வெளிகளின் வெளிகளைக் கண்டடையும் அரூப பயணம் – ஓவியர் எழிலரசனின் படைப்புகள்
வெளிகளின் வெளிகளைக் கண்டடையும் அரூப பயணம் – ஓவியர் எழிலரசனின் படைப்புகள்
”கலைப் படைப்பை உணர்ந்து கொள்ள முயற்சிப்பது” எனும் பார்வையை முன் வைத்து இயங்கும் அமெரிக்காவைச் சேர்ந்த, கலைப் பாட விரிவுரையாளரும் நியூயார்க் டைம்ஸின் சமகாலக் கலை விமர்சகருமான ரொபர்ட்டா ஸ்மித்தின் (Roberta Smith) கூற்றில் ஒன்று, ,
“உங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் அதன் காட்சி இருப்பைப் பொறுத்து பகுப்பாய்வு செய்யலாம். ஆனால், கலையை அப்படி அணுகிவிட முடியாது. என்னவென்றால், நீங்கள் அறிந்ததை விட அதிகமான விஷயங்கள் அதனுள் மறைந்து கிடக்கிறது, அதையெல்லாம் நீங்கள் கற்றுக்கொள்ள முடியாது. உங்கள் வாழ்நாளை அக்கலைப்படைப்புகளிடம் ஒப்படைத்து முயற்சித்துப் பார்த்தால் நீங்கள் புதிய உணர்வுகளை அடைய முடியும்.”
என்கிறது. ஆம் உண்மைதான். ஒவ்வொரு கலைஞரும் அவர்தம் பார்வையை, உணர்வுகளாக அப்படைப்பில் பல நாள் பயணித்து, உரு திரட்டி வைத்து விட்டுக் கடக்கிறார்கள். அப்படி அவர்கள் இறக்கி வைத்த இடத்தில் ஓவியம், சிற்பம் என ஒன்று இருக்கிறது. அது ஓவியம், சிற்பம் என்பதை மறந்து, நமக்கு அதுவரைப் பழக்கப்படாத முற்றிலும் ஒரு புதிய மொழிகளின் வாக்கியம் என்றால், அதை நாம் எப்படி அணுகுவோம்? அதன் அசைவுகளைக் கொண்டோ, அசைவுகளின் இடையே ஏற்படும் மெளனத்தைக் கொண்டோதானே நாம் உணர்வறிந்து கொள்ள முயற்சிப்போம். அப்படி நாம் முயற்சிக்கும் காலங்களில், அப்படைப்புடனோ அப்படைப்பின் காரணமாக நாம் நம்முடனோ நிகழ்த்திக் கொள்ளும் உரையாடல்களைத்தான் கலைகளில் அரூப வெளியெனவும் நாம் சொல்ல வேண்டியிருக்கிறது.
அப்படி, பல உரையாடல் சாத்தியங்களை, நமக்கு ஏற்படுத்திக் கொடுப்பவைதான் ஓவியர் எழிலரசனுடைய ஓவியங்கள். எழிலரசன், புதுச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்டு, உலகளாவிய ஓவியப் பரப்பில் பயணிப்பவர். தன் மூத்த சகோதரர் ஓவியர் சாந்தகுமார் வழி இவர் ஓவியத் துறைக்கு வந்தவர் என்றாலும் ஓவியங்கள் குறித்த இவரது அகன்ற பார்வையும் நெடும்பயணமுமே இவர் படைப்புகளை முற்றிலும் பிரசவிக்கிறது. எழிலரசன் புதுவை பாரதியார் பல்கலைக்கூடம் எனும் பெயரில் அமைந்த ஓவியக்கல்லூரியில் Visual Communication பாடத்திட்டத்தில் இருந்தவர். ஆனால் அவர் மனம் முழுக்க Painting இல் லயித்துக் கிடந்ததையும் பின் மெல்ல அது வேகம் கொண்டு முற்றிலுமாக Canvas இல் தஞ்சம் கொண்டதையும் வகுப்புத் தோழனாக நான் உடனிருந்து பார்த்திருக்கிறேன். அதன் பிறகு அவருடைய ஓவியங்கள்தான் அவர் மொழி. அந்த மொழியின் சாத்தியங்களை அவர் தொடந்து விசாலப்படுத்திப் பார்ப்பவராய் மாறி இருக்கிறார்.
