எல்லோருக்காகவும் வேண்டியெழும் மொழி : ஜான் ஃபோஸின் நாடகங்கள் - ஞா. கோபி
எல்லோருக்காகவும்
வேண்டியெழும் மொழி : ஜான் ஃபோஸின் நாடகங்கள்
ஞா. கோபி
நோர்வே நாட்டினைப் பிறப்பிடமாகக் கொண்ட ஜான்
ஓலாவ் ஃபோஸ் john fosse 1959 ஆண்டு செப்டம்பர்
29 ஆம் நாள் பிறந்தார். இவர் ஒரு நோர்வே எழுத்தாளர்,
மொழிபெயர்ப்பாளர் மற்றும் நாடக ஆசிரியர் ஆவார். கடந்த 2023 இல், இலக்கியத்திற்கான நோபல்
பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. "பேச மறுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கும்
அவரது புதுமையான நாடகங்கள் மற்றும் உரைநடைகளுக்காக" நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது.
நோபல் பரிசுக்கு அவர்
பெயர் இடம்பெறுவதற்கு முன்பே ஃபோஸின் படைப்புகளான, எழுபதுக்கும் மேற்பட்ட நாவல்கள்,
கவிதைகள், குழந்தைகள் புத்தகங்கள், கட்டுரைகள் மற்றும் நாடகங்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்ட
மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஹென்ரிக் இப்சனுக்குப் பிறகு அதிகம் நிகழ்த்தப்பட்ட நாடகங்களின் நோர்வே நாடக ஆசிரியர், ஃபோஸ் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது உலகளவில் ஆயிரத்திற்கும்
மேற்பட்ட மேடைகளில் ஃபோஸின் பிரதிகளின் அடிப்படையிலானத் தயாரிப்புகளை பார்வையாளர்கள்
கண்டுகளிக்கின்றனர். மேலும், உலகளவில் அதிகம் நிகழ்த்தப்படும் நாடகங்களின் சமகால நாடக
ஆசிரியர்களில் ஜான் ஃபோஸும் ஒருவர் ஆவார்.
ஃபோஸின் நாடகமொழியானது,
அளவான படைப்புடன் கூடிய ஆழமான உள்நோக்கக்களைக் கொண்டவையாக இருக்கின்றன. மேலும் இவரது
நாடகங்களின் உள்கட்டமைப்பானது, எளிய மொழியாகவும் பெரும்பாலும் பாடல் வரிகள் மற்றும்
கவிதைகளுடன் கூடியனவாக உள்ளது. இதன் அடிப்படையில், நாடக விமர்சகர்கள் 19 ஆம் நூற்றாண்டில்
ஹென்ரிக் இப்சென் நிறுவிய நாடக பாரம்பரியத்தின் நவீன தொடர்ச்சியை ஃபோஸின் நாடகங்கள்
பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்கின்றனர். நார்வேயில் நீங்கள் "புதிய இப்சென்"
என்று அழைக்கப்படுகிறீர்கள். உங்கள் எழுத்தைப் பற்றிய எதிர்பார்ப்புகளை அளவிட வேண்டிய
சுமையை நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு, ஃபோஸின் பதிலானது,
“சுமை என்பது இல்லை.
எனெனில், வெற்றி தோல்வியின் தாக்கம் அதிகம் இல்லாத ஒரு இடத்தில் இருந்து எழுதுகிறேன்.
என் எழுத்து அப்படியே இருக்கிறது. ஒப்பீடுகள், பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள்
கட்டி எழுப்பும் உலகமாகும். அந்த உலகத்தில் என் படைப்பு செயலுக்குச் சம்மந்தம் இல்லை”.
என்ற தெளிவான பதிலை அளிக்கிறார்.
