முடிவற்ற பாதையில் ஓடிக்கொண்டே இருக்கும் ‘அன்று பூட்டிய வண்டி’ - அஞ்சலி - ந. முத்துசாமி (1936 -2018)
முடிவற்ற பாதையில் ஓடிக்கொண்டே இருக்கும் ‘அன்று
பூட்டிய வண்டி’
(கூத்துப்பட்டறை ந. முத்துசாமி – 1932 –
2018)
1970ல்
சென்னை கிருஷ்ணகான சபாவில் யாரும் எதிபார்க்காத நாளொன்றில், தனஞ்செயனின் கதகளியைப்
பற்றிய பேச்சும் பயிற்சிக் காட்டலும் நடைபெற்ற கூட்டத்தின் இறுதியில் ‘தெருக்கூத்துக்கும்
கதகளிக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை என்னென்ன? என்ற கேள்வி முத்துசாமியிடம் இருந்து
சத்தமாய் பொதுவில் விழுந்திருக்கிறது. சத்தமான அந்த கேள்விக்கு ஒப்பீடல் காரணமல்ல.
தெருக்கூத்தை பார்க்கும் அனுபவத்திலெழுந்த கேள்விச் சத்தம் அது. அக்கேள்வி திரை அகற்றி
நடிகன் பார்வையாளர்களித்தே ஏற்படுத்தப்படுத்திய புதிய உரையாடல். அவருடைய நடிகர்கள்
ஓட வேண்டிய தொடர் ஓட்டத்திற்காக, அவருளிருந்து எழும் ‘சபாஷ்’ என்ற சத்தமான வார்த்தையிலிருந்து
நடிப்பு, பிரதி, நிகழ்வு என பல புதிய உரையாடல் உருகொண்டதைப் போல, நேர்ந்துவிட்ட முத்துசாமியின்
மரணமும் தமிழ் அரங்கச் சூழலில் தொடர் செயல்பாடுகளின் மேம்பாடுகள் பற்றிய ஒரு உரையாடலாகவே
பார்க்க முடிகிறது.
1990களின்
இறுதியில் நான் ஓவியக்கல்லூரியில் பயின்று கொண்டிருந்தபோது ஆனந்த விகடன் வழி, கூத்துப்பட்டறை
முத்துசாமியின் மீசை திருகிய முக உருவம் என் பயிற்சித் தாளொன்றில் வரைந்ததின் வழி அவருடனான
உரையாடல் தொடங்கியது. பின் நாடகப் படிப்பின் போது, ‘அன்று பூட்டிய வண்டி’ கட்டுரைத்
தொகுப்பு வாசிப்பின் மூலம் அவர் உருவம் மறந்து அவருடைய அரங்கப் பார்வையில் இருந்த நம்பிக்கைத்
தன்மையுடனான உரையாடல் வெகு ஜோராய் துளிர்க்கத்தொடங்கியது.
.jpg)
அதன்
தொடர் ஒட்டத்தில் எழுந்த புதிய சந்தங்களை தம்மோடு இணைந்த நடிகர்களுக்காக தினந்தோறும்
பயிற்சி களங்களின் பாடிக் கொண்டே இருந்திருக்கிறார். அதில் உருவான பிரதான சந்தத்தில்
ஒன்று, “கூத்தர்களைப் போல் சிறந்த நடிகர்கள்
இல்லாதவரை இலக்கியமாகாவிட்டாலும் நாடகமாகும் ஓர் உருவத்திற்கு இன்றைய சூழலில் இடமில்லை
என்று எனக்குப் படுகிறது” என்பதே அது. அவருடைய மனம் எனும் சொல் பிரயோகத்தில் இருந்த
அந்த ‘கூத்து’ எனும் சொல் ஒரு முழுமையான அரங்கம்
(Theatre) என்ற புரிதலிலேயே இருந்திருக்கிறது. நான் அவருடைய பார்வையில் இயங்கிய பயிற்சிகளில்
பங்கேற்றவன் இல்லை. எனினும் ஆய்வு எனும் காரணம் கொண்டு அவருடன் நேரடியாக நான் மேற்கொண்ட
உரையாடல்கள் வழி நடிப்பு பற்றிய அவருடைய ஆழமான பார்வையின் எல்லையை நான் புரிந்து கொண்டிருக்கிறேன்.
