மனித மனங்களை அரங்கம் புதுமைப்படுத்தும் என்று நிருபித்தவர் பீட்டர் புரூக் ( 1925 - 2022)


      லக அரங்கம் முழுவதும் தனது அரங்கப்படைப்புகளால் பெரும் செல்வாக்கு பெற்ற பிரிட்டிஷ் நாடக மற்றும் திரைப்பட இயக்குநரான பீட்டர் புரூக் தனது 97வது வயதில் 02.07.2022 அன்று காலமானார். அவர் 21 மார்ச் 1925 இல் லண்டனில் பிறந்தார் அவர், தனது ஏழு வயதில், ஹேம்லெட்டின் நாடகத்தைப் படித்து தனது பெற்றோர்களின் முன்னிலையில் மிகச் சுருக்கமாக நடித்தும் காண்பித்தவர். அவர் முதலில் இங்கிலாந்தில், 1945 முதல் பர்மிங்காம் ரெபர்ட்டரி தியேட்டரிலும், 1947 முதல் ராயல் ஓபரா ஹவுஸிலும், 1962 முதல் ராயல் ஷேக்ஸ்பியர் நிறுவனத்திலும் பணியாற்றினார். அங்கு அவர் இருந்த காலங்களில்தான் ஜெரோம் ராபின்ஸ் பாலே மற்றும் பீக்கிங் சர்க்கஸ் (Jerome Robbins ballet and the Peking Circus)  இரண்டின் தாக்கத்தால் ஷேக்ஸ்பியரின் “மிட் சம்மர் நைட்ஸ் ட்ரீம்” நாடகத்தை, ஒரு வெள்ளை கனசதுரத் தளத்தில் எளிய அரங்கப்பொருட்களுடன் ப்ரூக்கின் தயாரிப்பாக உருவாகி நிகழ்த்தப்பட்டது. அந்த எளிமையின் வலிமைதான் உலக அரங்கவியலாளர்களை அவர் படைப்பு நோக்கி ஈர்த்தது. அதன் நடிகர்களில் ஒருவரான பென் கிங்ஸ்லி, ப்ரூக்கின் மறைவு தொடர்பானச் செய்தியில்,

"ப்ரூக்கின் மறைவு நாடக உலகில் ஒரு பெரிய இடைவெளியை ஏற்படுத்தினாலும், அவருடன் பணியாற்றியதற்கும், அவரை அறிந்ததற்கும், அவரை நேசிக்கும் அதிர்ஷ்டம் பெற்ற எங்களின் செயல்கள் வழி  அவரது மேதைமையுடன் தொடர்ந்து இவ்வுலகில் பயணிப்பார்." என்கிறார்.

ஒப்பற்ற அரங்க மேதை பீட்டர் ப்ரூக்கின் மரணம், வயது மூப்பின் காரணமாக நிகழ்திருப்பினும், தற்காலத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் நாடக நடிகர்கள், இயக்குநர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நாடக அறிஞர்களுக்கு என அரங்கின் எல்லோர் மனங்களும், அவரது படைப்பு இயக்கம் நின்றுவிட்டது என்பதை இன்னும் நம்ப முடியாத நிலையிலேயே உள்ளது. அத்தகைய நிலைக்கான காரணங்களில் ஒன்று, அரங்க செயல்கிரமங்களிலும் நிகழ்த்து முறைகளிலும் புரையோடியிருந்த பழமைவாத மதிப்பீடுகளை அவர் கேள்விக்குள்ளாக்கியது. மேலும், பீட்டர் ப்ரூக்கின் அரங்கம் ஏற்படுத்திய அதிர்வலைகள் இன்று வரை உலகம் முழுக்க பரவி இருப்பது போன்றவைகள்தான். ஏனெனில் புரூக் தனது தயாரிப்புகளுக்காக தேச எல்லைகளைக் கடந்து, ஒவ்வொரு பயணத்திலும் தன்னை மறுவரையறை செய்துகொள்ளும் முறைமைகளை, உலகளாவிய அரங்கிற்கு பழக்கப்படுத்தியவராகவும் இருந்தார்.



