சிதைவுகளினூடே அழகியல் மொழி பேசும் ஓவியர் இராஜராஜன் படைப்புகள்

 


சிதைவுகளினூடே அழகியல் மொழி பேசும் ஓவியர் இராஜராஜன் படைப்புகள்



      தற்கால ஓவியக்கலையின் வெளிப்பாடுகள், அதன் படைப்புச் செயலில் ஈடுபடும் கலைஞர்கள் மற்றும் பார்வையாளர்களாக இருக்கும் கலை ஆர்வலர்களின் சுதந்திர உணர்வைத் தூண்டுகிறது. ஏனெனில் இந்த காலகட்டத்தில் உருவாக்கப்படும் கலைப் படைப்புகள் பரிசோதனைகளை பெருமளவில் கொண்டாடுகிறது. மேலும், கடந்த கால சம்பிரதாய மரபுகளை துணிந்து ஒதுக்கியும் வைக்கிறது. வெவ்வேறு புதிய வண்ண பொருள்களையும், அவற்றை வினியோகிக்கும் முறைகள் வழி காட்சிக் கலையான ஓவியங்களைப் பார்க்கும் புதிய வழிகளையும் நமக்கு பழக்கப்படுத்துகிறது. இந்த வெளிப்பாட்டுச் சுதந்திரம் மற்றும் அத்தகைய  படைப்புகள் தரும் உளவியல் தரிசனங்கள் எல்லாமே நவீன ஓவியக் கலையின் வழி சமூக மேம்பாட்டினையும் உறுதி செய்கிறது.

இத்தகைய நவீன ஓவியக் கலையால் ஆராயப்படும் கருப்பொருள்கள் மிகவும் சமூக உணர்வுள்ளவையாக மாற, பெரும் வாய்ப்பு ஏற்படுத்தும் தளமாக இருந்தவை இருப்பவை ஒவ்வோரு காலகட்டத்தில் உருவான, ஓவியக் கல்லூரிகளும் அதன் ஆசிரியர்களும் என்றால் மிகையில்லை. அத்தகைய ஆசிரியர்களால் இந்தியா மட்டுமின்றி தமிழகம் புதுச்சேரி மாநிலங்களிலும் பல நவீன ஓவியத் தலைமுறைகள் உருவாகி செயல்பட்டு வருகிறார்கள். அவ்வகையில் புதுச்சேரியில் நவீன ஓவீய பாரம்பரியத்திற்கு வித்திட்ட ‘பாரதியார் பல்கலைக்கூடம்’ எனும் பெயரில் அமைந்த ஓவியக்கல்லூரியில், கலைக் கற்பித்தல் பணியிலேயே தன் வாழ்வின் பெரும் பகுதியைக் கரைத்துக் கொண்ட ஓவியர் இராஜராஜன் அவர்களின் படைப்புகள் இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவில் கவனிக்கப்பட்டவை.


