ஷேக்ஸ்பியர் நாடகங்களின் முதல் கறுப்பு நடிகர் ஐரா ஃபிரடெரிக் ஆல்ட்ரிட்ஜ் (Ira Frederick Alridge -1807 - 1867) - ஞா.கோபி


ஷேக்ஸ்பியர் நாடகங்களின் முதல் கறுப்பு நடிகர் ஐரா ஃபிரடெரிக் ஆல்ட்ரிட்ஜ்

(Ira Frederick Alridge -1807 - 1867)

 “உண்மையான உணர்வையும் நியாயமான வெளிப்பாட்டையும், எந்த காலத்தின் அடிப்படையிலும், சாதி அல்லது நிறத்தின் அடிப்படையினாலும் மட்டுப்படுத்த முடியாது.”

     1800 களின் மிக முக்கியமான நாடக நடிகர், நாடக ஆசிரியர் மற்றும் நாடக மேலாளர் என அறியப்பட்ட, ஐரா ஃபிரடெரிக் ஆல்ட்ரிட்ஜ், ஜூலை 24, 1807 ல் ஆப்பிரிக்க குழந்தையாக அமெரிக்காவின் நியூயார்க்கில் பிறந்தவர். ஐரா ஃபிரடெரிக் ஆல்ட்ரிட்ஜ் பிறந்த 1807 ஆம் ஆண்டில்தான் பிரிட்டிஷ் அரசின் “அடிமை வர்த்தகச் சட்டம்” மற்றும் “அடிமை வணிகம்” ஒழிக்கப்பட்டது. என்றாலும், கிழக்கிந்திய கம்பெனியால் ஆளப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து மற்ற பகுதிகளில் 1838 வரை அச்சட்டம் தளர்த்தப்படவில்லை. அக்காலத்தின் முரண் என்னவெனில், அடிமைகளை விட அடிமை உரிமையாளர்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டது என்பதுவே. இதன் காரணமாக அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் வர்த்தகத்தைத் தொடர்ந்து சட்டவிரோத செயல்பாடாகவே அரசு அதிகாரம் கருதியது.  இத்தகைய கண்காணிப்பு வளையத்தின் வாழ்வு முறையிலிருந்துதான், ஆல்ட்ரிட்ஜ் வளர்ந்தெழுந்தார்.

ஆல்ட்ரிட்ஜின் தந்தை கறுப்பினத்தவருக்கான உள்ளூர் தேவாலயத்தில் பணிபுரிபவராக இருந்தார். அதனால் இறை நம்பிக்கை வழியிலான அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்ற அவரது மகனையும் ஊக்குவித்தார்.  ஆனால் கல்வித்தளம், ஆல்ட்ரிட்ஜின் உலகை விரிவாக்கியது. ஆல்ட்ரிட்ஜ், நியூயார்க்கில் இருந்த ஆப்பிரிக்கர்களுக்கான இலவச பள்ளியில் படித்தார். அந்த பள்ளி, அடிமைப்படுத்தப்பட்ட தனிநபர்களின் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டது. அங்குதான் அவரது பார்வை நாடகத்தின் மீது கவனம் குவித்தது.