அறுபது ஆண்டுகளுக்கு முன்னர், ப்ரூக், பிரிட்டிஷ் நாடகங்களின் அளிக்கை மற்றும் தயாரிப்பு முறைகளிலும் தனது படைப்புகளால் மெளனமாக பல மாற்றங்கள் செய்யத் தொடங்கினார். அன்றைய ஆங்கில நாடகங்களில் கடைபிடிக்கப்பட்டு வந்த அபத்தம் மற்றும் இருத்தலியல் சிந்தனைகளையெல்லாம் அவரது நாடகம் உடைந்தது. இதைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது, ​​​​" நாங்கள் எதையும் மாற்ற விரும்பவில்லை. எங்கள் நாடகம் மாற வேண்டும் என்று மட்டுமே விரும்புகிறோம்" என்று எளிமையாக அவர் பதிலாகக் கூறினார். ஜீன்-பால் சார்த்தரின் ’தி ரெஸ்பெக்ட்புல் ப்ரொஸ்டிட்யூட்’ மற்றும் ’மென் வித்தவுட் ஷேடோஸ் இன் லண்டன்’ ஆகிய அவரது நாடகத் தயாரிப்பானது இருத்தலியல் பற்றிய புரிதலுக்கான புதிய பாதைகளை பாவையாளர்கள் முன் திறந்தது. குறிப்பாக, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிரிட்டிஷ் நாடகக் கலைஞர்கள் இருத்தலியல் சாயலுடன் குடும்பக் கதை நாடகங்களில் முக்கியமாக கவனம் செலுத்தினர். அப்போது ப்ரூக், தனது சமகாலத்தவர்களிடமிருந்து வேறுபட்டு, அந்நியப்படுதலின் இறுதி உணர்வு நடிகருக்குள்தான் உள்ளது என்று அவருடைய படைப்புகளின் வழியாகக் காட்டினார். மேலும், அவரது பல நாடகத் தயாரிப்புகள் அக்கால அரங்கில் நிலவிய புற அலங்காரங்களை அகற்றி, நாடகத்தின் இணைப்பிரதிகளின் அத்தியாவசியங்களை நோக்கி முன்னேறியதற்காக கொண்டாடப்பட்டன. அதனால், தொடர்ந்த அவரது படைப்புகள், பார்வையாளர்களுக்கு நுட்பமான பார்வை மற்றும் அடர்த்தியான நடிப்பு உடல் மன அசைவுகளுடன் வழங்கவும் தொடங்கின.



பீட்டர் ப்ரூக் தனது இயங்கு காலத்தில் கவனம் செலுத்திய நாடகங்களில் எல்லாம், வெளி, காலம் மற்றும்  நடிப்பு உடல் இயக்க முறைகளை புதுப்பிப்பவராகவே இருந்தார். மேலும் அவர் உருவாக்கிய நாடகங்களில், நடிகர்களின் உடைகளிலிருந்த பழைய நடைமுறைகள் மற்றும் உடலின் இயங்கியலை விமர்சித்து இயங்கியதன் மூலம், அவரது நடிப்பு முறைமைகளிலிருந்து "புதிய அத்தியாயங்களை" உருவாக்கினார். அவைகளே பல்வேறு நாடுகளில் வெவ்வேறு தயாரிப்புகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. புரூக்கின் நாடகவியல் நுட்பங்களை ஆழ்ந்து ஆராய்ந்தால், மற்ற அரங்கவியளாலர்கள் செயல்முறைகளிலிருந்து வேறுபட்ட அவருடைய அணுகுமுறையிலிருந்து மூன்று முக்கியமான அம்சங்களை நாம் காணலாம்: ஒன்று, நடிப்பின் நோக்கம், இரண்டு, நடிப்பின் அசைவுகள் மற்றும் மூன்றாவதாக, காலனித்துவ மனப்பாண்மையிலிருந்து விலகி நிற்கும் நாடகக் கருப்பொருள்கள் போன்றவற்றை நாம் கண்டுகொள்ள முடியும்.  

அவரது நாடக அரங்கில், பாலினம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் பிரதிபலிக்கும் சமகால இடங்களை எப்போதும் திறவு கொண்டபடியே இருந்தார். நாம் எல்லோரும் வெகுவாக அறிந்த அவருடைய மிக நெடிய நாடகமான “மகாபாரதம்’ நாடகத்தில், அடிப்படை மகாபாரதத்தின் புராணத்தன்மையானதை அவருடைய தழுவலில் நாம் பார்க்கவே முடியாது. மாறாக, போர்களினால் இந்த உலகம் சந்திக்கும் அழிவுகளைப் பற்றியே புரூக் பார்வையாளர்களுடன் உரையாட விரும்பினார். அதை திரைப்படமாக இப்போது பார்த்தாலும் நம்மால் உள்வாங்க முடியும். அத்தகைய உரையாடலுக்காகவே பல்வேறு நிலப்பரப்புகளைச் சேர்ந்த நடிகர்களையும் வடிவமைப்பாளர்களையும் இணைத்துக் கொண்டு அவர் முற்றிலும் மாறுபட்ட புதிய அரங்க அனுபவமாகக் கட்டமைத்தார்.  