எழிலரசனின் தொடக்கக் கால ஓவியங்களைப் பார்க்கும்போது, அவை சுய முக உருவங்களும் சுய உடல் நிர்வாணங்களும் என்பதாக இருக்கிறது. . ”ஒரு கலைஞன் , சுய உருவப்படத்தை வரைவது என்பது, சுய வதையிலிருந்து தப்பிப்பதற்கான தீர்வு.” என ஸ்காட் கான் (Scott Kahn). சொன்னதைப்போல, கலைகள் தரும் பித்து மனநிலையை அவ்ஓவியங்கள் வழி எழிலும் எதிர் கொண்டிருக்கிறார். ஆனாலும் அவ்ஓவியங்களை நாம் நேரமெடுத்துப் பார்ப்போமெனில், முகம், உடல், உறுப்புகள் போன்ற தன் வெளியிலிருந்து வண்ணக் குழைவுகள் தரும் பல புதிய வெளிகளை நமக்கு உணரத் தருவதுபோல் அவரும் கண்டடைந்திருகிறார் என்பது புலப்படுகிறது, அவற்றை, அவரது அடுத்த வரிசை ஓவியங்களைப் பார்க்கும்போது உணர முடிகிறது. அதுபோல், அதற்கு அடுத்தத் தொடர் ஓவியங்களில் உடல் அடிப்படை வெளியாக இருக்கும்போதே அதனுடன் இணைந்த புராண காலத்துப் பொருட்களின் வெளிகளை இணைக்கும் முயற்சிகளையும் சில ஓவியங்களில் இருந்து நம்மால் உணர முடிகிறது.
இவை, ஒரு வகையில் புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியங்களை பார்ப்பதில் உள்ள பழக்கத்தின் பாதிப்பு என்று எளிதில் கடந்து விட முடியாதபடிக்கு எழில் தன் படைப்புகளில் தனக்கான தனித்துவத்தை வைத்திருக்கிறார். அவை, தன் ஓவியங்களின் அளவை பெரிதாய் தீர்மானித்ததும் அதனால் உருவமற்ற வெளிகளைப் பெருமளவில் வைப்பதும் என்பதுமே ஆகும். அந்தத் தனித்துவம் என்பதைக் ’கலைத் துணிவு’ என்று சொல்லலாம் என்று தோன்றுகிறது அந்தத் துணிவான எல்லை மீறல்கள் எனும் பயிற்சிகளின் விளைவாக, அவர் படைப்பை மெல்ல முற்றிலும் புதிய தளத்திற்கு நகர்த்தியிருக்கிறார். அதற்குச் சான்றாக, ”ஏதுமற்ற குழப்பமான.. பின் தெளிவான ஒன்று பிறக்கிறதோ, அதுவும் கண நேரம்தான். அந்த கண நேரத்திற்குள் பயம், மகிழ்ச்சி, மிரட்சி, சோகம், காமம், இத்யாதி என விரிந்து கொண்டே போகிறது எழிலின் ஓவியங்கள்…”– ம. தவசி, 2005 தினகரன் வாசகச்சோலை (2011ம் ஆண்டுக்கான யுவ புரஸ்கார் விருது வென்ற ’சேவல்கட்டு’ நாவலாசிரியர்) எனும் கலை இலக்கிய ஆளுமைகளின் பார்வைகள் துணை நிற்கின்றன. எழிலரசனின் படைப்பு மனம், 2005 ஆம் வருட ஒவியங்களில் இருந்து முற்றிலும் உருவமற்ற வெளிகளுக்குள் பொதிந்துள்ள வெளிகளைத் தீட்டத் தொடங்கியிருக்கிறது.