ஒரு பதின்பருவ இளைஞனாக, ஆல்ட்ரிட்ஜ், கீழ் மன்ஹாட்டனில் உள்ள ஒரு கறுப்பின நாடகக் குழுவுடன் தன்னை ஒரு நடிகராக இணைத்துக்கொண்டார், மேலும் அவரது 15 வயதில், நாடக ஆசிரியர் வில்லியம் அலெக்சாண்டர் பிரவுன் நிறுவிய, நாடக நிறுவனத்தில் நடிகராகச் சேர்ந்தார். ஆனால், காலனித்துவவாதிகளினால் ஏற்படுத்தப்படும் அடிமைப்படுத்துதல் மனப்பாங்கை அவர் அங்கும் சந்தித்த வண்ணமே இருந்தார்.  அப்போதைய அமெரிக்காவில் மேலோங்கி இருந்த நிற பாகுபாட்டை ஆல்ட்ரிட்ஜ் அதிக அளவில் எதிர்கொண்ட காரணங்களால், ஒரு தீவிர முடிவில், ஆல்ட்ரிட்ஜ் 1824 இல் பிரிட்டனுக்குப் பயணம் செய்ய முடிவு செய்தார். அந்த நேரத்தில் லண்டனில் தொழில்துறை புரட்சி தொடங்கியது, அதன் காரணமாக நாடகங்களின் வளர்ச்சியை விரிவுபடுத்த உதவும் தீவிர பொருளாதார மாற்றம் அமலுக்கு வந்தது. மேலும் பிரிட்டிஷ் பாராளுமன்றம் 11 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் அடிமைத்தனத்தை ஒழித்தது, அட்லாண்டிக், அடிமை வர்த்தகத்தை சட்டவிரோதமாக்கியது மற்றும் பிரிட்டிஷ் பேரரசு இத்தகைய அடிமைத்தனத்தை ஒழிப்பதை நோக்கி நகர்ந்தது, இது காரணமாக வெளிநாட்டிலிருந்து படிப்பதற்கு மற்றும் ஏனைய தொழில் செய்வதற்கு விரும்பும் ஆப்பிரிக்கர்களின் வாய்ப்பை அதிகரித்தது. இதனடிப்படையில் ஆல்ட்ரிட்ஜ், தனது நண்பர் நடிகர் ஜேம்ஸ் வாலாக்குடன் இங்கிலாந்தின் லிவர்பூலுக்கு குடிபெயர்ந்தார்.

அங்கு லண்டன் ராயல் கோபர்க் நாடகக்குழுவில் பணிபுரியும் வாய்ப்பை அவரே உருவாக்கிக் கொண்டார். ஆல்ட்ரிட்ஜ், முதன்முதலில் ஒரு புராண ஆப்பிரிக்க இளவரசராக பாத்திரம் ஏற்று நடித்தார். பதினேழாம் நூற்றாண்டின் நாவலாசிரியர் அஃப்ரா பெஹனால் உருவாக்கப்பட்ட நாவலினைத் தழுவி, தாமஸ் சதர்னின் ஒரூனோகோவின் நாடகமாகும். லண்டனின் மிகவும் மதிப்புமிக்க அரங்கில் ஆல்ட்ரிட்ஜின் அறிமுகத்திற்குப் பிறகு, சில விமர்சகர்கள் ஒரு கறுப்பின நடிகர் மேடையில் தோன்றியதற்கு நேரடியாகவே எதிர்ப்பு தெரிவித்தனர்.



அதே நேரத்தில் அப்படி முதல் கருப்பு நடிகராக நடித்த ஆல்ட்ரிட்ஜை நோக்கி பிரிட்டிஷ் பார்வையாளர்களின் வரவேற்பு முதலில் கலவையாகவே எழுந்தது. மேடையில் அவரது நடிப்பிற்காக புகழ் பெருகிய அதே வேளையில், அவரது ஆங்கில உச்சரிப்பு, உடலியக்கம் மற்றும் அவரது நிறம் ஆகியவற்றிற்காக அவர் புறக்கணிக்கப்பட்டார் மற்றும் கேலி செய்யப்பட்டார். தி டைம்ஸின் ஒரு கடுமையான இனவெறியுடனான விமர்சனம் ஒன்று பின்வருமாறு,

'அவரது உருவம் மேடைக்கு துரதிர்ஷ்டவசமானது, அவர் ஆங்கிலத்தை உச்சரிப்பது, அவருடைய கருத்த முழங்கால்கள், குறுகிய மார்பு மற்றும் அவரது உதடுகளின் வடிவம் போன்றவைகளின் காரணமாக, வெள்ளைப் பார்வையாளர்களை எப்போதுமே  திருப்திப்படுத்த முடியாது.’

