உலகப்புகழ் ஓவியங்களில் – குதிரைகளின் இருத்தல்

 

உலகப்புகழ் ஓவியங்களில் – குதிரைகளின் இருத்தல்

ஓவியங்கள் எனும் ஊடகத்தில் செயலாற்றவும், பார்த்து அனுபவமாக்கிக் கொள்ளவும் விரும்புபவர்கள் அந்த ஊடக மொழியின் அடுக்குகளை அறிந்துக் கொள்வது மிக அவசியமாகிறது. அவ்வகையில், உலகப்புகழ் கலைஞர்கள் வண்ணம் தீட்டும்போது ஒரு பொருளை அல்லது உயிரினங்களை தீட்டும்போது என்னென்னவாகப் பார்த்திருக்கிறார்கள், பார்க்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது பற்றிய கண்ணோட்டத்தில் பயணிக்கும் முயற்சியே இனி வருபவை.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றுக்கு முந்தைய கால மக்கள், குகையின் உள் மற்றும் வெளிச்சுற்றுப் பாறைகளில் வரைந்திருக்கின்றனர். அவற்றில், தத்தமதுக் குழுவினருடன் குதிரைகளின் இருப்பு நிலைகள் என்னவாக இருந்தது என வரைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. காலப்போக்கில் ஓவியர்கள் இந்த விலங்குகளிடத்தில் மனிதர்கள் கொண்ட அன்பு, அழகு மற்றும் அவ்விலங்கின் புரிந்துக்கொள்ளும் சக்தி போன்றவன்றால் ஈர்க்கப்பட்டனர். மேலும் அரச அதிகாரம் எனும் கட்டமைப்பிற்குள் இவ்விலங்கு அதிகாரத்தின் குறியீடாக மாறிப்போன வரலாறும் இருந்திருக்கிறது, இருக்கிறது. அந்தப் புரிதல்களையெல்லாம் அந்தந்தக்காலக்கட்டக் கலைஞர்கள் தங்கள் கலை வெளிப்பாட்டில் எவ்விதத்தில் எல்லாம் சித்தரித்தார்கள் என்பதை நாம் உணர்ந்துக் கொள்ள வேண்டியுள்ளது. அவ்வகையில் கலைஞர்கள் தங்கள் படைப்புகளில் குதிரையை எப்படி சித்தரித்திருக்கிறார்கள் என்பதைப்  பார்ப்பதன் மூலம், ஒரு ஓவியரின் கண்களால் இந்த உயிரினத்தையும் அதன் புறத்தோற்றம் என்பதனையும் மனிதர்கள் பார்க்கும் விதங்களையும் நாம் உணர்ந்துக்கொள்ளலாம்.


ஓடும் குதிரை, லஸ்கோ குகை ஓவியம், பிரான்ஸ் (15,000 – 10,000 கி.மு)

மக்கள் மற்றும் நாடுகளின் வரலாறு எழுதப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, கலைஞர்கள் தங்கள் உலகத்தை சித்தரிக்க ஓவியங்களை உருவாக்கினர் என்பதே உண்மை. சுமார் 17,000 ஆண்டுகளுக்கு முன்பு, பழைய கற்காலத்தில், பிரான்ஸின் டார்ட்கோன் (Dordogne) பகுதியில் வாழ்ந்த ஒரு பழங்குடிகளின் வாழ்விடமான ஒரு அழகிய குகை 1940 ஆம் ஆண்டில் பதினெட்டு வயது மார்செல் ரவிடாட் (Marcel Ravidat) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டன. அந்தக் குகை முற்றிலும் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அன்று மாக்டால்னெஸ் (Magdalenes) என்று அழைக்கப்பட்ட அந்த மக்கள், இக்குகையை பிரார்த்தனை மற்றும் மத விருந்துகளுக்கு ஒரு பயன்பாட்டுத் தளமாகவும் பயன்படுத்தினர் எனத் தெரிய வருகிறது.

மாக்டலீன்கள் தங்கள் வாழ்வியல் தேவைகள் எல்லாவற்றிற்கும் காட்டு விலங்குகளையே நம்பியிருந்தவர்கள். அவர்களின் - உணவு, ஆடை மற்றும் தங்குமிடம் தோல்கள், மற்றும் விளக்குகளில் எரிக்க எண்ணெய் என அனைத்துக்கும் விலங்குகளையே சார்ந்திருந்தனர். அதனால் சடங்கியல் செயல்களின்போது அவ்விலங்குகளின் உருவங்களை வரைவதன் மூலம், அவ்விலங்குகள் தங்களின் மீது அன்பையும் விசுவாசத்தையும் கொண்டிருக்கும் என்று நம்பினர். மேலும் அந்த விலங்குகள் இப்பூமியில் உயிர்வாழ அதிக சக்தியையும் கொண்டிருக்கும் என்று மாக்டலென்ஸ் பழங்குடிகள் நம்பினார்.

அவ்வகையில், தன் உடல் அமைப்பிலும் அசைவுகளின் வழியேயும் பெரும் அழகையும், புத்திசாலித்தனம் மற்றும் அதிக வேகமும் கொண்ட காட்டு குதிரை எல்லா விலங்குகளையும் விட மனிதர்களுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது, மேலும் அதன் இயங்கு சக்தி மாக்டலென்ஸ் கலைஞர்களின் உணர்ச்சிகளைத் தூண்டி இருக்கிறது. அதனால்தான் அவர்கள் அக்குகைகளில் சித்தரித்த நூற்றுக்கணக்கான விலங்குகளில், குதிரைகள் அதிக அளவில் இடம்பெற்றிருக்கிறது.


கிரேக்க ஓவியங்களில் போர் குதிரைகள்

கி.மு ஆறாம் நூற்றாண்டில் கிரேக்க ஓவியர்கள் மற்றும் மண்பாண்டக்கலைஞர்கள் தங்களது படைப்புகளில்  ஆண் மற்றும் பெண் தெய்வங்களின் உருவங்களுடன் அமைந்த ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய மதுக்குடுவைகளை உருவாக்கினர். அதே நேரத்தில், ஏதென்ஸ் பெர்சியாவுடன் போரில் ஈடுபட்டதால், போர் காட்சிகளை இடம்பெறச் செய்வதும் அப்போது பழக்கத்தில் வந்தன. வர்ணம் பூசப்பட்ட ஏதெனியன் மட்பாண்டங்கள் இன்றுவரை பல்வேறு பண்பாட்டு ஆய்வுக்குத் துணைச் செய்கின்றன. அதில் தீட்டப்பட்ட புராணக் கதைகள் மற்றும் வரலாற்று நிகழ்வுகள் பற்றிய கதைகளை இப்போது நாம் எளிதில் புரிந்துகொள்கிறோம்.

