தற்கால நாடகங்களைப் பார்ப்பதன் வழி கிட்டும் அனுபவங்கள்

 

ஞா.கோபி

 

தற்கால நாடகங்களைப் பார்ப்பதன் வழி கிட்டும் அனுபவங்கள்

 நாடகம் / அரங்கம்:

                    தற்காலங்களில், பள்ளிகளிலோ கல்லூரிகளிலோ அவ்வப்போது நிகழும் நாடகப் பயிற்சிப்பட்டறைக்குப் போகும் போது. பயிற்சியின் தொடக்கத்தில் மாணவர்களிடம், ‘நாடகம்’ (Drama) என்றால் உங்கள் நினைவில் வருவது அல்லது இருப்பது பற்றிச் சொல்லுங்கள்? என்றால். 98% பேர் தொலைக்காட்சித் தொடர் நாடகம் என்பதையே சொல்வார்கள். அதுபோல் அரங்கம் (Theatre) என்றால் என்ன? என்பதற்கு சினிமா தியேட்டர் என்பதுவே பதிலாக இருக்கிறது. உண்மையில் அவர்களின் அனுபவத்திலும் நினைவிலும் அவைகளே நிறைந்துள்ளன. ஏன், புதுச்சேரி போன்ற கலைகளில் சிறந்த மண்ணில் வாழ்ந்து 1990களின் இறுதியில் ஓவியக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்ற காலம் வரை எனக்கும் முழுமையானதொரு மேடை நாடகம் பார்த்த அனுபவம் இல்லை. நான்காம் ஆண்டின் தொடக்கத்தில், புதுச்சேரி அலையான்ஸ் பிரான்சிஸில் நடைபெற்ற ஒரு ஓவியக் கண்காட்சியைப் பார்ப்பதற்குப் போன எனக்கு, அன்றைய தினம் அங்கு இருந்த உள்ளரங்கில் நிகழ்த்தப்பட்ட ’கருஞ்சுழி’ எனும் தமிழ் நாடகத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.


பார்த்தேன். அதுவரை என் அனுபவத்தில் இல்லாத பார்வையாளர் அனுபவம் பெற்றேன். அது எவ்விதம் எனில், நடிகர்களின் உடல்மொழிகள், நடிப்பிற்குத் துணை செய்யும் மேடைப் பொருட்கள், ஒளி வடிவமைப்பு, இசை வடிவம் என அத்தனையும் கலந்து அந்த நாடகத்தின் மைய கருப்பொருளான ‘மனித வாழ்வியலுக்கான இருத்தலியல் போராட்டத்தினை’ எவ்வித பிரச்சாரத் தன்மையும் இன்றி என்னுள் செலுத்தியது. தொடர்ந்து வந்த இரண்டொரு நாள், அதுவரை இல்லாத அளவில் பல கேள்விகள் என்னுள் எழுந்தபடியே இருந்தன. அதன் வழியாக ஏற்பட்ட மாற்றங்கள். அதாவது, அதுவரை நான் ஓவியப் பாடம் படிக்கிறேன் என்பதால் இவ்வுலகை வெறும் காட்சிப் படிமங்களால் ஆனது மட்டுமே. என்று எண்ணிய என் எண்ணத்தில், பெரும் மாற்றம் ஏற்பட்டது. அது எவ்விதமெனில்,”மனித உணர்வுகளின் ஊடாட்டம் அன்றி இந்த உலகத்தில் எந்தக் காட்சிகளும் இல்லை” என்ற புரிதல்தான் அந்தப் பெரும் மாற்றம் ஆகும்.