ஃபோஸின் படைப்புகள் பெரும்பாலும் நவீன நாடக மரபுக்குள் வைக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் அவரது முழுமையான இலக்கிய பங்களிப்பில் குறிப்பிடத்தக்க நாவல்கள் பின்-நவீனத்துவ மற்றும் அவாண்ட்-கார்ட் இலக்கியத்தின் பாணியைச் சேர்ந்தவை என்று விமர்சகர்களால் எழுதப்படுகிறது. ஏனெனில் அவற்றின் காணப்படும் மினிமலிசம், பாடல் வரிகள் மற்றும் தொடரியல் போன்றவை வழக்கத்திற்கு மாறான பயன்பாடு ஆகியவை காரணமாகச் சொல்லப்படுகிறது .
ஃபோஸின் பல படைப்புகள்
மொஹமட் ஹமத் என்பவரால் பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, மேலும் ஃபோஸின் நாடகப்
படைப்புகள் ஈரானின் தெஹ்ரானில் உள்ள முக்கிய மேடைகளில் நிகழ்த்தப்பட்டுள்ளன. ஃபோஸின்
ஆறு நாடகங்கள் அமெரிக்காவில், ஆங்கிலத்தில் பல துறைசார் கலைஞரான சாரா கேமரூன் சுண்டே
என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, அவர் தனது அமெரிக்க முதல் தயாரிப்புகளை நியூயார்க்
நகரம் மற்றும் பிட்ஸ்பர்க் ஆகிய இடங்களில் நிகழ்த்தினர். Night Sings its Songs
(2004), Death
variations (2006), Sakala (2008), A Summer Day (2012),
Dream of Autumn (2013)
ஆகியவை மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகளில் அடங்கும்.
ஜான் ஃபோஸின் நாடகப் படைப்புகளின் மையத்தில் இருப்பவை என்பன, காத்திருப்பு, தனிமை மற்றும் வெறுமை உணர்வு ஆகியவையே ஆகும். இந்த மைய உணர்வுகளை, உலகத்தில் எந்த மனிதனும் உடனடியாக தன் அனுபவத்தில் பொருத்தி உடனடியாக அடையாளம் காணக்கூடியவையே. ஸ்பெயினின் பொது நாடக அரங்குகளின் கதவை ஜான் ஃபோஸ்ஸின் படைப்புகள் திறக்க, இப்போது அவருக்குக் கிடைத்திருக்கும் இலக்கியத்திற்கான நோபல் பரிசு உதவுமா? என்பதே, இலக்கியம் மற்றும் நாடக விமர்சகர்கள் முன் வைக்கும் இப்போதையக் கேள்வி .
அவர் தனது முதல் நாடகமான
” யாரோ வரப்போகிறார்கள்” (Someone is going to Come), எழுதியபோது அவர் நோர்வே
எழுத்தாளராகவும் வயது முப்பத்தி மூன்றிலும் இருந்தார், பின் தொடர் எழுத்துப் பணிகளின்
வழி அவர் தன்னை ஒரு நாவலாசிரியராகவும் கவிஞராகவும் தனது படைப்புகளின் வழி வாசகர்களிடத்தில்
நிலைபெற்றார். ‘யாரோ வரப்போகிறார்கள்’ என்ற நாடகத்தில் வரும் பாத்திரங்களான அவர்கள்
இருவரும் ஒன்றாக இருக்க விரும்புகிறார்கள், அதனால் அவர்கள் நகரத்தை விட்டு வெளியேறி
கடலோரத்தில் ஒரு தொலைதூர வீட்டை வாங்குகிறார்கள். ஆனால் அவர்கள் விரும்புவதைச் செய்ய
முடிகிறதா? என்பதே நாடகப் பிரதி. அவர்கள் இருவரும், ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஆசையில்
பொது உலகத்தை விட்டு வெளியேறுகிறார்கள், ஆனால் யாரோ வரப் போகிறார்கள் என்ற பதட்டத்தாலேயே
அவர்கள் குறுகிப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பதே இந்த நாடகத்தின் மையம்.