நாகை மாவட்டம் மயிலாடுதுறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இராஜராஜன், தன் குழந்தைப் பருவம் முதல் இளமைப் பருவம் வரை முழுக்க அந்த பகுதி நிலப்பரப்புகளின் நினைவுகளைச் சுமந்தவாறாக வளர்ந்தெழுந்திருக்கிறார். பெருமளவில் கோயில்கள் நிறைந்தப் பகுதி என்பதால் மாயவரம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் கோயில் சிலைகள் செய்வது மற்றும் கோயில்சார் ஓவியங்கள் தீட்டும் ஓவியர்கள் நிறைந்திருந்தக் காலம் என்பதாலும் பள்ளிப் பருவத்திலிருந்தே இராஜராஜன், ஓவியம் தீட்டுவதன்பால் ஈடுபாடுக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார். அந்த ஈடுபாடு, பின்னாட்களில் (1970 களில்) தொழில்முறை ஓவியத் தொழிலுக்கே அவரை அழைத்து வந்திருக்கிறது. வணிக நிறுவனங்களுக்கு பெயர் பலகை வரைவது, முக உருவ ஓவியங்கள் தீட்டுவது என பெரும் பரபரப்பாய் செயலாற்றிய காலங்களை நம்மிடம் நினைவுக்கூறும்போதே அவரிடத்தில் பெறும் உற்சாகம் தொற்றிக் கொள்வதைக் காண முடிகிறது. எதிபாராத நாள் ஒன்றில், ஓவியக் கல்லூரியில் பயின்றுக் கொண்டிருந்த நண்பர் ஒருவரின் வழிகாட்டுதலின் பேரில் 1980 ஆம் ஆண்டு, ’கும்பகோணம் அரசினர் கலைத்தொழில் கல்லூரியில் ஐந்தாண்டுகள் ஓவிய நுண்கலைப்பட்டப்படிப்பில் (D.F.A.) பயில்கிறார். அங்கு கெள.வித்யாசங்கர் ஸ்தபதி, G.கங்காதரன் போன்ற கலை ஆளுமைகளின் பயிற்சி முறைகளில் வளர்ந்திருக்கிறார். அக்காலங்களில் பெருமளவில் தன் சுற்று வட்டாரக் கோயில்களையும் அதன் உட்பகுதிகளையும் நேரில் பார்த்து வரைவதில் பெரும்பாண்மையான நேரத்தைச் செலவு செய்திருக்கிறார். அப்படி தீட்டிய ஓவியங்களில் கும்பகோணம் ராமசாமி கோயிலில் இருக்கும் பெண் தெய்வச் சிற்பங்களின் ஓவியங்கள் அத்தனை உயிரோட்டமாக இன்றும் அவரிடத்தில் இருப்பதை காண முடிகிறது. அந்த வரிசையில் ‘அப்ஸரஸ்கள்’ எனும் தூண் சிற்பத்தினை வரைந்த ஓவியம், இன்று புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக சேகரிப்பில் உள்ளது. அத்தகைய நேரடிப் பயிற்சிகள், யதார்த்த பாணி ஓவியங்கள் தீட்டுவதில் சிறந்த கலைஞராக ஓவியக் கல்லூரி சார்ந்தவர்களிடத்தே அவரை அன்று அடையளப்படுத்தின.

கும்பகோணம் ஓவியக் கல்லூரியைத் தொடர்ந்து 1986 ல் சென்னை அரசினர் கவின் கலைக்கல்லூரியில் சேர்ந்து ஓராண்டு முதுநிலை ஓவிய நுண்கலைப்பட்டயம் பயின்றிருக்கிறார். அங்குதான் ஓவிய வெளிப்பாட்டில் யதார்த்த பாணி மட்டுமின்றி படைப்பூக்கம் நிறைந்த ஓவியங்கள் மற்றும் தொகுப்பு ஓவியங்கள் வரைவது பற்றிய அனுபவம் பெற்றிருக்கிறார். அதற்குத் துணை செய்யும் விதமாக அக்காலங்களில் அங்கு ஆசிரியராக இருந்த A.P.சந்தானராஜ், சமீபத்தில் மறைந்த டாக்டர்.அல்போன்ஸோ அருள்தாஸ் மற்றும் .R.B.பாஸ்கரன் போன்றோர் பயிற்சி அளித்திருக்கின்றனர். 1991-இல் புதுவை பாரதியார் பல்கலைக்கூடத்தின் ஓவிய பயிற்றுனராக பணி ஏற்றிருக்கிறார். அதன் பின்பு, தொடர் உழைப்பால் கற்பித்தல் மட்டுமின்றி தனக்கான தனித்த ஓவிய பாணியையும் கண்டடைந்து தேசிய அளவிலான கண்காட்சிகளில் பங்குபெற்று இந்தியக் கலைப் பார்வையாளர்களைச் சென்றடைந்திருக்கிறார்.



"அரூப ஓவியங்கள், மனிதர்கள் தங்கள் கண்களால் புற ரீதியாகப் பார்க்க முடியாததை மனதின் வழியாக அக ரீதியாகப் பார்க்க அனுமதிக்கிறது. அரூப ஓவியங்கள் அவற்றை வெளிப்படுத்தும் கலைஞர்களுக்கு உறுதியான உண்மை என்பதைத் தாண்டி, எல்லையற்ற ஓர் உலகை வரையறுக்கப்பட்டவற்றிலிருந்து வெளியேறி அனுபவம் கொள்ளவும் உதவுகிறது. நவீன ஓவியங்கள் மனித மனதின் விடுதலையோடு சம்மந்தப்பட்டது. மேலும் இது அறியப்படாத பகுதிகளுக்கு பயணப்படுவதைப் போன்ற ஒரு ஆய்வுப்பூர்வமான அனுபவம்.”