அந்த வரிசையில், ’புத்தா’, ’நேரம்’ ‘டேப் ரெக்கார்டர்’, ‘பாயிண்ட் ஆப் வியூ’ போன்ற ஓவியங்கள் மிக முக்கியத்துவம் நிறைந்தவை. அக்காலத்தில் அவர் படைப்புகளில் எழுந்த அத்தகைய முக்கிய மாற்றமான ‘உருவமற்ற தன்மை’ குறித்து அவரின் படைப்புகளில் இன்னும் கூடுதல் நேரம் செலவிடும்போது, அவற்றில் ’பயணக் காலவெளி’ என்பது மையம் கொண்டிருப்பது தெரிய வருகிறது. பயணம் நமக்கு பயம் போக்குகிறது, அந்த பயமின்றி பல்வேறு கால அளவில் இப்பூமியின் பல வெளிகளைக் காண்பதென்பது என, எல்லாம் கலந்த, ஓர் அனுபவம் இவருடைய ஓவியங்கள் என்றாகின்றன. அந்த அனுபவத்தை அந்நேர மனோ நிலைக்கான வண்ணங்களாக ஓவியப்பரப்பில் வைத்தும் எடுத்தும் பார்ப்பதையெல்லாம் மிகச் சுதந்திரமாக அனுபவித்தும் வெளிப்படுத்தியும் இருக்கிறார். அதை நம் கண் கொண்டு, நாம் உணரவும் பெரும் சுதந்திரம் ஏற்படுத்திக் கொடுக்கிறார் எழிலரசன்.
ஜாக்ஸன் பொல்லாக்கினைத் தொடர்ந்து அரூப ஓவியங்களின் வெளிப்பாட்டு முறைகளில் புதிய பரிமாணங்களைக் கண்டடைந்த கிளிஃபோர்ட் ஸ்டில் (Clyfford Still) தன் படைப்புப் பற்றிக் குறிப்பிடும் போது, “என் ஓவியங்களில் வண்ணம் ஒருபோதும் வண்ணமாக இருப்பதை நான் விரும்பவில்லை. ஒருபோதும் என் ஓவியம், புறப்பரப்பைச் சார்ந்ததாக மட்டும் இருப்பதையும் நான் விரும்பவில்லை. என் ஓவியங்கள் வடிவங்களாக மட்டும் மாறுவதையும் நான் விரும்பவில்லை. மாறாக, நான் விரும்புவதெல்லாம் அந்த அனைத்தும் ஒன்றாக சேர்ந்து வாழ்வின் சக்தியை நாம் கண்டுகொள்ள வாய்ப்பு ஏற்படுத்துவதையே, நான் ஓவியமாக்க விரும்புகிறேன்.” என்று குறிப்பிட்டார். அதைப் போன்று எவ்வித தயக்கமும் இன்றி, வெளியின் வெளிகளை கண்டடைய வேண்டும் எனும் குறிக்கோள் கொண்ட வெளிப்பாட்டு முறை எழிலரசனின் இரண்டாம் கால ஓவியங்கள் ஆகின்றன. அவை தரும் அனுபவங்களில் மிக முக்கியமான ஒன்று வெற்று வெளிகளைத் தொடர் வாக்கியங்களாக மாற்றுவது. அதுதான், அவ்வண்ண வெளிகளுக்குள் இருக்கும் பல படிம வெளிகளை ரசிப்பவரிடத்தே இலகுவாக காட்சி ஓட்டமாக்கவும் செய்கிறது. அவர், தன் படைப்பில் எல்லாவற்றிலுமே ஒற்றை ஊடக வண்ணப் பொருட்களைத் தவிர்த்து, பல வண்ண ஊடகங்களை பயன்படுத்துவது இப்போக்கின் பலம். அதுபோல் ஓவியம் தீட்டும் தளப் பரப்பிலும் நிறைய வேறுபாடுகளை வேண்டியே உருவாக்கி இருக்கிறார். அதாவது, கேன்வாஸில் பல்வேறு நிலைகளில். பல இட மாறுதல்களில் இவரே உருவாக்கிய, புடைத்த தையல்கள் புதிய அனுபவ உணர்வுகளைத் தரவல்லதாக அமைகின்றன.
