ஆசிரியராக இயங்க உதவுகிறதா ?
டொம்னிக் மொரிஸ்: அரங்கில், நீங்கள் குறிப்பிட்ட எல்லா துறையும் ஒன்றோடு ஒன்று உள்ளீடாக பிணைந்திருக்கிறது. என்னுடைய பிரதான வேலையான நாடக எழுத்து, என்னுள் இருக்கும் கவிஞரையும் நடிகரையும் பயன்படுத்திக் கொள்கிறது. என்னுடைய நாடக பாத்திரங்கள் கவிதாபூர்வமாக பேசவும் அதே சமயம் இயல்பிலிருந்து குரலைப் பயன்படுத்தவும், அவர்களை என் கவிதை அனுபவத்தைக் கொண்டு கட்டமைக்கிறேன். அதுபோல் என்னுடைய நாடகப் பாத்திரங்கள் ‘வலுவானவர்களாக’ வளர்ந்தெழ என்னுள் உள்ள நடிகர் துணை செய்கிறார்.ஆம், என்னுள் உள்ள நடிகரே அந்தந்த பாத்திரத்தின் தேவை, நோக்கம் மற்றும் பார்க்கும் கோணம் வெவ்வேறு விதமாக வளர்த்தெடுக்கிறார். என்னுள் உள்ள செயல்பாட்டாளர் நாடகக் கருக்களை சமகாலத் தன்மையுடனும் உயிரோட்டத்துடனும் வைத்துக் கொள்கிறார். அதனால்தான் என்னவோ! என் எல்லா நாடகங்களிலும் எல்லா பாத்திரங்களும் நியாயங்களைத் தேடுபவர்களாகவே இருக்கிறார்கள்…
கேள்வி: ஜாஸ், புளூஸ் மற்றும் பாப் (Hip-Hop play) ஆகியவை “பேரடைஸ் புளூ” வில் பெரும் பங்கு வகிக்கின்றன. இசை எவ்விதம் உங்கள் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது ?
டொம்னிக் மொரிஸ்: இசையே என்னுடைய எல்லாமுமானது. ஒரு Hip-Hop கலைஞரும் இசையமைப்பாளர் ஒருவரையே நான் திருமணம் முடித்துள்ளேன். நான் நடனமாடுபவள், எனவே அக்கலைக்கு இசை முக்கிய ஊடகமாக இருக்கிறது. நான் பியானோ வாசிப்பேன். நான் நடன அசைவை வடிவமைப்பேன். ஒரு கவிஞராக , நான் என்னுடைய கவிதைகளை இசையமைப்பாளர்களின் துணை கொண்டு பாடலாக்கி ஒலிப்பதிவு செய்திருக்கிறேன். இசையே எல்லாம், எல்லாமே எனக்கு இசைதான். அந்த பிடித்தமே என்னுடைய எல்லா நாடக எழுத்துக்கும் இசை பெரிய உந்து சக்தியாக இருக்கிறது.
கேள்வி: புதிய நாடகங்களை உருவாக்கும் புதிய நாடக ஆர்வலர்களுக்குச் சொல்ல நம்பிக்கை வார்த்தைகள் உங்களிடம் எப்படி உள்ளது ?
டொம்னிக் மொரிஸ்: என்னுடைய முதல் பதில், நீங்கள் உங்கள் விருப்பத்துக்குரிய வகையில் என்ன கதையை இந்த உலகத்தாருக்கு நாடகமாக சொல்ல விழைகிறீர்கள் என்பதை கூர்ந்து சிந்தியுங்கள். என்ன மாதிரியான கதையை எவ்விதமாக சொல்ல வேண்டும் என்பதை எக்காரணமாக முன்னோக்கித் தள்ளப்படுகிறீர்கள் என்பதில் உறுதியாக  இருங்கள். ஏனெனில், நாம் அனைவரும் ‘கதைசொல்லிகள்’ அரங்கில் ஒளி, இயக்கம், நடிப்பு, எழுத்து, மேடை மேலாண்மை என அனைவரும் கதைசொல்லிகளாக இணைந்து குழுவாக கதையை நிகழ்த்துகிறோம். மேலும் அரங்கில், பெரும் சவால்களை தாங்கிய நாடகங்களை நீங்கள் உருவாக்கத் தொடங்கும்போதே கலைத் தொழில் செய்கிறீர்கள் என்பதில் உறுதியும் தெளிவும் கொள்ளுங்கள். அதோடு படைப்பின் வழி எதை கண்டடைய முற்படுகிறீர்களோ அதை பின் தொடருங்கள். ஏற்கனவே பயணித்த பாதைகளில் பாதையைத் தேடாதீர்கள். அதே சமயம் உங்கள் செயல் மற்றவரை விழிப்படையச் செய்யும் சேவை செயலாக எப்போதும் இருக்கட்டும். அவைகள்தான் கலைஞர்களில் உயர்ந்த நிலையில் இயங்கும் கலைஞர்களாக அடையாளப்படுத்தும். அப்போது, இதுவரைக் கேட்காத கதைகளை மேடையில் சொல்லும்  இயக்கத்தில் நீங்கள் சேர்ந்தவர்களாகி விடுவீர்கள்.அது உங்களது கலைக்கு தைரியத்தைக் கொடுக்கும். மேலும், பயத்தை கொடுத்தாலும் பரவாயில்லை. அதுவும் நல்ல தொடக்கத்தின் அறிகுறியே !.
—————————————————————

Detroit* மெக்ஸிக்கனில் தென்கிழக்குப் பகுதியிலுள்ள நகரம். இது Detroit ஆற்றில் உள்ளது. 50 கிமீ தூரம் நீர் வழிப்பாதையில் அமைந்தது. பிரென்ச் குடியேறிகளால் கண்டுபிடிக்கப்பட்ட இடம்.
Pittsburg* பிட்ஸ்பெர்க் எனும் நகரம் மேற்கு பென்சில்வேனியாவில் மூன்று ஆறுகள் சந்திக்கும் இடத்தில் அமையப்பெற்றிருக்கிறது. இது ஒரு தொன்மையான வாழ்விடங்களின் அடையாளங்களை இன்றளவிலும் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Harlen* ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் பெரும் பகுதியினர்களின் வசிப்பிடப்பகுதி. 1920 களிலிருந்து இந்த Harlen இவர்களின் கலாச்சார மற்றும் வியாபாரத் தளமாக உருவானது.
   தமிழில் : ஞா. கோபி
               அரங்கச்  செயல்பாட்டாளர்,                             புதுச்சேரி.

Comments

Popular posts from this blog

அரங்கில் கலந்த ஆசிரியர் சே. ராமானுஜம்

எல்லோருக்காகவும் வேண்டியெழும் மொழி : ஜான் ஃபோஸின் நாடகங்கள் - ஞா. கோபி

நாடகக் கலைஞர்களின் கலை வழி உறவு நிலை வெளிப்பாடுகள்