என்று அமெரிக்க ஓவியர் ஆர்ஷைல் கார்க்கி, (Arshile Gorky) சொல்வதைப் போல இராஜராஜனின் அரூப ஓவிய வரிசைகள் பல புதியத் தளங்களை பார்க்கும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. இவருடைய பெரும்பாண்மையான அரூப ஓவியங்கள் சிதைவுற்ற கோயில் நிலப்பரப்புகளை பொருண்மையாகக் கொண்டிருக்கின்றன. அதே சமயம் ஒவ்வொரு படைப்பும் வெவ்வேறு பேசு பொருட்களை தனக்குள் வைத்திருக்கின்றன என்பதே உண்மை. குறிப்பாக, அக்கோயில் நிலப்பரப்புகளில் புதையுண்டு போயிருக்கும் பல்வேறு காலங்களின் வாழ்வியல் வண்ணங்களையும் அதன் வலிகளையும் மகிழ்வையும் பெரும் அசைவுகளோடு கூடிய அதிர்வுகளைத் தீட்டியிருக்கிறார். அந்த அனுபவம் வண்ணங்களின் இடம்பெறுதலினைக் கொண்டு நம்மால் உணர முடியும்.அதில்,

சமயப் புரட்சியாளர் ராமானுஜர் எனும் ஓவியம் கவனிக்கத்தக்கது. கோயிலினுள் திறந்த வெளியில் அமையப்பட்டிருக்கும் சிதைவுற்ற தூண்களுடன் கூடிய நிலப்பரப்பை புத்துணர்வு தரும் வண்ணக்கீற்றுகளின் வழி நம் கனவுகளில் தோன்றுவதைபோல அசைவுகளின் சலனத்துடன் இருக்கும். அந்த சலனத்தில் பேரசைவுகளுடன் கூடிய உருவங்கங்களாக ராமானுஜர் அதிகார சமூகத்து எதிர்ப்பையும் மீறி ஒடுக்கப்பட்ட மக்களை அழைத்துக்கொண்டு ஆலயப்பிரவேசம் செய்வதாக காட்சிமொழி கட்டமைக்கப்பட்டு இருக்கும். மற்றொரு ஓவியம் “காந்தியின் செய்தித்தாள்” கோயில் மரத்தடி இருண்மை பூசியபடி இருக்கிறது. கதவுகளற்ற மண்டப வாயிலிருந்து பிரகாசமான மஞ்சள் ஒளி அந்த நிலப்பரப்பின் உணர்வு நிலையை மாற்றத் தொடங்கும். அந்த தொடக்கத்தின் மையத்தில் காந்தி நின்றபடியே செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருப்பார். இது சமூகத்தின் பால் அக்கறைக் கொண்டவர்களின் வரலாற்றின் திரிபுகளைக் கேள்விக்குட்படுத்துபவர்களின் கனவுகளைப்போலான காட்சிமொழிதான் என்பது நமக்குத் தெளிவாகிறது.


இது போன்ற அரூப ஓவிய வரிசைகள் பற்றி ஓவியர் இராஜராஜன் முன் வைக்கும் பார்வையைத் துணைகொள்ளலாம்.

”ஒரு அரூப ஓவியத்தின் நோக்கப் பொருளை உணர்ந்தே ஆகவேண்டிய கட்டாயமில்லை என்றாலும், அந்த ஓவியத்தின் நிறம், நிறப் புனைவு, வடிவப் படிமம்,தீண்டல்களின் தடம் ,முதன்மை பகுதி போன்ற சகலமும் நமக்கான புரிதலின் வினாவாக நம்மிடம் நாமே உரையாட வாய்ப்பளிக்கலாம். நமது சுவைக்கும் ருசிக்குமான களம்தான் படைப்பு. இதை உணரும் கணங்களில் நாம் மேற்கொள்ளும் சமரசம்  மற்றும் முரண் என்பவையெல்லாம் காலம் மற்றும் தேவை அடிப்படையில் எழுவது. புரிதல் என்பது அனுபவங்களின் வலிமையை கொண்டது. ஒரு மெய்பொருளை எதார்த்தமாக பார்ப்பதைவிட ,கூர்ந்த அறிவால் உணரவேண்டும் என்பது எக்காலத்துக்கும் பொருந்தும்.” என்பதான, அவருடைய புரிதல் மொழி, அவருடைய படைப்பு அனுபவத்தின் முதிர்ச்சியை நமக்குக் காட்டுகிறது.