அதற்குச் சான்றாக, ’மலையிலிருந்து மலைக்கு’, ‘இசைஞன்’, ’இதுவும்’, ‘உங்கள் இருப்பின் காரணமாக’, ‘இடம் இல்லை-விளையாட்டு’, குருட்டின் துணை கொண்டு அசைதல்’, ’டில்லி’, ’வயதின் இன்பம்’ போன்ற ஓவியங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். குறிப்பாக, ’குருட்டின் துணை கொண்டு அசைதல்’ எனும் ஓவியத்தைத் தலைப்பின் துணை கொண்டு பார்த்தோமெனில், இருட்டில் அசைவதற்கு ஏதுவாய் இருளின் உள் பொதிந்துள்ள வண்ணமொன்றை உருவாக்கித் தீட்டியிருப்பார். அவை நாம் கண் மூடும் கணம் வந்து விழும் வெளிச்ச வண்ணங்களில் ஒன்று. அசைவிற்கு நீலம் குறுக்கு வெட்டில் பல குறுக்குகளைக் கொண்டதாய் இருக்கும். கரிய கோட்டில் சிறிய அளவில் குழந்தை கிறுக்கலில் எழுந்த யானை ஒன்று மிகச் சிறிய அளவில் அசையும். மேலும் சிலுவை போன்ற அப்பரப்பில் இருக்கும் புடைத்த தையல் அத்தளத்தில் இயங்கும் அசைவில் இருக்கும் கடினத் தன்மை கொண்டதென உணர்வைக் கொடுக்கும். இது ஓர் அனுபவம். தலைப்பினை விடுத்து அவ்வண்ணங்களிடையே நம் பார்வை பயணிக்கும் போது எழும் மகிழ்ச்சி, துக்கம், தேடல் போன்றவற்றுடன் மேல் மூலையில் சிறு சிதறலாய் கீறிய அந்த வெள்ளை நிறம், ஒரு அனுபவத்தைத் தரும். இது என் பார்வைதான். உங்களுக்கு வேறொன்றாக அவை காத்திருக்கிறது. ஏனெனில், எழிலரசனுடைய அத்தகைய ஓவியங்களுக்குள் வண்ணம் வெளிக்கான திரவமாகும்போது, அடர்த்தியான தூரிகைத் தீண்டல்கள், அவற்றின் உள் நுழைந்து குறுக்கிடுகின்றன, ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்கின்றன. அத்தொடர்பு வழி, உருவங்களற்ற பெரு வெளிகளென உருவாகி, எதிர்மறை இடத்துடன் விளையாடும் ஆற்றல் நிறைந்த வண்ணங்களான பாடல்கள் ஆகின்றன. அவை இன்பமும் துன்பமும் நிறைந்ததாக இருக்கின்றன.