அவ்வகையில், பல குடுவைகளில் ஏதெனியன் கலைஞர்கள் தெளிவான, திரவ கோடுகள் மற்றும் கடுமையாக மாறுபட்ட வண்ணங்கள் மூலம் போரில் பங்குபெறும் குதிரைகளின் கிளர்ச்சியான இயக்கங்களை வெளிப்படுத்தியுள்ளனர். குவளை வட்டமானது என்றாலும், தொடக்கமும் முடிவும் இல்லாமல், கலைஞர்கள் அதில் விலங்குகளை நிலைநிறுத்தியிருக்கின்றனர், எனவே குவளை திரும்பும்போது அவை ஒரு தொடர் காட்சியாகக் காணப்படுகின்றன. அப்போது நடந்த பாரசீகப் போரை வென்றெடுக்க ஏதென்ஸுக்கு உதவிய இராணுவ குதிரைகள், கிரேக்க கலைஞர்களுக்கு ஒரு முக்கியமான விஷயமாக அமையவும் தொடங்கியது.

சீன ஓவியங்களில் குதிரை


துருக்கி, இந்தியா, ஜப்பான் மற்றும் கொரியாவை எதிரிகள் நாடுகள் எனக் கருதி போர் தொடுத்து வென்ற சீனா வெற்றியைத் தொடர்ந்து அமைதியானது. கி.பி.712ல் ஆட்சிக்கு வந்த மிங் ஹுவாங்கின் கீழ் சீன பேரரசு செழிப்பில் திளைத்தது. பெரிய போர்வீரர்கள் என்று பெயரெடுத்தவர்கள் குதிரைகளை மிகவும் விரும்பினார்கள், இதனால் குதிரைகளைத் தங்களது அரண்மனையில் வளர்த்து சமூகப் படிநிலைகளில் தங்கள் இடத்தை உறுதி செய்தனர். மிங் ஹுவாங்கின் குதிரைகள் அவற்றின் வலிமை மற்றும் அழகுக்காக மிகவும் போற்றப்பட்டன, குதிரைகள் சீன கலையில் ஒரு முக்கியப் பொருளாக மாறியது. இது பழங்கால இந்திய அரச ஆளுகைக்கும் பொருந்தும்.

படை பலத்தில் சிறந்து விளங்கிய மிங் ஹுவாங் (Ming Huang), யாங் குய் ஃபீ (Yang Gui Fei) என்ற இளம் பெண்ணுடன் கொண்ட காதலாலும் அன்பினாலும் பிரபலமானார், யாங் குய் ஃபீயின் புறத்தோற்ற அழகானது அக்காலக் கவிஞர்கள் மற்றும் ஓவியர்களின் படைப்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. கியான் சுவான் (QuianXuan) என்ற கலைஞர், யாங் குய் ஃபீ பேரரசருடன் குதிரை சவாரி செய்வதற்குத் தயாராகும் ஓவியத்தை உருவாக்கினார்.

அதில், குதிரையையும் உருவங்களையும் மிக நுண்ணிய தூரிகை மூலம் மையில் கியான் சுவான் வரைந்திருப்பார். குறிப்பாக, அதில் குதிரையின் திடமான வடிவத்தை இடைவெளியில்லாத கோடுடன் உருவாக்கியிருக்கிறார், பின்னர் ஒட்டுமொத்தமாக காவி நிறத்தைப் பயன்படுத்தியிருப்பார். கறுப்பு நிறப் புள்ளிகளுடன், அவர் குதிரையின் தசை கால்களை வடிவமைத்து அதன் பக்கவாட்டில் நுட்பமான அடையாளங்களை உருவாக்கியும் உள்ளார்.

இந்த ஓவியத்தில், பின்வரும் கோடுகள் மற்றும் மென்மையான வண்ணங்களைப் பிரயோகித்த அளவுக்கு உருவங்கள் அற்ற விளிம்புகளால் உருவாக்கப்பட்டிருக்கும் வெற்றுவெளிகள் நம் கவனத்தை ஈர்க்கிறது. குறிப்பாக சீனாவின் மற்ற கலைஞர்களைப் போலவே, இயற்கை உலகத்தைப் பற்றிய அனைத்தையும் நம்மால் அறிய முடியாது என்ற புத்தமதக் கொள்கையால் இவரும் தன் கலைச் செயல்பாட்டைப் புரிந்திருக்கிறார். கடவுள் மட்டுமே எல்லாவற்றையும் அறிவார் என்பதன் அடிப்படையில், குயான் சுவான் இந்த ஓவியத்தின் பின்னணியை வெறுமையாக விட்டு, ஓவியர் சித்தரிக்காத விஷயங்களை பார்வையாளர் தனது கற்பனையால் கண்டுபிடிக்கக்கூடிய இடத்தை உருவாக்கியிருக்கிறார் என்றே ஓவிய விமர்சகர்களால் சொல்லப்பட்டது கவனிக்கத்தக்கது.

பிரெஞ்சு ஓவியங்களில் குதிரைகள்

பால் காகின்

பால் காகின், ஒரு நேரம் தன்னை வழி நடத்த, மனதுக்குகந்த ஓர் புதிய உலகை வேண்டி நின்றார். அது, தொழில்நுட்பங்கள் அல்லாது இயற்கை வழியில் தனது தினசரி வாழ்க்கை முறைக்கான இடமாக இருக்க வேண்டுமென விரும்பினார். 1895 ல் பாரிஸிலிருந்து தெற்கு பசிபிக்கில் அமைந்த ‘தகிதி’ தீவிற்கு இடம்பெயர்ந்தார். அங்குதான் ‘மாவோரி’ பழங்குடியினருடன் தன் ஓவிய வாழ்வின் முக்கியப் பகுதிகளை கட்டமைத்தார். வெப்ப மண்டலப் பகுதியான அத்தீவு வாழ்க்கை அவருடைய படைப்புக்களை செழிப்பானதாக மாற்றியது. அதே வேளை, அவருடைய உடல் வெப்பமான பகுதிக்கு தன்னைத் தகவமைத்துக் கொள்ளாமல் பாதிப்பைச் சந்தித்தது.

அதன் காரணமாக அத்தீவைச் சேர்ந்த மருத்துவரான ‘ஆம்ரோஸ் மில்லர்ட்’ டை காகின் அடிக்கடி சந்திக்க வேண்டியிருந்தது. பின், காகின் தன் கலை வாழ்வின் நெருக்கடி நிலையில் மருத்துவர் ஆம்ரோஸிடம் கடனாளியாகவும் கடனாளியாகவும் ஆனார். அக்கடனுக்கு பதிலீடாக மருத்துவருக்கு ‘வெள்ளை குதிரை’ ஓவியம் வரைந்து தருவதாக காகின் ஒப்புக் கொண்டார்.

மருத்துவர் எதிர்பார்ப்பிலிருந்த வெள்ளை குதிரை ஓவியம், பழங்கால கிரேக்க சிற்பங்களின் சாராம்சத்துடன் அமைந்த கிருஸ்தவக் குறியீடாக அமைய வேண்டும் என்பதே. காகின், அத்துடன் வெள்ளை குதிரையை ‘மாவோரி’ பழங்குடியினரின் தூய நம்பிக்கைகளின் சின்னமாகவும் தீட்டலாம் என்று நினைத்தார். மேலும், அக்குதிரை நிற்கும் நிலையை 5 ஆம் நூற்றாண்டின் கிரேக்கக் கோயிலான ‘பார்த்தேன்’ ளில் வடிக்கபட்ட குதிரைகளை மாதிரியாக வைத்து ஓவியத்தைத் தொடங்கினார்.

