செயல்திறன் அரங்கக் கலையின் கூர்நோக்கு - மரினா அப்ரமோவிக்
செயல்திறன் அரங்கக்
கலையின்
கூர்நோக்கு
- மரினா அப்ரமோவிக்
"எனது படைப்புப் பணியின் முழு நோக்கமும் மனித ஆன்மாவை
மேம்படுத்துவதாகும்."
என்று சொல்லும், மரினா அப்ரமோவிக் (Marina Abramovic) - 1946 ஆம் ஆண்டில் செர்பியாவில் பிறந்தவர். அரங்கியல் ஊடகத்தில் இந்த நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க நிகழ்த்துக்கலைக் கலைஞர் ஆவார். மேலும், எழுத்துத்துறை மற்றும் அரங்கப்பூர்வமான திரைப்படத் தயாரிப்புப் பணியிலும் தடம் பதித்தவர். உலக அரங்கச் செயல்பாடுகளில் அவரது படைப்புகள் ’உடல் மையக் கலை’ (Body centered art), காலத்தை மையமிட்டப் படைப்பு (Durational art) மற்றும் பெண்ணியக் கலை, கலைஞருக்கும் பார்வையாளர்களுக்கும் இடையிலான உறவு, உடலின் வரம்புகள் மற்றும் மனதின் சாத்தியங்களை மரினா அப்ரமோவிக்கின் படைப்புகள் ஆராய்கிறது என்பர் அரங்க விமர்சகர்கள்.
அரங்கில் நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக படைப்புச் சக்தி குறையாமல் இயங்கிக் கொண்டிருக்கும் மரினா, தன்னை "செயல்திறன் கலையின் மூதாய்" என்பதாக அறிமுகம் தருகிறார். தன்னுடைய ஆரம்பகால அரங்க நிகழ்விலிருந்து இன்றுவரை தான் நிகழ்த்தும் அரங்கப் படைப்புகளில் பார்வையாளர்களின் பங்கேற்பை உறுதி செய்வதன் மூலம் நுண்ணிய அரங்க நிகழ்த்துகை அடையாளத்தின் ஒரு புதிய பாதையைக் கண்டடைந்திருக்கிறார். அதனால்தான், மரினா அப்ரமோவிக் தற்கால அரங்கின் முன்னோடியான ஆய்வு நிகழ்த்துனராகவும் வலம் வருகிறார். மரினா, தன்னுடைய ஆரம்பகால நிகழ்வுகள் முதலே தன் நிகழ்வுகளின் பொருண்மையாக "வலி, இரத்தம் மற்றும் உடலுடன் உடல் வரம்புகளை எதிர்கொள்வதில்" கவனம் செலுத்தினார். அந்த அனுபவங்களின் வழி 2007 ஆம் ஆண்டில், மரினா அப்ரமோவிக் கற்கை நிறுவனம் ( Marina Abramović Institute), என்ற பெயரில் செயல்திறன் கலைக்கான இலாப நோக்கற்ற அடித்தளத்தை நிறுவினார்.
மரினா அப்ரமோவிக்
கற்கை நிறுவனம்
மரினா அப்ரமோவிக் கற்கை நிறுவனம் என்பது நிகழ்கலை செயல்திறன் பயிற்சிகள், நீடித்த கலை பரிசோதனைகள் மற்றும் நிகழ்வுகள் என "அப்ரமோவிக் முறையின்" பயிற்சிகளை மையம் கொண்டு செயல்படும் ஒரு செயல்திறன் கலை வெளியாக திகழ்கிறது. நியூயார்க்கின் ஹட்சனில் உள்ள இந்த மையம், இந்த நிறுவனம் ஒரு பன்னாட்டு அமைப்பாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இன்றுவரை, சர்வதேச அளவில் பல நிறுவனங்கள் மற்றும் கலைஞர்களுடன் கூட்டு சேர்ந்து இயங்கி வருகிறது,
ஆரம்ப வாழ்க்கை,
கல்வி,
கற்றல் மற்றும் கற்பித்தல்
அப்ரமோவிக் நவம்பர் 30, 1946 அன்று யூகோஸ்லாவியாவின் ஒரு பகுதியான செர்பியாவின் பெல்கிரேடில் பிறந்தார். அவரது பெற்றோர்களான டானிகா ரோசிக் (Danica Rosic) மற்றும் வோஜின் அப்ரமோவிக் (Vojin Abramovic) இருவரும் இரண்டாம் உலகப் போரின் போது யூகோஸ்லாவியக் கட்சியினர். போருக்குப் பிறகு, அப்ரமோவிக்கின் பெற்றோர்கள் "தேசிய தலைவர்கள்" ஆனார்கள். அதனால் போருக்குப் பிந்தைய யூகோஸ்லாவிய அரசாங்கத்தில் அவர்களுக்குப் பதவிகள் வழங்கப்பட்டன.
அப்ரமோவிக் ஆறு வயது வரை அவரது தாத்தா பாட்டியால் வளர்க்கப்பட்டார். அவரது பாட்டி ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டவர் அதனால் அப்ரமோவிக் தனது பாட்டியின் சடங்குகளைப் பின்பற்றி தேவாலயங்கள் முன்மொழிந்த வாழ்வியல் முறையில் தன் குழந்தைப் பருவத்தை கழித்தார். ஆறு வயதில், அப்ரமோவிக்கின் தனது பெற்றோருடன் வந்து வாழத் தொடங்கினார். அக்காலங்களில் பியானோ, பிரஞ்சு மற்றும் ஆங்கிலப் பாடங்களைக் கற்றுக்கொண்டார். பள்ளியில் அவர் கலைப் பாடங்களை தேர்ந்து எடுக்கவில்லை என்றாலும், ஆரம்பகாலத்திலேயே அவர் கலைப் படைப்புக்களை ஆர்வத்துடன் பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். மேலும் சிறுவயதில் ஓவியம் வரைவதையே அதிகம் விரும்பிச் செய்திருக்கிறார்.
