சப்தர் ஹஷ்மியின் கனவு அரங்கம்
சப்தர்
ஹஷ்மியின் கனவு அரங்கம்
தொழில்முறை நாடகக் கனவின்
பயணம்
1970களின் தொடக்கத்தில் இப்டா (IPTA) வில் தன்னை இணைத்துச் செயல்படத் தொடங்கிய சப்தர், 1973ல் அதிலிருந்து விலகி ‘ஜனம்’ குழுவை உருவாக்கினார். ஜனம் குழுவின் ஒத்திகைகள் தொடக்ககாலத்தில் வெவ்வேறு நண்பர்களின் வீடுகளில் நடைபெற்றன. இப்போதுவரை தொழில்முறை நாடகக்குழுக்கள் சந்திக்கும் அதே பிரச்சனைகளை ஜனம் குழுவும் சந்தித்திருக்கிறது. “பல இடங்களில், நடிப்பிடத்தை தேவைக்கேற்ப மாற்ற வேண்டியிருந்தது: ஓரிடத்தில் ஒரு வீட்டின் பால்கனியில் சில காட்சிகளை நடத்த வேண்டியிருந்தது: இன்னொரு இடத்தில் ஒளி வசதி இல்லாததால் ஒரு பேருந்தின் முகப்பு விளக்குகளை மேடை மீது பாய்ச்ச வேண்டி வந்தது: வேறொரு இடத்தில் பெட்ரோமாக்ஸ் விளக்குகளைக் கொண்டு நடத்தினர்.” என்பதை சுதன்வா தேஷ்பாண்டே வழியாக அறியமுடிகிறது.
நெருக்கடி காலத்தில்
1975
இந்தியாவில் ஏற்பட்ட நெருக்கடி நிலையால் ஜனம் குழுவின் செயல்பாடுகளும் நின்றது. காரணம்
சப்தர் உள்ளிட்ட பல கலைஞர்கள் தலைமறைவில் இருந்தனர். அதன் காரணமாக அவர் முற்றிலுமாக
ஓய்ந்து விடவில்லை. அக்காலத்தில் சிந்தனையால் இயங்கியிருக்கிறார். நாடகக் குழுவை சீர்படுத்த
பல குறிப்புகளை வகுத்திருக்கிறார்.
செவ்வியல்
நாடகங்களை தயாரித்து மேடையேற்றுவது, முழு நேர அரங்கக் குழுவாக ஜனம் செயல்படத் தொடங்குவது,
நிகழ்வு அனுமதிக்காக பலப் பிரதிகளை சமர்பிப்பது, என பல புதிய பாதைகளில் பயணித்தால்
ஜனம் எனும் நாடகக் குழுவின் தற்போதைய பிம்பத்திலிருந்து முற்றிலுமாக புதியதொரு அடையாளத்தை
ஏற்படுத்தலாம் என நம்பியிருக்கிறார். ஆனால் வேறொரு குறிப்பில் அவற்றுள் எதையுமே அக்காலத்தில்
செய்யவில்லை என வருத்தப்பட்டு பதிவும் செய்திருக்கிறார். ஏனெனில் 1975, 76,77 வரை அவர்
ஸ்ரீநகரில் இருந்திருக்கிறார். 1978 களில் மீண்டும் டில்லி வந்த சப்தர் வீதி நாடங்களைத்
தொடர்ந்தார். அதில் ‘மெஷின்’ நாடகம் மிக முக்கியமான நிகழ்வு வரிசைகளில் ஒன்று.
வீதி நாடக இயல்பும் தேவையும்
வீதி
நாடக இயல்பும் தேவையும் என்ற இந்த தலைப்பில் ஒரு முதல்கட்ட அறிக்கையை எழுதியிருக்கிறார்.
நடிகர்கள், நெறியாளர்கள், எழுத்தாளர்கள், இசைக் கலைஞர்கள் ஓவியர்கள் ஆகியோருடன் பகிர்ந்துக்கொள்ள
எழுதியது எனும் குறிப்புடனும் இருப்பது இந்த அறிக்கையின் சிறப்பு. ’வீதி நாடக வடிவத்தின்
இருப்பு அந்த காலத்தின் குறிப்பு’, ’வீதி நாடகம் நமது சிந்தனையை கூர்மையாகவும், தெளிவாகவும்,
ஆய்வுப்பூர்வமாகவும் வளர்க்க உதவுகிறது’,என்பன போன்ற மிக முக்கியப் புரிதல்களை சப்தர்
முன் வைத்திருக்கிறார். அதுபோல் இறுதிவரை அவர், வீதி நாடகத்தை படச்சட்ட மேடைக்கு எதிர்ப்பு
காட்டும் வடிவமாகப் பார்க்கவில்லை. இரண்டுமே மக்களுக்கு உரியவை என்றே நம்பிக்கையுடன்
செயல்பட்டிருக்கிறார்.