ஓவியத்தின் முன் பகுதியில், அத்தீவின் தட்ப வெப்பத்திற்கு ஈடு கொடுத்து தன்னை தகவமைத்துக் கொள்ளும் வளமிக்க ‘வெள்ளை லில்லி’ பூவை வரைந்தார். மேலும், அப்பூவை அப்பகுதி மக்கள் கிருஸ்தவம் குறிப்பிடும் தூய்மையின் குறியீடாக பாவித்து வ்ந்ததையும் முக்கியக் காரணியாக்கிக் கொண்டார். குறிப்பாக, அவ்வோவியத்தின் பெரும்பரப்பில் நீரோட்டத்தை சேர்த்து அந்நிலப்பரப்பை முதன்மைப்படுத்தினார். நிலத்திற்கு, சமனான நிலையில் தீட்டியிருந்த பச்சை நிற பின்ணனியின் இடைவெளியை முதன்மைப்படுத்த, வளைந்து செல்லும் கரும் நிறத்திலான மரக்கிளைகளைத் தீட்டினார். அதன் வழி காகின், அந்த நிலப்பரப்பின் தாவரங்களை ஒளி நிழல் கொண்டு குறியீடாக்கி அந்த ஓவியத்திற்கான அமைதியை உருவாக்கியிருந்தார்.

அதனடிப்படையில் அந்த ஓவியத்தின் முதன்மைப் பொருளான குதிரையின் உடல்,  அந்நிலத்தின் பிரதிபலிப்பாக இருக்கும் வகையில் வெளிர் பச்சை நிறம் தீட்டினார். மேலும் குதிரையின் உடலில் வெளிச்சம் படும் பகுதிகளில் மஞ்சள் பச்சையும் காவியும் பயன்படுத்தியிருக்கிறார். குதிரை நிற்கும் தண்ணீருக்கு தீட்டிய வண்ணங்களில் வெள்ளை வண்ணத்தை சிறிதளவே குதிரையின் முழங்காலுக்கருகில் பிரயோகித்திருந்தார்.

’வெள்ளை குதிரை’ ஓவியத்திற்காக காத்திருந்த மருத்துவர், காகின் வரைந்துக் கொடுத்த ஓவியத்தில் பச்சை குதிரை தீட்டப்பட்டிருந்தது கண்டு ஏமாற்றமடைந்தார். அந்த ஓவியம் வேண்டாமென்றும், பணத்தைத் திருப்பித் தரும்படி காகினை நிர்பந்தித்தார். அதன் காரணமாக அவ்வோவியத்தை பாரிஸிலிருந்த தன்னுடைய ஓவியத் தரகருக்கு கப்பலில் அனுப்பி வைத்தார். தனியார் சேமிப்பில் இருந்த அந்த ஓவியம் 1927ல் லூவர் அருங்காட்சியகத்தால் வாங்கப்பட்டது. 1927ஆம் ஆண்டு என்பது காகின் இறந்து 24 ஆண்டுகளுக்கு பின்னானது.

ரவுல் டஃபி


ரவுல் டஃபி, பாரிஸில் இருந்த அவரது ஓவிய சகாக்களான ஹென்றி மேடிஸ் (1869 -1954) மற்றும் பாப்லோ பிகாசோ (1881-1973) போலவே, தொன்மையான கலையைச் சார்ந்து இயங்கினார். அதன் காரணமாக அவர் பாரம்பரிய ஆப்பிரிக்க முகமூடிகள் மற்றும் சிற்பங்களை சேகரிப்பவராக இருந்தார். அந்த பொருட்களின் பல்வேறு விதமான வெளிப்பாட்டு வடிவியல் வடிவங்கள் ரவுல் டஃபிக்கு தன் ஓவியங்களின் வெளிப்பாட்டுக்கு ஒரு புதிய பாதைகளைத் தேர்ந்தெடுக்க ஊக்கமளித்தன.

டஃபி பெரும்பாலும் போயிஸ் டி போலோஜன் எனப்படும்  பூங்காவின் பகுதிகளை வரைந்திருக்கிறார், அந்த பூங்கா, மரப்பாதைகளால் ஆன ஒரு அழகான பூங்காவாகும், பாரிஸ் மக்கள் பெரும்பாலும் விடுமுறை நாட்களை அந்த பூங்காவிலும் அங்குள்ள மரப்பாதைகளில் நடந்துச் செல்வதையும் விரும்பினர். பொதுவாக அங்கிருந்து கொண்டு நேரடியாக பார்க்கும் காட்சிகளை அவர் வரைந்ததில்லை. அவர் கவனித்த காட்சியில் இருந்து யதார்த்தமான விவரங்கள் அனைத்தையும் கழித்து, வடிவியல் வடிவங்களை - செவ்வகங்கள், சதுரங்கள், வட்டங்கள் மற்றும் முக்கோணங்கள் ஆகிய.  அடிப்படை வடிவங்களைப் பயன்படுத்தி, ஓவியங்களை வரைவார். இந்த ஓவியத்தில், நிலப்பரப்பில் ஒரு குதிரை மீதான ஒருவரின் சவாரியை அவர் வரைந்திருப்பார். கட்டிடம் மற்றும் வேலியை செவ்வகங்களாக கூர்மையாக கோண பக்கங்களுடனும், மரத்தை ஒரு பூ ஜாடியின் அடிப்பாகம் கொண்டு இருக்கும், முக்கியமாக இப்படைப்பில் குதிரை, வட்டம், முக்கோணம் மற்றும் முட்டை வடிவங்களால் தீட்டப்பட்டிருக்கும்.

இந்த ஓவியத்தில் மையத் தளத்தின் உணர்வை உருவாக்க டஃபி பாரம்பரியமாக எண்ணெய் வண்ண வெளிப்பாட்டு முறையைப் பயன்படுத்தவில்லை என்பதை நாம் காணலாம். மேலும் அவர் இந்த ஓவியத்தின் ஏனைய வண்ணங்களின் பயன்பாட்டு விவரங்களையும் கட்டுமானங்களையும் தட்டையான புலப்பொருள்களாக வடிவமைத்தார், அவை கிட்டத்தட்ட காகிதங்களினால் உருவாக்கப்படும் கட்அவுட்களைப் போல இருப்பதை உதாரணம் காட்டலாம். மேலும் அந்தந்தக் கோணங்கள் மற்றும் அவற்றிற்காக அவர் பயணப்படும் மாறுபட்ட நிற தீட்டல் முறைகளுடன், டஃபி அந்த ஓவியத்தின் ஆழத்தினை பார்வையாளர்களுக்கு பரிந்துரைக்க முயற்சிக்கிறார். குறிப்பாக, இந்த ஓவியத்தின் இடதுபுறத்தில் இடம்பெறும் வேலியின் கோணம் அடுக்குகளாக மற்றும் மேலிருக்கும் நீல வண்ணக் கூரையின் கோணம் கூர்மையாக பின்புறம் இடம்பெறச் செய்திருப்பார். முன்பக்கத்தில் உள்ள கட்டிடத்தின் ஒளிக்கான வண்ணங்களின் தீட்டல் முறைகளுக்கும் தூரத்தில் நிலப்பரப்பின் ஆழமான பச்சை நிறங்களுக்கும் உள்ள வேறுபாடு என்பதெல்லாம் டஃபி யின் வெளிப்பாட்டு ஆழத்தின் உணர்வை உறுதி செய்கிறது.

