ஓவியர் ஸ்ரீதரின் படைப்பில் கிளர்ந்தெழும் சுதந்திரமும் எதிர்மொழியும்

 ஓவியர் ஸ்ரீதரின் படைப்பில் கிளர்ந்தெழும் சுதந்திரமும் எதிர்மொழியும்

     

   




ஓர் ஓவியத்தையோ அல்லது ஓர் ஓவியரின் ஓவிய வரிசைகளையோ நாம் நேரடியாகப் பார்க்கும் போது நமக்குள் என்னென்ன உணர்வுகள் கிளர்ந்தெழுகின்றன? என்பது பற்றி நமக்குள்ளோ அல்லது நம் நட்பு வட்டத்திலோ பேசியிருக்கிறோமா? அப்படிப் பேசியிருந்தால் அந்த உணர்வுகளின் அசைவுகள் எவ்விதத்தில் இருக்கும்? அந்த ஓவியங்கள் தரும் அனுபவம் என்பதற்கும் நம் வாழ்வியல் அனுபவங்களுக்கும் உள்ள தொடர்பு என்பது என்ன? அவை முன்னெடுக்க விரும்பும் சுதந்திரம் என்பது ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இச்சமூகக் கட்டமைப்புகளை எவ்விதத்தில் கேள்விக்குட்படுத்துகிறது? என வளர்ந்து கொண்டே போகும் கேள்விகளுக்கான விடைகள் எங்கிருந்து நமக்குக் கிடைக்கும்? என்றால், அத்தகைய கேள்விகளை நேரடியாகவோ அல்லது வாழ்வியலில் தான் தேடும் சுதந்திர உணர்வை முன் வைத்துப் படைக்கப்பட்ட படைப்புகளை வைத்து ஆய்ந்து அறிதலே நல்லதொரு வழியாகும். அவ்வகையில்தான் ஓவியர் ஸ்ரீதரின் படைப்புலகம் நம்மை உற்சாகமாக வரவேற்கிறது. குறிப்பாக, அவர் படைப்புகள் இங்கு யார் மீதும் காழ்ப்புணர்ச்சியின்றி, தன்னைத் தாங்கும் நிலப்பரப்புகளையும், அந்த நிலப்பரப்புகளின் அசைவுகளுக்குக் காரணமாகும் எளிய மனிதர்ககளின் சார்பிலும், சுதந்திரம் வேண்டும் பல்வேறு ஜீவராசிகளின் சார்பிலும் நின்று கனவுகளைக் காண்கிறது. இத்தன்மைகளால்தான் நமக்குள் நல்லதொரு உணர்வு அலைகள் அப்படைப்புகளின் மூலம் ஏற்படுகிறது. அதற்கு ஓர் உதாரணம் சொல்ல வேண்டுமெனில்,

”ஆப்பிரிக்கக் கலை வடிவங்கள் என்பது செயல்பாட்டோடு சம்பந்தப்பட்டது, அது எப்போதும் ஒரு நோக்கத்திற்கு உதவுகிறது அவை மிகப்பெரிய ஆரவாரப் பிரிவைச் சேகரிப்பதற்கான வழிமுறையல்ல. அப்படைப்புகள், தன்னைச் சந்திப்பவரைக்  குணமாக்கும், அவ்வகையில், படைப்பாளிக்கும் பார்வையாளருக்கும் ஓர் ஆதாரமாக நின்று இரு திசையினருக்கும் ஒரு மகிழ்ச்சியான நேர்மறை அதிர்வுகளைப் பரப்புகிறது.” எனக் குறிப்பிடும் ஆப்பிரிக்க அமெரிக்க ராப்பர், பாடகர், நடிகர் மற்றும் செயல்பாட்டாளரான மோஸ் டெஃப் (Mos Def) பார்வை முற்றிலும் ஸ்ரீதரின் ஓவியப் படைப்புகளுக்கும் பொருந்தும். 


தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தொந்திரெட்டிப்பாளையம் எனும் கிராமத்தைச் சார்ந்தவர் ஓவியர் ஸ்ரீதர். ‘தன் வாழ்வியலின் சிறு வயது நினைவுகள் என்பது அந்த ஊரும் எப்போதும் உழைத்துக் கொண்டேயிருக்கும் கரிய நிற மனிதர்களாலும் ஆனது’, என்று சொல்லும் இவர், தன் அப்பாவிடம் வெளிப்பாட்டு மொழியாக அவ்வப்போது எழுந்த ஓவிய மொழியின் தாக்கம் தன்னிடம் வந்ததாகவும் கண்டு சொல்கிறார். மேலும் தன் மாமா ஓவியர் சரவணன், வரைகலையைத் தொழிலாகச் (sign board, banner) செய்த காலத்தில் அவரிடம் இருந்து அடிப்படைகளைக் கற்றதன் வழி படைப்புத் தொழிலில் தன்னை விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறார். பின் முறையே, புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூடத்தில் இளநிலைப் பட்டப்படிப்பாக (B.F.A) ஓவியம் பயிலச் சென்றிருக்கிறார். அங்கு, சிற்பி ஜெயராமன், இராஜராஜன் மாஸ்டர் போன்றோரின் நட்புணர்வுடனான கற்பித்தலில் தனக்கானதொரு வெளியைத் தேடத் தொடங்கியிருக்கிறார். தொடர்ந்து ஓவியப்பரப்பில் தன்னைக் கரைத்துக் கொண்டிருந்தவர், சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சென்னை ஓவியக் கல்லூரியில் முதுகலைப் பட்டப்படிப்பிற்காகப் (M.F.A) பயணப்பட்டிருக்கிறார். அங்குதான், கலையின் மீது ஆழமான புரிதலும் ஆய்வு மனமும் கொண்ட சந்ரு மாஸ்டர் போன்ற ஆளுமைகளின் நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவையெல்லாம் சேர்ந்து, இவருடைய பயணம், காட்சி மொழி, வண்ணங்களோடான தொடர்பு, கோடுகளை முன் வைத்த பயிற்சி மற்றும் தான் வெளிப்படுத்தும் படைப்புகளுக்கான அங்கீகாரம் உலகின் பல பகுதிகளில் இருந்து வருவது, என்பனவாக தன் உலகம் விரிவுபட்டதை நம்முடன் பேசும்போது நினைவு கொள்கிறார். இவையெல்லாம் ஓர் அடிப்படைக் காரணங்களாக இருப்பினும், அந்தச் சூழல்களில் ஒரு படைப்பாளியாக இவருக்குள் நிகழ்த்தப்பட்டிருக்கும் சுய உரையாடல்களுக்குப் பெரும் பங்கு இருந்திருக்கும் என்பதே உண்மை. அந்த உரையாடல்கள் தான், தன்னையும் தன் குழு வாழ்வைச் சுற்றியுள்ள வண்ணங்களையும், அதை மீண்டும் மீண்டும் பார்ப்பதில் உள்ள மகிழ்ச்சியையும், அதை மேலும் விரிவுபடுத்திக் கொள்ளுதல் எனும் நேர்மறை அதிர்வுகளைக் கண்டடையச் செய்திருக்கின்றன என்கிறார். அதற்குச் சான்றாகவே அவருடைய ஓவியங்கள் நமக்கும் உலகின் பல நாடுகளில் உள்ள கலை ஆர்வலர்களுக்கும் கலைஞர்களுக்கும் நெருக்கமான ஒன்றாக இருக்கின்றன.

ஸ்ரீதரின் ஆரம்பகால ஓவியங்கள் பயிற்சிமுறைகளின் வழி பிறந்த படைப்புகள் என்பவை, முக உருவ ஓவியங்கள், நிலப்பரப்பு ஓவியங்கள் என பொதுவழியில் பயணப்படுபவையாகவே இருந்திருக்கின்றன. இருப்பினும், அப்பயணத்தில், மெல்ல தனக்கேயுரிய வண்ணங்களின் குழைவுத் தன்மை, தான் கைக்கொள்ளும் நிறங்களின் உணர்வு மற்றும் புறப்பரப்பின் (Texture) வழி பார்வையாளர்களிடத்தே அந்த ஓவியங்கள் ஏற்படுத்தும் உணர்வுக் கடத்தலுக்கு துணை செய்யும் காரணிகள் போன்றவற்றைக் கண்டடைந்திருக்கிறார்.


அதை அவருடைய, கல்லூரி காலம் தாண்டிய படைப்பு வரிசைகள் நமக்கு உணர்த்துகின்றன. அவ்வரிசையில் முதலில் இருப்பது ஏராளமான முக உருவ ஓவியங்களும் (Portrait Paintings) சுய உருவ ஓவியங்களும் (Auto Portrait Paintings) ஆகும். அதில் முக உருவ ஓவியங்கள் பெரும்பான்மையானவற்றில் பெண்கள் இடம்பெற்று இருக்கின்றனர். அவர்களில் முறையே குழந்தைகள், இள வயதினர் மற்றும் வயதானவர்கள் எனப் படைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் நிறமும் கண்களில் தெரியும் ஏக்கமும் மகிழ்ச்சியும் தேடலும் நமக்கு நம்மையே பார்த்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. அந்த உணர்வு கடத்தலுக்கு அவர் எவ்வளவு தூரம் அம்மனிதர்களைக் கவனித்தல் என்ற அகமன உரையாடலுக்குள் சென்றிருக்க வேண்டும்? அவர்களைப் பற்றிய நினைவலைகளில் எவ்வளவு நேரம் இவர் செலவிட்டிருக்க வேண்டும்? இந்த கேள்விகளில்தான் அவ்வோவியங்கள் நமக்கு நெருக்கமாய் இருப்பதை உணர முடிகிறது. அதற்கு உதாரணமாக, அந்த உருவ ஓவியங்களில் சிலவற்றின் பின் பகுதிகளில் (Backround) அவர்கள் எங்கு அமர்ந்திருந்தார்களோ அதே இடத்தை வரைந்திருப்பார். ஆனால் பல ஓவியங்களில் அரூபமாக அந்த உருவம் பயணித்துக் கொண்டிருக்கும், வண்ணங்களால் ஆன புதிய நிலப்பரப்புகளைத் தீட்டியிருப்பார். அந்தத் தன்மையில்தான் ஸ்ரீதர் எனும் படைப்பு மனம், நிலம் என்பதை மனிதர்களின் நினைவுகளின் வழி நின்று பார்க்கிறது என்ற புதிய பகுதியை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆம், கலை என்பது கடந்த காலத்திலிருந்து மட்டும் தோண்டியெடுக்கப்படும் ஒரு புதையல் அல்ல. அதுபோல், வேறொரு தேசத்திலிருந்தும் அவை இறக்குமதி செய்யப்படுபவை அல்ல, அவை, கலைஞனுடன் வாழும் அனைத்து உயிரினங்களின் தற்கால வாழ்வின் ஒரு பகுதியாகும், என்பது இவருடைய இந்தப் படைப்புகளின் வழி தெளிவாகிறது.