எழுதி இருந்தது. இது போன்ற விமர்சனங்களின் வழியாக, நிறத்தைக் காரணம் காட்டி ஆல்ட்ரிட்ஜை லண்டன் நாடக மேடைகளில் இருந்து வெளியேற்ற முயன்றனர் என்பதே உண்மை. அதற்கெல்லாம் ஆல்ட்ரிட்ஜ் சற்றும் மனம் தளராமல், தனது நடிப்புப் பயிற்சியில் கவனம் செலுத்தினார். அப்போது ஷேக்ஸ்பியரின் நாடகங்களை, உலகின் பல பகுதிகளில் இருந்த தொழில்முறைக் குழுக்கள், தங்கள் நாடுகளில் நிகழ்த்தும் போக்கு அதிகரிக்கத் தொடங்கியது. அவ்வகையில் லண்டனின் கோவென்ட் கார்டன் நாடக அரங்கிலும் ஷேக்ஸ்பியர் நாடகங்களை நிகழ்த்தத் தொடங்கின. அதுவரை ஷேக்ஸ்பியர் காலத்திலிருந்தே மேடையில் நடிக்கும் ஐரோப்பிய நடிகர்கள் கரிய நிறமுடைய நாடகப் பாத்திரங்களுக்கு கருப்பு வண்ணங்களிலான ஒப்பனையைப் பயன்படுத்தி வந்தனர். அதோடு, பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் ஆப்பிரிக்கர்களின் மீது அமெரிக்கர்களுக்கு இருந்த இனவெறியினால் ஆப்பிரிக்கர்களை கேலிச்சித்திரங்களாகவே கலை வெளிகளில் சித்தரித்துக் கொண்டிருந்தனர். ஆல்ட்ரிட்ஜுக்கு முன்பு, கீன் போன்ற வெள்ளை கலைஞர்கள் மட்டுமே மேடையில் ஓதெல்லோவாக நடித்தனர். அப்படி பாத்திரமேற்று மேடையில் நடிப்பதற்காக அந்த வெள்ளை நடிகர்கள் கரித்தூள், கிரீஸ்பெயிண்ட் மற்றும் ஷூ பாலிஷ் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி தங்கள் தோலை கருமையாக்கிக் கொண்டனர்.

அதற்கிடையில்தான்ஆல்ட்ரிட்ஜ், மே 1825 ஆம் ஆண்டு, தனது 17வது வயதில், முதன்முதலில் லண்டன் மேடையில் ஒதெல்லோவின் பாத்திரத்தில் தோன்றினார். அக்கால பிரிட்டனில் ஷேக்ஸ்பியரின் துன்பவியல் நாடகப் போஸ்டர்களில் பெயரிடப்பட்டு ஓதெல்லோவாக லண்டனின் கோவென்ட் கார்டன் நாடக அரங்கில் நடித்தார், என்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாக ஷேக்ஸ்பியர் நாடகங்களின் பாத்திரங்களை ஏற்று நடித்த முதல் கறுப்பு நடிகர் என்று குறிப்பிடப்பட்டார்.  ஓதெல்லோ நாடகத்தின் நடிப்பால், முன்பு நிறத்தின் பெயரால் எதிர்மறையாக விமர்சித்த விமர்சகர்களை ஆல்ட்ரிட்ஜ் மெல்லக் கவர்ந்தார். அதன் பயனாக ஒரு விமர்சகர்,

 "ஓதெல்லோவில் ஆல்ட்ரிட்ஜ் எனும் நடிகர் மிகவும் கடினமான பகுதிகளையும் சரியான முறையில் மேடையில் வழங்குகிறார், அவரது நடிப்பு பார்வையாளர்களை புதிய அனுபவங்களுக்கு உட்படுத்துகிறது.” என்று எழுதினார்.