எழுத்தாளர் ஜான் ஃபோஸுக்கு,
இலக்கியம் தவிர்த்து நாடகம் எழுத முதலில் ஆர்வமும் விருப்பமும் இல்லை, ஆனால் 1994 இல்
பெர்கன் தேசிய நாடக மேடையேற்றத்திற்காக நாடகப்பிரதி எழுத, காய் ஜான்சன் (Kai Johnsen) அவரை அழைத்தார். ’மிகவும்
நல்ல ஊதியம்’ என்பதால் கமிஷனை ஏற்றுக்கொண்டு அப்பிரதியை எழுதியதாக ஃபோஸ் ஒரு நேர்காணலில்
தெரிவித்திருக்கிறார்.
அடுத்த ஆண்டுகளில் 2007 வரை, அவர் 25 நாடகங்களை எழுதியிருக்கிறார், இந்தத் தொடர் படைப்புப் பயணமே அவரை நோர்வேக்கு வெளியே அதிகம் நிகழ்த்தப்பட்ட, நோர்வே நாடக ஆசிரியராக மாற்றியது. ஃபோஸின் நாடகப் படைப்புகளை எங்கிருந்துத் தொடங்குவது? என்ற கேள்வி எழுமானால், அவரது நாடக எழுத்து உதிரியான மனிதர்கள் மற்றும் அவர்களின் வாழ்வியலுக்கானது, பெரும்பாலும் தனிமையான கதாபாத்திரங்களின் உட்புற வாழ்க்கையில் அவருடைய நாடகங்கள் கவனம் செலுத்துகிறது என்பதே பதிலும் ஆகிறது.
உலக அரங்கில் மிக முக்கியமான நாடகப் படைப்புகளைத் தந்த பிரெஞ்சு இயக்குனர் கிளாட் ரெஜி (Claude Régy) ஃபோஸ்ஸின் நாடக எழுத்துக்களை தனது சர்வதேச தரத்திலான வெளிப்பாட்டு வடிவங்களின் வழியாக மேடையேற்றம் செய்து வழங்கினார், முதலில், பாரிஸ், பன்லியூவில் உள்ள சென்டர் டிராமாடிக் நேஷனல் டி நாந்தேரில் (Nanterre) யாரோ ஒருவர் வருவார் (Someone is going to come) நிகழ்த்தப்பட்டது. அடுத்த ஆண்டு, Paris banlieu சால்ஸ்பர்க் விழாவில், பெயர் (The Name) எனும் நாடகத்தை ஃபோஸ் எழுத அரங்கேறியது, ஒரு வருடம் கழித்து, அப்போதைய இளம் இயக்குனரான கார்லோட்டா சுபிரோஸ் (Carlota Subirós), இண்டி பார்சிலோனா தியேட்டரான மாலிக்கில், மேலும் நாங்கள் பிரிவதில்லை (And We Will Never Part) எனும் நாடகத்தை அரங்கேற்றினார். குறிப்பாக, ’மேலும் நாங்கள் பிரிவதில்லை’ என்ற நாடகத் தயாரிப்பு, ஒரு பெண்ணை முற்றிலும் எளிமையான படிமமாகக் காட்டியது, மார்டா கால்வோவின் இயக்கத்தில் மேடையில் மிக நுட்பமாக உருவகப்படுத்தப்பட்டது. இந்த நாடகத்தில் காத்திருப்பே பிரதானம். காத்திருக்கும் பெண்கள் மற்றும் காத்திருக்கும் ஆணுக்கும் இடையிலான வெவ்வேறு புரிதல்களை யதார்த்தமான முறையில் கட்டமைக்கப்பட்டிருக்கும். மேலும், உருவாக்கத்தில் எதிர்பாராத வகையில் மனித மனங்களில் ஏற்படும் விசித்திர எண்ணங்களின், பயணமாக பிரதியாக்கம் பெற்றிருக்கும்.