குறிப்பாக இவரது கிராமம் சார் வாழ்வியலின் அனுபவம் என்பது, வெளிகளை (Space) மையப்படுத்தியதாகவே இருந்திருக்கிறது, இருக்கிறது. அதன் காரணமாக இவரின் ஓவிய வெளிப்பாட்டில் அவை வருகிறது என்றாலும், எவ்விதங்களில் அது மனிதர்களோடு வருகிறது! என்பதே தனிச்சிறப்பாக மாறுகிறது. எப்படியெனில்,

”என் குழந்தைப் பருவ நினைவுகளில் நிறைந்திருந்த நிலப்பரப்பு என்பது நிலம் மட்டும் என்று சொல்வதற்கு அல்ல, அது நிலத்தின் முடிவு. அட்லாண்டிக்கின் குளிர், உப்பு, நகரும் மலைகள் என இருக்கும். இப்படி நிலம் மற்றும் கடலைப் பற்றிய எனது பார்வையென்பது எனக்குச் சொந்தமான, தெளிவான விஷயம் என்று நினைக்கிறேன்.” என்று எழுதிய கவிஞர் சில்வியா ப்ளாத்தின் பார்வையைப் போன்றதோடு ஒத்துப் போகிறது. அவ்வகையில்தான், ஸ்ரீதருடைய படைப்பு மனம் பெரும்பான்மையாக நேரடி நிலப்பரப்புக் காட்சிகளை (Landscape) வரைந்திருப்பதையும் பார்க்க முடிகிறது. அந்த ஓவியங்கள் இவருடைய பலம் என்று சொன்னாலும் மிகையில்லை. ஒவ்வொரு நிலப்பரப்பு ஓவியங்களைப் பார்க்கும் நமக்கு அச்சூழலில் நாம் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. வயல்வெளிகள், தாமரைகளும் அல்லிகளும் நிறைந்த குளங்கள், மரங்கள் நிறைந்த பாதைகள் என அவை நீள்கின்றன. இங்குக் குறிப்பிட்டுச் சுட்ட வேண்டிய முக்கியக் கூறு ஒன்று உள்ளது. அது, அந்த எல்லா ஓவியங்களிலும் உழைப்பு நிமித்தம் அசையும் மனிதர்கள் இருந்து கொண்டே இருக்கிறார்கள். அப்படி மனிதர்கள் நிறைந்த காட்சிகள்தான் அவ்வோவியத்தைக் காணும் நாம், அப்பரப்பில் உலாவும் ஒரு மன நிலையை ஏற்படுத்துகிறது.