மேடை மொழி

பின்னர் தொடர்ச்சியாக நாடகங்களைப் பார்க்கத் தொடங்கினேன். ஒவ்வொன்றும் வெவ்வேறு அனுபவம். அத்தகைய வெவ்வேறு விதமான அனுபவங்களை பார்வையாளரான எனக்குள் கடத்த பேருதவி செய்தது எது? என்றால், நான் பார்த்த நாடகங்களில் நடித்த நடிகர்களின் நடிப்புதான் என்பேன். ஆம், மேடையில் நடிகர்கள் கைகொள்கின்ற நடிப்பு மொழிகளின் வழியேதான். அதாவது நாடகம் தொடங்கியது முதல் எவ்வித இடைவெளியும் இன்றி ஒரு தொடர் செயல்பாடுகளைப் போல, பார்வையாளரான என்னைப் போன்றோரின் முன் அந்த நாடகத்தின் அத்தனை எழுத்துக்களையும் கடத்துகிறார்கள் இல்லையா! அந்தப் பெருஞ்செயல்கள்தான் மேடையின் ஆதார மொழி. அந்த நடிப்பு மொழிக்கு மேலும் பல வார்த்தைகளைக் கொண்டு அலங்கரிப்பது போல், அவர்கள் பயன் படுத்தும் நாடகப் பொருட்கள், அவர்கள் அசையும் காட்சிப் பின்ணணிகள், இசை, வேட உடைகள் மற்றும் ஒளி போன்றவைகளும் அமையப்பொற்றிருக்கும். அவற்றின் வழியாக பார்த்தல் மற்றும் கேட்டல் எனும் இருவழியாக நமக்கு அந்தந்த நாடகத்தின் கருபொருள் வந்தடைகின்றன. உதாரணமாகச் சொல்ல வேண்டுமெனில், எழுத்துப் பிரதியாக உருவாகும் ஒரு நாடகம் மேடையில் நிகழ்த்துப்பிரதியாக பார்வையாளர்களான நம்மிடம் வந்தடைகிறது.

தமிழ் நாடகங்களின் பார்வையாளர்கள் மரபு 

கூத்தில் பண்பட்ட நிலையில் தொடங்கிய நமது பாரம்பரிய நாடக மரபின் வழியே பல்வேறு மாற்றங்களை நம் தமிழ்ச் சமூகம் சந்தித்ததை நாடக வரலாற்று ஆய்வுகள் நமக்கு எடுத்துச் சொல்கின்றன. உதாரமாக, பல்லவர்கள் பெளத்தத்திற்கு மாற்றாக சைவ சமயத்தினை பரப்பியதே சிவபுராணக் கதைகளை கூத்துக்களாக நிகழ்த்தியதையும் மகாபாரதக் கதைகள் பரப்ப பிரசங்க மண்டபங்களை ஏற்படுத்தியதோடு கூத்துக்களாக நிகழ்த்தத் தொடங்கியதையும் பார்க்கலாம். அதுபோல் பிற்காலச் சோழர் காலத்தில் ‘இராசராசேசுவர நாடகம்’ எனும் சோழ அரசின் பெருமைகள் பேசும் வரலாற்று நாடகம் நமக்கு நிகழ்த்திக் காட்டப்பட்டிருக்கின்றது. பின்னர் இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் மக்களுக்கு விடுதலை வேட்கையை தீவிரப்படுத்த உதவியவை நாடகங்கள் என்பதையும் அறிவோம். தொடர்ந்த காலங்களில், தமிழ் நாடகத் தந்தை எனப் போற்றப்படும் சங்கரதாஸ் சுவாமிகள் நாடகங்கள் விலை கொடுத்து டிக்கெட் வாங்கி பார்க்கும் மரபை நம் தமிழக மக்களுக்கு விதைத்தன எனலாம். அதுபோல் ஒரு மாத காலம் டெண்ட் போட்டு நாடகம் நிகழ்ந்தது அந்த காலத்தில்தான். பார்வையாளர்களுக்குத் தெரிந்த புராணக் கதைகள் என்றாலும் மீண்டும் மீண்டும் வந்துப் பார்க்க வந்தது, நான் முன்னரே குறிப்பிட்ட அந்த நிகழ்த்து அனுபவத்திற்காகத்தான். அந்த நாடகத்தின் நடிப்பு முறை மற்றும் காட்சியமைப்பின் கூறுகளை சினிமா உள்வாங்கத் தொடங்கின. அதனால் அதே பார்வையாளர்கள் சினிமா பார்வையாளர்கள் ஆனார்கள்.