மக்கள் அணியும் நாகரீக ஆடை அணிகளன்களின் விவரங்களை டஃபி இவ்வோவியத்தில் அதன் தன்மை மாறாமல் எளிமைப்படுத்தியிருக்கிறார். அதற்காக அவர் பெண்களின் ஆடையை சதுர கட்டம் கொண்ட சிவப்பு கோடுகள் மற்றும் ஆணின் கால்சட்டை கருப்பு கட்டத்துடன் வெளிப்படுத்தியிருப்பார். குதிரையினை மையப்பொருளாக்கிய இப்படைப்பு பாரிஸ் மக்களின் தனித்துவமான கலாச்சார நேர்த்தியைக் குறிக்கிறது என்பார்கள் ஓவிய விமர்சகர்கள்.

 

 

மெக்ஸிக ஓவியங்களில் குதிரை

தியாகோ ரிவேரா

தியாகோ ரிவேராவிற்கு, பொதுக் கட்டிடங்களில் பெரிய அளவிளான சுவரோவியம் தீட்டுவதே பெரும் விருப்பமாக இருந்தது. ஏனெனில் அவைகள்தான் பெரும் திரளான மக்களால் பார்க்கப்பட்டு உடனுக்குடன் அக்கருது பொருள் குறித்த உரையாடலை ஏற்படுத்தும் என்று நம்பினார். ’சிறு ஓவியங்கள் வரைந்தால், அது தனி ஒரு சேகரிப்பாளரின் கையில்தான் இருக்கும். அதனால் அதில் எனக்கு உடன்பாடில்லை.’ என்பார்.

இவருடைய அரசியல் நிலைபாட்டில் இருபெறும் புரட்சிகளின் பாதிப்புகள் மேலோங்கி இருக்கும். ஒன்று, 1910ல் தனது சொந்த நாடான மெக்சிக்கோவில் நிகழ்ந்த ரத்தம் தோய்ந்த உள்நாட்டு கலகம். இரண்டு, 1917ல் ரஷ்ய புரட்சிக்கு முதல் காரணியாய் இருந்த தொழிலாளிகள் கூட்டமைப்பின் தோற்ற நிலை. மெக்சிக்கோவில், ‘தாங்கள் உழைக்கும் நிலம் தங்களுக்கே உரிமை’ என்று போராடிய உழவர்களின் போராட்டத்துக்கு பலம் சேர்க்கும் விதமாக, சுவரோவியங்கள் வரைந்தபோதுதான் ரிவேரா பெரும்பாண்மையோரால் அடையாளம் காணப்பட்டார். மிகப்பெரிய அளவிலான சுவர் ஓவியங்களில் மெக்சிக்க புரட்சிக்கு வித்திட்ட வரலாற்று கால போராட்ட நாயகர்களை தன் ஓவியங்களில் பதிவு செய்தார். அதே சமயம் தன் சமகால புரட்சியாளர்களை பதிவு செய்வதையும் வழக்கத்தில் வைத்திருந்தார்.

அப்படி  ‘ரிவேரா’ பதிவு செய்த சமகால புரட்சியாளர்களில் மிக முக்கியமானவர், மெக்சிக்கோ மக்களால், ‘விவசாயிகளின் பொதுத் தலைவர்’ என்று கொண்டாடப்பட்ட  ‘ஜெனரல் எமிலியானோ சபாத்தா’ வும் ஒருவர். பல காலமாக அமைதியாகப் போராடிய விவசாயிகளைக் கொண்டு, ஒரு  ஆயுதப்படையை உருவாக்கியவர். ஏழு ஆண்டுகள் அதிகாரத்திற்கு எதிராகக் கடுமையாகப் போராடி, உழைத்த நிலங்களை விவசாயிகளுக்கே மீட்டுத் தந்தவர். பெரும் பொருள் கொள்ளை அடித்துக்கொண்டிருந்த அரசை வீழ்த்துவதற்கு, சாமானியர்களின் பிரதிநிதியாய் கொண்டாடப்பட்டவர்தான் ‘ஜெனரல் சபாத்தா’. அதை மையப்படுத்தி ரிவேரா வரைந்த சிறிய சுவரோவியம் ஒன்று மெக்சிக்க சுவரோவியங்களில் புகழ் பெற்ற ஒன்றாகும்.

அந்த ஓவியத்தில், போராளி சபாத்தா, பூர்ஷுவா அதிகாரி ஒருவனை வீழ்த்தி, அவனுடைய அரேபியக் குதிரையை கைப்பற்றியதை மிக நுண்ணிய முறையிலான குறியீடுகளுடன் வரைந்திருப்பார். ஒரு ‘கொரில்லா யுத்தத்திற்கு’ வழி நடத்தும் தலைவனுக்கேயுரிய தீவிரத்தன்மையுடைய உடல்மொழியும் நிலைத்தக் கண்களுடன் இருக்கும் சபாத்தாவின் கையில், இரக்கக் கடவுளின் குணாம்சத்தோடு ஒப்பீடு செய்யும் வகையில் உயரமான உருவ அமைப்பில் மென்மையான முகத்துடன் இருக்கும் வெள்ளைக் குதிரையை வரைந்திருப்பார். ஓவியத்தில் பின்பகுதி முழுக்க விவசாயிகளின் உழைப்பு ஆதாரமான விவசாய நிலத்தினை சிகப்பு களிமண் (பிரவுன்) நிறம் கொண்டு தீட்டியிருப்பார். அதோடு அதில் உழைக்கும் விவசாயிகளின் வாழ்வைக் குறிப்பிடும் வகையில் பச்சை மற்றும் மஞ்சள் நிறத்திலான தாவரங்களைத் தீட்டி அதற்கு நேரெதிர் வண்ணமான வெள்ளை உடையில் சபாத்தாவையும் உடன் விவசாய வீரர்களையும் கூரிய கோடுகளால் உருவாக்கியிருப்பார்.

குறிப்பாக, இவ்வோவியத்தில் நீண்ட கை வாளுடன் பூட்ஸ் அணிந்த பூர்ஷுவா அதிகாரியை சபாத்தா தன் வீரர்களுடன் வீழ்த்தி, குதிரையின் காலடியில் கிடக்கும்படி செய்து செருப்பணிந்த தங்களின் கால்களோடு முன்னேறிச் செல்லும் விதம் வரைந்திருப்பார். அது முக்கியமான அரசியல் குறியீடாகும். அதுபோல், அவ்வோவியத்தில் கொரில்லா வீரர்களான விவசாயிகள், தங்களுடைய விவசாயத் தொழிலுக்குப் பயன்படுத்தும் பொருட்களையே ஆயுதங்களாக தங்கள் கையில் வைத்திருப்பதும் கவனிக்கத்தக்கது.

