கூத்துப்பட்டறை ந.முத்துசாமியுடனான நேர்காணல் (18.07.2009)


  கூத்துப்பட்டறை ந.முத்துசாமியுடனான நேர்காணல் (18.07.2009) 
                                                        

                                                       கோபி புதுச்சேரி
                                                  



       
                                             


# நான் “தமிழகக் கோயில் சிற்பங்களில் தென்படும் நாடகக் கூறுகள்” என்பதான ஆய்வில் ஈடுபட்டு வருகிறேன். சிற்பங்களின் துணைக் கொண்டு கூத்துப்பட்டறை நடிகர்களோடு நீங்கள் சில காலம் நடிப்புப் பயிற்சிகள் செய்திருக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். அது தொடர்பான உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்கள்?

முத்துசாமி: நிறைய வேலைகள் நாங்கள் செய்யவில்லை. சிறிது முயற்சி செய்திருக்கிறோம். உதாரணமாக பூதகணங்களின் உடல் அசைவுகளில் இருக்கிற வேறுபாடுகளையெல்லாம் நடிகர்களின் அசைவு முறைகளிலே கொண்டு வர முயற்சி செய்தோம். எனக்கு பூதகணங்கள் புதிதல்ல. புஞ்சை கோயிலில் சின்ன வயசுல இருந்தே பார்த்து வளர்ந்த்திருக்கிறேன். மேலும் அங்கு துவார பாலகர்கள் நிற்பது, யானை சிற்பங்களில் Expression தெரியும். அதுபோல் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் கூட அப்பேற்பட்ட யானைகள் இருக்கிறது. அதுபோல் கோயில் சுற்று சுவர்களில் செதுக்கப்பட்டு இருக்கும் புராணகதைகளின் சிற்பங்கள் அக்கதையின் தொடர் காட்சிகளாக இருக்கும். அதுபோன்ற காட்சிகளையும் எடுத்து கொஞ்சமாகப் பயன்படுத்தினோம். அப்படி ”தூதகடோத்கஜம்” எனும் நாடகத்தில் சில காட்சிகள் செய்தோம். அதன் பிறகு எதுவும் அப்படி செய்யவில்லை. ஆனா, அப்படி வேலை செய்த காலங்களில் மேடைப் படிமம் உருவாக்க சிற்பங்கள் எங்கள் நடிகர்களுக்கு பெரும் உந்துசக்தியா இருந்தது. ஆனால் நிறைய வேலை செய்யவில்லை.

# பெரும் உத்வேகம் தந்த சிற்பங்களைப் பயன்படுத்தி தொடர்ந்து நடிப்புப் பயிற்சிகள் செய்யாததற்கு காரணம்?

முத்துசாமி: நாங்கள் அப்படி தொடர்ந்து செய்யாததற்குக் காரணம் என்றால் அதற்கு நிறைய Field Work தேவைப்பட்டது. எங்களுக்கு அதற்கு நேரமில்லை. அதுதான் காரணம்.மேலும் கூத்துப்பட்டறையின் அன்றைய நடிப்பு முறை Physical Movements ஐ மையமிட்டு இருந்தது. இப்போது பக்கா Realistic க்கு வந்துவிட்டது. பேச்சு முறைக்காக நிறைய பயிற்சிக்கு வந்திருக்கிறோம். நான் Pure Theatre Person இல்ல. அப்படீங்கறதால என்னோட ஆர்வம் எல்லாம் Script Writingல் தான் இருக்கு. புதுவிதமான play எழுதுவது புதுவிதமான Subject கொண்டு வருவது என்பதில்தான் என் கவனம் அதிகம் இருக்கு. நான் அதை நோக்கி மட்டுமே போய்க் கொண்டிருக்கிறேன்.