வில்லியம் கோல்டிங்கின் புகழ்பெற்ற நாவலின் தழுவலாக ப்ரூக்கின் இயக்கத்தில் உருவான ’லார்ட் ஆஃப் தி ஃப்ளைஸ்’ ‘Lord of the Flies’ திரைப்படத்தை ஒரு போதும் மறக்க முடியாது. இந்த திரைப்படத்தில், ப்ரூக் கைகொண்ட உபகுறிப்புகளானது, பயம், வெறுப்பு மற்றும் வன்முறை ஆகியவை மனித குணத்தில் இயல்பாகவே உள்ளன - அப்பாவி குழந்தைகள் தனிமையில் வைக்கப்பட்டிருந்தாலும் கூட. அவை வெளிப்படும் என்பதை முன்வைத்திருப்பார். அவரைப் பொறுத்தவரை, சமகால உலகில் உள்ள இன மற்றும் மதப் பிளவுகள் எல்லாம் துன்பத்தின் வேர்களைக் கொண்டுள்ளன, அவ்வேர்கள் வழி அதிகாரங்கள், பகைமைக் கிளைப்பரப்பி நெடும் மரங்களாக வளர்ந்து விடுகின்றன என்பதைப் பேசியிருப்பார். 

வியட்நாம் போர் எதிர்ப்பு பரிசோதனை நாடகமான ’US’ராயல் ஷேக்ஸ்பியர் நிறுவனத்திற்காக பீட்டர் புரூக் 1966 ஆம் ஆண்டு இயக்கியிருந்தார். அந்த நாடகம் வியட்நாம் போரில் "பிரிட்டிஷாரின் ஆதிக்க மனோபாவ அணுகுமுறைகளைப் பற்றிப் பேசுகிறது" முதல் பாதியில் "எள்ளல் மொழியில்-அமெரிக்க எதிர்ப்பும்", பிற்பாதியில் தொழிலாளிகளின் வேலைக்கான போரட்டத்தின் மோதல் போன்ற சம்பவங்கள் லண்டனில் நடப்பது போல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது: ஒரு வீரர் கதாபாத்திரம் "நான் இங்கே வர வேண்டும் என்பதே என் ஆசை..." என்று அறிவித்தபடியே லண்டன் தெருக்களில், சைகோனில் உள்ள புத்த துறவிகள் போல், தன்னைத்தானே தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ளும். இதன் மூலம் உலகமயமாக்கலின் ஆரம்பத்திலேயே அடையாளம் அழித்தல் செயல் பற்றி இவர் எச்சரித்தது நமக்கு புரிய வருகிறது. அதுபோல், அந்த நாடகத்தின் முடிவில் ஒரு பெட்டியிலிருந்து உயிருள்ள பட்டாம்பூச்சிகள் பறக்கவிடப்பட்டது போன்ற நுண்ணிய நாடக மொழியே அவர் வசமிருந்திருக்கிறது.

பீட்டர் ப்ரூக் எழுதிய புத்தகமான ’வெற்று வெளி’ (The Empty Space) என்பது 1968 ஆம் வெளிவந்ததாகும், அந்த வெற்று வெளி எனும் கோட்பாடு அரங்கின் நான்கு புதிய கோணங்களை அல்லது பார்வைகளை ஆய்வு செய்து விளக்குகிறது: அவைகள் இறப்புத்தன்மை; புனிதத்தன்மை; சீர் அற்றத்தன்மை; மற்றும் துரிதத்தன்மை போன்றவைகள் ஆகும்.

“நான் எந்த வெற்று வெளியையும் தேர்ந்தெடுத்து இயங்கத் தொடங்கும்போது அதையே வெற்று நிகழ் தளம் என்றும் புரிந்துக் கொள்ள முயற்சிக்கிறேன். அதாவது, ஒரு மனிதன் நடிகராக ஒரு வெறுமையான வெளியைக் கடந்து செல்கிறான், அதே சமயம் பார்வையாளராக  வேறொருவன் அவனைப் பார்த்துக் கொண்டிருக்கிறான், நாடகத்தில் ஈடுபடுவதற்கு இதுவே தேவை.”