அதுபோல், பாட்ரிஸ் செரோவால் ஆங்கிலத்தில்
இயக்கப்பட்ட ’ஐ ஆம் தி விண்ட்’ (I Am the Wind) மிக
முக்கியமானத் தயாரிப்பு. இரண்டு தோழர்கள் கடலின் அபரிமிதமான கடற்பயணத்தைத் தொடங்கும்
கதை. இதில் காற்று என்பது மிக முக்கியக் குறியீட்டு இயங்கியல் பயணமாகும், அங்கு கடந்த
காலமும் எதிர்காலமும் நிச்சயமற்ற துடிப்பு, கவிதை, ஆசுவாசம் மற்றும் ஃபோஸின் நாடகங்களின்
பொதுவான அமைதியின்மை ஆகியவை, காற்றுடன் பின்னிப் பிணைந்துள்ளது. ஃபோஸைப் பொறுத்தவரை,
ஒருவருக்கு மற்றவரின் மூலமாக செய்யப்பட்டதாக நம்பப்படும் சதி என்பது எப்போதும் ஒரு
சாக்குப்போக்குதான் என்பதை இந்த நாடகம் முன்னெடுத்து நம்மிடையே உரையாடுகிறது.
இவ்விதமாக ஃபோஸ், இந்த நாடகத்தில் தனது படைப்புகளில் முன்பிருந்த நாடகத்தின் அனைத்து வழக்கமான விதிகளையும் நீக்குகிறார். உதாரணமாக, இதில் அவரது கதாபாத்திரங்களுக்கு சரியான பெயர்களோ சமூகப் பின்னணியோ இல்லை, எளிதில் பிரித்தெடுக்கக்கூடிய செய்தியும் இல்லை. ஒரு படகில் இரண்டு மனிதர்களுடன் நாம் அறிமுகம் ஆகிறோம். ஒருவன் (டாம் ப்ரூக்) ஒரு பயிற்சி பெற்ற மாலுமி, அவன் வெளிப்படையானவன் அதே சமயம் மனச்சோர்வு மிக்கவன். மற்றொருவன் (ஜாக் லாஸ்கி) கடலுக்கு புதியவன் நடைமுறையில் தன்னை பாதுகாப்பாளர் எனக் கருதுபவன். ஒருவன், இரண்டாமவனை கடல் பயணத்தை மேற்கொள்ளும்படி வற்புறுத்துகிறார். அதனைத் தொடர்ந்த அவர்களது பயணம் ஒரு நிலையில் அவர்களின் ஆபத்தான பயணமாக மாறி, முதலாமவன் கப்பலில் தடுமாறி விழுந்து, மீட்புக்கான அனைத்து முயற்சிகளையும் எதிர்த்து போராடும்போது, அவர்கள் முன்பிருந்த நிலைப்பாட்டினைக் கடந்து, எப்படி இயற்கையின் ஒரு பகுதியாக மாறுகிறார்கள் என்பதே இந்த நாடகத்தின் அடித்தளம்.
இந்த நாடகத்தின் முரணை,
நாம் எத்தனை வழிகளில் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். சில சமயங்களில், இயற்கையில்
எதுவும் ஒன்றுக்கொன்று சார்ந்திருக்கும் என்பது போல. இங்கு பாத்திரங்களாக இருக்கும்
இரண்டு மனிதர்கள் தங்கள் இருத்தலின் அர்த்தமற்ற தன்மையை சூழலின் பொருட்டு எதிர்கொள்வதன்
மூலம் கடவுளுக்காக காத்திருக்கும் கடல் போல் நாடகம் மாறுகிறது. ஃபோஸின் நாடகக் கட்டமைப்பில்
இத்தகைய காட்சி, மொழியின் மீதான நீடித்த தியானம் போல் தெரிகிறது. பார்வையாளர்கள் வாசிப்பிலும்
காட்சி அனுபவத்திலும் என எப்படிப் புரிந்துகொண்டாலும், இந்த நாடகம் ஒரு அடிப்படையான
விஷயத்தை முன் வைக்கிறது. அது, ஒரு தீவிர சூழ்நிலையில் இருக்கும் இரண்டு விதமான மனிதர்களை
நமக்குக் காட்டுகிறது மற்றும் அவர்களுக்கு இடையில் ஏற்படும் அன்பின் சக்தியை நாமும்
உணர்ந்துக் கொள்ளும் அளவிற்கு துணை செய்கிறது.