அப்ரமோவிக்கின்
பெற்றோர் வீட்டில் அவரது தாய் அனுபவித்த கொடுமையான
வாழ்க்கை முறையை பார்த்தபடியே வளர்ந்தார்.
2013 இல் வெளிவந்த ஒரு நேர்காணலில், அப்ரமோவிக்,
"எனது தாய் மற்றும் தந்தை
இருவரும் ஒவ்வாத ஒரு திருமணம் செய்த தம்பதிகளாக முரண்பட்டுக் கொண்டே இருந்தனர்.
ஒருமுறை,"எனது தந்தை 12 ஷாம்பெயின்
பாட்டில் கண்ணாடிகளை
உடைத்து ரகளை செய்து பின் வீட்டை விட்டு வெளியேறினார்.
என் குழந்தைப் பருவத்தின் மிகவும் கொடூரமான தருணங்களே என்னை வளர்ந்தன."
என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
அவர் 1965 முதல் 1970 வரை பெல்கிரேடில் உள்ள அகாடமி ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸில் இளங்கலை பயின்றார். 1972 இல் ஜாக்ரெப், எஸ்ஆர் குரோஷியாவில் உள்ள அகாடமி ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸில் (Academy of Fine Arts in Zagreb, SR Croatia) தனது முதுகலை படிப்பை முடித்தார். பின்னர் அவர் 1973 முதல் 1975 வரை செர்பியாவுக்குத் திரும்பினார்.
அப்ரமோவிக்
1971 மற்றும் 1976 க்கு இடையில் நெசா
பரிபோவிக்கை மணந்தார். 1990 முதல் 1995 வரை அப்ரமோவிக் பாரிஸில்
உள்ள அகாடமி டெஸ் பியூக்ஸ்-ஆர்ட்ஸ் மற்றும் பெர்லின்
கலைப் பல்கலைக்கழகத்தில் வருகை தரும் பேராசிரியராக
பணிபுரிந்தார். 1992 முதல் 1996 வரை அவர் Hochschule für bildende Künste Hamburg இல் வருகைப் பேராசிரியராகவும்,
1997 முதல் 2004 வரை Hochschule für bildende
Künste Braunschweig இல் செயல்திறன்-கலை பேராசிரியராகவும் பணி
புரிந்தார். தொடர் பயணியான
அப்ரமோவிக் தனது அந்தக்கால
அனுபவங்களைச் சொல்லும்போது, இப்படி
பணிக்காக புதிதாகச் செல்லும் நாடுகளில் ”நான்
எங்கிருந்து வருகிறேன் என்று மக்கள் என்னிடம்
கேட்பர். அப்போது நான் அவர்களிடம், ஒருபோதும் செர்பியாவிலிருந்து வருகிறேன் என்று சொல்வதில்லை. நான் எப்போதும் இல்லாத
ஒரு புதிய நாட்டிலிருந்து வருகிறேன் என்றுதான் எப்போதும் கூறுவேன்." என்கிறார்.
மரினா அப்ரமோவிக்கின்
தொழில்முறை அரங்க நிகழ்வுகள்
ரிதம் 10, 1973
அப்ரமோவிக்
1973 இல் எடின்பரோவில் தனது முதல் தனி நபர் நடிப்பில்
சடங்கு மற்றும் உடல் இயக்கங்களின் கூறுகளை
முன்வைத்து ரிதம் எனும் நாடகத்தை நிகழ்த்தினார். அதில் அரங்கப்
பொருட்களாக, கத்திகள்
மற்றும் இரண்டு டேப் ரெக்கார்டர்களைப்
பயன்படுத்தி, சர்க்கஸில் இடம்பெறும் ரஷ்ய சாகச விளையாட்டுப்போல
நிகழ்த்தினார். நிகழ்வில் தாளகதியில்
கத்தி குத்தல்கள் இவரின் கையின் விரல்களுக்கு
இடையில் இவராலேயே குத்திக்
கொள்ளப்படும். ஒவ்வொரு
முறையும் அப்ரமோவிக் தன் கை விரல்களுக்கிடையே தானே குத்திக்கொள்ளும்
போது, அருகில் அமைக்கப்பட்டிருக்கும் இருபது வரிசையில்
இருந்து ஒவ்வொரு புதிய கத்தியை
எடுத்து, அறுவை சிகிச்சை செய்வதுப் போல்
தொடர்ந்து இயங்கியபடியே இருப்பார். இருபது
முறை தன்னைத்தானே சிறிய
அளவில் வெட்டிக் கொண்ட
பிறகு, அப்ரமோவிக் டேப்பை இயக்குவார். ஒலிகளைக்
கேட்டு, அதே அசைவுகளை மீண்டும்
செய்வார். ஒருவகையில்
கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் அசைவுகளின் வழி ஒன்றிணைப்பார். இப்படி, உடலின் உடல் மற்றும் மன
வரம்புகளை ஆராயும் போக்கை நிகழ்வின் வழி தொடங்கினார். வெட்டிக்கொள்ளும் போது ஏற்படும் வலி
மற்றும் மேசையில் கத்திக் குத்தலின் ஒலிகள்; வரலாறு மற்றும்
பிரதியிலிருந்து எழும் இந்த இரட்டை ஒலிகள் வழி, அப்ரமோவிக்
நடிகரின் நனவின் நிலையினை கருத்தில் கொள்ளத்
தொடங்கினார். அப்படி, செயல்திறன் நிகழ்த்து நிலைக்கு நீங்கள் நுழைந்தவுடன், நீங்கள்
சாதாரணமாக நடிக்கும் போது ”தன்னிலை மறந்து செய்ய முடியாத
விஷயங்களை கூர்நோக்கு அனுகு
முறையின் வழி செய்யும்போது உங்கள் உடலை நீங்கள் கடந்துவிடலாம்.” என்று இந்த நாடகத்தின் வழி உணர்ந்துக் கொண்டேன்
என்கிறார்.