வீதி நாடகத்தில் அசிரத்தையான
அவசரம்
1983ல்,
’வீதி நாடகத்தில் அசிரத்தையான அவசரம்’ என்ற தலைப்பிட்டு கையெழுத்துக் குறிப்பொன்றை
எழுதியிருக்கிறார் சப்தர். அதில், ‘நாற்புறமும் பார்வையாளர்கள் இருப்பின் எவ்வாறு நிகழ்வை
நடத்துவது? என்ற கேள்வியை எழுப்பி ஒரு பிரிவு பார்வையாளர்களுக்கு பின் மேடையாக இருப்பது,
மறு பக்கப் பார்வையாளர்களுக்கு முன் மேடையாக அமைந்துவிடும் என்பதைப் பற்றிய சிந்தனைக்குள்
பயணித்திருக்கிறார். அதற்கான மாற்றாக ‘வட்ட வடிவ அரங்கை’ அவர் பெரிதும் விரும்பிச்
செயல்பட்டிருக்கிறார். அதுபோல் அவர் அக்குறிப்பில் எழுப்பிய கேள்விகள் இப்போதைய வீதி
நாடகச் செயல்பாட்டாளர்களுக்கு மட்டுமின்றி அரங்கச் செயல்பாட்டாளர்களுக்கும் பொருந்தும்.
- நம்மில் எத்தனை பேர் வீதி நாடகத்தின் குறிப்பிட்ட
மொழி, இலக்கணம் ஆகியவற்றைக் கண்டறிந்து, வளர்க்க முயற்சித்து இருக்கிறோம்?
- நம்மில் எத்தனை பேர் வீதி நாடகத்தின் இயல்பு
மற்றும் நெருக்கடிகளுக்கு ஏற்ப நம்மைப் பயிற்சிகள் செய்து தயாராக வைத்திருக்க தொடர்ந்து
முயற்சிகள் எடுத்திருக்கிறோம்?
- நம்மில் எத்தனைப் பேர் வீதி நாடக மரபைத்
தீர்மானிக்க முயற்சித்திருக்கிறோம்?
- ஆடும்போது தாளம் பற்றிய கவனம் இருக்கிறதா?
பாடும்போது சுருதி இருக்கிறதா? நாடகத்தில் பேசும்போது வீதியில் உள்ள சத்தங்களை மீறி
பேச முடிகிறதா?
எனக்
கேள்விகளை எழுப்பி அத்தேவைகளை சரி செய்யாவிட்டால் நாடகத்தின் எதிகாலம் என்பது வெறும்
கனவாக மட்டுமே முடியும் என்று எச்சரிக்கை எழுப்புகிறார். மேலும், இவற்றையெல்லாம் கருத்தில்
கொண்டு செயலாற்ற ‘நாம் அரங்கக் கலைப் பணியாளர்கள்’ என்பதை எப்போது மறவாமல் இருக்க வேண்டும்
என்றும் அடிக்கோடிடுகிறார்.
“நமது
பணியில் அசிடத்தையான, விட்டேத்தியான போக்கு உள்ளது. யார் வேண்டுமானாலும் வீதி நாடகம்
செய்யலாம் என்று பொதுவாகக் கருதுகிறார்கள். பயிற்சி, ஒழுங்கு, ஒத்திகை போன்றவை அவசியம்
எனக் கருதப்படுவதில்லை. இது பெரும் கெடுதல். உடல் – உளரீதியாக கடும் உழைப்பில் பயிற்சி
பெற விருப்பமற்ற யாருக்கும் வீதி நாடகத்தில் இடமில்லை. எவ்வித உள்ளார்ந்த திறமையோ,
வீதி நாடகத்தை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வமோ இல்லாமல் இதற்குள் குதிப்பவர்கள், கலைத்துவமற்ற
வடிவம் என்று சாடுபவர்களைவிடத் தீங்கு விளைவிக்கிறார்கள்.” என்ற சப்தர் எனும் அரங்க
ஆளுமையின் புரிதலும் நேர்த்தியான வீதி நாடக வடிவத்தினை பற்றிய இவரது கனவும் நமக்குப்
புரிய வருகிறது.