ரிவேராவின், இதுபோன்ற சிறியதும் பெரியதுமான சுவரோவியங்கள் அந்நாட்டிற்கான கொடையாகக் கருதி பாதுகாக்கப்படுகிறது. ஏனெனில், ‘அவற்றை தொடர்ந்து பார்ப்பதன் மூலம் அந்நாட்டின் இளைய சமூதாயத்தினர், தங்கள் பூர்வீக வரலாற்றின் மீதும் கலாச்சாரத்தின் மீதும் கலாச்சாரத்தின் மீதும் நம்பிக்கைக் கொண்டவர்களாக ஆகிறார்கள்.’ என்று மெக்சிக்க வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். 

 

அமெரிக்க ஓவியங்களில் குதிரை

பில் ட்ரெய்லர்

பில் ட்ரெய்லர், அலபாமாவின் பருத்தித் தோட்டத்தில் அடிமை முறையில் வேலை செய்த ஒரு கருப்பினக் கூலித்தொழிலாளி. 1866 ல் நடந்த உள்நாட்டுப்போரின் காரணமாக அடிமை முறையிலிருந்து விடுதலைப் பெற்றவர். விடுதலைப் பெற்ற பின்னரும் வெள்ளை முதலாளிகளிடமே வேலைப் பார்த்தபடி மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு முதலாளி இறந்து விட, ட்ரெய்லரின் பிள்ளைகள் ஆளுக்கொரு திசைக்கு வேலைக்குச் சென்றுவிட்டனர். சிறிது நாட்களில் ட்ரெய்லரின் மனைவியும் இறந்துவிட, தன் 84 வது வயதில் தனியே  ‘மோண்ட்கோமரி’ நகரத்துக்கு இடம் பெயர்ந்தார். அங்குதான் முதன்முதலில் ஓவியங்கள் வரையத்தொடங்கினார். அவருக்குள் அவருடைய தனிமை ஏற்படுத்திய சோகங்கள் ஒன்று திரண்டு, அவர் கண்களில் பட்ட விலங்குகளையும் அவற்றிடம் பரிவுகாட்டும் மனிதர்களையும் வரையத்தொடங்கினார்.

மோண்ட்கோமரிக்கு முகப்புப் பகுதியிலேயே ட்ரெய்லர், ஓவியங்கள் வரையுமிடத்தை அமைத்துக்கொண்டார். போஸ்டர் வண்ணம் பயன்படுத்தி, பழைய அட்டைகளில்தான் வரைந்திருக்கிறார். பழங்கள் அடுக்கி விற்பனை செய்யப் பயன்படும் பழைய பெட்டிகளின் மேல் அமர்ந்து வரைவார். அந்த இடத்தின் மேல்புறம் சிறிய கம்பி ஒன்றை கட்டி, அதில், தான் வரைந்த ஓவியங்களை மாட்டிவைத்து காட்சிப்படுத்தி 25 முதல் 30 செண்டுகளுக்கு விற்றார்.

இவருடைய ஓவியத்தில் குதிரைகள் பெரும்பாண்மையாக இடம் பெற்றிருக்கும். மிகக் கூரான கோடுகளைக் கொண்டு இவர் வரைந்த ஓவியங்கள் தனித்த பாணியும் சுதந்திர வெளிப்பாட்டு ஓவிய மொழியால் ஆனதும் ஆகும். இந்த ’கருப்பு குதிரை, சிகப்பு சவாரியாளர்’ ஓவியத்தில் அத்தகைய கூரான மற்றும் மிகக் குறைவானக் கோடுகளால் குதிரையையும் மனிதனையும் அடையாளப்படுத்தியிருப்பார். கருப்பு குதிரை மேல் சிகப்பு கோட் அணிந்த சவாரியாளனை வரைந்திருப்பது மனோ ரீதியிலான வெளிப்பாடென , இன்று விமர்சகர்களால் கொண்டாடப்படுகிறது இவ் ஓவியம். 1939 முதல் 1942 வரையென மூன்று வருடங்கள் மட்டுமே ட்ரெய்லர் வரைந்திருக்கிறார். அக்குறுகிய காலத்தில் 1200க்கும் மேற்பட்ட ஓவியங்களை அவர் படைத்திருக்கிறார். அந்த ஓவியங்களும் 1979 வரை யாராலும் பார்க்கப்படாமலேயே பெட்டிகளிலேயே இருந்தது. பின் வாஷிங்டன், கோர்கரான் கேலரியினர், அங்கும் இங்குமென சேகரித்து அவருடைய 36 ஒவியங்களை, அமெரிக்க கருப்பின மக்களின் நாட்டுப்புற ஓவியங்கள் எனும் தொகுதியில் காட்சிக்கு வைத்தது. அதிலிருந்தே ட்ரெய்லரின் ஓவியங்களை உலகெங்கிலும் உள்ள ஓவிய ஆய்வாளர்கள், பெரும் விலை கொடுத்து சேகரிக்கத்தொடங்கினர். 

வெற்று கையொப்பம், 1965

ரென் மாக்ரிட்டி சொல் விளையாட்டுகள், புதிர் விளையாட்டுகளால் ஈர்க்கப்பட்டிருந்தார். மொழியின் ஆற்றலிருந்து கருத்துக்களை வெளிப்படுத்துவது என்பதன் மீது அவருடைய  ஆர்வம் மிகுந்திருந்தது. இவர், மற்றவர்கள் தன்னை ஒரு கலைஞர் என்று பொதுவாக அழைக்காமல், ஓவியர் என்று அழைப்பதையே விரும்பினார். ஏனென்றால், அவர் தன் ஓவியங்களில் எப்போதும் புற அழகை முன் வைக்காமல், உணர்ச்சியின் வெளிப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பவராய் இருந்தார். மாக்ரிட்டி, தனது கற்பனைகளை மீண்டும் உண்மையில் ஒரு கனவு போல் தெரிவதாக உருவாக்கினார்.  காட்டில் சவாரி செய்யும் பெண்களின் இந்த படம் ஒரு Palindrome (இருவழி ஒக்குஞ்சொல்) - எடு. மோருதருமோ, விகடகவி, யானை பூனையா  போன்றது. இந்த ’வெற்று கையொப்பம்’ எனும் ஓவியத்திலும் அதுபோன்ற வகை மாதிரியில்  நிலமும் மரமும் முன் வரிசையில் வரையப்பட்டிருக்கும். பின்னால் குதிரையில் ஒரு பெண் என பின்னணியாக மாறுகிறார்கள். சற்று கண்களைக் குறுக்கிப் பார்க்கும் செயலின் போது குதிரைப் பெண் முன் பகுதிக்கும், நிலப்பரப்பு பின் பகுதிக்கும் செல்லும் மாயம் நிகழும்.