ரிதம் 5, 1974
இந்த
நிகழ்ச்சியில், அப்ரமோவிக் பெட்ரோலியம் நனைக்கப்பட்ட ஒரு பெரிய நட்சத்திரத்தைப் பயன்படுத்தி,
அவரது தீவிர உடல் வலியின் ஆற்றலை
மீண்டும் தூண்டிப் பார்க்க முயன்றார், அந்த நிகழ்வின் தொடக்கத்தில்
அப்ரமோவிக் அந்த நட்சத்திரத்தை தீயினால் பற்ற வைப்பார்.
ஓரங்களில் எரியும் நட்சத்திரத்திற்கு வெளியே நின்று, அப்ரமோவிக்
தனது கை நகங்கள், கால் நகங்கள் மற்றும்
முடிகளை வெட்டுவார். அப்படி வெட்டிய ஒவ்வொரு துண்டையும்
நட்சத்திர தீப்பிழம்புகளின் மீது எறிவார்.
அப்படி தனது உடல் கழிவுகளை நெருப்பில்
எரியும் ஒவ்வொரு முறையும்
நட்சத்திரத்தில் சலனம் உருவாகும்.
அப்படி ஐந்து புள்ளிகள் கொண்ட நட்சத்திரத்தை எரிப்பது
உடல் மற்றும் மன சுத்திகரிப்பைக்
குறிக்கிறது என்கிறார். அதே நேரத்தில் அவரது
கடந்த கால அரசியல் மரபுகளையும்
எடுத்து எரிப்பதாகவும் குறியீடாகிறது.
நிகழ்வின் முடிவில், அப்ரமோவிக்
தீப்பிழம்புகளின் குறுக்கே பெரிய நட்சத்திரத்தின் மையத்தில்
குதிப்பார். முதல் நிகழ்வில், நெருப்பால் வெளியிடப்பட்ட வெளிச்சம் மற்றும் புகை காரணமாக,
நட்சத்திரத்திற்குள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையாலும் அப்ரமோவிக் சுயநினைவை இழந்தார். இதை
பார்வையாளர்கள் உணரவில்லை. இருப்பினும், தீப்பிழம்புகள் அவர் உடலுக்கு மிக
அருகில் இருந்தது, அப்படி அவர் நீண்ட நொடிகள் செயலற்ற நிலையில் இருந்தபோது,
ஒரு மருத்துவரும் உதவியாளர்களும் வந்து எரியும் நட்சத்திரத்திலிருந்து
அவரை பாதுகாப்பாக வெளியேற்றினர்.
இந்த அனுபவத்தைப் பற்றி அப்ரமோவிக் பின்னர் கருத்துத் தெரிவிக்கும்போது : “ நிகழ்வில் என் உடல் வரம்பின் செயலை நான் புரிந்துகொள்ளாததால் நான் மிகவும் கோபமடைந்தேன். அதன் வழி கற்றுக்கொண்டேன், நிகழ்வில் நீங்கள் சுயநினைவை இழந்தால் உங்களால் உங்கள் மன இயக்கத்தை தொடர முடியாது, அதனால் கட்டுப்பாடுடன் உங்களால் நடிகராக செயல்படவும் முடியாது.
ரிதம் 2, 1974
ரிதம் 5 இன் நிகழ்வின் போது அப்ரமோவிக் தன் சுயநினைவை இழந்ததால், ஒரு நிகழ்த்துனர் நடிக்கும்போது சுயநினைவின்மை நிலையை தவிர்க்கும் விதமாக ரிதம் 2 ஐ உருவாக்கினார். 1974 ஆம் ஆண்டில், ஜாக்ரெப்பில் உள்ள கேலரி ஆஃப் கன்டெம்பரரி ஆர்ட்டில் அவர் இந்த நிகழ்வைச் செய்தார். 50 நிமிட கால அளவு கொண்ட பகுதி I இல், ' நோயாளிகளுக்கு, அவர்களின் அறுவை சிகிச்சையின்போது அளிக்கப்படும் மருந்தை நிகழ்வின் தொடக்கத்தில் உட்கொண்டார். மெல்ல மருந்து அவரது தசைகளை கடுமையாக மரத்துப்போகச் செய்தது, மேலும் என்ன நடக்கிறது என்பதை அறிந்திருக்கையில் அவர் உடலின் முழு கட்டுப்பாட்டையும் இழந்தார். பின் பத்து நிமிட இடைவெளிக்குப் பிறகு, மன நோயாளிகளுக்கு அவர்களை அமைதிப்படுத்த' தரும் மருந்தை இரண்டாவது உட்கொண்டார். ஐந்து மணிநேரத்திற்குப் பிறகு மருந்து முடிந்தவுடன் அந்த செயல்திறன் அரங்க நிகழ்வு முடியும்.
மிலனில் உள்ள கேலேரியா அரங்கத்தில் ரிதம் 4 நிகழ்த்தப்பட்டது. இந்த நிகழ்வுப் பகுதியில், அதிக சக்தி கொண்டு சுழலும் தொழிற்சாலை மின்விசிறியின் முன்னால் அப்ரமோவிக் தனியாக மண்டியிட்டு நிர்வாணமாக அமர்ந்து இருப்பார். அவர் வாய் திறந்து நுரையீரலின் எல்லையைத் தொட முடிந்த அளவு காற்றை சுவாசித்தபடியே மெதுவாக முன்னேறி மின்விசிறியை நெருங்குவார். அப்படி தொடர்ந்து முன்னேறிய சிறிது நேரத்திலேயே அவள் சுயநினைவை இழந்தார்.