 

 

அந்த முதிர்ச்சி, குறிப்பாக இவர் கற்றல் கற்பித்தல் தளத்தில் பயணித்தனால் கண்டடைந்திருக்கலாம். பொதுவாக ஓவியக்கல்லூரியில் பல்வேறு வகையிலான வெளிப்பாட்டு முறைகளைக் கற்றுக் கொடுக்க வேண்டியிருப்பதும். அந்த பாட முறைகளை செயல் முறை விளக்கத்துடனும் கற்பிக்க வேண்டியிருப்பதாலும் இவர் படைப்புகளில் உலக ஓவிய மரபுகள் மட்டுமின்றி, தமிழ் ஓவிய மரபிற்கேயுறிய தன்மைகளைப் பொருமளவில் காணலாம். அதற்குச் சான்றாக அரூப வண்ண ஓவியங்களைத் தொடர்ந்து இவருடைய அடுத்தகாலப் படைப்புகளில் வண்ணக் காகிதங்கள் பயன்படுத்தும் (collage) மேற்கத்திய முறைகளைக் கையாண்டிருந்தாலும். அப்படைப்புகளிலும் தமிழ் சமூகத்தில் இன்றும் நிலவும் ஏற்றத்தாழ்வு, ஒடுக்குமுறை அதிகார அத்துமீறல்களை கேள்விக்குட்படுத்துவது போன்ற கருத்தியல் கொள்கைகளையே வெளிப்படுத்தியிருப்பார். கலைஞன் என்பவனின் குரல் கலகக் குரலே என்பதனை அழுத்தமாக நம்பி செயலாற்றுபவர். அதே சமயம் திராவிட இயக்கம், மனித உரிமை அமைப்புகள் மற்றும் இலக்கியவாதிகளுடனும் இணைந்து தலைவர்களின், போராளிகளின் உருவ ஓவியங்கள் தீட்டுவது. வரலாற்றுச் சம்பவங்களை காட்சிச் சான்றுகளாக வரைந்துத் தருவது போன்ற செயல்களிலும் தற்போது வரை ஈடுபட்டு வருகிறார்.




முற்றிலுமாக உருவங்களற்ற தங்க நிற வண்ணங்களால் ஆன நிலப்பரப்பு ஓவியங்கள் ஒரு குறிப்பிட்டக் காலங்களில் வரைந்திருக்கிறார். அவைகள் இவருடைய தொடர் தேடலில் மிக முக்கியமான வெளிப்பாட்டுச் சுதந்திரத்தைக் கண்டடைந்த படைப்புகள் எனலாம். அவற்றின் தலைப்புகள் ’சுதந்திரம்’, ’அனுபவச் செயலாக்கம்’, காட்சி பிரதிபலிப்பு’ என நீள்கிறது

 