அந்த மாய உணர்வுக்காக, மாக்ரிட்டி, குதிரை மற்றும் சவாரி செய்யும் பெண்ணை பழுப்பு, பச்சை மற்றும் லாவெண்டர் போன்ற மென்மையான, வண்ணங்களின் குறுகிய வரைமுறையைப் பயன்படுத்தி சித்தரித்திருப்பார். குறிப்பாக, இந்த படத்தில் பிரகாசமான சிறப்பம்சங்கள் மற்றும் பளபளப்புத் தன்மை போன்றவற்றை, மாக்ரிட்டி தவிர்த்திருக்கிறார். ஏனெனில், அந்த புறக்காரணிகள் இவ்வோவியத்திற்குத் தேவைப்படும் உணர்ச்சியின் வெளிப்பாட்டிலிருந்து விலகிச் செல்லக்கூடும் என்பதை கவனத்தில் கொண்டு செயல்பட்டிருக்கிறார். அதன் காரணமாகவே இந்த ஓவியத்தின் பின்னணியில் நிலப்பரப்பு என்ற ஒரு அமைதியான கனவை உருவாக்கியிருக்கிறார். குறிப்பாக, குதிரையின் சவாரி எனும் அசைவுடன், பின்னணி நிலப்பரப்பை ஒப்பிடும்போது கிட்டத்தட்ட ஒரே மாதிரியான மரங்கள் மற்றும் புதர்கள் மற்றும் மூடுபனி காடு ஆகியவை வால்பேப்பரைப் போல இயந்திரத்தனமாக வரிசையில்  செய்யப்பட்டிருப்பதென்பது இந்த Palindrome வகை மாதிரி தோற்றத்திற்கான  முக்கியக் காரணியாகவும் காண முடிகிறது.

மாக்ரிட்டி இந்த ஓவியத்திற்கான தலைப்பையும் ஒரு சொல் விளையாட்டைப் போலவே “வெற்று கையொப்பம்” என வைத்திருப்பது கவனிக்கக்கூடியது. அதாவது, ஒரு கையொப்பம் என்பது ஒரு உண்மையின், அடையாளக் குறி. கையொப்பம் பொதுவாக காணக்கூடிய ஒன்று. அதன் முன் வரும் வெற்று என்பது இல்லாதது. அதனால் கண்ணுக்கு தெரியாதது அல்லது உண்மையற்றது என்பதாகிறது. அதாவது உண்மையற்ற உண்மை புதிய படிமமாக மாக்ரிட்டி வழி இவ் ஓவியத்தில் பிறப்பெடுத்திருக்கிறது.

இந்திய ஓவியங்களில் குதிரைகள் 

இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான குகை ஓவியங்களில் பெரும்பாண்மையாக குதிரைகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் குகை ஓவியங்களில் காலத்தால் மிகவும் பழமை வாய்ந்த பிம்பேட்கா (Bhimbetka) குகையில் குதிரைகள் மற்றும் குதிரைகளுடன் தொடர்புடைய ஆயுதம் ஏந்திய மனிதர்களின் ஓவியங்கள் நிறையவே உள்ளன. அதுபோல் பித்தோரா ஓவியங்கள் (குஜராத் மற்றும் மத்திய பிரதேசம்) குதிரைகளின் ஓவியங்கள் நிறைய காணப்படுகின்றன.

 

பழங்குடி வாழ்வியலில் தொழிலுக்கான துணையாக இருந்த இந்த குதிரை, பிற்காலங்களில் போர் மற்றும் புகழ்பெற்ற குதிரை பந்தயத்துடன் தொடர்புடைய கலைப்படைப்புகளாக உருமாறி இருக்கிறது. அதுபோல் மீண்டும் வேட்டையாடுதல் மற்றும் அதிகாரத்தின் குறியீடாக பண்ணைகளில் வளர்த்தல் என குதிரைகள் ஓவியப் படைப்புகளில் பிரதிபலிக்கின்றன. இந்திய சூழலில் குல வழிபாடு, ஊர்க் காவல் என கிராமப்புறப் படைப்புகளில் தொன்றுதொட்டு தொடர்கின்றன. அதே சமயம், மேல்நிலையாக்கக் கதைகளின் வழி எழுந்த பெரும்பாலான கலைப்படைப்புகளில் தனித்தனியாக, ஒரு முக்கியமான கடவுளருக்கு வாகனமாக அல்லது கடவுள் அவதாரமாக என, பல்வேறு குதிரைகள் வரையப்பட்டும் சிற்பமாகத் தீட்டப்பட்டும் இணைக்கப்பட்டிருக்கின்றன.

இச்சூழல் இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகு நவீன கால ஓவியங்களில் மாற்றம் கண்டது. அந்த வகையில் இந்திய நவீன ஓவிய வரலாற்றில் மேற்கத்திய கலையை அப்படியே பின்தொடர்வதில் பயன் ஏதுமில்லை என்று, கல்விப்புல மரபிலிருந்து முரண்பட்டு ஜெமினி ராய் கிராமப்புற ஓவியங்களைக் கவனித்தார். ஆப்பிரிக்க முகமூடிகளில் காணப்படும் தடித்த வடிவங்களை. ராயும் எளிமையாகப் பயன்படுத்தினார் மற்றும் கிராமியக் கலைஞர்களைப் போலவே தூய நிறங்கள் பய்ன்படுத்தினார். அப்படி உருவான ஓவியங்களில் ஒன்றான, ’கருப்பு குதிரை’ மிகவும் தனித்துவமானது. குதிரையின் உடல் முழுவதும் கருப்பு வண்ணம் தீட்டப்பட்டு அதன் மேல் செய்யப்பட்டிருக்கும் அலங்காரங்களில் முதன்மை வண்ணங்களைத் தீட்டியிருப்பார். எந்தவொரு கோடுகளும் நிதானமாகச் செய்தது போல் இருக்காது. இதே ஓவியத்தை அவர் பல ஆயிரம் முறை வரைந்துக் கொண்டிருந்ததுபோல் இலகுத் தன்மை இருக்கும். இதையே கலை விமர்சகர்கள் ராயின் தனித்துவமாகக் குறிப்பிடுகின்றனர்.

எம்.எஃப் ஹுசைன்

அதுபோல் இந்தியாவின் 'கலை மேஸ்ட்ரோ' என்று அழைக்கப்பட்ட எம்.எஃப் ஹுசைன் இந்திய நவீன ஓவியக் கலையை உலகம் அறியும் அளவிற்கு நகர்த்திச் சென்றவர். அவருடைய கியுபிச பாணி ஓவிய வரிசையில் “அழகானக் குதிரைகள்”, “குதிக்கும் குதிரை”, “குதிரைகள்”, “பறக்கும் குதிரை” போன்ற ஓவியங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இப்படி அவரது வாழ்க்கையின் போக்கில் எல்லையில்லாமல் வரையப்பட்ட, குதிரைகளைக் கொண்ட அவரது படைப்புகள், பார்வையாளர்களின் வழக்கமான புலனுணர்வு மண்டலத்தை மிஞ்சும் உணர்ச்சிகளைத் தூண்டும் சக்தியுடன் இருக்கின்றன. அதற்குக் காரணமாக அவரது துணிச்சலான தூரிகையின் செயல்வேகம் இருக்கின்றன.  முக்கியமாக அவரது குதிரைகளை கேன்வாஸ்கள் முழுவதும் அல்லது கேன்வாசைத் தாண்டும் வேகத்திலேயே இருக்கின்றன. குதிரையின் உடல் அழகியல் அழகு அவரை எப்போதும் கவர்ந்தது என்பார், அவற்றின் உடல்நிலை மட்டுமல்ல. அதன் உத்வேகங்களுக்கு எல்லையே இல்லை என்பது போல் அதன் இயக்கத்தைப் பதிவு செய்திருப்பார்.