ரிதம் 0, 1974
நடிகருக்கும் பார்வையாளர்களுக்கும் இடையிலான உறவின் வரம்புகளை சோதிக்கும் விதமாக, இதில், அப்ரமோவிக் மிகவும் சவாலான மற்றும் தனது சிறந்த நடிப்பை உருவாக்கினார். அவர் தனக்கென ஒரு செயலற்று நிற்கும் பாத்திரத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டு வெறுமெனே நின்றார். அவர் மீது செயல்படும் சக்தியாக பார்வையாளர்களாக வந்த மக்கள் இருந்தனர். அப்ரமோவிக் எதிரில் ஒரு மேசையில் 72 பொருட்கள் இருக்கும், அதை மக்கள் எந்த வகையிலும் அப்ரமோவிக்கின் மீது பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர்; அப்படி செய்யும் எந்தவொரு செயலுக்கும் அவர்கள் பொறுப்பில்லை அவர்கள் வெறும் அடையாளம் என அறிவிக்கப்பட்டது.
அப்படி அவர்கள் நடிகரான அவர் மீது செலுத்தப்படும் பொருள்கள் சில மகிழ்ச்சியைத் தரக்கூடும், மற்றவை வலியை ஏற்படுத்தவோ அல்லது அவருக்கு உடலியல் ரீதியிலாக வலியை விளைவிக்கவோ பயன்படுத்தப்படலாம். அவற்றில் ஒரு ரோஜா, ஒரு இறகு, தேன், ஒரு சவுக்கை, ஆலிவ் எண்ணெய், கத்தரிக்கோல், குண்டூசி, ஒரு துப்பாக்கி மற்றும் ஒரு தோட்டா ஆகியவை இருந்தன. நிகழ்வின் ஆறு மணி நேரம் அப்ரமோவிக் பார்வையாளர்களை தனது உடலையும் செயல்களையும் எந்த எதிர் விளைவுகளும் இல்லாமல் கையாள அனுமதித்தார். செயல்கள் எந்த சமூக விளைவுகளையும் ஏற்படுத்தாதபோது, மனிதர்கள் எவ்வளவு பாதிக்கப்படக்கூடியவர்களாகவும் ஆக்ரோஷமானவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை இந்த பிரதி முன் வைத்தது. முதலில் பார்வையாளர்கள் அதிகம் நிகழ்த்துனரிடத்தில் வினையாற்றவில்லை செயலற்றவர்களாக இருந்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு , அவர்களின் செயல்களுக்கு எதிர்ப்பு இல்லை என்பதை உணரத் தொடங்கியதும், அவர்கள் செயல் மூர்க்கத்தனமானதாக மாறத் தொடங்கியது. நிகழ்ச்சியின் முடிவில், அப்ரமோவிக் உடல் தொடக்கத்தில் இருந்தது போல் அல்லாமல் "சித்திரவதை செய்யப்பட்ட ஒரு உருவமாக” மாறியிருந்தது. அவரது உடல் வண்ணங்களால் தீட்டப்பட்டு, பொருட்களால் தாக்கப்பட்டு, முற்றிலும் அலங்கோலப்படுத்தப்பட்டது. அவரது கழுத்தில் பார்வையாளர்களால் ஏற்படுத்தப்பட்ட கத்தி வெட்டுக்கள் இருந்தன, மேலும் அவரது ஆடைகள் கிழிக்கப்பட்டன. பொதுமக்கள் தங்கள் செயல்களில் எந்த விளைவும் இல்லாமல் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதைக் கண்டறியும் இந்த நிகழ்வில், பொதுமக்கள் தங்கள் சொந்த மகிழ்ச்சிக்காக நிகழ்த்துனரைக் கொன்றுகூட இருக்கலாம் என்பதை அப்ரமோவிக் இறுதியில் உணர்ந்திருந்தார்.
அப்ரமோவிக் இப்படி, தனது படைப்புகளில், மற்றவர்களின் கண்ணோட்டத்தின் மூலம் தனது அடையாளத்தை உறுதிப்படுத்துகிறார், இருப்பினும், ஒவ்வொரு நிகழ்வின் பாத்திரங்களையும் மாற்றுவதன் மூலம், மனிதகுலத்தின் அடையாளம் மற்றும் இயல்பு ஆகியவை அவிழ்க்கப்பட்டு பார்வையாளர்கள் கண்முன் வெளிப்படுத்தப்படுகின்றன. அவ்வாறு செய்வதன் மூலம், தனிப்பட்ட அனுபவம் ஒரு கூட்டு அனுபவமாக மாறுகிறது. மற்றும் இப்படியான செயல்திறன் அரங்க நிகழ்வுகள் ஒரு சக்திவாய்ந்த செய்தியை உருவாக்குகிறது என்கிறார் அப்ரமோவிக்.. அப்ரமோவிக்கின் இத்தகைய கலையானது பெண் உடலைப் புறநிலைப்படுத்துவதையும் பிரதிபலிக்கிறது, ஏனெனில் அவ்வுடல் அசைவில்லாமல் இருப்பதோடு, பார்வையாளர்கள் தன் உடலை அவர்கள் விரும்பியவாறு செய்ய அனுமதிக்கிறது; பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகக் கருதும் வரம்புகளை நோக்கித் தள்ளப்படுகிறார்கள். தன் உடலை ஒரு அசைவற்றப் பொருளாக நிலை நிறுத்துவதன் மூலம், தனக்கு நேரும் ஆபத்து மற்றும் உடல் சோர்வு ஆகியவற்றின் கூறுகளை அவர் ஆராய்ந்து அறிகிறார்.
