நடுக்கடலில் (மொழிபெயர்ப்பு நாடகங்கள்)

 


 நடுக்கடலில் (மொழிபெயர்ப்பு நாடகங்கள்)

தொகுப்பாசிரியர் வெளி ரங்கராஜன்

விலை: ரூபாய் 220

வெளியீடு: தமிழ்வெளி பதிப்பகம்

1- பாரதிதாசன் தெரு, சீனிவாசா நகர்,

மலையம்பாக்கம்,

சென்னை -600122.

தொடர்புக்கு: +91 9094005600

  


1980 களில் பரவலாக தமிழில் அறியப்பட்ட, நவீன நாடகம் என்ற சொல்லும் செயல்பாடுகளும்   அக்காலத்தைய சிறுபத்திரிக்கைச் சூழலோடு தொடர்புடையது என்பதை மறுக்கவியலாது. அதுவும் பல்வேறு மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் போன்று நாடகப்பிரதிகளும் சேர்ந்து, தமிழ் நாடகப் படைப்புலகின் பரிமாணங்களைக் கூட்டியது என்பதே உண்மையும் ஆகும். அதன் பின் 1990ன் தொடக்கத்தில் “நாம் நாடகத்தைப் பேசுவதற்கு இதை விட பொருத்தமான சந்தர்ப்பம் இருக்க முடியாது” என்ற தெளிந்தப் பார்வையுடன் வெளிவந்தது நாடக ’வெளி’ யின் முதல் இதழ். தொடர்ந்த இதழ்களில் பல மொழி நாடகங்கள், உலக நாடக ஆசிரியர்களின் நேர்காணல்கள் மற்றும் தமிழின் புதிய நாடகங்கள் என, எவ்வித ஆர்பாட்டமும் இன்றி 90களின் இறுதிவரை தமிழ் நாடகப் பரப்பின் பரிமாணங்களைக் கூட்டியிருக்கிறது என்பதே உண்மை. ’வெளி’ யில் பிரசூரமான மொழிபெயர்ப்பு நாடகப்பிரதிகள் அன்றிலிருந்து இன்று வரை தொழில்முறைக் குழுக்களாலும் நாடகப்பள்ளியின் மாணவர்களாலும் நிகழ்த்தப்பட்டு பார்வையாளர்களுக்கும் உலகளாவிய நாடகத்தைத் தமிழில் அறியத் தந்துக்கொண்டிருக்கிறது என்றால் மிகையில்லை.

அதே சமயம், இன்றையக்காலச் சூழலில் ’வெளி’ இதழ் போன்ற பரந்தப் பார்வையிலான நாடக இதழ்களின் தேவையையும் நாம் உணர வேண்டிய நிலையில் இருக்கிறோம். எனெனில், தற்காலத் தமிழ் நாடகங்களின் பார்வையாளர்களாகவும் பங்கேற்பாளர்களாகவும் கல்லூரி மாணவர்கள் பெருமளவில் சேர்ந்தவண்ணம் இருக்கின்றனர். அதற்குக்காரணம், கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தின் பல கல்லூரிகளில் நிகழும் நாடகப் பயிற்சிப்பட்டறைகளும் நாடக விழாக்களுமே ஆகும். அவர்களில் பலர் அவரவர் பகுதிகளில் சிறு சிறுக் குழுவாக இணைந்து நாடகங்களை நிகழ்த்தியும் பயிற்சி அளிக்கவும் செய்கின்றனர். மற்றொருபுறம் நாடகப்பள்ளிகளிலிருந்தும் தொழில்முறைக் குழுக்களில் இருந்தும் வெளியேறுபவர்களும் தனித்துச் செயல்படவும் செய்கின்றனர். அவ்வாறு செயல்படுவர்களில், மிக நீண்ட கால நாடக அனுபவம் உள்ளவர்கள் தவிர்த்து ஏனையோர்கள் நாடகப்பிரதி எழுதுதல் மற்றும் உலகின் புகழ்பெற்ற நாடகப்பிரதிகள் பற்றிய அறிமுகம் இன்றி நாடகத்தினை வெறும் காட்சி ஊடகமாக மட்டுமே அணுகும் போக்கினைச் சார்ந்தவர்களாகவே இயங்குகின்றனர்.