நிலப்பரப்பு ஓவியங்கள் என்பது பொதுவாக இயற்கையை மையமாகக் கொண்டு வரையறுக்கப்படும் ஒரு கலை வகையை குறிக்கும். இயற்கை ஓவியங்கள், மலைகள், காடுகள், ஆறுகள் மற்றும் கடற்கரைகள் போன்ற பல்வேறு அமைப்புகளை சித்தரிக்க முடியும். அவை பெரும்பாலும் காட்சியின் பரந்த காட்சியை வழங்குகின்றன, மேலும் வானம் எனும் பரப்பிலும் கவனம் செலுத்துகின்றன. உலகத்து ஓவியர்கள் பல்வேறு காரணங்களுக்காக நிலப்பரப்புகளைத் தங்கள் படைப்புகளுக்காகத் தேர்வு செய்கிறார்கள். அவர்களின் பார்வைகளில் உள்ள அழகைக் குறிக்க அல்லது பிரதிபலிக்க விரும்புவதைத் தவிர, பல கலைஞர்கள் ஒளி, நிறம் மற்றும் அமைப்பு போன்ற பல்வேறு அழகியல் கூறுகளை வரைந்து ஆராய இவ்வகையிலான சித்தரிப்புகளை உருவாக்க விரும்புகிறார்கள். கூடுதலாக, சில கலைஞர்கள் இயற்கையின் காட்சிகளை ஒரு கதையைச் சொல்வதற்கும், அப்பரப்பின் உருவகத்தைக் கருத்தியல் செய்வதற்கும் ஒரு வழியாகப் பயன்படுத்துகிறார்கள். அந்தக் கருத்தியல் பார்வைதான் ஸ்ரீதரின் நிலப்பரப்பு ஓவியங்களிலும் தெறித்து, காண்போரை வசீகரிக்கின்றன. குறிப்பாக அந்த ஓவிய நிலங்களில் எல்லாம் மனிதர்களின் உழைப்பு அசைவும் அவர்களுக்குத் துணையாய் நிற்கும் நீலமேறிய வானமும் நமக்கு வாழ்வின் மேன்மையைக் கற்க உதவுகிறது என்பதே உண்மை. அம்மாந்தர்களின் வாழ்வு எனபது நிலத்தோடு எவ்விதங்களிலெல்லாம் தொடர்புற்றிருக்கிறது மற்றும் உழைப்பின்பால் ஒடுக்கப்படும் அவர்கள் எவ்வித ஆர்பாட்டமுமின்றி, மீண்டும் மீண்டும் நிலத்தை உழுவதிலிருந்து, விதைப்பது மற்றும் தானியங்களின் அறுவடை வரை உள்ள ஓவியங்களில் வெவ்வேறு நிலைகளில் வந்து பதிவாகிறார்கள். அவ்வகையிலான ஸ்ரீதரின் படைப்பு வெளிப்பாடு நிலம் என்பது மனிதர்களாகவும், எளிய மனிதர்களின் கனவுகளில் நிலம் பேரசைவாக வந்து போவதையும் நம்மால் உணர முடிகிறது. அந்த உணர்வின் வழி வளரும் கற்றல், உழைக்கும் மனிதர்களையும் அவர்தம் கள்ளம் கபடமற்ற அசைவுகளையும் இனியொரு சமயம் நேரில் பார்த்தால், நின்று மனிதத்தன்மையுடன் அவற்றை உள்வாங்கும் பழக்கத்தையும் பாகுபாடற்ற அணுகுமுறையையும் நமக்குக் கற்றுத் தந்துவிடுகிறது.






இந்த அணுகுமுறைகளின் தொடர்ச்சியாகத்தான் கடந்த பத்து ஆண்டுகளாக ஸ்ரீதரிடமிருந்து வெளிப்பட்ட அரூப (abstract) கோட்டோவியங்கள், வண்ண ஓவியங்கள் நமக்கு அறிமுகமாகின்றன. அவற்றின் வெளிப்பாட்டு வகையும் அவை சுதந்திரம் என்பதை முன் வைத்தது எவ்விதம் உருபெற்றிருக்கின்றன என்பதெல்லாம் நமக்கு ஆச்சரியத்தைத் தருகின்றன. மேலும், ஒவ்வொரு நாளும் இச்சமூகம் கவனிக்காதது போல் கடந்து போகும் ’ஒடுக்கப்பட்ட மனிதர்களின் கனவு வெளியென்பது எவ்வளவு பரந்துபட்டது’ என்பது பற்றியெல்லாம் பேச அவ்வோவியங்கள் நம்மை அழைக்கின்றன. ஒருவகையில், இவருடைய ஆரம்பகாலப் படைப்புகளான முக உருவ ஓவியங்கள், முழு உருவ ஓவியங்கள் மற்றும் நிலப்பரப்பு ஓவியங்களின் கூட்டுச் சேர்க்கையில் பிறந்த புதிய மொழியே ஸ்ரீதருடைய அந்தக்கால கட்ட அரூப ஓவியங்கள்.