இந்த நிகழ்வின் ஆரம்பத்தில், பார்வையாளர்கள் எச்சரிக்கையுடனும் அடக்கத்துடனும் செயலாற்றினார்கள், ஆனால் நேரம் செல்ல செல்ல ஒருவரைத் தொடர்ந்து அவரைப்போலவே மிகவும் ஆக்ரோஷமாக செயல்படத் தொடங்கினர். அப்ரமோவிக் விவரிக்கும்போது: "நான் இந்த நிகழ்வில் கற்றுக்கொண்டது என்னவென்றால், நீங்கள் பார்வையாளர்களுக்கு சுதந்திரம் தந்துவிட்டால், அவர்கள் உங்களைக் கொன்றுகூட விடுவார்கள். ... நான் உண்மையில் ஒரு கட்டத்தில் கொல்லப்பட்டதாக உணர்ந்தேன்: அவர்கள் என் ஆடைகளை வெட்டினார்கள், என் வயிற்றில் ரோஜா முட்களை குத்தி நிற்க வைத்தார்கள், ஒருவர் என் தலையை நோக்கி துப்பாக்கியை எறிந்தார், மற்றொருவர் அதை எடுத்துச் சென்றார். அது ஒரு ஆக்ரோஷமான சூழலை உருவாக்கியது. சரியாக ஆறு மணி நேரம் கழித்து, திட்டமிட்டபடி, நான் எழுந்து நின்று பார்வையாளர்களை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். உண்மையான எதிர் விளைவுகளில் இருந்து தப்பிக்க பார்வையாளர்கள் அனைவரும் கலைந்துச் சென்றனர்."
மரினா அப்ரமோவிக் மற்றும் உலே (Uwe Laysiepen) 1978
1976 ஆம் ஆண்டில், ஆம்ஸ்டர்டாமிற்குச் சென்ற பிறகு, அப்ரமோவிக் மேற்கு ஜெர்மன் கலைஞரான உலேவைச் சந்தித்தார். அவர்கள் அந்த ஆண்டு முதல் ஒன்றாக வாழவும் செயல்திறன் அரங்க நிகழ்வுகள் ஒன்றாகச் செய்யவும் தொடங்கினர். அப்ரமோவிக் மற்றும் உலே ஆகியோர் தங்கள் இணைப் படைப்புகளைச் செய்யத் தொடங்கியபோது] அவர்கள் கையிலெடுத்த முக்கிய கருது பொருட்கள் அகந்தை மற்றும் பரிசோதனைக் கலையின் அடையாளமும் ஆகும். அவர்கள் நிலையான இயக்கம், மாற்றம், செயல்முறை மற்றும் "கலை முக்கியத்துவம்" ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் " ஆண் பெண் உறவுப் படைப்புகளை" உருவாக்கினர். இது ஒரு தசாப்தத்தின் செல்வாக்குமிக்க கூட்டுப் பணியை முன் வைத்த அரங்கத்தின் தொடக்கமாக இருந்தது.
அப்ரமோவிக்
மற்றும் உலேயின் படைப்புகள் நடிப்பு உடலின்
உடல் வரம்புகளை தொடர்ச்சியாக சோதித்தது. மேலும்
ஆண் மற்றும் பெண் வாழ்வியல்
கோட்பாடுகள், மன ஆற்றல், ஆழ்நிலை தியானம்
மற்றும் சொற்கள் அல்லாத தொடர்பு
ஆகியவற்றை ஆராய்ந்தது. பாலின சித்தாந்தங்களுடன் ஒப்பிட்டு, தங்களைப் பற்றிக் கவலைப்படுவதற்குப் பதிலாக,
அப்ரமோவிக் உலே தீவிர உணர்வு
நிலையுடன் தொடர்ச்சியான படைப்புகளை உருவாக்கினர், அதில் எல்லாம் அவர்களின் உடல்கள், பார்வையாளர்களின் தொடர்புக்கு கூடுதல் வெளிளை உருவாக்கியது.
அவர்களது நடிப்பு
வரலாற்றின் இந்த பார்வையாளர்கள் வெளியைப் பற்றி விவாதிக்கையில்,
அவர்கள் கூறியதானது: "இந்த பார்வையாளர் நிகழ்த்துனர் உறவில் உள்ள முக்கிய அம்சம்
என்பது நிகழ்த்துனர் மற்றும் பார்வையாளர்களுக்கு இடையே உள்ள
வெளியை எப்படி அர்த்தமாக்கப் போகிறோம் என்பதுதான்.
மேலும் அர்த்தப்படுத்தி இடைவெளியையும்
எப்படிக் குறைக்க வேண்டும் என்று
நாங்கள் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது, என்றும்
சொல்கின்றனர்.
இணைந்த படைப்புகள்
- ரிலேஷன் இன் ஸ்பேஸில் (1976) அவர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒருவரையொருவர் வெறும் உடல்களால் மீண்டும் மீண்டும் வந்து இடித்துக்கொள்வர் .
- ரிலேஷன் இன் மூவ்மென்ட் (1977) இந்த ஜோடி தங்கள் காரை அருங்காட்சியகத்திற்குள் 365 சுற்றுகள் ஓட்டிச் சென்றது; காரிலிருந்து ஒரு கருப்பு புகையை வெளியேற்றி, ஒரு வகையான புகைச் சிற்பத்தை உருவாக்கினர், தங்கள் காரின் ஒவ்வொரு திருப்பமும் ஒரு வருடத்தைக் குறிக்கும். (365 சுற்றுகளுக்குப் பிறகு அவர்கள் புதிய மில்லினியத்தில் நுழைந்தார்கள் என்ற எண்ணம் பார்வையாளர்களிடத்தே எழுந்தது என்கின்றனர்.
- ரிலேஷன் இன் டைம் (1977) இல் அவர்கள் பதினாறு மணி நேரம் தங்கள் இருவரின் கூந்தல்களை ஒன்றாக இணைத்துக் கட்டிக்கொண்டு எதிரெதிர் திசையில் அமர்ந்திருந்தனர். பின்னர் அவர்கள் பார்வையாளர்களின் ஆற்றலைப் பயன்படுத்தி தங்கள் இடைவெளிகளை மேலும் அதிகரிக்க முடியுமா என்பதைப் பரிசோதிக்கவும் அனுமதித்தனர்.
