’சிகப்புக் கண்ணாடி’ நிகழ்த்துப்பிரதியின் பரிமாணம் கூட்டிய ஒளி வடிவம்
’சிகப்புக்
கண்ணாடி’ நிகழ்த்துப்பிரதியின் பரிமாணம் கூட்டிய ஒளி வடிவம்
மேடையேற்றப்படும் நாடக நிகழ்வானது அப்பிரதியின்
சாரம் கெடாமல் பார்வையாளர்களிடத்தே கடத்த மிக முக்கியக் காரணிகளாக நடிக உடல்கள் ஒருபுறமும்
அதன் இயங்கு நிலைகளை காட்சி அனுபவமாக்கும் ஒளி, ஒலி வடிவமும் செயலாற்றுகின்றன. அவ்வகையில்
என்னைப் போன்று ஓவியப் பரப்பிலிருந்து நாடக
நிகழ்வுகளைக் கண்டு, அதன்பால் ஈர்க்கப்பட்டு நாடகத்தையே தொழிலாய் கொண்ட கலை மனம் எப்போதும்
காட்சி சார்ந்தே இயங்கும். அதற்காக, நடிகர்களின் மன உடல்கள், காட்சியமைப்பு மற்றும்
அரங்கப் பொருட்கள் போன்றவற்றை எழுதும் நாடகப்பிரதியிலேயே அதன் மேல் ஒளி எங்கிருந்து,
என்ன வண்ணத்தில் வருகிறது என்பதையெல்லாம் எப்போதுமே
எழுதிக்கொண்டுப் போகிறது என் படைப்பு குணம். அதற்குப்பின் அந்த மேடைக் குறிப்புகளும்
ஆன அந்த நாடகப்பிரதியை நிகழ்த்துப் பிரதியாக பார்வையாளர்களிடத்தே பரிமாற என்னைப் போன்ற
படைப்பாக்க மனநிலையைக் கொண்ட நடிகர்களையும் சக வடிவமைப்பாளர்களை உடன் சேர்க்க வேண்டிய
இடம் சேர வேண்டியிருக்கிறது.
அந்த இடம்தான் நாடகப் படைப்பாக்கச் செயல்கிரமத்தில்
மிக முக்கியமான கணம் பொருந்தியவை. ஏனெனில் அங்கு சேரும் அத்தனை வடிவமைப்பாளர்களும்
பிரதியிலிருந்து அவரவர் பெறும் படைப்பு ஊக்கத்தை அவர்களின் அனுபத்தின் துணை நின்று
வளர்த்தெடுத்து அந்த நாடகப்பிரதியை நிகழ்த்துப்பிரதியாக மாற்றும் உண்மைகள் உருவாவதும்
அங்குதான் நிகழும். அப்படி ஒரு தோழமைக் கரம் கொண்ட ஒளி வடிவமைப்பாளர் செ. ரவீந்திரன்
சார் அவர்களோடு பல்வேறு நாடகங்களில் நடிகனாக பயணப்பட்டதை சிறு அளவிலேனும் பொதுவெளிக்குப்
பகிர்ந்திருப்பேன். கால வளர்ச்சியில் நான் நாடகங்களை எழுதி இயக்க ஆரம்பித்த போதிலிருந்து
இவருடன் இணைந்து விட வேண்டும் என நினைத்து இருந்தவையும் கைக்கூடிய ஒரு நாடக அனுபவத்தையும்
இந்த அனுபவப் பகிர்வு வழி உங்களின் கரம் சேர்க்கிறேன்.
2009 ஆம் ஆண்டு புதுச்சேரி
அலியான்ஸ் பிரான்சிஸில் நடைபெற்ற ‘களம்’ நாடக விழாவில் என்னுடைய பிரதி மற்றும் நெறியாளுகையில்
‘நான் வளர்மதி’ நாடகம் நிகழ்த்தப்பட்டது. இலங்கைப் போரின் இறுதி கட்டத்தில் அரசின்
அதிகாரப் போக்கால் ஊடகவியலாளர்கள் பலர் கைது செய்வதும் காணாமல் அடிக்கப்படுவதுமாக இருந்தக்
கொடுங்காலம். ஈழத்திலிருந்து புதுச்சேரிக்கு நாடகம் பயில வந்த வளர்மதி என் நாடக சக
பயணியும் ஆவார், போரின் இறுதிக் கட்டத்தில் வளர்மதியின் கணவர் ஊடகவியலாளர் ஜெசிகரனுடன்
வளர்மதியும் அரச அத்துமீறலைப் பற்றிய ஆதாரங்களை வெளியிட்டதற்காகக் கைது செய்யப்பட்டனர்.