பாகிஸ்தானில் பயிற்சிப்பட்டறை
1988
லாகூர்,
பாகிஸ்தானில் நடைபெற்ற ஆறு நாள் வீதி நாடகப் பயிற்சிப்பட்டறையில் பாதல் சர்க்கார் தலைமையில்
சப்தர், அனுராதா கபூர், மாயா ராவ் ஆகியோர் இந்தியா சார்பில் பங்கேற்றிருக்கின்றனர்.
அங்கு சப்தர் ‘ஜனம்’ அரங்கின் அனுபவங்களைப் பகிர்ந்துக்கொண்டிருக்கிறார். குறிப்பாக
வீதி நாடகத்தின் நிறைவுப் பகுதி பற்றிய அல்லது நாடகத்தை முடிப்பது என்பனவற்றுக்கு உருவ
ரீதியான தன் பார்வையை முன் வைத்திருக்கிறார். அது, “படச்சட்ட மேடையில் மேடையில் நாடகம்
முடிவதைக் குறிக்கும் வடிவ ரீதியான உத்திகள் இருப்பது போல் வீதி நாடகத்தில் கிடையாது.
திரை மூடுதல், ஒளி மங்குதல், அரங்க விளக்குகள் போன்ற எதுவும் இங்கு சாத்தியமில்லை.
நமக்குள்ளது வட்ட வடிவ நடிப்பிடம். அதுகூட பெரும்பாலும் முறையாக வரையறுக்கப்பட்டிருக்காது.
எனவே நாடகம் தனக்குள் ஒரு நிறைவைக் கொண்டிருக்க வேண்டும். வீதி நாடகங்கள் செயல்பாட்டிற்கான
அறைகூவலோடு முடிய வேண்டும் என்பதில் நாம் உடன்படுகிறோம். ஆனால், பல கருப்பொருட்கள்
அத்தகைய செயல்பாட்ற்கான அறைகூவலுக்குள் அடங்க வாய்ப்பில்லை. எனவே, சில சமயம் நாம் ஏதேனும்
ஒன்று அல்லது பல கேள்விகளை பார்வையாளர்களிடமே விட்டுச் செல்கிறோம்!” என்கிறார்.
ஜனம் நாடகக் குழுவின் கட்டமைப்பு
1988ல்
குழுவிற்கான பொதுக்குழு கூட்டம், வேலை அறிக்கை சமர்பித்தல், வரவு செலவு அறிக்கையை வழங்கல்,
புதிய நிர்வாகக் குழுவைத் தேர்ந்தெடுத்தல் என நடைமுறை சாத்தியங்களைக் கண்டிருக்கிறார்
சப்தர். ஒரு பொதுக்குழுக் கூட்டத்தின் முடிவில்,
“நம்
அரங்கின் சவால்களை எல்லாம் எதிர்கொள்ள நமக்குத் தொடர்ச்சியான கல்வியும் பயிற்சியும்
தேவை. சமூக வரலாறு, பண்பாடு, மேடைக்கலை, அரங்க வரலாறு ஆகிய பலவற்றை நாம் கற்க வேண்டும்.
நமது பணிகலுக்கான நிதி ஆதாரங்களைத் திரட்ட நமது அணுகுமுறையைத் திட்டமிட வேண்டும். நகரின்
மையமான இடத்தில் ஒத்திகை மற்றும் அலுவலக இடம் ஒன்று நமக்கு வேண்டும்; குறைந்தது நமது
மேடைப்பொருட்களை வைப்பதற்கு வாடகைக்கு இரு கடையாவது வேண்டும்.” என சப்தர் பேசியிருப்பது
கவனிக்கத்தக்கது. அதே ஆண்டு ஜனம் நாடகக்குழுவின் பத்தாண்டுகள் எட்டியிருப்பதைக் கொண்டாடும்
விதமாக வீதி நாடக விழா, வீதி நாடக புகைப்படக் கண்காட்சி, வீதி நாடக கருத்தரங்கத்தையும்
சப்தர் நடத்தியிருக்கிறார்.