பின்னர் புராணக்கதைகளில் இருந்து நாவல் பாணி எழுத்துக்கள் இலக்கியங்களைத் தொட்டது. இலக்கியங்களிலிருந்து நாடகம் மற்றும் சினிமா போன்ற ஊடகங்களுக்கும் நாவல் பாணியிலான பிரதிகள் வலம் வரத் தொடங்கின. நாடகத்தில் ‘டம்பாச்சாரி விலாசம்’, ‘ரத்தக் கண்ணீர்’ போன்ற நாடகங்கள் புதிய உத்வேகத்தோடு வலம் வரத் தொடங்கின. பின்னர் தொடர்ச்சியாக நாடகம் நிகழ்த்தும் மரபில் சிறு தேக்கம். பின்னர் சினிமாவினைப் போலச் செய்தலாக பாலச்சந்தர், சோ, விசு, எஸ்.வி. சேகர், கிரேசி மோகன் வகையராக்கள் சபாவில் நாடகம் நிகழ்த்தும் மரபைத் தொடர்ந்தனர். இவர்களின் பார்வைகளிலிருந்து வேறுபட்டு இயங்கியவர் கோமல் சுவாமிநாதன் மட்டுமே. அவரது ‘தண்ணீர் தண்ணீர்’ போன்ற நாடகங்கள் அதற்கு உதாரணம் சொல்லலாம். இக்காலத்தில் பொதுப் பார்வையாளர் மரபு என்பது காணாமல் அடிக்கப்பட்டு சபாக்களில் உறுப்பினர்களான ஒரு சாராரை மட்டும் பார்வையாளர்களாக அனுமதிக்கத் தொடங்கியது. இதுவே நாடகங்களுக்கான பொதுப் பார்வையாளர்கள் குறைந்துப் போனதற்கான காரணமும் கூட. அதே சமயம் சபாக்களில் நிகழ்த்தப்பட்ட நாடகங்கள் பார்வையாளர்களுக்கு காட்சி ரீதியிலான எந்த அனுபவமும் தராமல் பின்னால் வரையப்பட்ட காட்சித் திரைகளையே திரும்பத் திரும்ப பயன்படுத்தத் தொடங்கினர். அதுபோலவே மேடையில் இருந்த இரண்டு மைக்குகளின் முன் நின்று வசனத்தை பேசுவது என்பதாகவும் சுருங்கிப் போனது. இதனால் காண்பியல் அனுபவம் இன்றி வெறும் கேட்டல் அனுபவம் மட்டுமே தரத்தொடங்கின அக்கால மேடை நாடகங்கள்.

நவீன நாடகம்

இந்த நிலையிலிருந்து மீளும் விதமாக 1970 களின் இறுதியிலும் 80களின் தொடக்கத்திலும் சிறுபத்திரிக்கைகளின் தாக்கத்தால் நவீன நாடகங்கள் எனும் சொல்லாடலும் மேடையேற்றங்களும் தமிழ் சமூகத்தில் மலரத்தொடங்கின. முத்துசாமி, இந்திரா பார்த்தசாரதி போன்றோர் புதிய நாடகங்களை எழுதத் தொடங்கினர். தேசிய நாடகப்பள்ளியின் சார்பில் தமிழகத்தில் நடைபெற்ற நாடகப்பயிற்சிப்பட்டறைகளின் வழியாகவும் பேராசிரியர் ராமானுஜம் போன்றவர்கள் பயிற்சி அளித்ததன் வழியாகவும் நாடக நடிப்பிலும் இயக்குதல் முறைமைகளிலும் பெரும் மாற்றங்கள் காணத் துவங்கின நவீன நாடகம். கூத்துப்பட்டறையின் நாடகங்கள், பரிக்‌ஷா ஞானியின் வீதி நாடகங்கள் என சென்னையில் அவ்வப்பொழுது பல புதிய முயற்சிகள் நிகழத் தொடங்கின. ஆனால் அந்த நாடகங்கள் பெரும் பார்வையாளர்களை சேர்க்கும் விதங்களிலோ தொடர் பார்வையாளர்களிடத்தில் சென்று சேரும் விதங்களிலோ கவனம் செலுத்தவில்லை. இருப்பினும் என்னைப் போன்று அழையா பார்வையாளராக வந்து மேடையில் கிடைக்கும் அற்புத அனுபவங்களுக்கு தொடர் பார்வையாளர்களாக மாறியவர்கள் பல்லாயிரம் பேராவது இருப்பார்கள்.