அது அப்போது செய்தியாக வந்தது. அந்த செய்தியின் உள் மறைந்துள்ள வளர்மதியின் கனவுகள்
பற்றிய எனது பதற்றமே அப்போது ‘நான் வளர்மதியை’ எழுதத் தூண்டியது. வளர்மதியின் கனவுகள்
என்பது அவருடைய நாட்டின் குழந்தைகளிடத்தில் நிகழவேண்டிய கலைச் செயல்பாடுகள் பற்றியது.
அவையெல்லாம் சிறைக்குள் எவ்விதமாக உழலும்? அவரும் அவரது கனவுகளும் எவ்விதம் மீண்டும்
அம்மண்ணில் உயிர்பிக்கும்? என்பனப் போன்ற கேள்விகளுக்கு குழந்தைகளிடமுமே விடை காண முடியும் என்பதால் என்
உடன் சேர்ந்த குழந்தைகளுடன் சேர்ந்து ஸ்டெல்லாவின் நடிப்பை ஆதாரமாக வைத்து நிகழ்த்தினோம்.
எல்லா நாடங்களையும்
போல “சிகப்புக் கண்ணாடி” இச்சமூகத்தின் பிரதிபலிப்பே. ஆனால் இச்சமூகம் இதுவரை பேசத்தயங்கிய,
பார்க்க மறந்துபோன பகுதிகளையும் மனிதர்களையும் உள்ளடக்கியதே இந்நாடகம். காலம் தொடங்கிய
காலத்திலிருந்தே பெண் உடல், வலி, இன்பம் போன்ற மன உணர்வுகளின் மேல் படிந்திருக்கும்
மெளனத்தினுள் சிறிது பயணம் செய்து, சில கேள்விகளை எழுப்பும் முயற்சியே இந்நாடகம். நாம்
கடந்து வந்த இன்றைய தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள் செய்திகள் அலறிக்கொண்டிருப்பது
என்ன? பாலியல் வன்கொடுமை மற்றும் போர்ச்சூழலில் அத்துமீறல்கள். இவற்றில் பங்கேற்பாளர்களாக
ஆணும் பெண்ணும் இருக்கும்போது, ஏன் பெண் மட்டும் உடலாலும் மனதாலும் மிக அதிகமாகவே பாதிக்கப்படுகிறாள்?
என்ற கேள்வி நம்மிள் உண்மையிலேயே எழுகிறதா? ஆம் எழுகிறது. அவ்விதம் எழுந்த கேள்விகளுக்கான
விடைதேடல் பயிற்சியின் ஆரம்பமே இந்நாடகம்.
பெண் மனதின் காட்சிகளே
இந்நாடகத்தின் மொழி. பெண் வலியும் இரத்தமுமே இந்நாடகத்தின் இசை. இன்றையச் சூழலில் இப்பிரச்சனையைப்
பேச வேண்டியதன் அவசியம் என்னவெனில், பெண் எனும் உயிரை அவர்களின் உடலைத்தாண்டி பார்க்கும்
பழக்கம் ஏற்பட வேண்டும். அப்படி ஏற்படுமாயின் உடல் என்பது தாண்டி, பெண் உணர்வுகளுக்கு
மதிப்புக் கொடுக்கும் பழக்கம் வளரும். அம்மதிப்பு இப்பரிணாம வளர்ச்சியில் இன்னொரு கட்டத்தை
எட்டி அனுமதியின்றி ஒருவர் உடலை உரிமைக் கொண்டாடும் பழக்கம் ஒழிந்து அன்பு செழிக்கும்.