இந்நிலையில் வெளி ரங்கராஜன் அவர்களின் தொகுப்பில் வெளிவந்துள்ள ”நடுக்கடலில் (மொழிபெயர்ப்பு நாடகங்கள்)” எனும் நூல் நாம் கவனிக்கத்தக்கது. இதன் உள்ளடக்கத்தில், பிரெஞ்சு, இத்தாலி, ஹங்கேரி, ருஷ்யா, பொலிஷ், ஆங்கிலம், இந்தி மற்றும் மலையாள மொழிகளிலிருந்து என, பல்வேறு விதமான கட்டமைப்பில் உருபெற்ற பத்து நாடகப்பிரதிகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றன. மேலும், நடுக்கடலில், மரண வீட்டின் குறிப்புகள், மிருகம், வாருங்கள் மயிரைச் சாப்பிடுவோம், கொடுங்கோலர்கள் போன்ற நாடகங்கள் பல மேடையேற்றங்களைச் சந்தித்து, மொழிபெயர்ப்பு நாடகங்களின் தொடர் தேவையையும் உணரச் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மனித வாழ்வியல் மீதான இருத்தலியல் போரட்டங்களைப் பற்றி அபத்தப் படிமங்களின் மொழி கொண்டு பேசும் பொலிஷ் மொழியிலிருந்து எழுத்தாளர் திலீப்குமார் மொழிபெயர்த்த ’நடுக்கடலில்’ நாடகம், குழந்தைகள் மன உலகம் எப்போதும் இயற்கையோடு இயந்திருப்பதையும் அவர்தம் கற்பனைகளில் நிறைந்திருக்கும் பல்லுயிர்களின் மேலுள்ள நேசங்களைப் பற்றிப் பேசும் மலையாள நாடகமான ‘சித்ர சபலங்கள் (பட்டுப்பூச்சிகள்)’ இடம்பெற்றிருக்கிறது. மலையாள நாடக ஆளுமைகளில் ஒருவரான ஜி.சங்கரப்பிள்ளையின் மூலப்பிரதியினை பேராசிரியர் குருவம்மாள் மொழிபெயர்த்திருக்கிறார். இந்தியிலிருந்து ‘அஸ்தினாபுரம்’, ‘உடலுக்கப்பால்’ என்ற இரண்டு நாடகங்களை சரஸ்வதி ராம்நாத் மொழிபெயர்த்திருக்கிறார். மகாபாரதம் எனும் மாபெரும் இதிகாசங்களில் உள்ள பெண் பாத்திரங்களை, நாம் இதுவரை அறியாத பக்கங்களிருந்து பேசச் செய்திருக்கிறார் இதன் ஆசிரியர் நந்திகிஷோர் ஆச்சார்யா. இதிகாசங்களை மறுவாசிப்புச் செய்யும் போக்கு வளர்ந்துள்ள சமீப காலத்தில் பெண்ணியப் பார்வையில் மீள் வாசிப்புச் செய்யும் இப்பிரதிகள், தற்போது முக்கியத்துவம் நிறைந்தாகவேப் படுகிறது. அடுத்து புவியரசுவின் மொழிபெயர்ப்பில் ஆலிவர் ஹெய்லியின் ‘மிருகம்’, நாடகம். தாய்மையின் மென் உணர்வுகளைப் பேசுவதும், தன் மகளின் மீது நிகழ்த்தும் பாசப் போராட்டத்தினை சிறு விளையாட்டுக் களத்தில் நின்று பேசும் நாடகமும் ஆகும். தனி நபர் நடிப்பிற்கு உகந்த நாடகமாகவும் இருக்கிறது. அதுபோல் ருஷ்ய நாவல்களின் பிதாமகரான தாஸ்தாவ்ஸ்கியினுடைய, ’மரண வீட்டின் குறிப்புகள்’ நாவலில் இருந்து அதே தலைப்பில், நாடகீய காட்சிகளைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்திருக்கிறார்கள், எழுத்தாளர்கள் எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் ரமேஷ் பிரேதன். இந்நாடகம் முழுக்க சிறைக்குள் இருப்பவர்களின் மனதிலெழும் வாழ்வு பற்றிய சித்தாந்த உலகை நமக்கு அறிமுகப்படுத்துகிறது.