- லிவிங் டோர் அட் த மியூசியம் (1977) எதிர் பாலினத்தைச் சேர்ந்த இரண்டு கலைஞர்கள், இருவரும் முற்றிலும் நிர்வாணமாக, ஒரு குறுகிய வாசலில் நிற்கிறார்கள். கடந்து செல்வதற்கு பொதுமக்கள் இவ்வுடல்கலுக்கிடையே நெருக்க வேண்டும், அவ்வாறு செய்யும்போது அவர்களில் யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை பார்வையாளர்கள் எதிர்கொள்ள வேண்டும்.
- ரெஸ்ட் எனர்ஜி (1980) இருவரும் ஒருவரையொருவர் வளைக்கப்பட்ட வில் மற்றும் அம்புக்கு எதிரெதிர் பக்கங்களில் சமன் படுத்தி நின்றனர், அம்புக்குறி அப்ரமோவிக்கின் இதயத்தின் பக்கம் வைக்கப்பட்டிருக்கும். ஏறக்குறைய எந்த முயற்சியும் இல்லாமல், உலே அப்ரமோவிக்கை ஒரு விரலை இழுத்து அம்பை விடுத்தால் எளிதாகக் கொல்ல முடியும். இது ஆண்களின் மேலாதிக்கத்தை அடையாளப்படுத்துவதாகவும், பெண்கள் மீது சமூகத்தில் அவர்களுக்கு என்ன மாதிரியான மேலாதிக்கம் இருப்பதைச் சுட்டுவதாகவும் தெரிவிக்கிறது. வில்லின் கைப்பிடி அப்ரமோவிக் கைகளால் பிடிக்கப்பட்டு இருக்கிறது. வில்லின் கைப்பிடி ஒரு வில்லின் மிக முக்கியமான பகுதியாகும். உலே கைப்பிடியைப் பிடித்திருந்தால், இது முற்றிலும் வித்தியாசமான படைப்பாக இருக்கும், ஆனால் அப்ரமோவிக் வில்லைப் பிடித்துக் கொள்வதன் மூலம், அதிகாரத்தின் பிடி யார் கையில் இருக்கிறது என்பது பார்வையாளர்களிடம் இவர்கள் முன்வைத்த உரையாடல் ஆகிறது.
- நைட் சீ கிராசிங்கை - 1981 மற்றும் 1987 க்கு இடையில், இருவரும் இணைந்து இருபத்தி இரண்டு நிகழ்வுகளை நிகழ்த்தினர். அப்படைப்பில், அவர்கள் ஒரு நாளைக்கு ஏழு மணிநேரம் நாற்காலிகளில் எதிரெதிரே எந்த உடல் சைகைகளும் இன்றி அமைதியாக அமர்ந்திருப்பர். எண்ண அலைகளின் ஓட்டம் மற்றும் உணர்வு அனுபவம் ஆகியவற்றை முன் வைத்த பிரதி இது.
1988 ஆம் ஆண்டில், பல வருட முரன்பாடான வாழ்வியல் காரணமாக, அப்ரமோவிக்கும் உலேவும் தங்கள் இணை உறவை முறித்துக் கொள்ளும் பொருட்டு ஒரு பயணத்தை பெரும் அரங்க நிகழ்வைப் போல் மேற்கொள்ள முடிவு செய்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் சீனப் பெருஞ்சுவரின், இரண்டு எதிர் முனைகளிலிருந்து தொடங்கி நடுவில் சந்தித்தனர். அப்ரமோவிக் இது பற்றி விவரிக்கும் போது: "அந்த நடை ஒரு முழுமையான தனிப்பட்ட நாடகமாக மாறியது. உலே, கோபி பாலைவனத்திலிருந்தும், நான் மஞ்சள் கடலிலிருந்தும் பயணத்தைத் தொடங்கினோம். நாங்கள் ஒவ்வொருவரும் 2500 கி.மீ தூரம் நடந்த பிறகு, சீனப்பெருஞ்சுவரின் நடுவில் சந்தித்து எங்கள் பிரிவைச் சொல்லி விடைபெற்றோம். மேலும், இவ்வளவு தூரம் ஒருவரையொருவர் நோக்கி நடந்த பிறகு, எங்களுக்கு ஒரு குறிப்பிட்ட வடிவம் தேவைப்பட்டது. இது மிகவும் மனிதாபிமானமானது. இது ஒரு வகையில் மிகவும் வியத்தகு, ஒரு திரைப்பட முடிவைப் போன்றது ... ஏனெனில் இறுதியில், நீங்கள் என்ன செய்தாலும் உண்மையில் எல்லோரும் அக அளவில் எப்போதும் தனியாக இருக்கிறீர்கள் என்ற உண்மையை உணரத்தொடங்கினோம். இந்த பிரிவு வேலையைச் செய்ய சீன அரசாங்கத்திடம் அனுமதி பெற இந்த தம்பதியருக்கு எட்டு ஆண்டுகள் ஆனது, அந்த நேரத்தில் அவர்களின் உறவு முற்றிலும் குலைந்து போனது. அதன் பின் மரினா அப்ரமோவிக் தனித்த தன் படைப்புகளைச் செய்யத் தொடங்கினார்.