இன்று உலகம் முழுக்க
பெண் உடல்கள் எதிர்கொண்டு வரும் வேதனைகளையும், வலிகளையும் மனிதர்களான நாம் உணர்ந்துகொள்ள
வேண்டும் என்பதால். ஏனெனில் மண், நீர், நிலம் என எல்லாவற்றையும் பெண்ணாக உருவகித்து
வழிபடும் நாம்தான் ஓடும் பஸ்ஸில் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்வது, பிஞ்சுக் குழந்தை
என்று கூடப்பார்க்காமல் அவ்வுடலை கீழ்த்தரமான முறையில் படம்பிடித்து பலரும் பார்க்க
பரிமாறுகிறோம். ஊடகம் கற்றுக்கொடுக்கும் பார்வைக்குப் பழக்கமாகிப்போய் சமூக வெளியில்
செயல்படும் பெண்களை வக்கிரமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவ்வகையில் நம்மை நாமே
பார்த்துக்கொள்ளும் கண்ணாடியே இந்த ”சிகப்புக்கண்ணாடி” நாடகம். என்று பேசி முடித்தேன்.
அதோடு நிகழ்விற்கு முந்தைய நாள் முழுக்க ஒளியோடு கட்டாயம் ஒத்திகைப் பார்க்க வேண்டும்
என்பதையும் என் தயாரிப்புத் திட்டங்களில் ஒன்று எனவும் முன் வைத்தேன். அவருக்கே உரிய
மெல்லிய உற்சாகச் சிரிப்புடன் அருமையான பிரதி, உங்கள் கற்பனையில் இணைந்து பயணிக்க மிகவும்
உற்சாகமாக இருக்கிறேன். உடன் பணி செய்யப்போகும் அனைத்து கலைஞர்களுக்கும் என் வாழ்த்துக்களைச்
சொல்லுங்கள், என்றார். அவர் ஒளி வடிவமைப்பாளராக மேற்கொண்ட பயணத்தில் என்னைப் போன்ற
இளையவர்களிடம் எந்தவித ஆர்பாட்டமும் இன்றி அணுகுவது என்பவையெல்லாம், தற்கால அரங்கக்
கலைஞர்களுக்கு மிக முக்கியக் கற்றல் அனுபவம்.
’சிகப்புக் கண்ணாடி’ நாடக எழுத்தில் முதல் காட்சி தொடங்கி இப்படி வளரும், “அந்த இசைக் கலைஞனிடம் இருந்த ஒளி அவனிடமிருந்து பிரிந்து இன்னொரு உடலாகிச் சென்று அம்முனகல்களைத் தேடுகிறது. தேடலின் இறுதியாக நிகழ்தளத்தின் மத்தியில் ஒளி உறைந்து வளர, அங்கு மரச்சட்டத்தின் பின் திணிக்கப்பட்ட ஒரு பெண் உடல் பல உடல்களாக விரவியிருக்கின்றது. உடல் என்பது விலங்கிடப்பட்ட கால்களாகவே வெளிச்சத்தில் தெரிகிறது...” என்பதாக எழுதினேன். ரவீந்திரன் சார் ஒத்திகைப் பார்க்கும் போது, அந்த மரச் சட்டத்தின் முன் மெல்லிய இழையிலான துணியை இணைத்திருந்தோம். அதில் அசைவுறும் பெண் நடிகர்களின் அசைவையும் அவதானித்த அவர். ஒளி வடித்தில் அதை சிகப்பு வண்ணம் பாரித்தக் ஒரு பெரிய கண்ணாடியாக மாற்றினார். முன்னிருந்து வரும் ஒளி பெண் உடல்கள் தசைகளைத் தாண்டி வெளியேற சிரமப்பட்டுக் கொண்டிருப்பது போலும். அதே இடம், பின்னிருந்து வரும் ஒளியால் ஒரு பெரும் கண்ணாடி உலகை கடினமான தத்துவமாக்கிக் காண்பிக்கும். முதல் ஒத்திகையில் இந்த காட்சி மொழி மாற்றங்களைப் பார்த்த நான், திருப்தியுற்ற அளவில் கண்ணிர் வடித்தேன் என்பது உண்மை. எனெனில் அரங்கில் ஒரு எழுத்தை நிகழ்வாக்கும் இயக்குநர் உழைப்பதெல்லாம், காட்சி மற்றும் கேள்வி மொழிகளால் பார்வையாளர்களிததே நாடகத்தின் மையத்தைக் கடத்த வேண்டும் என்பதுதான். அப்படி அந்தக் காட்சி இப்படியான ஒளி வழிமுறைகளின் வழி ஈடேறியதால் அந்தக் காட்சிச் சூழலில் இருந்து நடிகர்கள் பேசும் வசனங்களான,
”உடல் 1:
இதோ! உங்களுக்கும் எனக்கும் நடுவில் இருக்கும் இந்தச் சிறிய
இடைவெளிதான் இப்போதிருக்கும் என் கடைசி நம்பிக்கை. என்னோட முகம் உங்களுக்கு முழுசா தெரியறதுக்கு
வாய்ப்பில்லாததால நான் யாருன்னு முடிவுக்கு வரதுல உங்களுக்குக் கஷ;டம் இருக்கும். அத
நான் ஒத்துக்கிறன்.