அவ்வகையான கோட்டோவியங்கள் வரிசையில், குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய கூறுகளில் இருப்பவை, முன்னர் அவர் பயணத்தில் இருந்த நிலப்பரப்புகளில் இருக்கும் மனிதர்கள் பறவையாய், பல்வேறு உயிரிகளாய் தவழ்வதும் பறப்பதுமாய் இருக்கிறார்கள். மேலும் அத்தகைய சுதந்திர மனிதர்கள் யாவரும், நிர்வாணமாய் இருந்து அவர்களுடனும் அவர்களால் கண்டடையப்பட்ட புதிய வெளிகளுடனும் உரையாடிக்கொள்கின்றனர். அதில் பிறப்பு நிகழ்கிறது, வளர்ச்சி நிகழ்கிறது. அதுபோல் மரணங்களும் அது தொடர்பான அதீத சடங்குகளையும் கொண்டிருக்கின்றன. அத்தகைய தொகுப்பு நிலைகள்தான் அவற்றைப் பார்க்கும் நம்மை, நம் அனுபவக் கூட்டுக்குள் மிகச் சாதாரணமாகக் கைபிடித்து அழைத்துச்செல்கின்றன. அப்படிச் செல்லும்போது, நாம், உடைகளுக்கும் நிறங்களுக்கும் மதிப்புக் கொடுக்காத நம் பால்யத்தின் உள்ளே போய் வர முடிகிறது. பால் பாகுபாடு காட்டாத வன்மம் இல்லாத உடல் உரசும் இளமைக் காலங்களுக்குச் சென்று வர முடிகிறது. குறுகிய வெளிக்குள் நிகழும் உடல் சுகவீனங்களும் மனிதர்கள்தம் வலியும் வேதனையும் நம் முன்னோர்களை ஞாபகமூட்டுகிறது. அதுபோல் இறப்புச் சடங்கைக் கொண்டாடும் உடல்களின் இருப்பு நிலைகளில் மெளனத்தைப் போல சிறிய அமைதி நாம் நேசித்தவர்களைப் பிரிந்த கணங்களில் கொண்டு போய் நிறுத்துகிறது. இந்த அற்புதங்கள் எப்படி நிகழ்கின்றன. அடிப்படையில், எந்த ஒரு கலைப் படைப்பு என்பதும், மனித விழுமியங்களின் சார்பாகவே இருக்கும். சோகம், குற்ற உணர்வு, துக்கம், மகிழ்ச்சி, பயம், நம்பிக்கை, போன்ற மதிப்புகள் எப்போதும் மனிதர்களோடு இருப்பவை, அவற்றைக் காண்பதுதான் கலைஞனின் வேலையும் கலையின் தேவையும் ஆகிறது. அப்படித்தான் ஸ்ரீதரின் இந்தக் கோட்டோவிய வரிசை. சாதாரண உரைநடை மொழிகளில் விளக்க முடியாததைக்கூடச் சிறு கோடுகளின் கீறல் மற்றும் இருப்பிடத் தன்மையினால் பார்ப்போருக்குக்குள் கடத்துகிறது, கடத்தப்படும் அத்தகைய நேர்மறை அதிர்வுகளின் வழியேதான் ஸ்ரீதர் எனும் படைப்பாளியின் பார்வைக்கு நாம் மதிப்பளிக்கிறவர்களாக மாறுகிறோம்.   

அடுத்து இவருடைய அரூப நிலையிலான வண்ண ஓவியங்களைப் பற்றிப் பேச வேண்டும். குறிப்பாக நாம் முன் கண்ட கோட்டோவியங்கள் பலவற்றை இவர், வண்ண ஓவியங்களாக மாற்றியிருப்பதென்பது தெரிய வருகிறது. அவரும் அது பற்றிச் சொல்லும் போது, “அடிப்படையில் கோட்டோவியங்களில் நான் கண்டடைந்ததை வண்ணங்களால் தீட்டிப் பார்க்கிறேன். இது ஒரு வகையில் என் ஓவியங்களில் நான் மேற்கொள்ளும் பயணத்தொடர்ச்சி. அதாவது என் கனவை, ஒரு படி மேலே சென்று வண்ணங்களால் அகலப்படுத்திப் பார்க்கும் சுதந்திரம் என்னிடம் இருக்கிறது. அதை நான் முயற்சிக்கிறேன்.” என்பனவாகக் குறிப்பிடுகிறார். அவர் சொல்லும்போது, நமக்குத் தெரிய வரும் சுதந்திரம் என்பதே இங்கு எல்லா மனிதர்களும் வேண்டுவது. அத்தகைய விடுதலைக்கான வழிகளை இவ்வுலகிற்கு கலைஞர்கள் காட்ட வல்லவர்களாக இருக்கிறார்கள். அதை உணரும் பழக்கத்தில்தான் நாம் சற்று அவர்களின் படைப்பு மொழியை நோக்கி முன்னேறிச் செல்ல வேண்டியிருக்கிறது. அவ்வகையில் வண்ணங்களால் நிறைந்த ஸ்ரீதரின் தற்கால ஓவியங்கள் பல கதையாடல்களை நம் முன் விரிக்கின்றன.



அதிலொரு வரிசை, கிராமத் தெய்வ உருக்கள் மனிதர்களைப் போலப் பூக்களைக் கையிலேந்தித் தங்களிடம் வழிபட வருபவர்களை வரவேற்பது போன்ற கதையைப் புனைவாய் சொல்லுதலில் ஸ்ரீதர் மிகப்பெரிய உயரம் போய் வருகிறார். மாண்டவர்கள்தான் தெய்வம் என்பதால் அந்த உருக்களில் ஒன்று, பெண்ணாய் மாறி, பறக்கும் ஆண் ஒருவனின் இறக்கைகளை உலர்த்துவதும். கரிய நிறத்திலானப் பெண்கள், தங்கள் முகங்களில் வெள்ளை நிறம் அப்பி விளையாடுவதும். நேரிடையாக வானைத் தொடும் மரங்களை உடைய நிலப்பரப்பிலிருந்து எழும் தேவதை, புதிய விலங்கினம் ஒன்றைக் கையிலேந்தி தன் மார்பில் அணைத்துக் கொஞ்சுவதென ஓவியங்கள் ஒவ்வொன்றும் பல்வேறு கதைகளுடன்  நீள்கிறது. குறிப்பாக அந்தக் கதைக் கிளைகளை நம் மனங்களுக்கு உணர்வாய் இறக்கும் வேலையை ஸ்ரீதர் எனும் ஓவியர் செய்து விடுகிறார். எப்படியெனில், ஒவ்வோர் ஓவியத்திற்கும் அவர் வண்ணங்களை வைப்பதில் உள்ள வேறுபாடே மிக முக்கியமானதாக இருக்கிறது. அவை, வண்ணங்களை அப்படியே திடமாக வைத்திருப்பதும். சிலவற்றில் நன்கு குழைத்துப் புறப்பரப்போடே இயைந்து போவது போலவும் எனத் தன் வெளிப்பாட்டு மொழியின் உணர்வு அலைகளைப் பார்ப்போரிடத்தே கடத்துகிறார். அது எப்படியெனில், ’இந்த ஓவியம் என்ன சொல்ல வருகிறது? என்ற கேள்வியைப் பார்ப்போர் கேட்காமல் இருக்க, தனக்குத்தானே பாராட்டக்கூடிய ஒரு இசையின் காட்சி மொழியை உருவாக்கி விடுகிறார்.