ஹங்கேரிய நாடக ஆசிரியர் கார்ல் லாஸ்லோ வின் ‘வாருங்கள் மயிரைச் சாப்பிடுவோம்’ மொழி வழிச் சிந்தனையைக் கலைத்துப்போட்டு சமூகக் கட்டுத்திட்டங்களைப் பகடிக்குள்ளாக்குகிறது. என். ஜம்புநாதனின் மொழிபெயர்ப்பில், மூல நாடகத்தின் ஆசிரியர் முன்னெடுக்கும் மொழி பரிசோதனை, அப்படியே தமிழுக்கும் வந்திருக்கிறது. கவிஞார் பாப்லோ நெருடாவின் வாழ்கைச் சம்பவங்களை மையமிட்ட ‘கொடுங்கோலர்கள்’ நாடகம். படைப்பாளிகள் மீது அதிகார மையம் செலுத்தும் ஆதிக்கத்தை பேசுகிறது. ‘பெருக்கம்’ பிரெஞ்சிலிருந்து வந்த மிக முக்கியமான நாடகம். கதாபாத்திரங்களாக மனித எண்ணங்களும் அது உணர்வெழும் காலங்களும் என இருக்கிறது. தமிழில் ரமேஷ் பிரேதன் மொழிபெயர்ப்பில் வந்த மிக முக்கியமானப் படைப்பாகவும் இருக்கிறது. இத்தொகுப்பில் இறுதி நாடகமாக தொகுப்பாசிரியர் வெளி ரங்கராஜன் மொழிபெயர்ப்பில் இந்தி நாடக ஆசிரியர் மோகன் ராகேஷின் ‘ஒருவேளை’ எனும் நாடகம் இடம்பெற்றிருக்கிறது. பூனைக்குட்டிகள் எனும் படிமத்தின் துணைக் கொண்டு, ஆண் பெண் இணைந்த திருமண வாழ்வின் மிக முக்கியப் பரப்பான அவரவருக்கான தனி மனித வெளி என்பதை எதார்த்த பாணியில் பேசுகிறது.

அவ்வகையில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பிறமொழி நாடகங்களின் நிகழ்தளம் குறித்த அறிமுகம் மற்றும் நாடகமெனும் நிகழ்த்து ஊடகங்களின் நிகழ்த்துச் சாத்தியங்களின் பரிமாணங்களையும் நம்மிடம் கையளிப்பவையாக, இந்த ‘நடுக்கடலில்’ எனும் மொழிபெயர்ப்பு நாடகங்களின் தொகுப்பு வெளிவந்திருக்கிறது. இலக்கியம், நாடகம் மற்றும் திரைத்துறையினைச் சார்ந்தவர்களும் ஈடுபாடுக் கொண்டோரும் அவசியம் வாசிக்கவேண்டியத் தொகுப்பு இது.    

 ஞா. கோபி, நாடகச் செயல்பாட்டாளர்,

புதுச்சேரி, இந்தியா

Comments

Popular posts from this blog

அரங்கில் கலந்த ஆசிரியர் சே. ராமானுஜம்

எல்லோருக்காகவும் வேண்டியெழும் மொழி : ஜான் ஃபோஸின் நாடகங்கள் - ஞா. கோபி

நாடகக் கலைஞர்களின் கலை வழி உறவு நிலை வெளிப்பாடுகள்