அடுத்து, அவருடைய படைப்பு வரிசையில் மிக மாறுதல்களைக் கண்டடைந்த படைப்பு, ’தெற்கிலிருந்து வடக்குக்கு’, ‘வெளியேற்றம்’ போன்றவற்றின் உருவப் பண்புகள் பற்றிப் பேச வேண்டும். ’தெற்கிலிருந்து வடக்குக்கு’ ஆதாரப்பரப்பானது, ரசம் பூசப்பட்ட பெரியக்கண்ணாடி, அதில் சிறு அளவில் பல புகைப்பட பிரிண்டுகளின் மேல் ஓவியங்கள். சில இடங்களில் வண்ணங்களே ஓவியங்கள். ஆங்காங்கே எழுத்துக்கள், அதுவரை இல்லாத அளவிற்கு அதில், வாழ்வியல் தத்துவார்த்தப் பரப்பிற்குள் பயணித்திருப்பார். அப்படைப்பின் பெருவெளி, நிச்சயம் அதைப் பார்க்கும் தூர அளவை நோக்கிய உந்துதலைப் பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தும். அவையும் வெளி குறித்த பண்புகள் பெருகி வழியும் ஓர் படைப்பை நாம் பார்க்கும் அனுபவம். அதுபோல், ‘வெளியேற்றம்’ ஓவியத்தின் ஆதாரப்பரப்பு, பெரிய பிளைவுட். அப்பிளைவுட் வெல்வெட் துணியினால் போர்த்தி ஒட்டப்பட்டிருக்கும்.அப்பரப்பு முழுக்க சிறு சதுரங்களில் சினிமா நடிகர் நடிகைகளின் பிரிண்டுகளின் மேல் ஓவியங்கள் தீட்டப்பட்டு இருக்கும். அப்படைப்பில் சதுரம் பெரும் வினை ஆற்றும் ஆற்றல் கொண்டதாய் மாறும்போது நாம் அடுத்த ஓவியத்தை நோக்கி நகரத்தொடங்குவோம். இத்தகைய கடினப் பொருண்மையை கலை மனம் ஏற்படுத்த விழைவதே நம் எல்லோருக்கும் சேர்த்துத்தான். அவை, ஒரு வகையில் நவீன ஓவியன் ஆண்டி வார்ல் (Andy Warhol), , “நான் வெளிப்படுத்த விரும்பும் விஷயங்கள் இயந்திரத்தனமானவைதான். மனிதர்களைவிட இயந்திரங்களுக்கு குறைவான சிக்கல்களே உள்ளன. நான் சில நேரங்களில் ஒரு இயந்திரமாகவே மாறி இருக்க விரும்புகிறேன். நீங்கள் எப்போதும் இருப்பது போல்.” என்று சொல்வதைப்போல, எழிலரசனின் இப்படைப்புகள் நம்மை போன்றதொரு மொழியிலேயே நம்மைப் பாடிச் சென்று மறைவதைப் போல அப்போது தோன்றி மறைந்தனவற்றுள் ஒன்றெனவும் சொல்லலாம்.
அடுத்த வரிசைக்கு என எப்போதும் போல் போகாமல், உள் வரிசையிலிருந்து ஒரு குறுக்குப் பயணம் செய்வது ஒரு அனுபவம், என்ற மனோநிலைக்கு நம்மைப் பழக்கும் எழிலசரனின் ஓவியங்களைப் போல, நான் இப்போது, அவருடைய இரண்டாம் வரிசையில் உருபெற்ற படைப்புகளில், ‘பீடியுடன்’ மற்றும் ‘காபி குடிப்பதற்கு முன்’ எனும் பெண் உடல் நிர்வாண ஓவியங்களுள் பயணிக்கும் உந்துதல் பெறுகிறேன். அவற்றின் பிரதான வினையாற்றல் பண்பென்பது, அந்த உடல் பகுதிகளில் இவர் பயணித்த வண்ணக் கீறல்களினால் பல்வேறு குணாம்சங்கள் கொண்ட நிலப்பகுதிகளாய் அவ்வுடல் எனக்கு அனுபவத்தைத் தருகிறது. அதன் உரு முழுமை அடையாத நிலை எனும் அமைப்பு முறையை இவர் தேர்ந்தெடுத்திருப்பதினால், பால் சார்பு உடல், எனும் வெளி வழி அவ்வுடலும் அதைப் பார்க்கும் உடலும் உருவாக்கும் நிலப்பரப்புகள் நம்மை முற்றிலும் புதிய உரையாடலுக்குள் இட்டுச்செல்கின்றன. அதனால் அவ்வுடல் ஒரு கணம் நம் உடல் ஆகி, நம்வெளி ஊதிப் பெருக்கும் அதிர்வையும் கொடுக்கிறது. இப்படி, தொடர் படைப்புச் செயல்பாடுகள் வழி பல்வேறு சாத்தியப்பாடுகளைக் கொண்ட அரூப மொழிகளைத் தந்து கொண்டேயிருக்கும் எழிலரசனின் படைப்புகள் தற்காலங்களில் எவ்வகைப் பயணப்பாட்டில் இருக்கிறது? என்பதைப் பார்ப்பதுதான் அதி அவசியமாகிறது.