இத்தகைய நுட்பமான பார்வையின் வழியேதான், நாம், அவரை மிகவும் தொலைநோக்கு மற்றும் செல்வாக்குமிக்க சிந்தனையாளர்களில் ஒருவராகவும் போற்றுகிறோம். 1970 இல், ப்ரூக் பாரிஸுக்கு குடிபெயர்ந்தார், அங்கு அவர் தியேட்டர் ஆராய்ச்சிக்கான சர்வதேச மையத்தை ( International Centre for Theatre Research) நிறுவினார். அந்த நிறுவனத்தில் பன்னாட்டு நடிகர்கள், நடனக் கலைஞர்கள், இசைக்கலைஞர்கள் போன்றோர் இடம் வகித்தனர். அக்கலைஞர்கள் குழுவானது 1970களின் முற்பகுதியில் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளில் அரங்கப்பயணமாகப் பயணித்தது. அப்பயணத்தில் அவர்கள் தேடிய கேள்விகள் என்னவெனில் "மனிதர்களின் குண நலன்களைப் பேசக்கூடிய பொதுவான கதைகள் என்ன? அவைகளை அடையாளம் காணக்கூடிய குறியீடுகள், மற்றும் கதை சொல்லுதலில் உள்ள உடல்மொழிகள் என்ன?, ஒரு சர்வதேச நாடகக் குழு வேலை செய்யக்கூடிய கதை மற்றும் பாத்திரங்களின் இயங்கு நிலைக்குறிப்புகள் என்ன? என்பனவையே அவைகள். அந்த மூன்று ஆண்டு பயணத்தில், அவர்கள் இரண்டு முக்கிய படைப்புகளை ஆர்காஸ்ட் (Orghast) I & II தயாரித்தனர், அப்படைப்புகள் 1971 இல் ஈரானில் நடந்த ஷிராஸ் கலை விழா, மேற்கு ஆபிரிக்காவில் மற்றும் 1974 ஆம் ஆண்டு நியூயார்க்கின் புரூக்ளினில் உள்ள BAM ல்லும் நிகழ்த்தப்பட்டது..

2017 இல் மைக்கேல் பில்லிங்டனுடனான ஒரு நேர்காணலின் போது, ப்ரூக் "அலைக்கு எதிராக நீந்துவது மற்றும் நாம் தேர்ந்தெடுத்த துறையில் எங்களால் முடிந்ததைச் சாதிப்பது எவ்வளவு முக்கியம்" என்று பேசினார். மேலும் ”என்னுடைய வாழ்வானது அரங்கிற்கானது என்று விதி கட்டளையிட்டது என்று வைத்துக்கொண்டாலும், அதற்குள், என்னால் முடிந்தவரை நேர்மையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் இருக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.” என்றார். புரூக் 1951 இல் நடாஷா பாரி என்ற நடிகரை மணந்தார், அவர்களுக்கு இரினா (இப்போது ஒரு இயக்குனர்) மற்றும் சைமன் (இப்போது ஒரு தயாரிப்பாளர்) என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். நடாஷா பாரி 2015 இல் இறந்தார்.



பீட்டர் ப்ரூக்கிற்கு அஞ்சலி செலுத்தியவர்களில் ஷேக்ஸ்பியரின் குளோப் கலை இயக்குநரான மிச்செல் டெர்ரியும் ஒருவர். அவர் ப்ரூக் பற்றிக் குறிப்பிடும்போது "நாங்கள் ஒரு கலங்கரை விளக்கத்தை இழந்துவிட்டோம், அவர் நாடகம் மற்றும் மனிதநேய சக்தியை வெறும் சொல்லாக மட்டும் உள்வாங்கவில்லை, அவர் அதைத் தன் அரங்கச் செயல்பாட்டில் பல்லாயிரம் மனிதர்களுடன் இணைந்துச் செயல்படுத்தினார். அவர் ஒரு உண்மையான மற்றும் அரிதான அரங்கப் பயிற்சியாளராகவே வாழ்ந்தார், அவருடைய நித்திய மரணத்துக்குப் பின்னும் நம்மால் மரியாதையுடன் பின்பற்றப்படும் அவரது நினைவுகள், நம் படைப்புச் செயல்களில் அவரது மரபாக தழைத்து வாழ வேண்டும்.” என்றிருக்கிறார். மிச்செல் டெர்ரியின், இந்த நம்பிக்கையின் படியே, எக்காலத்திலும், பீட்டர் புரூக் என்ற பெயர், அரங்கப்பாடங்களிலும் அரங்கப்பயிற்சிகளிலும் அரங்கத்தயாரிப்புகளிலும் உச்சரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். மேலும், நம் கால அரசியல் சூழலுக்கு ஏற்ப நம்மிடமிருந்து வடிவம் பெறும் புதிய அரங்கப்படைப்புகள் நிகழ்விடத்தில், சன்னமாய் எழும் கைத்தட்டலுக்குள் இருந்து பீட்டர் புரூக்கையும் அவரது மீறல்களில் இருந்து எழுந்த படைப்புகளையும் நினைவு கூர்வோம்.

                                                          

 நன்றி :- கலைமுகம் - இதழ் 74

                                                            ஞா. கோபி

யாழ் அரங்கம்,

புதுச்சேரி,இந்தியா.


Comments

Popular posts from this blog

அரங்கில் கலந்த ஆசிரியர் சே. ராமானுஜம்

எல்லோருக்காகவும் வேண்டியெழும் மொழி : ஜான் ஃபோஸின் நாடகங்கள் - ஞா. கோபி

நாடகக் கலைஞர்களின் கலை வழி உறவு நிலை வெளிப்பாடுகள்