உடல் 2:
அதேசமயம் ….. நான் போராடிகிட்டே இருக்கன்...”
என்பது பார்வைக்கு மிக நம்பகத்தன்மையும் வாழ்வின் புதிய
பக்கத்தினையும் திறப்பதாக அமைந்தது. நிகழ்விற்குப் பின் அதே உணர்வை உள்வாங்கியப்
பார்வையாளர்கள் பலர் அந்த காட்சி தந்த அனுபவம் குறித்து என்னிடமும் நடிகர்களிடமும் பேசினார்கள்.
அதுபோல் அந்த நாடகத்தின் காட்சி மூன்று பின் வரும் குறிப்புகளின்
அடிப்படையில் தொடங்கும்,
“புதிய ஒளி மேடையில் தோன்ற,
ஒரு பெண் சில சமையல் பாத்திரங்களுடன் வந்து அவள் வீட்டு
வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறாள். அதையே
கணினி வேலையாகவும் தொலைபேசித் தொடர்பாகவும் பயன்படுத்துகிறாள். குளிக்கிறாள்.
உணவு உட்கொள்கிறாள். அப்போது
அந்தப் பகுதியில் நுழையும் கரும் உருவங்கள் அங்குமிங்கும் என பதுங்கியபடியே கையில்
வைத்திருக்கும் டார்ச் ஒளியின் துணையுடன் கைபேசியில் படம் பிடிக்கின்றனர். திரையில் பல பெண் முகங்களில் கரி
பூசப்படுகிறது. கயிறுகள் நுனி கொக்கி
கொண்டு இறங்குகிறது. திரையில் காட்சிகள்
மறைந்தவுடன் மேடையில் அக்கயிறுகள் இறங்கத் தொடங்கிவிடுகின்றன. மேடையின் மேலிருந்து இறங்கும் கயிறுகளின்
நுனியைச் சந்தித்துவிடும் வேகத்தில் சில பெண்கள் உள்ளே வந்து விடுகின்றனர். கயிற்றின் நுனியைத் தங்கள் மூக்கின் நுனியில்
சந்தித்தவுடன் முதுகில் கோர்க்கப்பட்டிருக்கும் சட்டை மாட்டும் ஆங்கரை
வெளியிலெடுத்து கயிற்றின் நுனி கொக்கியில் மாட்டுகின்றனர். தொங்கிய நிலையில் இருக்க,
நடுவில் இருக்கும் பெண் தன் முகத்தில் கரி பூசப்பட்ட
நிலையில் ஒளியைப் பார்த்துப் பேசுகிறாள்...”