தற்கால நாடகங்கள் பற்றிய கட்டுக்கதைகள்

எங்கு விடுபட்டது தற்கால நாடகங்களுக்கான பார்வையாளர்கள் மரபு? என்பதை விட பார்வையாளர்கள் இந்த நிகழ்த்து அனுபவங்களை எவ்வாறெல்லாம் தவறவிடுகிறார்கள் என்பது பற்றியே இப்போதெல்லாம் என் ஆய்வு மனம் சிந்திக்கிறது. அப்படி நவீன நாடகம் என்பது பற்றி புனைவுக் கதைகளாக மக்கள் மத்தியில் என்ன இருக்கிறது என்று தேடியபோது கிடைத்தவைகளைப் பார்ப்போம். ஒன்று நவீன நாடகம் புரியாது என்பது. இரண்டு வசனங்களைக் குறைத்து உடல்களை வளைத்து நெளித்து வித்தைகள் காட்டுவார்கள் என்பது. மூன்று பொழுதுபோக்காக இல்லாமல் மிகவும் சீரியஸாகவே கருப்பொருள் இருக்கும். இப்படி பலர் சொல்ல நானே கேட்டிருக்கிறேன். அவர்களில் பெரும்பாண்மையோர் நாவல் பாணி நாடகங்களில் தொடர்புடையவராக இருப்பார்கள். அப்படி சொல்லும் அவர்களிடத்தில் ஒரு முறை, நீங்கள் பார்த்த தற்கால நாடகம் அதாவது புரியாமல் போன, பொழுதுபோக்கில்லாமல் இருந்த அந்த நாடகம் எதுவென்று சொல்வீர்களா? என்றால். அவர்களிடம் பதிலில்லை. எங்களுக்கு அப்படி சொல்லப்பட்டது. அதையே நாங்கள் மற்றவர்களிடத்தில் சொல்கிறோம் என்றனர். இப்படி, தற்கால நாடகங்கள் பார்த்த அனுபவமின்றி ஒரு கட்டுக்கதையை நம்பகத்தன்மையுள்ள கதையாக மாற்ற முடியுமெனில். அவர்களை ஒருமுறையேனும் தற்போது நிகழ்த்தப்படும் நாடகம் ஒன்றிணைப் பார்த்துவிடுங்கள். ஏனென்றால், என்று ஆரம்பித்து நாடகங்கள் அதன் தயாரிப்பு முறைகள், நடிப்பு முறைகள் மற்றும் தமிழகத்தில் உள்ள நாடகக் குழுக்கள் என என் உரையாடலைத் தொடர்கிறேன். இத்தகைய உரையாடல்கள் அவர்களை நாடகம் பார்த்தல் என்பதனை நோக்கி வரவழைத்திருக்கிறது. வந்தவர்கள் தங்களது அனுபவத்தினை மற்றவர்களிடம் உரையாடலாக வளர்த்தெடுக்கும்போது அவர்களும் வரத் தயாராகிறார்கள். ஆனால், இது போதுமா? என்றால் இல்லை. இளம் சமூகம் இந்த அனுபவத்தினைப் பெற வேண்டும். அவர்களின் வாழ்வியலில் நல்ல இலக்கியம் போல நல்ல சினிமா போல நல்ல நாடகங்களும் இடம்பெறுதல் வேண்டும்.