பிரெஞ்சு ஓவியர், லித்தோகிராஃபர் மற்றும் கலை கோட்பாட்டாளர் ஆகிய மாரிஸ் டெனிஸ், (1870-1943) ஓவிய உருவாக்கம் பற்றிக் குறிப்பிடும்போது "ஒரு ஓவியமானது – அதனுள் காட்சியாக ஒரு போர் குதிரையோ அல்லது நிர்வாணப் பெண்ணாகவோ இருப்பதற்கு முன்பு அடிப்படையில் ஒரு தட்டையான மேற்பரப்பு வண்ணங்கள் ஒரு குறிப்பிட்ட வரிசையில் கூடியிருக்கும்." என்பார். அதுபோலவே ஸ்ரீதருடைய அந்த ஓவிய வரிசைகளில் உள்ள பழங்குடித் தன்மை என்பது அடிப்படையாகவே அவருடைய வண்ணக்குழைவுகளில் கூடி விட்டிருக்கிறது என்பதாகவேப் படுகிறது. இவரிடம் மெலெழும்பும் இந்தப் பழங்குடித்தன்மைதான் பறத்தல் நிலையிலிருந்து கொண்டே சக மனிதர்களைப் பல்வேறு நிலைகளில் நேசிப்பது என்பதை நமக்குக் கற்றுத் தருகிறது. அந்த நேசிப்பு வழியேதான் தன் மேல் படிந்துள்ள நிராகரிப்புகளையும் அது மறக்க முயற்சிக்கிறது. இதுதான் ஸ்ரீதர் தன் படைப்புகளில் முன் எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு வித எதிர்மொழி.

அந்த மொழியின் கண் கொண்டுதான், மிகச் சமீப காலங்களில் இவரிடமிருந்து உரு கொண்டிருக்கும் புதிய அரூப ஓவியங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஆம், அவ்வோவிய வரிசை முன்னர் கண்டவற்றிலிருந்து முற்றிலும் வேகம் கொண்டு எல்லா உடல்களும் நிலப்பரப்பில் கலந்து போய் இருக்கின்றன. இயல்பாக மனிதன் தன் கண்களைக்கொண்டு புறப்பார்வையால் பார்க்க முடியாததை அரூப ஓவியங்கள், மனதின் வழி அகப்பார்வைப் பார்க்க அனுமதிக்கிறது. அதனால்தான் அரூபக் கலை வழி கலைஞர்கள், உறுதியானது என்பதைத் தாண்டி, எல்லைகளற்றதை வரையறுக்கப்பட்டவற்றிலிருந்து பிரித்தெடுக்கிறார்கள். இது, ஒருவகையில் மனித மனதின் விடுதலையை நோக்கிய பயணம். அவ்வகையில், ஸ்ரீதரின் தற்கால ஓவிய வரிசை, முன்பிருந்த தன்னைக் கலைத்துப்போட்டு, ஆதிமொழியிலான கதைகளை நம் முன் விரிக்கிறது. அந்தப் புதிய மொழிக்கதைகள், மனிதர்களுக்குள் யாதொரு வேறுபாடுகள், கட்டுப்பாடுகள், அடையாளங்கள் அற்ற வாழ்வியல் வெளிகளாக நம் முன் விரிகின்றன. அவை, ஒரு பெருநகரத்தின் இதயத்தில் உள்ள பல்வேறு உயிரணுக்களிடம் இருப்பது போன்ற தனிமையைப் பேசிப் பார்க்கின்றன. மற்றும் உற்சாகமான அந்தத் தனிமையினுள் உலாவும் நம் முன்னோர்களின் இருப்பையும் கண்டுபிடிக்க ஸ்ரீதர், அப்பரப்புகளில் தொடர்ச்சியான கோணங்களையும் கோடுகளையும், வெளிச்சத்துக்குரிய வண்ணங்களையும் பயன்படுத்துகிறார். இந்தப் புதிய ஓவியங்களின் வண்ணக் கலவையானது தன் முற்கால ஓவியங்களின் ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதியை பூதக்கண்ணாடி வைத்துப் பார்க்கும் அல்லது காட்ட உதவுவது போன்ற பல முக்கியமான நுண்ணறிவுகளை நமக்கு வழங்குகின்றன.