கண்ணாடியை சுத்தம் செய்தல், 1995
கண்ணாடியை சுத்தம் செய்வது ஐந்து தொலைக்காட்சித் திரைகளைக் கொண்டு திரையிடப்பட்டது, நிகழ்வில் அப்ரமோவிக் தனது மடியில் ஒரு அழுகிய மனித எலும்புக்கூட்டை துடைக்கும் செயல் காட்சிகளால் இணைக்கப்பட்டிருக்கும். அப்ரமோவிக் எலும்புக்கூட்டின் வெவ்வேறு பகுதிகளை சோப்பு நீரால் தீவிரமாக துலக்குவார். ஒவ்வொரு திரையிலும் எலும்புக்கூட்டின் ஒரு பகுதி காட்சியாகும்: தலை, இடுப்பு, விலா எலும்புகள், கைகள் மற்றும் கால்கள். ஒவ்வொரு வீடியோவும் அதன் சொந்த ஒலியுடன் படமாக்கப்பட்டு, பார்வையாளர்களின் உணர்வு மேலெழுதலை உருவாக்குகிறது. எலும்புக்கூடு சுத்தமாக மாறும்போது, எலும்புக்கூட்டை மூடியிருந்த சாம்பல் நிற அழுக்குகளால் அப்ரமோவிக் உடலுக்கு இடம் மாறியிருக்கும். இந்த மூன்று மணி நேர நிகழ்வானது திபெத்திய மரண சடங்குகளின் உருவகங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது, மூன்று துண்டுகள் கொண்ட தொடரைக் கொண்டுள்ளது.
பால்கன் பரோக், 1997
இந்த பகுதியில், 1990 களில் போஸ்னியாவில் நடந்த போரில் நடந்த இன அழிப்பு பற்றி உலகத்தாரோடு உரையாடும் வகையில், அப்ரமோவிக் நான்கு நாட்களில் ஆயிரக்கணக்கான இரத்தம் தோய்ந்த பசுவின் எலும்புகளை தீவிரமாக துடைத்தார். இந்த நிகழ்வு வெனிஸ் பினாலேயில் அப்ரமோவிக்கிற்கு கோல்டன் லயன் விருதைப் பெற்றுக் கொடுத்தது. நிகழ்வில் அப்ரமோவிக் எலி பிடிப்பவரின் கதையை விவரிக்கும் மருத்துவராக உடையணிந்திருப்பார். அவ்வுடையுடன், அப்ரமோவிக் ஒரு பெரிய எலும்புக் குவியலுக்கு மத்தியில் அமர்ந்து எலும்புகளைக் கழுவ முயற்சிக்கிறார். 1997 ஆம் ஆண்டு வெனிஸில் இந்த நிகழ்ச்சி நடந்தது. வெனிஸில் கோடை காலத்தில் மிகவும் வெப்பமாக இருந்ததால், எலும்புகளில் இருந்து புழுக்கள் வெளிவருவதையும் பயங்கரமான வாசனையையும் அப்ரமோவிக் ஒரு நேர்காணலில் நினைவு கூர்கிறார். இப்படைப்பின் வழி எலும்புகளை சுத்தம் செய்வதாகச் சொல்லி, அதில் உறைந்திருக்கும் இரத்தத்தை அகற்ற முயற்சிப்பது சாத்தியமற்றது என்று அப்ரமோவிக் பார்வையாளர்கள் முன் தன் எதிர் குரலை முன் வைக்கிறார். அதாவது, இவ்வரங்க நிகழ்வு மூலம் அப்ரமோவிக் உரையாட விரும்புவது என்னவென்றால், போரின் மூலம் அடிப்படை அடையாளங்களைச் சுத்தம் செய்ய முயற்சிப்பது என்பது போல், எலும்புகள் மற்றும் கைகளில் இருந்து இரத்தத்தை கழுவ முடியாது என்பதை உணர்த்த இத்தகைய காட்சிப் படிமங்களை தேர்ந்தெடுத்தார். போஸ்னியாவில் நடந்த போருக்கு மட்டுமின்றி, உலகில் எந்தப் போருக்கும், எதிராகவும் இப்படைப்பை முன் வைப்பேன் என்று உறுதியாகக் கூறினார்.
தற்காலக் கலைஞர்: மார்ச்-மே 2010
அப்ரமோவிக்,
தி ஆர்டிஸ்ட் இஸ் ப்ரெசென்ட், 736-மணிநேரம்
மற்றும் 30-நிமிடம் நிலையான, அமைதியான
இந்த நிகழ்வை நிகழ்த்தினார். நிகழ்வானது, அருங்காட்சியகத்தின் ஓரிடத்தில் அசையாமல் அமர்ந்திருப்பது. வந்து போகும் பார்வையாளர்கள் விரும்பும்போது
அவருக்கு எதிரே மாறி மாறி அமர்ந்து
இருக்கத் தொடங்குவர். இருவருக்கும்
இடையே எந்தவொரு உரையாடலும் நிகழாமல் கண் பார்வையால் மட்டும் இணைவர். ஒவ்வொருவரும் அந்த
அமைதியில் தத்தமது கடந்த காலம் மற்றும் நிகழ்கால அனுபவங்களை நினைத்து திளைப்பர். மேலும்
அத்தகைய சமகால மெளனம் அவர்களுள் ஏற்படுத்தும் அனுபவத்தையும் உள்வாங்குவர். எதிர்பாராத
விதமாக நிகழ்வின் தொடக்க
இரவில் பல ஆண்டுகளுக்குப்பிறகு உலே அங்கு வந்து பார்வையாளராக அப்ரமோவிக்கின் முன் வந்து
அமர்ந்த்தார். மிக நீண்ட மெளனத்திற்குப்பின் இருவரும் கண்ணீர் சிந்தினர். பின் கைகளைப்
பிடித்துக் கொண்டனர். நிகழ்வு தொடரும் விதமாக உலே எழுந்து அரங்கிலிருந்து வெளியேறினார்.