பள்ளி மற்றும் கல்லூரித் தளங்கள்

நாடகம் எனும் சொல்லாடல் மற்றும் நிகழும் முதல் களமெனில் அது பள்ளிக்கூடமே ஆகும். அங்கு இந்த நாடகங்களுக்கான வாய்ப்புகள் என்னவாக இருக்கின்றன? நாடகங்கள் பார்க்கவாவது அவர்களுக்கு வாய்ப்புகள் ஏற்படுத்தப்படுகிறதா? நான் இங்கு இந்த கேள்விகளை முன்வைப்பதற்கான காரணம் முதன்மையான ஒரு கேள்வி உண்டு. அது என்னவெனில் கல்வியில் ஈடுபடும் ஒவ்வொரு குழந்தையும் தத்தமது கற்பனைச் சிறகுகள்  வழி தனித்த பாதைகளை  கண்டடைய வேண்டுமென்றால் அங்கு “குழுந்தைகள் நாடகம்”, “கல்வியில் நாடகம்” போன்ற தளங்களை நாம் அறிமுகம் செய்ய வேண்டாமா? பள்ளியில் நிகழ்த்தப்படும் ஒரு குழந்தைகள் நாடகம் பங்கேற்கேற்பாளர்களுக்கு பல்வேறு அனுபவங்களையும் தந்தாலும் பார்வையாளர்களாய் இருக்கும் குழந்தைகளின் கற்பனைகளை வளர்த்தெடுக்கப் பாலமாய் அமையும். காட்சிகளும் நடிப்பும் அவர்களுக்கு பெரும் படிப்பினையாகவும் தைரியமாகவும் மாறும். எத்துறையை அவர்கள் தேர்ந்தெடுத்தாலும் அத்துறையில் கற்பனையாற்றலுடன் செயலாற்ற துணை புரியும் இந்த நாடக அனுபவம். ஏனெனில் குழந்தைகள் நாடகத்தில்,  கதைகளை நிகழ்த்துதல் எனும் விளையாட்டுப் போன்ற (The Play) செயலனுபவம் மிக முக்கியக் கூறாகும். அதற்கு உதாரணமாக எனது “மீன் வாங்கலையோ மீன்” எனும் குழந்தைகள் நாடகத்தில் இடம்பெற்ற வசனத்தை உதாரணம் காட்டுகிறேன்,

“விளையாட்டு சந்தோஷத்த கொடுக்கும்

சந்தோஷம் நல்ல ஆரோக்கியத்தக் கொடுக்கும்

ஆரோக்கியம், கற்பனையக் கொடுக்கும்

கற்பனை வளர்ச்சியக் கொடுக்கும்

வளர்ச்சி பயிற்சியக் கொடுக்கும்

பயிற்சி முயற்சியக் கொடுக்கும்

முயற்சி பயணத்தக் கொடுக்கும்

பயணம் நல்ல அனுபவத்தக் கொடுக்கும்

அனுபவம் நல்ல கதையா மாறும்

அந்தக் கதை, இன்னொருத்தருக்கு

நல்ல அனுபவமா மாறும்

அதனாலதான் கத கேட்கறதும்

சொல்லுறதும் ஆதிகாலத்திலிருந்து

ஒரு விளையாட்டு போல மனுசங்க

வாழ்க்கையோட தொடர்ந்து வந்துகிட்டு இருக்கு.” 


இந்த வசனத்தை வாசித்துவிட்டு நாடகங்கள் ஏற்படுத்தும் அனுபவங்கள் பற்றி பேசிய ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் என எவரும் இங்கில்லை. இந்த வசனங்களை நடிகர்கள் வேட உடை ஒப்பனையுடன் ஆடிப் பாடி உடல் மொழியுடன் நிகழ்த்தியதன் வழிதான், பல நூறு ஆசிரியர்கள் மற்றும் பல ஆயிரம் குழந்தைகள் இந்த வசனம் பற்றி பேசியும் வரைந்தும் பாடதிட்டங்களை மாற்றியும் இருக்கின்றனர் என்பதே உண்மை. அந்த உண்மையின் துணை கொண்டுதான், இன்று செயல்படும் இளம் நாடகச் செயல்பாட்டாளர்களின் படைப்புகளுக்கு பள்ளிகளில் தளம் அமைத்துக் கொடுங்கள் என்கிறோம். வாழ்வில் எல்லா கதாபாத்திரங்களாகவும் எந்த சூழலையும் அனுபவ ரீதியிலான கல்வியாக மாற்றும் வல்லமை கொண்ட நாடகங்களை குழந்தைகள் பார்க்க சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கும் கல்விமுறையை நோக்கி நாம் நகர வேண்டும்.

கல்லூரி

இந்த தளம், மாணவர்கள் கும்பல் மனப்பாண்மையில் தங்களின் தனித்துவ வெளிப்பாட்டினைக் கண்டுபிடிக்காது போவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ள தளம். அதனால் இங்கு நாடகங்கள் அதிகம் நிகழ்த்திப் பார்க்க சந்தர்பங்கள் அமையுமானால் அவர்களின் பார்வையில் தெளிவு ஏற்பட வாய்ப்புக்களும் அதிகம் உள்ளன. உதாரணமாக, அரசியல் பார்வையுள்ள நாடகங்கள், தலித்திய மற்றும் பெண்ணிய நாடகங்களை அவர்கள் காண வேண்டும். அதன் வழியாக அங்கு பேராசியர் மாணவர் உரையாடல் வளரும். தங்கள் குழு நண்பர்களுடன் உரையாடல் தொடரும். உரையாடல் தேடலை வழி வகுக்கும். தேடல் வாசிப்பையும் பயணங்களையும் புதிய மனிதர்களையும் காண வழி அமைக்கும். குறிப்பாக, கேள்விகளை படைப்பாக மாற்ற ஒரு சமூகப் பொறுப்பினை வழங்கும் அல்லவா.