”வெவ்வேறு பெரிய பெரிய மலைகளின் மீது ஏறி நின்று, அங்கிருந்து தெரியும் நிலப்பரப்பைப் பார்ப்பது போன்ற காட்சி மொழிகளை இப்போதெல்லாம் நான் வரைகின்றேன். அதில், யார் மீதும் யாதொரு குற்றமும் சொல்லாத ஆதி மனிதர்களின் அசைவுகளை என்னால் கண்டுகொள்ள முடிகிறது.”  என்று அந்த ஓவியங்களைப் பார்க்கும் நம்மிடத்தில்,  சிறு குறிப்பைத் தருகிறார் ஸ்ரீதர். அக்குறிப்பினை அடியொற்றி அந்த ஓவிய வரிசைக்குள் பயணிக்கும்போது, நம் அனுபவத்தின் கிளைகள் நம் உணர்வில் மிக வேகமாக விரிகின்றன. சிகப்பு வண்ணம் மேலோங்கிய ஓர் ஓவியம், மஞ்சள் இறங்கிய ஒரு பெருவெளிக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. அது, உண்மையில் நாம் எல்லோரும் வசிக்க விரும்பும் அழகியல் மிக்கதோர் இடமாகும். பிறர் நலம் பேணுதலைச் சொன்ன பௌத்தப் பிட்சுகளின் தற்காலிக வசிப்பிடங்களில் இருப்பது போன்ற வசீகரம் நம்மை மேலும் அந்த வெளியின் எல்லா இடங்களையும் மிக நுணுக்கமாகப் பார்க்கச் செய்கிறது. அப்படிப் பார்க்கும்பொழுது பாறை ஓவியங்களில் இருப்பது போன்ற கோடுகளால் ஆன மனிதக் குழுவினர் சிறிய அளவில் இருந்துகொண்டு ஆடுகின்றனர். பார்த்துக் கொண்டிருக்கும் நாம் சிறிது அசைந்து சென்று பார்த்தோமெனில் அவ்வோவியத்தின் வண்ணக் குழைவுகள் அசைந்து அங்கு நிகழும் சடங்கில் நம்மை முகிழச் செய்யும். அத்தகைய சாத்தியங்களைப் பார்வையாளர்களுக்குக் கொடுக்கும் ஓவியத்திற்காக இப்படைப்பாளி எத்தகைய தூரம் தன்னைச் செலவிட்டிருக்க வேண்டும்!. இவைகள்தான் ஸ்ரீதரின் படைப்பில் இருந்து எழும் ஆரோக்கியமான எதிர்மொழிகள். அம்மொழியைத் தொடர்ந்து படிப்பவர்களுக்கு வன்மம் இல்லாத வாழ்வியல் அறம் மெல்லப் பழக்கத்திற்கு வரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.


அதுபோல் மற்றொரு ஓவியம் ஒன்று, ஓய்வின்றி இயங்கும் கட்டிடங்களை நிறைய அளவில் கொண்ட ஒரு பெருநகரத்தை நமக்கு நினைவூட்டுகிறது. குறிப்பாக, அக்கட்டிடங்களின் மேல் சூழ்ந்திருக்கும் கருமை, நம் இருப்பை வெகு இயல்பாய் நமக்கு உணர்த்திவிடுகிறது. அச்சூழலிலிருந்து நம் இறுக்க உணர்வு வெளிவருவதற்கான சாத்தியங்களை ஸ்ரீதர் எவ்விதத்தில் கட்டமைக்கிறார் என்றால், அந்த கரும் வானத்தில் அடர் நீலத்தின் கீறல் ஒன்று மேலெழுந்தவாரியாக எழச்செய்து விட்டிருக்கிறார். அந்த கீற்றின் வழியேதான் அந்த அரூப ஓவியத்தின் தொகுப்பில் (composition) வியத்தகு மாற்றங்கள் நிகழத் தொடங்குகின்றன. அவை, கருமைப்படர்ந்த அந்நகர வானின் மேல் வெளிர் நீலம் பாரிக்கத் தொடங்குகிறது. அதனால் சிறிதே வெளிச்சம் கசியும் சாத்தியங்கள் கொண்ட மேக இடுக்கிலிருந்து பச்சை வயல் தென்படவும் தொடங்குகிறது.