அதில் முக்கியமான ஒன்று ‘அவர் எழுத்துக்களைச் சார்ந்தவர்’ அதை அவருடைய ‘சபாஷ்’ எனும் மேல் பூச்சு அற்ற சத்தத்தோடு ஒத்தது.
“நான்
Pure Theatre Person இல்ல. அப்படீங்கறதால என்னோட ஆர்வம் எல்லாம் Script Writingல் தான்
இருக்கு. புதுவிதமான play எழுதுவது புதுவிதமான Subject கொண்டு வருவது என்பதில்தான்
என் கவனம் அதிகம் இருக்கு. நான் அதை நோக்கி மட்டுமே போய்க் கொண்டிருக்கிறேன்.” என்கிறார்.
மேலும் “சொல்லின் உன்னத நிலையைப் பிடித்து மேடையில் இயங்க வைக்க ஏதுவாக அவற்றைக் கட்டமைக்க
வேண்டும். அப்படி முயன்று பார்த்த தோல்விகளே என் நாடகங்கள். ஆனால் எழுதிக்காட்டப்பட்ட
அளவில் அவை நாடகங்களாக தோல்வி அடையவில்லை.” என்பதே அருடைய படைப்புச் செயல்பாட்டின்
மீது அவர் வைத்திருந்த பார்வை. மேற்கண்ட அளவிலாக மிக ஆழமாக அவரிடம் கருக்கொண்டிருந்த
படைப்பு உத்வேகமே அவர். அந்த, அவரெனும் படைப்பே அவர் வழி வந்த கலைஞர்களின் சத்தமாய்,
ஆட்டமாய் அவரின் இறுதிச் சடங்கில் அதிர்ந்துக் கொண்டிருந்தது. சடங்குகள் முடிந்தாலும்
நிச்சயம் அதிர்வுகள் மறையாமல் சூல் கொள்ளும் சூழலை உணர முடிகிறது.
2004ல்
என்னுடைய முதுகலைப் பாட திட்டத்தின் இறுதியில் நாடக இயக்குதல் பாடத்திற்காக முத்துசாமியின்
‘நாற்காலிக்காரர்’ நாடகப்பிரதியைத்தான் இயக்கினேன்.அதில்
‘விளையாட்டு’ என்பதுதான் பிரதான மனநிலை. நான் அதை சொல்லியே நடிகர்கள், இசையமைப்பாளர்,
அரங்க வடிவமைப்பாளர் என அனைவரிடமும் வேலை வாங்கினேன், ஏனெனில் அதன் பாத்திரங்கள் எல்லாம்
மனித மனத்தின் சுரணையோடு போட்டி போட்டு விளையாடும் விளையாட்டு வீரர்களாய் இருப்பார்கள்.
ஆம், நாமெல்லோருமே வாதங்களை பிடித்துக்கொண்டு வம்புக்கிழுப்பவர்கள்தானே! நாடகம் முடிந்து
மறு தினம் தேர்வாளர் கேட்டார். எந்த வகை நடிப்புக் கோட்பாட்டை இதில் முன்னெடுத்தீர்கள்?
என்று கேட்டார். நான் பதிலாக ‘பிரதி மொழியில் உள்ள சுதந்திரம் ஒரு விளையாட்டு வீரனுக்கு
உரிய துடிப்பைக் கேட்டது. அதைத்தான் பிரயோகித்தேன் என்றேன். அது சரி, நாடகவியளாலர்களின் நடிப்புக் கோட்பாடுகள் ஏதும் பயன்படுத்தவில்லையா?
அபத்த நாடகங்களுக்கே உரிய நடிப்பு வெளிப்பாட்டு பாணிகள் தென்பட்டதே! என்றார். நானோ,
‘சார், அப்படியேதும் நான் பயன்படுத்தவில்லை. உண்மையில் பிரதியின் ஓட்டத்தில்தான் நிகழ் தளம், உடைகள் எல்லாம் தீர்மாணித்தேன். வேறு
எதனோடும் நான் இப்பிரதியை ஒப்பிடவில்லை. அதற்கான ஓட்டம் தனித்துவமாக இருந்தது. என்றேன்.