இப்படி தற்கால நாடகங்களை பார்க்கும் பழக்கத்தினால், நாடகத்திற்குள் வந்தவர்கள் பட்டியல் உலகம் முழுக்கவிருந்து தர முடியும். அதில் பல உலகத் தலைவர்கள், இலக்கியவாதிகள், திரைக் கலைஞர்கள், விஞ்ஞானிகள் என பலர் அடக்கம். அதில் நானும் ஒருவன்.

சாட்சி

அப்படி நாடகப் பார்வையாளராக நாடகச் செயல்பாட்ட்டிற்குள் நுழைந்த நான் ஏறக்குறைய இருபத்தி மூன்று ஆண்டுகளாக நாடகச் செயல்பாட்டிலும் நாடகம் தொடர்பான ஆய்வுகளிலும் ஈடுபட்டு வருகிறேன். அதில் நாடக எழுத்து, நாடகம் இயக்குதல், நாடகப் பயிற்சிப்பட்டறைகள் என பல படி நிலைகள் அடங்கும். குழுச்செயல்பாட்டினை வேண்டும் நாடகத்துறையிலிருந்து நான் கற்றுக் கொண்டது, கூட்டுச் செயல்பாடு கூட்டு முயற்சி மற்றும் படைப்பாளர்கள் கூட்டத்தினால் வெளிப்படுத்தப்படும் கருத்தியல் வெளிப்பாட்டை பார்வையாளர்கள் உள்வாங்க கலை வழி வாய்ப்புகளை ஏற்படுத்துதல் போன்றவற்றை என்பேன். இதையும் அனுபவத்தின் அடிப்படையிலேயே முன் வைக்கிறேன். அதையே செயலாகவும் கடைபிடிக்கிறேன். அதனால் நான் அடைந்தவை, சமூகப் பொறுப்பு, ஒடுக்கப்பட்டோர் குரலாக படைப்புகளைப் படைத்தல், இளம் தலைமுறைக்கு நாடகத்தின் ஆழ அகலங்களைக் கற்றுக் கொடுத்தல் என என் வாழ்வை அர்த்தமுள்ளதாக வாழ்கிறேன். இறுதியாக, நாடகம் என்ற செயல்முறையின் அடிப்படையினை அடிகோடிட்டு நிறைவு செய்கிறேன்.

“நாடக நிகழ்வுகளில் பார்வையாளர்களே முக்கிய பங்கு வகிக்கின்றனர். அடிப்படையில், நாடகச் செயல்முறையை இறுதி செய்யும் நுகர்வோர் பார்வையாளர்களாகவே உள்ளனர். நாடகப்பிரதியை உருவாக்குவதிலிருந்து நடிகர் தேர்வு, நிகழிடம், கால அளவு வரை, பார்வையாளர்களின் அனுபவத்திற்காகவும் அந்த அனுபவத்தை அவர்களின் வாழ்வில் எழும் கேள்விகளுக்கு பதிலாக்கி என்பது முடிவாக்குகிறார்கள் என்ற செயல்முறையை முன் வைத்தே இயக்குகிறது.”

                                                                                                                                        நன்றி 

                                                                                                                      சிற்றுளி - ஏப்ரல் - ஜுன் 2025

Comments

  1. மிகவும் சிறப்பு. எடுத்துக்காட்டாக பாடியுள்ள பாடல் இன்னும் சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. நேரம் ஒதுக்கி வாசித்தமைக்கு நன்றி

      Delete

Post a Comment

Popular posts from this blog

நாடகக் கலைஞர்களின் கலை வழி உறவு நிலை வெளிப்பாடுகள்

அரங்கில் கலந்த ஆசிரியர் சே. ராமானுஜம்

நாடக மொழி