"பெயர் – The
name" இந்த நாடகத்தில் ஒரு இளம் கர்ப்பிணிப் பெண் குழந்தையின் தந்தையுடன் தனது
பெற்றோரின் வீட்டிற்குச் செல்கிறாள். அவள் என்ன எதிர்பார்க்கிறாள் என்பது அவளுடைய பெற்றோருக்குத்
தெரியாது, இது நாடகத்தில் கிளாஸ்ட்ரோஃபோபியாவினால் பாதிப்படைந்தவர்களின் உணர்வையும்,
சொல்லப்படாதவர்களின் பதற்றத்தையும் காட்சிகளால் ஆன நாடகமாக எழுதியிருப்பார். ஜான் ஃபோஸ்,
தனது நாடக எழுத்து முறைமைக் குறித்துக் குறிப்பிடும்போது, சிறுவயதில் கிடார் அல்லது
வயலின் வாசித்த அதே மனப்பான்மையுடன் தான் எழுதுவதாகக் கூறுகிறார். வார்த்தைகளின் இசை,
மௌனங்களின் வலிமை மற்றும் இடைநிறுத்தங்களின் எடை ஆகியவை அவருக்கு முக்கியம் என்கிறார்.
மேலும், "அது எழுதும் செயல்முறையைப் பற்றியது. எனக்கு என் எழுத்துக்கு சுதந்திரமும்
தனிமையும் தேவை. நான் நாடகம் எழுதத் தொடங்கியபோது, காட்சிகளாக எழுதும் என் எழுத்தை
எப்படி கட்டுப்படுத்துவது என்று யோசித்து, முதலில் என்னால் முடியாது என்று முடிவு செய்தேன்.
பிறகு நான் ஏன் அதைக் கைவிட வேண்டும். மாறாக நாடக நிகழ்வுகளை உள் வாங்கத் தொடங்கினேன்.
அப்போது நாடக எழுத்து கைவரப்பெற்றது" என்கிறார்.
குறிப்பாக, கொள்கையளவில்
நான் ஒருபோதும் எனது நாடகங்களின் தயாரிப்புகளில் பங்கேற்க மாட்டேன். அந்த செயல்கிரமத்திலிருந்து
நான் விலகி இருக்க விரும்புகிறேன். நான் ஒரு ஒத்திகைக்குச் சென்றால், இயக்குனரின் செயலுக்கு
குறுக்கீடாக என் எதிர்பார்ப்பு மாறலாம். அதனால் அந்த செயல்பாட்டில் ஈடுபடாமல் நான்
முற்றிலும் நேர்மையாக இருக்கிறேன். நிச்சயமாக உண்மையான தயாரிப்பு இயக்குனருக்கும் எனக்கும்
சொந்தமானதுதான். ஆனால், எனக்கு அங்கு வேலை இல்லை. அவர்களுக்கு, ஏதேனும் நாடக எழுத்தில்
தெளிவு வேண்டுமென்றால் தொலைபேசியில் பேசினால் போதுமானது. நாடக எழுத்தாளருக்குப் பதிலாகத்தான்
தயாரிப்பில் ஈடுபடும் நடிகர்கள் மற்றும் வடிவமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள்
என்னையும் என் எழுத்தையும் ஆராய்ந்து நிகழ்வாக்குவார்கள். அரங்கம் ஒரு கூட்டுச் செயல்
வடிவம். ஜான் ஃபோஸ் ஆகிய நான் தனி நபராக எழுத்துக் கலையை பகிர்ந்து கொள்கிறேன். அது
நிகழ்வாக வடிவம் மாறினால் தான், அதன் உருவாக்கத்தில் ஒரு முழுமை உள்ளது, அந்த முழுமை
நம் அனைவருக்கும் சொந்தமானது. அரங்கம் மிகவும் பழமையான கலை வடிவம். முதலாளித்துவத்திற்கு
முன், கம்யூனிசத்திற்கு முன், தொழில்புரட்சிக்கு முன், வெகுஜன ஊடகங்களின் உற்பத்திக்கு
முன்பே நாடகம் இருந்தது. ஒருவேளை அது நவீனத்திற்குமே முந்தையதாக இருப்பதால், அரங்கம்
எல்லா காலத்திற்கு சரியானதாகவே உணரப்படுகிறது. என்பதாக, மிகத் தெளிந்த பதிலைத் தருகிறார்
ஜான் ஃபோஸ்.