அதே வரிசையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னுமொரு ஓவியம், நீலம் பரவிய சிரசுடன் வயல்வெளிகளுக்கு நடுவே பேச எத்தனிக்கும் பெண் தெய்வ ஓவியமாகும். தூரத்திலிருந்து பார்க்கும்போது பச்சை போர்த்திய வயல் வெளிகளுக்கு நடுவே தெரியும் அகால மரணம் தழுவிய பெண் ஒருத்தி ஊமை நிலையிலிருந்து விடுபட்டுப் பேச நினைக்கிறாள். அவள் கூந்தலில் வயலோரக் குளத்து மீன்கள் நீந்தி அசைகின்றன. இந்த பொருண்மையை நாம் எப்படி அடைய முடிகிறது என்றால் அந்த ஓவியத்தில் ஸ்ரீதர் கையாண்ட வண்ணங்களின் அசைவுகள்தான் உதவுகின்றன. அப்பெண்ணின் நெற்றியில் பெரிய அளவிலான பொட்டு ஓர் அசைவியக்கத் தூண்டல். வாயின் இருபுறமும் வெளியேறியிருக்கும் இரத்தம் வழியும் கோரைப்பற்கள் ஓர் விசை. கழுத்துக்கு கீழ் சட்டெனத் தொடங்கும் இறுகிய மார்பு சிற்ப அசைவிற்கான தூண்டல். முகமும் கூந்தலும் நீலம் பாய்ந்திருப்பது அவள் உணர்விற்கான உச்சம். மேலும், காலை நேர மஞ்சள் வெயிலால் போர்த்தப்பட்ட வயல்வெளியில் அவள் மிதப்பதாய் தோற்றம் தருவது உணர்வுகளின் பேரசைவுகளின் நடுப்புள்ளி ஆகும். இந்த சுதந்திரத்தை அவரும் எடுத்து நமக்கும் வழங்குகிறார் என்பதே அவர் செய்யும் கலையின் சிறப்பு.  

“இந்த மரத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? அது பச்சை நிறமா?

அப்படியென்றால் அச்சப்படாமல், பச்சை நிறத்தை உங்கள் படைப்பின் பரப்பில் அப்படியே வையுங்கள். பயப்பட வேண்டாம்.”

என்று பால் காகின் சொன்னதைப்போல, மனிதர்களுக்குள் மனிதர் இடமளித்தல் என்பதில் உள்ள மகிழ்ச்சியைப் போன்ற அனுபவம் ஸ்ரீதரின் ஓவியங்களைப் பார்த்துவிட்டு வெளிவரும் நமக்குக் கிடைக்கிறது. மேலும் அந்த சுதந்திர உணர்வை எல்லோருக்குமானதாகவே ஸ்ரீதர் படைக்கிறார். நாம் அனுபவம் கொள்ளப் பயணப்பட வேண்டியதே அவருக்கும் நமக்கும் உள்ள தற்காலிக இடைவெளி. நாம் எல்லோரும் நம் பார்வையின் அளவில் தனித்தனி அனுபவம் பெற்றவர்களாக இருக்கிறோம். அதே சமயம் பெரும்பான்மைக்குள் உழலும் அனுபவம் நிறைந்தவர்களாகப் பொதுக் காட்சி ஊடக உருவங்களால் இரைச்சலாகவும் நாம் இருக்கிறோம். அதிலிருந்தெல்லாம் நாம் மீளவோ, ஒவ்வொருவரின் தனித்த வாழ்வின் அசைவுகளை அனுபவிக்கவோ, அரூபக் கலைகளின் தொடர்ப் பார்வையாளர்களாக இருப்பதும் கூட ஓர் நல்வழியே.

இவ்வகையில், தற்கால தமிழக ஓவியர்களில் ஸ்ரீதரின் ஓவிய வெளிப்பாட்டுச் செல்வாக்கு மகத்தானது மற்றும் முற்றிலும் மாறுபட்டது. இப்படைப்புகள் இயல்பிலேயே சமகாலக் கலாச்சாரத்தின் பொருள்முதல்வாதத்தை மறுப்பதாகவும் இருக்கின்றன. மேலும், அதிகாரமற்ற வாழ்க்கை முறைக்கு ஆதரவாக,  நிராகரிப்பிலிருந்து எழுந்து பறப்பதற்கான வியத்தகு சாத்தியங்களைக் கண்டடைந்தவையாக  அவரது வெளிப்பாட்டு மரபு உள்ளது. இந்த மரபு அவரது அயராத சோதனையில் பிறந்தது. குறிப்பாக மனிதர்களும் நிலமும் இணைந்தும் பிரிந்தும் இருக்கும் புதிய மாயக்கலை உருவகம்தான் அவரது பார்வையின் தனித்துவத்தை நம்மிடையே உறுதிப்படுத்துகிறது.  நாம், இனி செய்ய வேண்டியது ஸ்ரீதரின் ஓவியங்களை நேரில் பார்க்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொண்டு பயணிப்பதுவே அவருடைய சுதந்திர மொழியை நம் வசமாக்கவும் வழி செய்யும்.

                                                                                                  ஞா. கோபி, புதுச்சேரி

 நன்றி: நீலம், அக்டோபர்-2020

Comments

Popular posts from this blog

அரங்கில் கலந்த ஆசிரியர் சே. ராமானுஜம்

எல்லோருக்காகவும் வேண்டியெழும் மொழி : ஜான் ஃபோஸின் நாடகங்கள் - ஞா. கோபி

நாடகக் கலைஞர்களின் கலை வழி உறவு நிலை வெளிப்பாடுகள்