ஹுசைனின் குதிரைகள், அவரது சிறு வயது நினைவுகள் மற்றும் மற்றும் இளமைக்கால வாழ்வியல் தாக்கங்களின் குறுக்குவெட்டுகளால் நிறைந்திருந்தன. குதிரைகள் மீதான தனது உத்வேகத்தைப் பற்றி ஹுசைன், "'இந்த காட்டு விலங்கான குதிரைகளை நான் காட்டில் பார்த்ததில்லை. இடைக்கால இந்தியாவின் கோவில்களான கஜுராஹோ, கொனார்க், மகாபலிபுரம் - சுவர்களில் அவர்கள் கல்லில் அடைக்கப்பட்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.” என்று சொன்னார். குறிப்பாக, 1952 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் நடந்த உலக அமைதி காங்கிரஸில் கலந்து கொள்வதற்காக அவர் சீனாவிற்கு விஜயம் செய்ததன் மூலம் குதிரை மீதான முக்கியமான தாக்கம் வந்தது. சீனாவில் அவர் இருந்த காலத்தில், குதிரை ஓவியங்களுக்கு இணையான பெயர் கொண்ட பழைய சீன ”மாஸ்டர் சூ பெய்ஹாங்கை” ச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ஹுசைன் பெய்ஹாங்கின் ஸ்டுடியோவிற்குச் சென்றார், அங்கு அவர் எண்ணற்ற குதிரைகளுடன் கூடிய மிகப் பெரிய அளவிலான ஓவியத்தைக் கண்டார். சுறுசுறுப்பான இயக்கத்திலும், லாவகமாக பாய்ந்து செல்லும் இந்த குதிரைகள் ஆற்றலுடன் நிரம்பி வழிவது ஹுசைனின் படைப்புகளின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஹுசைன் வரைந்த ஆரம்பகால குதிரை ஓவியம் ஒன்றிற்கு எம்.எஃப். ஹுசைன் 'காலம் கடந்து செல்வது' என்று பெயரிடப்பட்டார். 1954 ஆம் ஆண்டில் வரையப்பட்ட இந்த படைப்பு, மனித பரிணாமத்தின் பயணம் முழுவதும் நம்பகமான தோழர்களாக குதிரைகளின் பங்களிப்பிற்கான ஒரு அடையாளமாகும். என்றார் ஹுசைன். அவ்வோவியத்தில், குதிரைகள் இரண்டு உருவங்களால் பிரதிபலிக்கப்படுகின்றன - ஒரு ஆண் மற்றும் ஒரு பெண். பெண்ணுக்கு இலக்கைக் காண்பிப்பது போல் ஆண் முன்னோக்கிச் செல்லும் திசையை நோக்கிச் செல்கிறான். ஆண் உருவத்தின் இருத்தல் நிலை அந்தத் தருணத்தின் அசைவைக் காட்டுகிறது, மேலும் அவர்களது தோரணைகள், இருவருக்கும் இடையே உள்ள நிச்சயமற்ற உணர்வைக் குறிக்கிறது. குதிரைகள் மனிதர்களுடன் உறுதியுடனும் ஒற்றுமையுடனும் நிற்கின்றன.

“இவரது குதிரைகள் ஒவ்வொன்றும் பல பரிமாணங்கள் கொண்டது. அவை, மின்னலைப் போல, பல தீயென எரிகின்றன. அவற்றின் குளம்புகள் ஒன்றிரண்டு ஓவியத்தில் மட்டும் தென்படுகின்றன. கர்பாலாவின் போர்க்களம் முதல் பாங்குரா டெரகோட்டா (குதிரைகள்), சீன ட்சே பெய் ஹங் குதிரை முதல் புனித மார்கோ குதிரை வரை, அலங்கரிக்கப்பட்ட கவசமான ‘துல்துல் முதல் அஸ்வமேத யாகத்தின் பலியிடப்பட்ட வெள்ளைக் குதிரைகள் வரை,” ஹுசைனின் நினைவுகளில்.தளும்பியிருக்கின்றன. பொதுவாக, எம். எஃப் ஹுசைன் அனைத்து மதங்களின் வேதம் மற்றும் புனைகதைகள் மீது ஆழ்ந்த ஈர்ப்பு கொண்டிருந்தார். 

1990 ஆம் ஆண்டு 'கர்பலா' என்ற தலைப்பில் அவர் வரைந்த ஓவியத்தில், இரண்டாம் கலிபா, யாசித் I மற்றும் முகமது நபியின் பேரன் ஹுசைன் இபின் அலி ஆகியோருக்கு இடையே 600ஆம் நூற்றாண்டில் நடந்த கர்பலா போரில் உயிர் நீத்தத்  தியாகிகளுக்கு நினைவில் மரியாதைச் செலுத்துகிறார். சுல்ஜானாவின் அரச பிரசன்னம், ஹுசைன் இப்னு அலியின் வீரம் மற்றும் மகிமை மற்றும் பேராற்றல் வண்ணப் பிரயோகத்தின் வழியாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. போரில் சவாரி செய்யும் தலைமை அவர்களின் பயண பாதுகாவலர்களான குதிரைகளின் குறியீட்டின் மூலம் சூழல் உணர்த்தப்படுகின்றன. ஹுசைன் இந்த படைப்பில், ஓரியண்டல் கலை, குறிப்பாக சீன ஸ்டைலிஸ்டிக் செயல்முறைகள் பற்றிய தனது புரிதலையும் இணைத்திருந்தார். எதிரிகளின் நாடு பிடித்தல் எண்ணங்களை கருப்பு நிறக் குதிரைகள் மூலம் காட்சிக்குத் தருகிறார், மேலும் அப்பகுதி, கொமோடோ டிராகன் போன்ற கொடூரமான பண்புக் கூறுகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. முட்கரண்டி நாக்குகள் மற்றும் சறுக்கும் தலைகளுடன் அவர்களின் சித்தரிப்பு போரில் ஈடுபடுத்தப்படும் குதிரைககளின் உள்ளார்ந்த குணநலன்களை மிக ஆழமாக வெளிப்படுத்தியிருக்கிறார். இசுலாமிய புனித மாதமான முஹர்ரத்தின் போது ஆண்டுதோறும் பத்து நாள் காலப்பகுதியில் இந்த போர் இன்றுவரை நினைவுகூரப்படுகிறது, இது ஆஷுரா நாள் என்று அழைக்கப்படுகிறது.