மேலும், வில்லியம் வெல்ஸ் பிரவுன், நாடக ஆசிரியர் மற்றும் வரலாற்றாசிரியர் தனது செய்திக் கட்டுரையில் பின்வருமாறு எழுதியிருந்தார்.

"நாடகம் முடிந்ததும் 'ஓதெல்லோவாக' நடித்த நடிகர் ஆல்ட்ரிட்ஜ் என்று மேடையில் அறிமுகப்படுத்தப்பட்ட போது பார்வையாளர்கள் மிகுந்த உற்சாகத்தின் மத்தியில் எழுந்து நின்று கைத்தட்டினார்கள்..."

இப்படியான ஆரோக்கியமான விமர்சனங்களால் ஆல்ட்ரிட்ஜ் படிப்படியாக பெரிய வேடங்களுக்கு முன்னேறினார்.  1830 வாக்கில், லண்டனின் கோபர்க் தியேட்டரில் ‘எ ஸ்லேவ்ஸ் ரிவெஞ்சில்’ ஓரோனோகோவாகவும், அதைத் தொடர்ந்து ‘தி ஸ்லேவில்’ காம்பியாவின் பாத்திரத்திலும், ஷேக்ஸ்பியரின் ‘ஓதெல்லோவில்’ ஒதெல்லோ வேடத்திலும் அவர் மட்டுமே நடிக்க முடியும் எனும் நிலையில் இருந்தார். இதனால் புதிய மற்றும் சவாலான நாடக பாத்திரங்களைத் தேடுபவராக ஆல்ட்ரிட்ஜ் மாறினார். அதனால் அவ்வப்போது ஐரோப்பிய வெள்ளையர்கள் கதாபாத்திரங்களையும் ஏற்கத் துணிந்தார். அதற்காக அவர், ஐரோப்பியர்களின் உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்புகளுக்கு தொடர் பயிற்சிகளை எடுத்துக் கொண்டார். மேலும் அத்தகைய பாத்திரங்களுக்கு ஏற்றவகையில் அவர் அதிகமான ஒப்பனை மற்றும் பலவித விக்குகளை தலையில் அணிந்தும் நடித்தார். அவற்றுக்கு எடுத்துக்காட்டுகளாக ரெவ். ஆர். சி. மாதுரினின் ‘பெர்ட்ராமில்’ கேப்டன் டிர்க் ஹாட்டெராய்க் மற்றும் பெர்ட்ராம், ஷேக்ஸ்பியரின் ‘ரிச்சர்ட் III இல் முதன்மை வேடம் மற்றும் ‘தி மெர்ச்சன்ட் ஆஃப் வெனிஸில்’ ஷைலாக் பாத்திரமென ஏற்று, பார்வையாளர்களின் விருப்பத்திற்குறிய நடிகரானார்.

தொடர்ந்து, ஆங்கில மாகாணங்களில் பலவற்றிற்கும் ஆல்ட்ரிட்ஜ் நாடகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது கோவென்ட்ரிக்கும் சென்றார். அங்கு அவரது நடிப்பு, அந்த நகர மக்களைக் கவர்ந்ததன் விளைவாக, சர் ஸ்கீர்ஸ் ரியூவுக்குச் சொந்தமான கோவென்ட்ரி தியேட்டர் ராயலில் அவர், அரங்க மேலாளராக நியமிக்கப்பட்டார், இதன் மூலம் பிரிட்டிஷ் நாடக அரங்கத்தை நிர்வகித்த முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர் என்ற பெருமையும் பெற்றார். அதன் காரணமாக, பல சமூக மேம்பாட்டு வசனங்களையும் தான் ஏற்கும் பாத்திரங்களில் இணைத்துக் கொண்டார். ஆல்ட்ரிட்ஜ் கோவென்ட்ரியில் தங்கியிருந்த மாதங்களில், அடிமைத்தனத்தின் தீமைகள் குறித்து பல்வேறு விதமாக சிறிய மாற்றங்களுடன் தனது வசனங்களை பேசி நடித்தார். அதன் விளைவால் நிகழ்வுகளை முடித்து அவர் கோவென்ட்ரியை விட்டு வெளியேறிய பிறகும், அவரது நாடக வசனங்கள் பார்வையாளர்கள் மனதில் ஆழ்ப்பதிந்தன. மெல்லும் அதை அவர் தனது தேர்ந்த நடிப்பின் வழி மக்களிடத்தில் ஏற்படுத்திய விழிப்புணர்வும் அரசியல் விளக்கமும் கோவென்ட்ரி மக்களிடத்தில் அறிவு ரீதியிலான நல்ல விளைவுகளை ஏற்படுத்தியது.