குறுகிய வெளிகளை விரிவுப்படுத்தியும், பெருவெளிகளின் உள்ளே போய் நுணுகியும் பார்க்கும் இவர், தற்காலங்களிலும் அப்போக்கையே தொடர்கிறார். ஆனாலும் அணுகும் விதங்களில் முன் எப்போதும் இல்லாத மாறுதல்தான். அதனால்தானோ என்னவோ! அவை, வண்ணம் கருப்பு எனும் பண்பை பெருமளவில் நாடியிருக்கிறது. அதேபோல், அதற்கான புறப்பரப்பையும் கணம் இல்லாத மரத் துண்டுகளெனக் கண்டடைந்திருக்கிறது. அதுபோல் இதுவரை இல்லாத கோடுகள், புள்ளிகள், சிறிய அளவிலான மனிதர்கள், விலங்குகள், மரங்கள், கடல் அலைகள், குளக்கரைகள், ஆறுகள், அவசர கதியிலான நகரங்களின் அமைதிகள் என வேறு களங்களை இவர் படைப்புகள் கண்டடைந்திருக்கின்றன. அப்படியே, அப்பார்வை வெவ்வேறாகத் தொடர்கின்றது. எழிலரசனின், ‘நிழல்களின் நிலம்’ எனும் தலைப்பில் அமைந்த சமீபத்திய தனி நபர் ஓவியங்கள் மற்றும் சிற்பக்கண்காட்சி அதற்குச் சான்று. மேலும் அங்குக் காணக்கிடைத்த படைப்புக்கள்தான் மீண்டும் இவருடைய முந்தையப் படைப்புக்களைப் பின்னோக்கிப் போய்ப் பார்க்க வேண்டும் என்றும் தூண்டியது. அத்தூண்டல் உணர்வின் முக்கியக் காரணம், இவர் தன் படைப்பில், கருப்பொருள் (Theme) தேடுதல் அல்லது முன்வைத்தல் எனும் பொதுப் பயணங்களில் எப்போதுமே பயணிக்காது இருப்பதுதான். அதனால்தான் இவரால் ஓவியம் வரைதல் எனும் செயல்கிரமத்திற்கு மதிப்பு சேர்க்க முடிகிறது.
அவ்விதத்தில், அப்படைப்புகளின் போது சாராம்சமாக, பல்வேறு நிலவெளியிலிருக்கும், நிழல்வெளிகளின் மனவெளித் தோற்றம் என்பதாகப் படுகிறது. இது குறித்து அவரை அணுகும்போது, அவருடைய பார்வையானது, ”என்னுடயை ஓவியங்களைப் பெருமளவில் என் பயணங்களே தீர்மானிக்கின்றன. அவ்வகையில், நான் இப்போது சென்னை போன்ற பெரு நகரங்களில் அதிகம் பயணிக்கிறேன். அந்த நிலப்பரப்பையும், அதனில் இருக்கும் நிச்சயமற்றத் தன்மையையும் நான் முழுமையாக அனுபவிக்கிறேன். அதனால் இப்போது அவ்வெளிகளின் புதிய வெளிகள் சிலவற்றைப் பார்க்கிறேன். அதிலொன்று, பெருநகரங்களின் மீதிருந்த அச்சம் போய் இப்போது அதன் மெளனம் என்னை வசிகரித்தது. அதிலும், அந்த நகரங்களின் யாருமற்ற தெருக்களும் அதில் உலவும் நாய்களும் மனிதர்களால் கூர்ந்து பார்க்கப்படாத பேரசைவுகளாக எனக்குத் தெரிகின்றன.”. என்கிறார்.