“நிஜங்களைவிட நிஜக்குறி சார்ந்த பூடக சொல்லுக்கும்,பொருளுக்கும் என்றும் ஒரு மதிப்பு உண்டு. மரத்தை மரமாக வரைவதும், மலரை மலராக வரைவதும் ஒரு நிலை, மலரின் மணம் சார்ந்த ஒரு உணர்வினை புலப்படுத்துவது என்பது மற்றொரு வகை நிலை. காட்சிமொழியின் வழியாக, அந்த மலரை மணமாக உணரப்படுவதில் ஒரு அனுபவம் உண்டு. மலரில் கிடைக்கும் ஆனந்தத்தைவிட மலரின் மணத்தை ரசிக்கும் பக்குவம் ரசானுபவத்தின் அகநிலை சார்ந்த புரிதலை கொண்டது. இது வெறும் உணர்வு பெருக்க எல்லைக்குள் அடங்குவதல்ல, மகிழ்வினை முகத்தில் உணரலாம்,ஆனால் உள்ளுக்குள் உருபெறும் மனக்குமறலை எந்த பொருள்கொண்டும் சரியாக விளங்கிக்கொள்ள முடியாது ,அதுபோலவே , உருவாக்க முனைப்புக்குட்பட்ட ஓவியங்களின் உணர்வு மேன்மை ஒவ்வொருவரின் புரிதலுக்கேற்ற அர்த்தத்தில் பொருள்கொள்ளப்படும். இது அழகைவிட அழகின் எல்லைகளைக்கடந்த அகப்பொருளின் மெய்ப் பொருளை உணர்ந்து களிக்கும் தேடல் சுவை. இந்த சுவை என்பது நமது கலை நுகர்ச்சியின் பக்குவத்தை உள்ளடக்கியது. ”,

என்று முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தருவதைப் போல, நமக்கும் நவீன ஓவியங்களுக்கும் யாதொரு இடைவெளியும் ஏற்படாதவாறு அன்பாகப் பேசியபடியே நம் கைகளைப்பிடித்து அழைத்துச் செல்கிறார். அதே, நட்புணர்வுடன் ஓவியக் கல்லூரிகள் போன்ற தளங்களில் குழுச் செயல்பாடுகளையும் பழக்கமேற்படுத்திக் கொடுத்தவராகவும் திகழ்ந்திருக்கிறார். அதற்கு ஒரு உதாரணமாக, மறுமலர்ச்சி காலத்தினைச் சேர்ந்த லியானர்டோ டாவின்ஸியின் “லாஸ்ட் சப்பர்” எனும் புகழ்பெற்ற ஓவியத்தை 23 அடி நீளமும் 7¼ அடி உயரமும் கொண்ட பிரமாண்டமான அளவில் உலகின் மிகப் பெரிய காகித ஒட்டோவியமாகச் (PAPER COLLAGE) செய்திருக்கிறார். அது ஒரு வகையில் ஓவிய பாட திட்டத்தின் செயல் விளக்கமாகவும் 8 மாணவர்களை இணைத்து உருவாக்கி காட்சிப்படுத்தியதைச் சொல்லலாம்.



உதவி பேராசிரியராக பதவி வகித்து வந்த நிலையில் பணி நிறைவினைச் சந்தித்த இவர், தொடர்ந்து தன் ஓவியக் கூடத்தில் பல்வேறு கலை வரலாற்று ஆய்வுகளையும் ஆய்வு ரீதியிலான ஓவியத் தொகுப்புகள் படைப்பது என்பதாக முன்னை விட சற்று சக்தி பெற்றவராக செயலாற்றி வருகிறார். மிகச் சமீபத்திய ஓவியப் படைப்புகள் அதற்குச் சான்றாக நம்மை வரவேற்கிறது. குறிப்பாக இவருடைய ஓவியங்களின் அளவு எப்போதும் போல் மிகப் பெரிய அளவிலானதாகவே அமையப்பெற்றிருக்கிறது. சிதைவுற்ற கோயில் ஒன்றில் ஏராளமான தூண்களில் பல்வேறு காலச் சிற்பங்கள் இருப்பதாக தீட்டப்பட்டிருக்கிறது. ஒரு ஓரத்தில் கற்குவியல்களுக்கு மத்தியில் புத்தர் தலை மட்டும் இருக்கிறது. அந்த உறைநிலைப் படிமம் நம் வரலாற்றில் மூடி மறைக்கப்பட்ட பக்கங்களைத் திறந்து வைக்கிறது.