தேர்வாளர், சிரித்துக் கொண்டே நீங்கள் மிக தைரியமானவர் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
அதுதான்
உண்மை, அந்த பிரதி தைரியமாய் எழுதப்பட்டது. அதனால் அதை நிகழ்த்திய காலமும் தைரியம்
உள்ள காலமாய் மாறியிருந்தது. அதன் பிறகு வேறு எங்கும் அந்த நாடகத்தை நிகழ்த்தவில்லை.
ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஆய்வு கட்டுரைக்காக ‘என்னுடைய நாடக உலகம்: சொல்லும்
காட்சியும்’ எனும் கட்டுரையை வாசித்துக் கொண்டிருக்கும்போது அவருடைய படைப்புலகத்தில்
மையமான ஒரு உண்மை தெளிவானது.
“என்னுடைய
நாடகங்கள் அபத்தகுண நாடகங்களா?
அபத்த குண நாடகங்களை முன் மாதிரியாகக் கொண்டு நான் நாடகங்கள் எழுதத் தொடங்கவில்லை. ‘ நடை’ பத்திரிக்கைக்காக முதன்முதலில் ‘காலம் காலமாக’ நாடகத்தை எழுதியபொழுது அதிகம் நாடகங்களை நான் படித்திருக்கவும் இல்லை. அபத்தகுண நாடகங்களை நான் படித்திருக்கவும் இல்லை. ‘காலம் காலமாக’ வெளியான பின்பு என் நண்பர் கி.அ.சச்சிதானந்தம் ஐயனஸ்கோவின் நாடகங்களை எனக்கு அறிமுகப்படுத்தினார். ஐயனஸ்கோவைப் படிக்கத் தொடங்கிய பிறகு எனக்கு நாடகங்களைப் படிப்பது சுலபமாகவும் என் மனபோக்கிற்கு இசைந்ததாகவும் இருந்தது. தொடர்ந்து நாடகங்களைப் படித்தேன். நாடகங்களைத் தேடி எடுத்துப் படிக்கிற ஆர்வம் உண்டாயிற்று. அபத்தகுண நாடகங்கள் என் இயல்பிற்கு ஒத்து எனக்கு எழுதச் சுதந்திரத்தைக் கொடுத்தன. சுதந்திரம் இல்லாதிருந்த நிலையைச் சொன்னால் அல்லது சுதந்திர எப்படி கிடைத்தது என்பது புரியாது.” என்று எழுதியிருந்தார்.
ஆம், அவரிடம் இருந்த உண்மை, என் உண்மையோடு ஒத்தது. அதற்கு பிரதானமாக துணை நின்று உதவியது என்னவெனில்? அவர் பேச்சு, எழுத்து, இயக்கம் அனைத்திலும் இருந்தது. அந்த உண்மைதான் அவர் தேடிய நடிப்பை அவருடைய நடிகர்களிடத்திலிருந்து பெற்ற அனைத்து பயிற்சியாளர்களையும் இயங்க வைத்தது. நடிகர்களையும் வார்த்தெடுத்தது. இப்போது நேர்ந்திருக்கும், எதிர்பாராத அவருடைய மறைவு வழி நின்றும் அவர் இனி வரப்போகும் அரங்க படைப்பாளர்களிடம் எதிர்பார்ப்போடு வேண்டுவாரெனில். ‘உனக்கு சுதந்திரமானவற்றில் இயங்கு’, என்பதுடன் ‘அவற்றை வைத்து எப்படி வேலை செய்வது என்று யோசிக்க வேண்டும். சாத்தியமான ஒரு வழி, அதற்கேற்றபடி நாம் தான் Script எழுத வேண்டும். உங்களுக்கு Inspiration ஆக இருக்கக்கூடிய Body Movements களுக்கு இடம் அளிக்கக் கூடிய Script நீங்கள்தான் எழுத வேண்டும்.’ என்பதே அது. அவருடைய அந்த வேண்டுதல் நம் காலத்தில் எழுந்திருக்கும் சத்தம். அத்தகைய சத்தம் அழிவில்லாதது; தொடர்ச்சியானது; மனிதர்களின் வாழ்வு சார்ந்தது.
ஞா. கோபி
யாழ் அரங்கம் மற்றும்
ஆய்வு நிறுவனம்,
புதுச்சேரி,இந்தியா.
Comments
Post a Comment