இது ஒரு வகையில் ஒரு கலைஞனின் தனித்த பார்வை என்ற போதிலும், அந்தப் பார்வை தரும் உணர்வை மற்றவர்களுடன் பரிமாறிக்கொள்ள அவர் முன்னெடுக்கும் அந்தச் செயல்கிரமம்தான் அதற்கான தனித்த மொழியைத் கண்டடைந்திருக்கிறது என்பது தெரிய வருகிறது. அதற்குச் சான்றாக, அவ்ஓவிய வரிசைப் பரப்பான மரப்பலகைகளின் நிறத்தையும் அதிலேயே இருக்கும் தனித்த குணங்களையும் அப்படியே பயன்படுத்தியிருக்கிறார், அதுபோல் அளவு மாறுதல்கள் உண்டு. சில இடங்களில் கரிய புள்ளிகளால், கீறல்களால் நமக்குக் காணக்கிடைக்கும் அந்த அரூப வெளியைக் கடல், நிலம், காற்று என உருவாக்கி விடுகிறார். அந்த அற்புத வெளியை சிதைக்காமல் இருக்க நாய் மற்றும் மனிதர்களை அதில் இயங்கச் செய்யும்போது மிகச் சிறிய அளவில் நிழல்களாக இறக்கி வைத்திருக்கிறார். அதை பார்க்கும் நம் அனுபவம் வரை அச்செயல்கிரமத்தை அவர் தீர்மானித்திருக்கிறார். ஆம், தனியே நின்று அவர் தீட்டிய அந்த வெளியைப் பார்க்கும் போது எழிலரசன் அதிலிருந்து விலகுகிறார். அதனால், அந்த வெளி, நம் உலகாக மாறுகிறது. இது, இவர் படைப்புகள் தரும் மிக முக்கியமான அனுபவம்.
இப்படிப் பல்வேறு சாத்தியப்பாடுகளைக் கொண்டுள்ள எழிலரசனுடைய அரூப ஓவிய வரிசைகள், ஒரு கால வரிசையிலன்றி நமக்குக் கேட்கக் கிடைக்கும் மொழி தெரியாத இசையைக் கேட்பது போலவே இருக்கிறது. நாம் அதிலிருந்து நிச்சயம், குறிப்புகளைப் பிடிக்க முயற்சிக்காதிருப்போமானால் - அவை நம் கண்களைக் கழுவிக்கொள்ள அனுமதிக்கும். பிறகு, நம் கண்கள் ஓவிய வெளியின் மீது அலையவும், விளையாடவும் தொடங்கும். அந்த விளையாட்டுதான் நாம் கண்டடையும் உள்வெளி. அந்த வாழ்வியல் அனுபவம் பெற, வாய்ப்பு கிடைக்கும்போது நீங்களும் எழிலரசனின் படைப்புகளை நேரில் அணுகுங்கள். மனதால் பாருங்கள்.
"மனிதர்கள் இயல்பில் தன் கண்களாலும் உடல் ரீதியாகவும் பார்க்க முடியாததை மனதுடன் பார்க்க அனுமதிப்பதுதான், அரூபப் படைப்புகள் தரும் இயக்க அனுபவம்." ஆர்ஷைல் கார்க்கி(Arshile Gorky)
ஞா. கோபி புதுச்சேரி
நன்றி : மணல்வீடு, இதழ் எண்: 40, அக்டோபர் 2020
Mama article romba nalla irukku, paaratukkal, Oviyarukkum, ezhutalarukkum. Oru murai padithuvitten. Meendum meendum padikka purindhukolla thoondugira varthaigal. Miga aazam, arumai. Vazhthukkal.
ReplyDeletethanks machi..
Delete