அதுபோல், மற்றுமொரு பிரமாண்ட அளவிலான ’சுடலை ஆடல்வல்லான்’ ஓவியம்.  திறந்தவெளி நிலப்பரப்பில் சிதைவுற்ற மதில்களுக்கு அப்பால் செழித்த தண்ணீர் தாவரங்கள், வளர்ந்த குளத்தில் பஞ்சபூதங்களின் கூட்டு வடிவான ஆடல்வல்லான் சிற்பம் அமையப்பெற்றிருக்கும். அதிலிருந்து நெடும் தூரத்தில் கோயில் சிறிய அளவில் காட்சியளிக்கும். சுடலை போன்ற பெரும் நிலப்பரப்பில் ஆடும் ஆடல்வல்லான், எங்கனம் அம்பலத்தாடுவான் என்ற கேள்வியை நம் முன் எழுப்புவதோடு, இயற்கையின் அழகில் படைப்பாளனின் மனம் லயிப்பதையும் நம்மிடையே பேசிச் செல்கிறது. அது பற்றி அவரிடம் பேசும்போது, 


 செழித்த தாவரங்களை நேசிப்பதைவிட பேரின்பம் எதுவுமில்லை. திறந்த வெளியாய் இருக்கும் நிலப்பரப்பு நமக்கும் வாழ்வின் ரகசியங்களை மெளனமாகக் கடத்திவிடுகிறது. அங்கிருந்து உயிர்களிடத்தில் சினேகம், வாழ்வியல் போராட்டம், நம்மை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளித்தல் போன்ற அறப்பண்புகள் நமக்குப் பழக்கப்பட வாய்ப்புக்கள் அதிகம் இருக்கிறது.” என்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன் அறிவுலக ஆளுமை டாக்டர்.பி.ஆர்.அம்பேத்கர், நினைவு மண்டபத்தில் ஓவிய வரிசைகள் அமைக்கும் ஒரு திட்டத்துக்கான முதற்கட்ட கற்பனை வரைவுத் தொகுப்பு ஒன்றையும் இராஜராஜனின் ஓவியக் கூடத்தில் காணக் கிடைத்தது. அத்திட்டம் நிறைவேறாமல் போனாலும். அத்தொகுப்பின் வழி இப்படைப்பாளி நாம் வாழும் சமூகத்தோடு உரையாடுவதை உணர்ந்துக் கொள்ள முடிகிறது.

 




”அறைகூவல்களில் அடிநாதம் உணர்ச்சிகளின் உள்ளீடுகளாக இருப்பதில் வியப்பில்லை.வாழ்க்கையின் கடினம் என்பதெல்லாம் பொருளாதாரத்தை விட ,சமூக சிக்கல்களில் சிக்குண்டு கிடக்கும் சாபமாக இந்திய சமூக கட்டமைப்பு .எத்தனை கல்வியிலும்,அறிவிலும்,தத்துவத்திலும் சிறந்து விளங்கி இருந்தாலும் சமூக கட்டமைப்பு எந்த பரிசுத்தத்தையும் ஏற்க, அங்கீகரிக்க வர்ணாசிரம சூத்திரத்தை முன்னிருத்தும் நடைமுறையிலேயே இந்திய ஆணிவேர் இருக்கிறது. இந்த அவலத்திலிருந்து எழுந்துவருவது எளிதன்று . அடிக்க அடிக்க பந்தாய், எரிக்க எரிக்க தீயாய் எதிர்கொள்ளும் அம்பேத்கர் போன்ற ஒரு போராளியின் வாழ்க்கையை இந்தியர்கள் அனைவரும் படிக்க வேண்டும்.”

என்ற தெளிந்த பார்வையை முன் வைக்கும் ஒரு காட்சிக் கலைஞரை நம் சமகாலம் பெற்றிருப்பதில் பெருமையே தவிர வேறென்ன? அவருடன் கைக்குலுக்க, தேனீர் அருந்த, மேலே பேசிய அத்தனை ஓவியங்களையும் நேரில் பார்க்க அவருடைய ஓவியக் கூடம் நமக்காய் திறந்தே இருக்கும்.

                                                                                                                             ஞா.கோபி

நன்றி: நீலம், மே 2021, 

       புதுவை இளவேனில்.



Comments

Popular posts from this blog

அரங்கில் கலந்த ஆசிரியர் சே. ராமானுஜம்

எல்லோருக்காகவும் வேண்டியெழும் மொழி : ஜான் ஃபோஸின் நாடகங்கள் - ஞா. கோபி

நாடகக் கலைஞர்களின் கலை வழி உறவு நிலை வெளிப்பாடுகள்