“மகிழ்ச்சியான கருப்பு மனிதன் ஒருவன் தனியாக

பரந்த பாலைவனங்கள் வழியாக பயணிக்கும்போது வழி தவறுகிறான்

அப்பாவித்தனத்தில், கற்பிக்கப்படாத அவனிடத்தில் …

வெள்ளைக்காரன் ஒருவன் வருகிறான்,

ஆதாயத்தின் காரணமாக கருப்பனை வெள்ளையனுக்குப் பிடித்தது.

அதனால் அவனுடைய சுதந்திர கைகள் அடிமைத்தனத்தின் சங்கிலியை

கருப்பு மனிதனை நோக்கி வீசியது...

அடிமை தேவை என்ற குணம், வெள்ளையனை மிருகமாக மாற்றியது.”

என்பன போன்ற வசனங்களை ஆல்ட்ரிட்ஜ் பேசியதன் விளைவால், லண்டனிலிருந்த கருப்பின மக்கள்   தங்களை அடிமைத்தனத்திலிருந்து  முற்றிலுமாக விடுவிக்க வேண்டி நாடாளுமன்றத்தில் மனு அளித்தார்கள். கோவென்ட்ரி நாடகப் பயணத்திற்குப் பின்னர் 1831 ஆம் ஆண்டில், டப்ளினில் தெற்கு அயர்லாந்தின் பல இடங்களில், ஆல்ட்ரிட்ஜ் வெற்றிகரமாக நாடகங்களை நிகழ்த்தினார். சிறிய நகரங்களிலும் கூட அவர் நடிப்பிற்காக பெரும் பார்வையாளர்கள் கூட்டம் கூடினர். அதே போல், இங்கிலாந்தின் பாத் மற்றும் ஸ்காட்லாந்தின் எடின்பர்க் ஆகிய இடங்களிலும். நடிகர் எட்மண்ட் கீன் ஆல்ட்ரிட்ஜின் நடிப்பில் ஓதெல்லோவை கண்டு வெகுவாகப் பாராட்டினார், மேலும், தி டைம்ஸ் பத்திரிக்கை அவரை பண்டைய ரோமின் புகழ்பெற்ற நடிகரின் பெயரால் "ஆப்பிரிக்க ரோசியஸ்" என்று எழுதியது. ஆல்ட்ரிட்ஜ் இதை தனது வரலாற்றின் உண்மை என்று உணர்ந்துக் கொண்டார். அவர் துணிந்து எடுத்து வைத்த அந்த முதல் அடிதான், பின்னாளில் உரிமைப் போரெனக் கிளர்ந்தெழுந்த நிற வேற்றுமை ஒழிப்பு இயக்கத்தின் பின்னணியிலும் மற்றும் அரசியல் ரீதியாக ஏற்பட்ட கருப்பின எழுச்சிக்கும் முன் அடையாளமாக திகழ்ந்தது.  1833 ஆம் ஆண்டில் பிரிட்டன் மாகானங்களில் இனத்தின் பேரால் செய்யப்படும் அடிமைத்தனத்தை ஒழிக்க வேண்டி மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் அதிகரித்து வந்ததால், நாடக அரங்கங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.  ஆல்ட்ரிட்ஜ் சிறிது காலம் நடிக்காமல் இருந்திருக்கிறார். பின்னர், 1840 களில், ஆல்ட்ரிட்ஜ் நார்தம்பர்லேண்டில் உள்ள நகரங்களில் நாடக நிகழ்வுகளில் நடிப்பதிலிருந்து மீண்டும் நிகழ்வுப் பயணதைத் தொடங்கினார்.