ஹுசைன் படைப்பில் மாகாபாரதத்தை மையமிட்ட ஒரு ஓவியம். இதிகாசமான 'மகாபாரதத்தின்' முடிவில் ஒரு அத்தியாயத்தைச் சித்தரிக்கும் தலைப்பிடப்படாத என்ற படைப்பு ஆகும். அதில், முக்கிய கதாபாத்திரங்கள் நம் பார்வைக்குத் துல்லியமாக அளிக்கப்பட்டிருக்கின்றன. பீஷ்மர், அம்பு படுக்கையில் இருக்கிறார், இது செயல்களும் அவற்றின் விளைவுகளும் தப்பிக்க மற்றும் தவிர்க்க முடியாதவை என்பதைக் குறிக்கிறது. அவருடைய படுக்கையான அர்ஜுனனின் 'வில் அம்பு' என்பது,  கொடுங்கோன்மைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்பைக் குறிக்கிறது. நான்கு குதிரைகளும் சுதர்சன சக்கரமும் கிருஷ்ணரின் தந்திரங்களின் வலிமையைக் குறிக்கின்றன, மினிமலிச பாணியில் மூன்று வண்ணங்களை மட்டுமே கொண்ட இந்தப் படைப்பு 1994 ஆம் ஆண்டில், பார்வையாளர்களின் முன்னிலையில் நேரடியாக வரையப்பட்டது. 

ஹுசைனின் மற்றுமொரு புகழ்பெற்ற ராஜ் ஓவியத்தொடரின் பல படைப்புகளிலும் குதிரைகள் வரையப்பட்டுள்ளன. 'மகுடத்து இளவரசர் மற்றும் மெய்க்காப்பாளருடன் உள்ள ராஜ்மாதா' என்ற தலைப்பிலான ஓவியம், முன்னாள் காலனித்துவ இந்தியாவில் இருந்த முகம் தெரியாத ஒரு ராணி ஜன்னல் வழியாக தனது மகன் அல்லது இளவரசனின் தோளில் வலது கையை ஊன்றியவாறு இருப்பது போன்று படைக்கப்பட்டிருக்கிறது. அரண்மனையின் வெளிப்புறத்தில், குதிரையின் மீது மெய்க்காப்பாளர் ஒருவர் ராஜமாதாவிற்கு பாதுகாப்பாக இருக்கிறார்.

சுனில் தாஸ்

சுனில் தாஸ், மற்றொரு இந்திய நவீன ஓவியர் ஆவார், அவர் குதிரைகளைச் சித்தரிப்பதற்காகவே தனது படைப்பின் பெரும் பகுதியை அர்ப்பணித்தார். நகரும் காளைகள் மற்றும் குதிரைகளின் வலிமையையும் அசைவுகளையும் இவர் அற்புதமாகக் கையாண்டிருப்பார். இந்த படைப்புகளுக்கான உத்வேகம் அவர் 1962 இல் ஸ்பெயினுக்கு பயணம் செய்தபோது வந்தது என்பார், அங்கு அவர் விலங்குகளை வைத்து விளையாடப்படும் விளையாட்டுகளைக் கவனித்தார். இந்தியா திரும்பியதும் அவர் கல்கத்தாவின் மவுண்டட் காவல்துறையின் விலங்குகள் தொழுவத்தில் நேரத்தைச் செலவழித்து, அங்குள்ளக் குதிரைகளைக் கண்காணித்து நேரடி ஓவியங்களைச் செய்தார். தனக்குள்ள குதிரைகள் பற்றியானப் பார்வையைப் பற்றிக் குறிப்பிடும்போது "நான் 1950 முதல் 1960 வரை, ஏறக்குறைய 7000 குதிரை ஓவியங்களைச் செய்திருக்க வேண்டும்," என்று கூறினார்.

கே. எச். ஆரா

விலங்குகளின் நேர்த்தியான அழகையும் அவற்றின் அசையும் ஆற்றலையும் தங்கள் படைப்புகளில் கைப்பற்றிய மற்றுமொரு இந்திய நவீன ஓவியர். கே. எச். ஆரா. 1970 ஆம் ஆண்டு அவரின் பெயரிடப்படாத ஒரு படைப்பில், ஒரு அழகான புல்வெளியில் பாய்ந்து செல்லும் மூன்று குதிரைகளை வரைந்து மேய்ச்சல் நிலங்களில் உள்ள குதிரைகளின் இயங்கு வேகத்தை கைப்பற்றியிருக்கிறார். ஓவியத்தின் மையத்தில் இடம்பெற்றுள்ள குதிரை, ஒரு சிறிய நீர்நிலையின் குறுக்கே குதிப்பதைக் காண முடிகிறது. இந்திய மலைப்பகுதியில் உள்ள பரந்த பசுமையான மேய்ச்சல் நிலங்களை நினைவூட்டும் இந்த ஓவியம் இயற்கையின் அழகுக்கு மத்தியில் சுதந்திரமாக வாழும் விலங்குகளின் மகிழ்ச்சியையும் விடுதலையையும் நமக்குத் தருகிறது.

கே.ஜி. சுப்ரமணியன்

கே.ஜி. சுப்ரமணியனின் மேற்கத்திய ஓவிய தாக்கங்களுடன் இந்தியப் பழங்குடியினரின் வண்ணக் கூறுகளை அற்புதமாக வரையும் திறன் கொண்டவர். இவரது ஓவியங்களில் ஒன்று, 'குதிரைகளுடன் கூடிய காட்சிகள்' என்ற தலைப்பில் ஒரு புல்வெளியில் மூன்று குதிரைகளைச் சித்தரிக்கிறது. இந்தப் படைப்பை இவர் 1959 இல் எண்ணெய் வண்ணம் கொண்டு வரைந்திருக்கிறார். இது 1961 இல் பிரேசிலின் சாவோ பாலோவில் உள்ள VI Biennale de São Paulo வில் காட்சிக்கு வைக்கப்பட்டது. அந்த ஓவியத்திற்கு அந்த ஆண்டு ’மெடாலியன் ஆஃப் ஹானரபிள் மென்ஷன்’ எனும் விருது வழங்கப்பட்டது. இந்த படைப்பு, ‘இந்தியாவின் ராக்பெல்லர் கலைஞர்கள் என்ற புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.

இறுதியாக


உலகெங்கிலும் உள்ள ஓவியர்களுக்கு குதிரைகளைக் கவனிக்கும் ஒரு பண்பு என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக அவர்களின் படைப்புச் செயல்கிரமத்தில் உள்ள ஒரு அசாதாரண மற்றும் தனித்த பார்வைகளின் பண்புக் கூறுகளாகும். ஏனென்றால், குதிரைகளிடம் உள்ள கட்டுக்கடங்காத வேகத்தின் ஆற்றலையும், மனிதர்கள் குதிரைகளின் அசைவைத் தொடர்ந்து போற்றும் பரிபூரண நல்லிணக்கத்தையும் ஒரே நேரத்தில் கவனித்து இந்த உலகின் முன் படைப்பாகத் தருவதைவிட ஓவியர்களுக்கு வேறு சிறந்த வழி எதுவாக இருக்கும்.

                                                 ஞா. கோபி, புதுச்சேரி

நன்றி - கலைமுகம் - பவள (75) இதழ் -2023

Comments

Popular posts from this blog

அரங்கில் கலந்த ஆசிரியர் சே. ராமானுஜம்

எல்லோருக்காகவும் வேண்டியெழும் மொழி : ஜான் ஃபோஸின் நாடகங்கள் - ஞா. கோபி

நாடகக் கலைஞர்களின் கலை வழி உறவு நிலை வெளிப்பாடுகள்