இக்காட்சி முழுக்க ஒளியின் அளவு வேறுபாடுகளால் அர்த்தப்படும் அசைவுகளை
மையமிட்டு இருக்கும். அந்தக் காட்சியின் சாரம் மாறாமல் ஒளி கொண்டு ஓவியம்
தீட்டினார் ரவீந்திரன் சார் அவர்கள். குறிப்பாக இந்த காட்சியில் வண்ண ஒளிகள்
குறைவாகப் பயன்படுத்த வேண்டும் என்ற முடிவு இருந்தது. அதை அப்படியே உள் வாங்கிய
அவர், குறிப்பாக வீட்டில் வேலை அசைவுகளுடன் இருக்கும் பெண்ணின் உடல் செல்போன் வழி
பதிவு செய்வதை வலி உணர்வோடு கலந்த குறைந்த ஒளியில் வடிவமைத்திருந்தார். அந்தக்
காட்சியைச் சுட்டிப்பேசிய பார்வையாளர் ஒருவர் ’நான் ஆண் என கர்வம் கொண்டு அலைந்ததை
குலைத்துப் போட்டுவிட்டது அந்தக் காட்சி’ என்றார். இவையெல்லாம் சிறு சிறு
சான்றுகள்தான். இந்த நாடகம் கேரளா போன்ற மாநிலங்களில் நிகழ்ந்த நாடக விழாக்களில்
நிகழ்த்தும்போது ரவீந்திரன் சாரால் வர முடியாத போது நான் ஒளி வடிவமைப்பாளராய்
இருந்து செயல்பட்டதும் அவர் கண்டடைந்த படைப்பு வெளிப்பாட்டை பின்பற்றியே. பின்
சார் மீண்டும் இந்த சிகப்புக் கண்ணாடி திருப்பத்தூர் நாடக விழாவில் இணைந்தார்.
தமிழ் நாடகச் செயல்பாடாளர்கள் பலர் பார்வைக்கு இந்த நாடகம் எட்டியது அப்போதுதான்.
அதற்கு மீண்டும் ஒளி வடிவத்தையே காரணம் சொல்வேன்.
அதோடு, ஒவ்வொரு ஒத்திகை முடிந்ததும் நடிகர்கள் மற்றும் அனைத்து
வடிவமைப்பாளர்கள் ஒன்றிணைந்து பேசும் கூட்டத்தில் அவர் பேசும்போது நடிப்பு
அசைவுகள் இன்னும் மெருகேற்ற நிறைய ஆலோசனைகளை வழங்குவார். அதை நான் எவ்விதம் புரிந்து கொள்கிறேன் எனில், ஒளி வடிவமைப்பாளனின்
வேலை காட்சியை பார்வையாளர் புறப் பார்வைக்குத் தருவதோடு மட்டுமல்லாமல் அகப் பார்வைகளை
அசைத்து விட வேண்டும் என, அவர் மேடையின் ஒவ்வொரு அசைவையும் அர்த்தத்தோடு அணுகும் ஓர்
கலை வாழ்வியல் முறை என்பதாகவே நான் பார்க்கிறேன்.
இறுதியாக, நவீன ஒளி வடிவமைப்பைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவரான ஜெனிபர் டிப்டன் (Jennifer Tipton), ‘பார்வையாளர்களில்
ஒரு சதவீதம் பேர் ஒளி வடிவமைப்பை அறிந்திந்தவர்களாக இருக்கிறார்கள், ஆனால் 99 சதவீதம்
பேர் அதன் விவரங்கள் தெரியாமலேயே அதன் வழி விழிப்படைபவர்களாக இருக்கிறார்கள்.” என்று
தீர்க்கமாய் நம்புவது போல நம்பிக்கையோடு செயல்படும் செ. ரவீந்திரன் சாரின் தமிழ் நாடகச்
செயல்பாடுகள் இன்னும் விளைவு உதாரணங்களோடு விரிவாக எழுதப்பட வேண்டியவை. அதை நான் வெகு
சீக்கிரம் அவர் காணுறச் செய்து விடுவேன். ஏனெனில், ஒளி என்பது எங்கும் நிறைந்ததாகும்.
அதனைப் போற்றி வாழ்வதே வாழ்வும் ஆகும்.
நன்றி : ஒளி உலகின் ஊடாக ஒரு பயணம், செ.ரவீந்திரன், போதிவனம் 2021

Comments
Post a Comment