"கடந்த ஆண்டு,
இலக்கியத்திற்கான நோபல் பரிசு பட்டியலில், பலரது பெயர்களுடன் ஜான் ஃபோஸ் பெயரும் இடம்
பெற்றது. பிறகு மெல்ல ஜான் ஃபோஸ் பெயர், பட்டியலில் முன்னேறத் தொடங்கியது. இந்த முன்னேற்றம்
பற்றி, ஜான் ஃபோஸின் பார்வையில் உள்ள எளிய உண்மை என்னவென்றால், ”அப்படி முன்னேறிப்போவது
நான் இல்லை என்பதாக மிகவும் மகிழ்வுடன் இருந்தேன் என்கிறார். ஏனெனில், பொதுவாக நோபல்
பரிசு அதை மிகவும் வயதான எழுத்தாளர்களுக்குக் கொடுப்பார்கள், என்பதால்”. பிறகு இறுதியில்
அவர் பெயர் தேர்வு செய்யப்பட்டவுடன் - ”அங்கிகாரம்
என் எழுத்தைப் பாதிக்காதபோது அதைப் பெற முடியும் என்ற உண்மையும் புரிந்தது என்கிறார்
ஃபோஸ்”. ஜான் ஃபோஸின் நாடகங்கள் தமிழ் மொழியிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அபபோதுதான்,
சமகால உலக நாடகப்போக்குகள் மற்றும் வடிவங்களின் கட்டமைப்பு பற்றிய புரிதல் தமிழ் நாடகங்களிலும்
ஏற்படும்.
இந்த ஆண்டு (2024)
உலக நாடக தினச் செய்தியை ஜான் ஃபோஸ் தான் வழங்கியிருந்தார். அதில் எல்லாக் கலைகளின்
மகத்துவம் மற்றும் தனித்துவம் போன்றவற்றையெல்லாம் சுட்டிக்காட்டியிருப்பார். குறிப்பாக
அதில், போரினால் ஏற்படும் அபாயங்களைச் சுட்டிக் காட்டி அதற்கு எதிர் செயல்பாடு எப்படி
இருக்க வேண்டும் என்பதையும் நிறுவுகிறார். அதை எடுத்துக்காட்டி இக்கட்டுரையை நிறைவு
செய்வதே பொருத்தமானதாக இருக்கும்.
“எல்லா நல்ல கலையும்
ஆழ் நிலையில் அமைதி எனும் ஒன்றைச் சுற்றியே சுழல்கிறது. அந்த சுழற்சியே இப்பிரபஞ்சத்தின்
பொதுமையாகிறது. போரும் கலையும் எப்போதும் எதிரெதிரானவை. எப்படி போரும் அமைதியும் எதிரெதிரானவையோ
அப்படி போருக்கு எதிர் நிலையில் நின்று கலையால் அமைதிப்படுத்தவும் முடியும். அதற்காக
கலைஞர்கள் பெரும் முயற்சியென எதுவும் பெரிதாக எடுக்கத் தேவையில்லை. கலை என்பதே அமைதிதான்.
அதைத் தொடர்ந்து செய்தாலே போதும்”.
❤️❤️❤️
ReplyDeleteஅருமை..
ReplyDelete