சப்தரின் கனவு அரங்கம்
சப்தரிடத்தில்
பாட்டாளி வர்க்க மக்களது வசிப்பிடம் ஒன்றில் பண்பாட்டு மையம் அமைக்கும் கனவு ஒன்று
இருந்திருக்கிறது. அதை அவர் சுதன்வா தேஷ்பாண்டேவிடம் 1988 வாக்கில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
அது ஒரு நிலம் வாங்குவது, அதில் ஒரு பகுதி தோட்டமாக்குவது, தச்சுப்பட்டறை, மின்தொழில்
பட்டறை, இன்னொருபுறம் படமெடுக்கத் தேவையான கருவிகள், எடிட்டிங் அறை, முதலில் அவற்றை
நண்பர்கள் உதவியுடன் குழுவினர் கற்றுக்கொள்வது பின் அதை அப்பகுதி இளைஞர்களுக்கு பயிற்றுவிப்பது,
ஜனம் குழுவினர் அனைவரும் ஒன்றாக அங்கு வாழ்வது, அங்கு நாள் முழுவதும் நாடகம் குறித்துச்
செயல்படுவது, தொடர் பயிற்சிகள் செய்வது, இந்தியா முழுவதும் வீதி நாடகப்பயிற்சிகள் அளித்துக்
பல்லாயிரம் கலைஞர்களை உருவாக்குவது என தன் கனவினை விவரித்திருக்கிறார். அதுபோல், தொழிலாளர்
வர்க்கப் பகுதியில் ஒரு கலைவிழா நடத்தும் எண்ணம் அவரது மனதில் மிக உறுதியாக இருந்திருக்கிறது.
அதனை அவர் ‘மக்கள் கலை விழா’ ( ஹிந்தியில் ஜனோத்சவ்) என்று குறிப்பு எழுதி வைத்திருக்கிறார்.
சப்தர் மறைவுக்குப்பின் அக்கனவினை, சப்தரின் மனைவி மாலா 1990ல் மேற்கு டில்லி, மங்கோர்பூரி
பகுதியில் சஹ்மத் என்ற அமைப்புடன் இணைந்து ஜனோத்சவ் நிகழ்த்தியிருக்கிறார். மேலும்
2012ல் மேற்கு டில்லி ஷாதிபூர்பகுதியில் ஜனம் நாடகக் குழுவினரால், ‘ஸ்டுடியோ சப்தர்’
என்ற பெயரில் பண்பாட்டு மையத்தைத் தொடங்கியது. இன்று, அவ்விடம் டில்லியின் பண்பாட்டுச்
செயல்பாட்டு மையங்களில் ஒன்றாக உள்ளது.
அரங்கம் என்ன செய்யும்?
என்ற
கேள்விக்கு சப்தரிடம் இருந்த விடை ”பங்கேற்பாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் அரங்கம்
முதலும் முடிவுமாக நம்பிக்கையைக் கொடுக்கும்” என்பதே. ஆளும் வர்க்கம் மாற்றத்தில் நாம்
நம்பிக்கை வைக்கக்கூடாது என்றுக் கருதுகிறது. அல்லது, ஆளவோர் மேலிருந்து கீழாக உருவாக்கும்
மாற்றம் மட்டுமே சாத்தியம் என நாம் அனைவரும் நம்ப வேண்டும் என நினைக்கிறது. மீறுதல்
சாத்தியமில்லை என்பதையே கல்வியாக்கியும் நம்மை நம்ப வைத்திருக்கிறது. ஆனால் அரங்கம்
அத்தகைய மீறல் கொண்ட எதிகாலத்தைக் காண உதவும் என்றே சப்தர் நம்பிச் செயல்பட்டிருக்கிறார்.
அதை வெறும் கனவுத் தொடர்ச்சியாகவோ, கற்பனைப் பொன்னுலகமாகவோ அல்லாமல் நடைமுறையில் உருபெறக்கூடிய
சாத்தியமாக தன் செயல்பாட்டுக் காலத்தில் கண்டடைந்துச் சென்றிருக்கிறார்.
“விண்ணுலகு
ஒன்று இருந்தால்,
அதை
மண்ணுக்கு இழுப்போம்.” என்பதே அவர் கனவு. அதுவும் செயல்கனவு.
ஞா. கோபி புதுச்சேரி
துணை
நின்ற நூல்கள்
- உரக்கப்பேசு – சுதன்வா தேஷ்பாண்டே, தமிழில்
அ.மங்கை,பாரதி புத்தகாலயம்.2020
- https://www.studiosafdar.org
- Halla Bol, Sudhanva Deshpande , 2020
-
The Right to Perform: Selected Writings of Safdar Hashmi by Safdar
Hashmi
Comments
Post a Comment