அப்படி 1841 ஆம் ஆண்டில், பெரும் பயணம் செய்தார்.  அதுபோல் 1852 ஆம் ஆண்டில், ஆல்ட்ரிட்ஜ் மத்திய ஐரோப்பாவில் தனது முதல் சுற்றுப்பயணத்தின் தொடக்கப் புள்ளியாக பெல்ஜியத்தைத் தேர்ந்தெடுத்தார். பின்னர் அவர் ஐரோப்பா முழுவதும் மிகுந்த வரவேற்புடன் நாடகங்களுக்காகப் பயணம் செய்தார். 1858 ஆம் ஆண்டு நாடகப் பயணம் அவரை செர்பியாவிற்கும் ரஷ்யாவிற்கும் அழைத்துச் சென்றது, அங்கு அவர் டால்ஸ்டாய், மிகைல் ஷ்செப்கின் மற்றும் உக்ரேனிய கவிஞரும் கலைஞருமான தாராஸ் ஷெவ்சென்கோ ஆகியோருடன் நட்பானார். அதுபோல், ஆல்ட்ரிட்ஜ் மத்திய ஐரோப்பாவின் சில பகுதிகளிலும், குறிப்பாக போலந்திலும் ஷேக்ஸ்பியர் நாடகங்களை தனது தேர்ந்த நடிப்பின் வழி அறிமுகப்படுத்தி பார்வையாளர்களுக்கு நாடகத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்தார். ஒவ்வொரு நகரத்திலும் உள்ள உள்ளூர் நடிகர்கள் தங்கள் சொந்த மொழியில் பேசி நடித்தபோது ஆல்ட்ரிட்ஜ் ஆங்கிலத்தில் பேசி நடித்ததன் வழியாக அனைத்துத் தரப்புப் பார்வையாளர்களிடத்திலும் அவர் சென்றடைந்தார். ஓதெல்லோ, கிங் லியர், ஷைலாக் மற்றும் பிற முக்கிய ஷேக்ஸ்பியர் பாத்திரங்களில் நடித்ததன் மூலம் பாராட்டு, மரியாதை மற்றும் விருதுகளைப் பெற்றார். ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஆண்கள் பற்றிய பொதுப் பார்வைகளை கேள்விக்குட்படுத்தும் வண்ணம், ஆல்ட்ரிட்ஜ் பிரிட்டிஷ் பார்வையாளர்களுக்கு தன்னை ஒரு தகுதிவாய்ந்த ஷேக்ஸ்பியர் நடிகராக கடும் உழைப்பின் வழி மேடையில் வாழ்ந்து காட்டினார்.  குறிப்பாக ஆப்பிரிக்க அமெரிக்கராக இருந்த ஆல்ட்ரிட்ஜ் எனும் நாடக நடிகர், போலந்தின் ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான அடையாளமாகவும் ஆனார். அதனால் ரஷ்ய அரசாங்கத்தின் கண்காணிப்பு வளையத்திற்குள் பல ஆண்டுகள் இருந்தார்.