# பொதுவாக கோயில் சிற்பங்களை நாடகத்தில் ஈடுபடுபவர்கள் எப்படி பார்க்கலாம்? நடனத் துறையினர் நாட்டியத்தை மீட்டுருவாக்கம் செய்தது கோயில் சிற்பங்களிலிருந்துதான். அது போன்று நாடகக்காரர்கள், எப்படியெல்லாம் தமிழ் நடிப்பு முறையை மீட்டுருவாக்கம் செய்வது என்று பார்க்க முடியுமா?  ஏனெனில், நீங்கள் சென்னது போன்று கதை சொல்லும் சிற்பங்கள் இருக்கிறது. வெவ்வேறு விதமான கோமாளிகளின் அசைவுகள் இருக்கிறது. தற்காப்புக் கலைகளின் அசைவுகள் இருக்கிறது. அதையெல்லாம் நவீன நாடகங்களில் பயன்படுத்திப் பார்க்க முடியாதா?
முத்துசாமி: நடனக்காரர்கள் எடுத்து பயன்படுத்தினார்கள் என்றால், இத்தனை கர்ணங்கள் இருக்கிறது என்று சிற்பத்தில் வடிவங்கள் இருக்கிறது. அதை அவர்கள் அப்படியே எடுத்துப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அப்படியே நாடகக்காரர்கள் பார்க்க முடியுமா என்றால் முடியாதுதான். எனெனில் நாடகத்தில் வசனங்கள், காட்சியமைப்பு, பல்வேறு பாத்திரங்கள், என பல கூறுகளை பயன்படுத்தி நாம் நாடகத்திற்கு உழைக்க வேண்டும். அதற்காக சிற்பங்களில் உள்ள Composition ஐ மிக நுணுக்கமாக ஆய்வு செய்ய வேண்டும். நீங்கள் குறிப்பிட்டபடி கதை சொல்லும் சிற்பங்கள் இருக்கிறது. வெவ்வேறு விதமான கோமாளிகளின் அசைவுகள் இருக்கிறது. தற்காப்புக் கலைகளின் அசைவுகள் இருக்கிறது. அவற்றைப் பார்க்கும் ஆய்வு முறை அற்புதமானது. நாங்கள் அப்போது முயற்சி செய்தது Physical Theatre ல். அதில் நடிகர்களின் உடலைப் பயன்படுத்தி என்னென்ன செய்யலாம் என்றுதான் முயற்சித்தோம். அப்போது அது போன்ற முயற்சியில் ஆர்வம் செலுத்தும் நடிகர்கள் இருந்தார்கள். கலைச்செல்வன், ஜெயக்குமார், கார்த்தி என நடிகர்கள் இருந்தார்கள். அதன் பிறகு மற்றுமொரு முக்கியச் செயல்பாடு நடந்தது. அதாவது, அதாவது  ‘ஆட்டக்களரி ஜெயச்சந்திரன்’ இங்கிலாந்து போய் படித்துவிட்டு திரும்பியவுடன், எங்கள் கூத்துப்பட்டறைக்காக ஒரு Workshop செய்தார். அந்த Workshop ல் Traditional Forms ஐ எப்படி Distract செய்து அதிலிருந்தே புது வடிவம் ஒன்றை உருவாக்குவது என்பதாகச் செய்தார். அப்படி சிலம்ப ஆட்டத்தின் Movements எல்லாம் உடைத்து ”தூதகடோத்கஜம்” நாடகத்தில் வேலை செய்தோம். கடோத்கஜன், துரியோத்தனன் ஆகியோரின் அசைவுகளையெல்லாம் அப்படி சிலம்பத்தின் Traditional Movement ஐ உடைத்து செய்தோம்.எப்படியென்றால் சிலம்பத்தின் ஒரு Movement ல் இருந்து இன்னொரு Movement க்கு போவதற்கு இடையில் எத்தனை Poses கிடைக்கிறது என்பதை கண்டு நடிகர்கள் பயிற்சி செய்தார்கள். அதை அப்படியே நாடகத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக அல்ல. நடிகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக. பசுபதிக்கு அது போன்ற பயிற்சிகளில் நல்ல அனுபவம். பசுபதியின் பயிற்சிகளின் போது “பிரகத்துவணி சுப்பிரமணியன்” வந்து, அந்த அசைவுகள் எல்லாம் எப்படி ஆதி தாளங்களில் அடங்குகிறது என்று பயிற்சி கொடுத்தார். நீங்கள் சொல்வது போலவும் செய்யலாம். அதற்கு நடிகர்களுடன் மட்டும் வேலை செய்தால் மட்டும் பத்தாது. சிற்ப வடிவங்களில் பொதிந்துள்ள நாடகக் கூறுகளை வெளிக்கொணரப் போகிறேன் என்று வேலை செய்ய வேண்டும். அதற்கு நிறைய Documentation செய்து ஆய்வு செய்ய வேண்டும். அதே வேலையாக இருக்க வேண்டும். முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அப்போதே Performance ல் Apply செய்வதில் கவனம் செலுத்தும்போது ஒரு வேலை ஆய்வுப் பணியில் சோர்வு ஏற்படும்.

#அப்படியானால் Performance ல் Apply செய்யவது கடினம் என்கிறீர்களா?

முத்துசாமி: அதை Apply செய்ய ஏதுவாக Script வேண்டும் இல்லையா? நம்மிடம் எவ்வளவு இருக்கிறது? அப்படி இருந்தால் அவற்றை வைத்து எப்படி வேலை செய்வது என்று யோசிக்க வேண்டும். சாத்தியமான ஒரு வழி, அதற்கேற்றபடி நாம் தான் Script எழுத வேண்டும். உங்களுக்கு Inspiration ஆக இருக்கக்கூடிய Body Movements களுக்கு இடம் அளிக்கக் கூடிய Script நீங்கள்தான் எழுத வேண்டும்.

Comments

Popular posts from this blog

அரங்கில் கலந்த ஆசிரியர் சே. ராமானுஜம்

எல்லோருக்காகவும் வேண்டியெழும் மொழி : ஜான் ஃபோஸின் நாடகங்கள் - ஞா. கோபி

நாடகக் கலைஞர்களின் கலை வழி உறவு நிலை வெளிப்பாடுகள்