நீங்கள்
தற்போது என்னென்ன நிகழ்வுகளில் ஈடுபடுகிறீர்கள்? என்ற கேள்விக்கு அப்ரமோவிக்கின் பதிலானது,
ஆண்டி வார்ஹோல்
[“The Andy Warhol Diaries” (2022)] பற்றிய
ஆவணப்படத்தை இப்போதுதான் முடித்தேன். அதோடு அப்ரமோவிக்கின் பயிற்சி
முறைகளில் நிறைய கலைஞர்களுக்கு பயிற்சிகளும் எனது படைப்பு நிகழ்வுகள் பல கலைஞர்களால்
உலகம் முழுக்க நிகழ்த்தப்பட்டும் கொண்டிருக்கிறது என்கிறார். மேலும் அன்றாட வாழ்வில்
“எனக்கு உடல் பயிற்சி செய்வது பிடிக்கும். பனியில் நடக்கவும் பிடிக்கும். என் படைப்புகளைப்
போலவே என் வாழ்க்கையையும் நான் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பவில்லை. நான் அரங்க
வேலைகள் செய்வதற்கென இருக்கும் உள் அரங்கப் பயிற்சிக் கூடங்களை முற்றிலுமாக வெறுக்கிறேன்.
நான் ஒருபோதும் உள் அரங்கப் பயிற்சிக் கூடங்களுக்குச் செல்வதில்லை இப்போது 75 வயதான
கலைஞராக இயங்கும் நான் என்னை மிகவும் அசாதாரண சூழ்நிலைகளில் இருத்திக் கொள்ளவே விரும்புகிறேன்."
என்கிறார்.
”நான்
இறுதியாக உக்ரைன் மீது ரஷ்யா செலுத்தும் போர்க் குற்றங்களைக் குறிப்பிட விரும்புகிறேன்.
உக்ரைனுக்கு எனது முழு ஆதரவையும் அளிக்கிறேன். அங்கு அப்பாவி குழந்தைகள் உள்ளிட்ட மக்கள்
இறந்து கொண்டிருக்கிறார்கள், இதுபோன்ற சூழ்நிலையில், நாம் அனைவரும்-குறிப்பாக கலைஞர்கள்-தத்தமது
படைப்புக் குரல்களில் மிகவும் வலுவாக இருக்க வேண்டும். இந்த காட்டுமிராண்டித்தனத்திற்கு
எதிராக நாம் அனைவரும் ஒரே பக்கத்தில் இருக்க வேண்டும். இதுவே இப்போதைய என் படைப்புகளில்
முதன்மைக் கூறாக இருக்கின்றன.”
காலம்,
மீமெய்யியல் (metaphysics) மற்றும் மனித உடலுடன் பரிசோதனை செய்யும் அவரது செயல்திறன்
அரங்கப் படைப்புகளுக்காக சர்வதேச அளவில் அறியப்பட்ட அப்ரமோவிக், பார்வையாளர்களுக்கும்
பயிற்சி பெறுபவர்களுக்கும் "அவரவர் வாழ்க்கையை மறுதொடக்கம் செய்ய மற்றும் ஒரு
புதிய தொடர் செயல் அசைவுகளின் மூலம் சகிப்புத்தன்மை, செறிவு, சுய கட்டுப்பாடு மற்றும்
மன உறுதி ஆகியவற்றின் கலையை கற்றுக்கொடுக்கிறார். மரினா அப்ரமோவிக் முறையானது அடிப்படையில்
30 படிநிலைகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஒரு அட்டையில் "ஒவ்வொரு
அரிசி மற்றும் பருப்பு தானியத்தையும் பிரித்து எண்ணுங்கள்" என்று பயிற்சியில்
எழுதித் தரப்படுகிறது, இது அவரது 2014 ஆம் ஆண்டு செய்த நிகழ்வான கவுண்டிங் தி ரைஸிலிருந்து
உருவாகியிக்கிறது.
அப்ரமோவிக்
ஆஸ்திரேலியா மற்றும் சைபீரிய பாலைவனத்தில்
உள்ள பழங்குடி மக்களுடன் பெருமளவில் நேரத்தை செலவிட்டுள்ளார், மேலும்
திபெத்திய துறவிகளுடன் தியானித்தலில் பங்கேற்றுள்ளார். அமேசானிய பழங்குடியினருடன் செலவழித்த நேரங்களினால்தான், அவரது மரத்தை கட்டிப்பிடிக்கும்
பயிற்சிமுறை பிறந்தது, அங்கு அவர்கள் சீக்வோயா
மரத்துடன் நடனமாடுவார்கள். "மரத்துடனான இந்த நடனம் மிகவும்
நம்பமுடியாத அளவிற்கு நகரும் மற்றும் உணர்வுவயப்பட்டது,
அதன்பால் ஈர்க்கப்பட்ட இவர் கறுப்பின
மக்கள் மற்றும் பழங்குடியின மக்கள்
மீது அதிக கவனம் செலுத்துகிறார்.
தனிப்பட்ட முறையில் இனவெறியை எதிர்த்துப் போராடுவதற்கும் அத்தகைய படைப்புகளை உருவாக்குவதற்கும்
அந்த அவதானிப்புகள் மிக மிக முக்கியமானது
என்கிறார்.
செயல்திறன் அரங்கக் கலையைப் பற்றி அப்ரமோவிக்கின் வழி அறிந்து கொள்வதென்றால், இத்தகைய நிகழ்வுகள் எப்போதும் பொருளற்ற தன்மையை முன் வைக்கிறது. செயல்திறன் அரங்கக் கலை வடிவமானது மிகவும் கடினமான நிகழ்த்துக் கலை வடிவமாகும், ஏனெனில் நிகழ்த்துமுறையானதாகும். பார்வையாளர்களும் வந்து பங்கேபதற்பதற்காக ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அது இருக்கிறது. மேலும் நிகழ்வு முடியும்போது பங்கேற்ற அல்லது பார்வையாளர்களிடம் எஞ்சியிருப்பது அந்த நிகழ்வின் பங்கேற்பு நினைவுகள் மட்டுமே. என்று வாழும் நம் காலத்தின் ”செயல்திறன் கலையின் மூதாய்” மரினா அப்ரமோவிக்கின் வாழ்வியல் கூர் நோக்கு மனித சமூகத்தின் மேன்மைக்கே என, அவர் வாழும் காலத்திலேயே நாம் அவரை நாம் கொண்டாட வேண்டும்.
Comments
Post a Comment