கால ஓட்டத்தில் வயது அதிகமாகியபோது, ஷேக்ஸ்பியர் நாடகங்களில் மிக முக்கியமான நாடகமான கிங் லியர் நாடகத்தில் முதல் முறையாக லியர் அரசன் வேடமேற்று நடித்தார். அவர் இங்கிலாந்தில் சில சொத்துக்களை வாங்கினார். மீண்டும் 1862 வாக்கில்  ரஷ்யாவிற்கு சுற்றுப்பயணம் செய்தார். 1863ல் பிரிட்டிஷ் குடியுரிமைக்கு விண்ணப்பித்தார். அவர் மேடையில் நடிப்பில் வாழ்ந்த வாழ்க்கைப் போலவே, ஆல்ட்ரிட்ஜின் தனிப்பட்ட வாழ்க்கையும் வியத்தகு அங்கங்களைக் கொண்டிருந்தன. அவரது மனைவி மார்கரெட் கில், குழந்தைகளைப் பெறவில்லை என்றாலும், அவர் தொடர்பில் இருந்த மூன்று பெண்கள் வழியாக குறைந்தது அவருக்கு ஆறு குழந்தைகளைப் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது, அவர்களில் ஒருவர் அவரது இரண்டாவது மனைவியானார். அவரது இரண்டு மகள்கள், லுரானா மற்றும் அமண்டா, தொழில்முறை இசை பாடகர்களாக ஆனார்கள்.

 ஆல்ட்ரிட்ஜ் 1867 இல் மேற்கொண்ட நாடகச் சுற்றுப்பயணத்தின் போது போலந்தில் உள்ள லாட்ஸில் இறந்தார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் லண்டனில் இருந்தனர். அவர் இறப்பதற்குச் சிறிது காலத்திற்கு முன்பு அவர் அமெரிக்காவுக்குத் திரும்பத் தயாராக இருந்திருக்கிறார். அதோடு ஆல்ட்ரிட்ஜ் உள்நாட்டுப் போருக்குப் பிந்தைய யுனைடெட் ஸ்டேட்ஸ் முழுவதும் 100 நாடக நிகழ்வுகளுக்கு ஒப்பந்தம் பேசி இருக்கிறார். அவர் எதிர்பாராதவிதமாக இறந்த லாட்ஸில் இல் நடந்த அவரது இறுதிச் சடங்கு ஊர்வலமானது, ஆல்ட்ரிட்ஜின் கலை வாழ்விற்கான சான்று போல நகர வீதிகளில் அவர் பெற்ற பதக்கங்களையும் விருதுகளையும் அவரோடு எடுத்துச் சென்றது, மேலும் நகர கல்லறையில் அவரது இறுதிச் சடங்கின்போது அவரது ரசிகர்கள் மற்றும் பொது மக்கள்

 “மனித அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான கோவென்ட்ரியின் மனுவுக்கு ஆல்ட்ரிட்ஜ் ஒரு முக்கிய உத்வேகமாக இருந்தார்.”

என்று கோஷமிட்டபடியே இருந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது மரணத்திற்குப் பிறகு அவரது நடிப்பு மற்றும் நாடக இயக்க மரபு அவரைப் பின்தொடர்ந்து இயங்கிய கலைஞர்கள் நினைவில் இருந்து மெல்ல மறைந்தது, இருப்பினும் சில ஆப்பிரிக்க-அமெரிக்க நடிகர்கள் அவரது நினைவை தொடர்ந்துப் பாதுகாக்க முயன்றனர். மேலும் அவருடைய வரலாற்றை ஒரு உத்வேகமான மாதிரியாகக் கருதி வாசிக்கத் தொடங்கினர். இப்போது நாம் தமிழில் வாசிப்பதுவரை ஐரா ஃபிரடெரிக் ஆல்ட்ரிட்ஜின் இரு நூற்றாண்டு வரலாற்றுப் பயணம் தொடர்கிறது. மேலும் அவரைப்போலவே கலை வழியாக நாமும் விடுதலையை விரும்புகிறோம் என்பதும் உண்மையாகிறது.  


                                                          ஞா.கோபி

 நன்றி: கலைமுகம் இதழ் 81

 



Comments

Popular posts from this blog

நாடகக் கலைஞர்களின் கலை வழி உறவு நிலை வெளிப்பாடுகள்

அரங்கில் கலந்த ஆசிரியர் சே. ராமானுஜம்

நாடக மொழி